இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர்.
இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந்த பாதிரியின் டவுசர் இப்போது கிழிந்து தொங்குகிறது. அருகிலேயே அடுத்த கஸ்பரும் கண்ணடித்துக்கொண்டு நிற்கிறார்.
ஆளும் வர்க்க நலன்களுக்காக மக்களின் அரசியலை மழுங்கடிக்கும் தன்னார்வ குழுக்களின் வேலைத் திட்டம்தான் இவர்களின் நிகழ்ச்சி நிரல். அவற்றை இந்தியாவுக்குள் நிறைவேற்றித் தரும் முகவர்கள்தான் இந்த கஸ்பர் வகையறாக்கள். ஈழத்தில் மாபெரும் மனிதப் பேரழிவு நடந்து முடிந்ததும் அதைப்பற்றி மறக்க முடியாத வேதனையில் நக்கீரனில் தொடர் எழுதும் இந்த பாதிரி, கொடூரமான முறையில் போர் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்தார்? மக்கள் மனங்களில் எழுந்திருந்த அரச எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டார். ‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’ என்று பிரசங்கம் செய்தார். ‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று கருணாநிதி தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.
ஜனவரி தொடங்கி அடுத்து வந்த மாதங்களில் கருத்துரிமை மீது தமிழ்நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு காவல்துறையால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈழம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அரங்குகள் மறுக்கப்பட்டன. அனைவரும் மிரட்டப்பட்டிருந்தனர். துண்டு பிரசுரங்கள் அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்களுக்கு வாய்மொழி மிரட்டல் விடப்பட்டிருந்தது. (இந்த காரணத்தினாலேயே திண்டிவனத்துக்குச் சென்று துண்டு பிரசுரம் அச்சிட்டு வந்த தோழர்களை நான் அறிவேன்). ஆனால் ஜெகத் கஸ்பரின் மௌன ஊர்வலத்துக்கு எந்த தடையும், எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவுத் திடல் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. காரணம் மிக எளிதானது. மற்றவர்களின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை. கஸ்பரின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை அல்ல. அவர் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி அரசின் காலடியில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில்தான் அரசுக்கு கஸ்பர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேட்டுக் கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே அவர்கள் நடத்திய சில போராட்டங்களில் கஸ்பரை காண முடிந்தது. கஸ்பர் நடத்திய மௌன ஊர்வலத்துக்கு ஐ.டி. இளைஞர்கள் போனார்கள். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்தபடி அந்த மௌன ஊர்வலத்திலும், மற்ற இடங்களிலும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இப்போது ‘ஈழம்... மௌனத்தின் வலி’ என்ற தலைப்பில் நூறு பேரின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கஸ்பர். அதன் அபத்தங்களையும் அங்கு பேசிய பக்கி வாசுதேவ் போன்ற பன்னாடைகளின் பேச்சு பற்றியும் ஏற்கெனவே தோழர்கள் விரிவாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்.
நூறு கவிதைகள் என்கிறார்கள். ஆனால் அதில் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களும் உண்டு. இவர்கள் எப்போது கவிஞர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் மேடையில் பேசிய பேச்சை எடுத்து வெளியிட்டு அதையும் கவிதை என்கிறார்கள். அருந்ததி ராய் ‘டைம்ஸ் ஆஃப் இன்டியா’வுக்கு எழுதிய கட்டுரையின் சில வரிகளும், பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதிய கட்டுரையின் சில வரிகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவையும் கவிதைகளாம். பலரும் பல்வேறு இடங்களில் பேசியவற்றை, எழுதியவற்றை துண்டு, துண்டாக எடுத்து வெளியிட்டுக்கொண்டு ஏதோ அவர்கள் எல்லோரும் இவர்களுக்கு ஸ்பெஷலாக எழுதிக் கொடுத்ததைப் போன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தோழர் துரை.சண்முகத்தின் கவிதை தணிக்கை செய்யப்பட்டது போன்றவை தனி மோசடி.
