தமிழக அரசு, திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து, எட்டாம் வகுப்புவரை, மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பீட்டுத் திட்டம் (கிரேடு சிஸ்டம்) நடைமுறைக்கு வரும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

மதிப்பெண்களை நேரடியாக அறிவிக்காமல், எடுத்துக்காட்டாக, 40 முதல் 50 மதிப்பெண்கள் பெறுவோருக்கு சி கிரேடும், 51 முதல் 60 மதிப்பெண்கள் பெறுவோருக்கு பி கிரேடும், 61 முதல் 70 மதிப்பெண்கள் பெறுவோருக்கு ஏ கிரேடும் வழங்குவதைத்தான் மதிப்பீட்டுத் திட்டம் என்று கூறுகிறோம். மதிப்பெண்கள் அளவையும், அதற்கான மதிப்பீட்டுக் குறியீடையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதில் என்ன இருக்கிறது? மதிப்பெண்களை நேரில் வழங்கினால் என்ன, குறியீடுகளின் மூலம் அதைத் தெரிவித்தால் என்ன என்றுதான் எண்ணத் தோன்றும். இத்தோற்றம் மேலோட்டமானது. நுணுகிப் பார்க்கும்போதுதான், இதற்குள் ஒரு பார்ப்பன மூளை ஒளிந்து கொண்டிருப்பதை அறிய முடியும்.

நுழைவுத் தேர்வே கூடாது, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கெல்லாம், மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழகம் உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வு என்பது கிராமப்புற இளைஞர்களுக்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளுக்குமான வாய்ப்புகளை மறுக்கக் கூடிய சமூக அநீதி என்பதாலேயே, அதனை அனைவரும் எதிர்க்கின்றோம்.

ஆனால் இப்போது எட்டாம் வகுப்பு வரையில் கொண்டு வரப்படும் மதிப்பீட்டுத் திட்டம், அடுத்தடுத்த ஆண்டுகளில் 11,12ஆம் வகுப்புகள் வரை நீட்டிக்கப்படலாம். அவ்வாறு நீட்டிக்கப்படும் போது, தொழில் கல்விக்கான தேர்வுகளில் மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? 85க்கும் 100க்கும் இடைப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்கள்  அனைவருக்கும் ‘ டி ’ என்ற கிரேடு வழங்கப்பட்டிருக்கு மானால், அவர்களுள் 86 மதிப்பெண் பெற்றவர் யார், 91 மதிப்பெண் பெற்றவர் யார், 99 மதிப்பெண் பெற்றவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரே வழி... நுழைவுத் தேர்வு நடத்தித் திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் என்று ஆகி விடாதா? அப்படி ஆக வேண்டும் என்பதுதான், இத்திட்டத்தைக் கொண்டுவருபவர்களின் எண்ணமாக இருக்கக் கூடும்.

நேரடியாக நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டுவர அஞ்சி, இப்படிக் கொல்லைப்புற வழியாக அதனைக் கொண்டுவரத் திட்டமிடுகின்றார்களோ என்ற ஐயம் எழுகிறது. நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும் முயற்சி இதற்கும் முன்னும் பலமுறை நடைபெற்றது. 

மாணவர்களுக்கு மட்டுமின்றி, கற்றுத்தேறிய வழக்கறிஞர்களுக்கும் கூட அதனைக் கொண்டுவர முயன்றனர். ஒவ்வொரு முறையும் அது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. கணிதத்தை, அறிவியலை இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, அவற்றைப் புரிந்துகொண்டு, மாணவர்கள் தேர்வு எழுதியபின், அவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து, கல்லூரியில் அனுமதிப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது. அதனால்தான் அதனைத் தமிழகம் என்றும் உறுதியாக எதிர்த்து நிற்கிறது.

இப்போதும் இத்திட்டத்தின் உள்நோக்கம் விளங்கிவிடுமானால், எதிர்ப்பும் உறுதியாய் எழும்.

நச்சுச் செடியை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் நல்லது!

Pin It