2009 ஜனவரி தொடக்கத்தில் கிளிநொச்சி சிங்களவர் கையில் விழுந்ததற்குப் பிறகு, ஓரிரு மாதங்களில், ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா முன்வைத்தது என்றும், அதைப் புலிகள் ஏனோ ஏற்கவில்லை என்றும், அருட்தந்தை ஜகத் கஸ்பர் ஒரு வார ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இணையத் தளத்திலும் இச்செய்தி வெளிவந்துள்ளது.
உடனே கஸ்பர் ஒரு துரோகி என்று சில இணைய தளங்களில் சிலர் எழுதியுள்ளனர். துரோகிப் பட்டம் வழங்குவது இப்போது எளிதாகிவிட்டது. இத்தருணத்தில், அச்செய்தியுடன் தொடர்புடையவன் என்ற முறையில், ஓர் உண்மையைக் கூற வேண்டிய நிலையில் நான் உள்ளேன். அத்திட்டம் குறித்து, ஏப்ரல் மாத வாக்கில், கஸ்பர் என்னிடமும் சொன்னார். நீங்களும் நடேசன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்றார். தீர்வு ஏற்படும்போது, ஆயுதங்களை ஒப்படைத்தால் போதுமானது என்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது என்றார்.
அந்தக் காலகட்டத்தில் நடேசனைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. ஏறத்தாழ ஒரு வாரம் ஆயிற்று. அரசியல் பொறுப்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டு, செய்தியைக் கூறினேன். தலைமையுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றார். ஆனால் எந்த விடையும் அங்கிருந்து வரவில்லை. என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. களத்தில் நின்றவர்கள் அவர்கள். நிலைமைக்கு ஏற்ப ஒரு முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் கஸ்பர் சொல்வது பொய்யில்லை என்பதை உலகிற்கு நான் உரைத்தாக வேண்டும்.
- சுப.வீரபாண்டியன்