த.செ.ஞானவேல் என்பருக்குச் சொந்தமான ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு’ம், ஜெகத் கஸ்பருக்கு சொந்தமான ‘நாம்’ அமைப்பும் இணைந்துதான் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கஸ்பரை உரிமையாளராகக் கொண்டு செயல்படும் நல்லேர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதலில் எங்கிருக்கிறது இந்த பத்திரிக்கையாளர் அமைப்பு? இதில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யார், யார்? இலங்கையில் மிக மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தனர்? ஒரு உண்ணாவிரதம், ஒரு ஆர்ப்பாட்டம்... எதை நடத்தினீர்கள்? அப்போதிலிருந்து தினசரி இணையங்களில் வெளிவரும் கோரமான புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொண்டு இப்போது அவற்றை தொகுத்து கவிதை எழுதி பணம் பார்க்க முயல்கிறீர்கள் என குற்றம் சாட்டினால் அதற்கு உங்கள் மறுப்பு என்ன? ஆனால் அதுதான் உண்மை. ஈழத்தில் மக்கள் படுகொலைகள் நடந்தபோது மௌன ஊர்வலம் நடத்தி இந்திய, தமிழக அரசுகளின் துரோகத்தை மறைக்க முயன்றதன் மூலம் அப்போதைய ஆளும் சக்திகளுக்கு விசுவாச ஊழியம் புரிந்தார் கஸ்பர். இப்போது அவரது ‘நாம்’ அமைப்பும், ஞானவேலின் ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றமும்’ தமிழ் மக்களின் பேரழிவையும், தோல்வியையும் அதிகார பீடங்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர்.
போருக்குப் பிறகான இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையின்போது ‘ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார் எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னார்வக் குழுக்கள் எப்போதுமே பேரழிவை வாய்ப்பாகத்தான் பயன்படுத்தும் என்பதை சுனாமி நிதி மோசடிகளில் கண்டோம். அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் சுனாமி நிவாரணத்துக்காக தென்னிந்திய திருச்சபைக்கு வழங்கிய 18 கோடி ரூபாயை அவர்கள் ஆட்டையைப் போட, இப்போது அமெரிக்க நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதைப்போலவேதான் இலங்கையில் நடந்திருக்கும் மனிதப் பேரழிவையும் இவர்கள் வாய்ப்பாக பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை வைத்து புராஜக்ட் போட்டுப் பணம் பார்க்கும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பேரழிவிலும் சுவாமிநாதன்களுக்கும், கஸ்பர்களுக்கும், ஞானவேல்களுக்கும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
தமிழ் ஊடகங்களில் இந்த கஸ்பர் எப்படி அறிமுகமானார்? கனிமொழியுடன் இணைந்து ‘கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தியபோது இவர் மீது ஊடகங்களின் கவனம் பதிந்தது. அடுத்தடுத்த வருடங்களில் உலகளாவிய மேட்டுக்குடி கலாச்சாரமான ‘மாரத்தான்’ என்பதை சென்னைக்கு அறிமுகப்படுத்தினார். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் பணம் பெற்று நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியானது, முழுக்க, முழுக்க முதலாளிகளின் விளம்பர சந்தை. நிறுவனத்தின் விளம்பரத் தட்டிகளைப் பிடித்தபடி அதன் ஊழியர்கள் வரிசையாக வந்துகொண்டிருக்க, இந்த பாதிரி மேடையில் நின்று நிறுவனங்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் ஜெபம் செய்வதுபோல உச்சரிப்பார். இந்த கொழுப்பெடுத்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் கடற்கரை சாலை ஒதுக்கித் தரப்படுகிறது.
கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் கஸ்பர் நடத்திய மாரத்தான் போட்டியில் வேறொரு கொடுமையும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து படித்து முன்னேறி வந்த சந்தோஷ் என்ற மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வந்தார். கஸ்பர் கோஷ்டி, ‘மாரத்தானில் வெற்றி பெற்றால் லட்சம், லட்சமாகக் கொட்டும்’ என்று கிளப்பிவிட்ட ஆசையால், தான் வெற்றிபெற்றால் தனது ஏழ்மையான குடும்பத்துக்கு விடிவு கிடைக்குமே என்றெண்ணி மாங்கு, மாங்கென ஓடினார் சந்தோஷ். ஆனால் இறுதியில் அவர் மூச்சிரைத்து செத்துப் போனார்.
அதுபோலவேதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியும். சபாக்களுக்குப் போய் கச்சேரி கேட்பது எப்படி முன்பு பார்ப்பனர்களுக்கு அந்தி நேரத்து நேரப்போக்காக இருந்ததோ, அதுபோல மத்திய வர்க்கத்தின் பொழுதுபோக்கு மனநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி. மாநிலம் முழுவதும் இருக்கும் நலிவடைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் வீதிகளில் நாடகம் போட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த காசில் பத்தில் ஒரு பங்கு கூட அதில் கலந்துகொண்டவர்களுக்குத் தரவில்லை. தேர்தல் சமயத்தில் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களை தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கெல்லாம் துணை நின்றவர்தான் இந்த கஸ்பர்.
எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, பாசிச முதலாளித்துவ முகவரான இந்த கஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த பாதிரிக்கு தமிழ் தேசியத்திலும் தெளிவில்லை, இந்திய தேசியத்திலும் தெளிவில்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் முதலாளித்துவ உளவு அரசியல் மட்டும்தான். இத்தகைய ஒரு நபருக்கு நக்கீரன் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதியைத் திட்டக்கூடாது, கஸ்பருக்கு ஆளும் வர்க்கத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது... இருவரும் சேர்ந்துகொள்ள இதுவே போதுமானது. ஈழம் என்பது இன்று விற்கக்கூடிய பண்டமாகவும், பிரபாகரன் என்பவர் விற்பனைக்கான பிராண்டாகவும் இருப்பதால் நக்கீரன் இத்தகைய அபத்தங்களை தொடர்ந்து வெளியிட்டும், ஆதரித்தும் வருகிறது. எந்தவித போர்ச்சூழலும் இல்லாத தமிழ்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு அடுத்தக்கட்ட போர் பற்றி பேசுவதும், அந்த மக்களை போராடச் சொல்வதும் அயோக்கியத்தனமானது. பிரபாகரனின் உடலை ‘மம்மி’யாக்கி, அதை வைத்து பணம் பார்க்கும் இந்த பிழைப்புவாதத்தின் நாற்றம் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதன்மூலம் அங்கு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வு மேலும், மேலும் மோசமாக்கப்படுகிறது.
கஸ்பர் வகையறாக்களின் பட்டியலில் முன் வரிசையில் நிற்பவராகவும், அடுத்த ஜெகத் கஸ்பராவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளவராகவும் ஞானவேலைக் குறிப்பிடலாம். தனது பத்திரிக்கை அனுபவங்களின் மூலமாக நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற அதிகார மட்டங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஞானவேல், ‘வாழை’ என்ற பெயரிலான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இயங்கியவர், தற்போது அகரம் பவுண்டேஷனுக்காக உழைத்து வருகிறார்.. ஞானவேல் அடுத்த கஸ்பராவதற்கு இவையே போதுமானவை. ஆனால் இந்தக் கட்டுரை உள்பட தற்போதைய விமர்சனங்கள் அனைத்தையும் ஞானவேல் பாராட்டுக் கட்டுரைகளாகவும், பிரபலமாவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
நாட்டில் பிரபலம் அடைவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. கன்னட பிரசாத்தைக் கூடத்தான் பலருக்குத் தெரியும். அதற்காக அவரது வழியைப் பின்பற்றிவிட முடியுமா? ஒருவேளை ஞானவேலின் நோக்கம் அடுத்த ஜெகத் கஸ்பராவதுதான் என்றால் அதற்கு எங்காவது நடிகர்களை அழைத்துச் சென்று தையல் மிஷின் வழங்குவது, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக குண்டுவீசி கொல்லப்பட்டதையும், வீரம் செறிந்த தமிழ் மக்களின் போர் துயரமான முறையில் முள்ளிவாய்க்காளில் முடிவுக்கு வந்திருப்பதையும், ஒரு இனமே அகதியாகி உலக வீதிகளில் அலைந்து திரிவதையும் சுய நலனுக்குப் பயன்படுத்துவது அசிங்கமும், அயோக்கியத்தனமுமானது!
- ஆழியூரான்