விடுதலைப் புலிகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்தும், தமிழக முதலமைச்சர் கலைஞர் 16. 11. 2009 அன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒரு விவாதத்தை எழுப்பியது. அதன் பிறகு, 24. 11. 2009 முரசொலி கேள்வி - பதில் பகுதியில் அவ்வறிக்கை பற்றிய சில விளக்கங்களை அவரே எழுதியிருந்தார்.

கலைஞரின் அறிக்கையைக் கண்டித்து எழுதியவர்களில் சிலர், அவரைக் கண்டித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்குப் புலிகளின் ஆதரவாளர்களான தொல். திருமாவளவனும், சுப. வீரபாண்டியனும் விடைசொல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள். விடை சொல்வதில் நமக்கு ஒரு தயக்கமும் இல்லை. ஆனால், பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்படும் இதுபோன்ற நம் விரிவான அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்பதோடு, சில ஏடுகளில் அவை திரித்தும் வெளியிடப்பட்டு விடுகின்றன என்ற அச்சம் காரணமாக நாம் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. எனவே, நம் எண்ணங்களையும், நிலைப்பாட்டையும் இங்கு முழுமையாக வெளியிட வேண்டிய கடமை நமக்குள்ளது. 

சுருக்கமாய்ச் சொல்வதெனில், தமிழக அரசியலில் நாம் தி.மு.க.வையும், ஈழ அரசியலில் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கின்றோம். ஆனால், தி.மு.க. விற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உறவு வேறுமாதிரியானது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, 1956 முதல் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளதே தவிர, எப்போதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை. புலிகள் இயக்கமும், தி.மு.க.வை நம்பியதில்லை. எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கம் காரணமாக, தி.மு.க. செய்த சிறு உதவிகளைக் கூட ஏற்க இயலாத நிலையிலேயே புலிகள் இருந்தனர். கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புலிகளுக்கு ஆதரவாக இருந்த இந்திரா காந்தியும், எம். ஜி. ஆரும் இறந்து போனார்கள். புலிகளைக் கடுமையாக எதிர்க்கின்ற, ஈழ மக்களுக்கே எதிரான நிலைப்பாடு கொண்ட, ‘தான் ஒரு பாப்பாத்திதான் ’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். ராஜீவ் கொலையை ஒட்டித் தி.மு.க.வினரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சொத்துகள் நாசமாக்கப்பட்டன. தி.மு. கழகக் கொடிக் கம்பங்கள் வெட்டியயறியப்பட்டன. மாறாக, விடுதலைப் புலிகளின் எதிரியான ஜெயலலிதாவிற்கு அரியணை வழங்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தன் காட்டுத் தர்பாரைத் தொடங்கினார். புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பாதி நாள்களைச் சிறையில்தான் கழிக்க நேர்ந்தது. பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், புலிகளின் ஆதரவாளர் இல்லை என்றாலும், எதிர்ப்பாளராகவும் இல்லை. ஈழப்பிள்ளைகளுக்கு ஜெ. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டிருந்த கல்வி வாய்ப்பைக் கலைஞர்தான் வழங்கினார்.

2001 இல், மீண்டும் ஜெ. ஆட்சி வந்தபோது, அந்தக் கல்வி உரிமை கூட மறுக்கப்பட்டது. பொடா என்னும் கொடும் சட்டத்தின் கீழ், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அனைவரும், ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம். “இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் பிரபாகரனைச் சிறைப்பிடித்து வரவேண்டும்” என்று தமிழகச் சட்டமன்றத்தில் ஜெ. தீர்மானமே நிறைவேற்றினார். பொடா சிறை மீண்டு வெளிவந்த பிறகும் கூட, பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று நெடுமாறன் ஐயா, நான் உள்படச் சிலருக்கு நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டது. பேசாமல்தான் இருந்தோம்.

பலர் வற்புறுத்தியும் கூட, அந்தத் தடையை எதிர்த்துச் சிறு சலசலப்பைக் கூட ஐயா நெடுமாறன் காட்டவில்லை. நாங்களும் அதற்கு உடன்பட்டோம் என்பது ஒரு தலைகுனிவு வரலாறு.

இந்நிலையில் 2006 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவைக் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டிய ஐயா நெடுமாறன் ‘நடுநிலை வகித்தார்’. அடுத்தடுத்து, விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்சிகள் அனைத்தும் (சிறுத்தைகள் உள்பட) ஜெ. வுக்கு ஆதரவாகச் சென்று விட்டனர். புலிகளை எதிர்க்கும் காங்கிரஸ் மட்டுமே தி.மு.க.வோடு கூட்டணியில் மிஞ்சிற்று. சிறுத்தைகள் மீண்டும் திமுக அணிக்கு வந்துவிட்ட பிறகும், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய பெரிய கட்சிகளும், நம்மைப் போன்ற ஓரிரு அமைப்புகளும் மட்டுமே தி.மு.க.விற்கு ஆதரவாக உள்ளோம். 2009 தேர்தல் நேரத்தில் மற்ற புலிகள் ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள், திரைப்படத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.

ஆளுங்கட்சியின் அருகில் நின்று, ஈழ மக்களுக்கு உதவியிருக்க வேண்டிய அனைவரும், உள்ளூர் அரசியலில் மும்முரம் காட்டி, கலைஞரை வீழ்த்துவதிலேயே கவனமாக இருந்தனர். அத்தனை கோளாறுகளும் அங்குதான் தொடங்கின. அவர்களால் கலைஞரை வீழ்த்தவும் முடியவில்லை, ஈழ மக்களைக் காக்கவும் முடியவில்லை. எனினும், 16.11.2009 இல் வெளிவந்துள்ள கலைஞரின் அறிக்கை, அவர் எதிர்ப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அவரை ஆதரிப்பவர்களுக்குத் தர்ம சங்கடத்தையும் கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை. கலைஞரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வராதா என்றுதான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

நம் முதலமைச்சரின் அன்றைய அறிக்கை ஒரு பக்கச் சார்புடையதாகவே இருந்தது. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மட்டும்தான் அதில் இருந்தது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலும் மிக நீளமானது. சர்வதேசக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த மாவீரன் கிட்டுவை, சமாதானம் பேசச் சென்ற ஜானியை, மாவீரர்கள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரைக் கொன்றவர்கள் யார்? இந்திய அரசும், அதிகாரிகளும் அல்லவா? அமிர்தலிங்கத்தின் கொலையிலும் கூட, இந்திய ரா அமைப்பே பின்னணியில் இருந்தது என்பதைப் பலரும் அறிவர்.

‘டெலோ ’ சபாரத்தினம் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தது, அதற்கு முதல் நாள் சபாரத்தினத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட புலிகளின் தளபதி லிங்கத்தின் கொலை அல்லவா? இந்திய ‘ரா’வுடன் கைகோத்துக் கொண்டு, தலைவர் பிரபாகரனைக் கொலை செய்யச் சதி செய்த துரோகி மாத்தையாவைக் கொன்றது எல்லாவிதத்திலும் நியாயம்தானே? மாத்தையாவைத் தண்டித்ததில் எந்தப் பிழையும் இல்லை, துரோகி கருணாவைத் தண்டிக்காமல் விட்டதுதான் பிழை என்பதுதான் நம் கருத்து. இவ்வாறு கலைஞர் அறிக்கையில் இருந்து நாம் மாறுபட்டாலும், ஜெயலலிதாவின் கடுமையான புலிகள் எதிர்ப்புப் போக்கைப் பற்றி வாய் திறக்காதவர்கள், கலைஞர் மீது மட்டும் குறி வைத்துப் பாய்வது ஏன் என்ற வினா எழுகிறது.

கலைஞராவது ‘வேங்கை பிரபாகரனுக்காகக் கண்ணீர் விடுகிறேன்’ என்கிறார். தமிழ்ச் செல்வன் இறந்தபோது, அவர் நெஞ்சுருகி எழுதிய கவிதையை நாடறியும். என்றைக்காவது ஜெயலலிதா, புலிகளையோ, அதன் தலைவர்களையோ ஆதரித்து ஒரு சொல்லேனும் கூறியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், தனித் தமிழீழம் வேண்டும் என்று கூறி, மேடையில் நாடகமாடிய வேளைகளில் கூட, புலிகளைக் கண்டித்தே பேசினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 

வைகோ, நெடுமாறன், இராமதாஸ், தா. பாண்டியன் போன்ற தலைவர்கள், கலைஞரைப் புலிகளின் எதிர்ப்பாளர், ஈழ மக்களுக்கே எதிரி என்று ஆக்கிவிடத் துடிக்கின்றனர். சோ, சுப்பிரமணிய சாமி, இந்து ராம் போன்ற பார்ப்பனர்களோ, ‘கலைஞர் விடுதலைப் புலிகளுக்கு ரகசியமாக உதவுகின்றவர்’ என்று கூறி, அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பாடாய்ப்படுகின்றனர். இரண்டிலும் உண்மையில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு குழுவினருக்கும் ஒரு நோக்கத்தில் மட்டுமே ஒற்றுமை உள்ளது. ஈழ மக்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் காட்டிலும், ஈழப் பிரச்சினையைக் காட்டி எப்படியேனும் கலைஞரைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம்.

எப்படியோ போகட்டும், நம்மைப் பொறுத்தவரையில், நம் நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்கிறோம். நாம் தி.மு.க.வை ஆதரிக்கின்றோம் என்பதற்காக, புலிகளைப் பற்றிய தி.மு.க.வின் பார்வையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்பதில்லை.

நாம், தமிழக அரசியலில் முழுக்க முழுக்கத் தி.மு.க.வையும், கலைஞரையும் ஆதரிக்கிறோம். ஈழ மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், தமிழக மக்களையும் படுகுழியில் தள்ளிவிடக் கூடாது என்று கருதுகின்றோம். இன்றைக்கும் கலைஞரை விட்டால், தமிழகத்திற்கு வேறு நாதியில்லை என்று உறுதியாக நம்புகிறோம். புலிகள் ஆதரவு என்னும் நிலைப்பாட்டில், தி.மு.க.விடமிருந்து நாம் வேறுபட்டாலும், அதற்காகத் தமிழக ஆட்சியை ஜெயலலிதா போன்ற கொடுங்கோலர்களிடமோ, விஜயகாந்த் போன்ற அரசியலற்றவர்களிடமோ ஒப்படைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். ஈழ அரசியலில், விடுதலைப் புலிகளே மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய போராளிகள் என்பதையும், அவர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவை என்பதையும் உறுதிப்படுத்துகின்றோம்.

இதுவே நம் நிலைப்பாடு!

- சுப.வீரபாண்டியன்

Pin It