கழிவு நீரகற்று அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கும், சுத்தம் செய்வதற்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்த, சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் 3. 15 கோடி செலவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்கான நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ‘ஜெட் ராடிங்’ எனப்படும் இந்த நவீன எந்திரங்களை சென்னையில் துணை - முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு; பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. சென்னை மாநகரத்திற்குள் மட்டும் என்றில்லாமல், தமிழ்நாடு முழுவதிலும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும். கழிவு நீரகற்றும் அமைப்புகளில் மட்டுமல்ல, பிற துப்புரவு தொழில்களிலும் இதுபோன்ற நவீனமயமாக்கல் செய்யப்பட வேண்டும். அவற்றுள் முதன்மையானது, கையால் மலம் அள்ளும் ‘தொழில்’ மனிதக் கழிவுகளை சக மனிதர்களே கைகளால் அள்ளி சுத்தம் செய்வது மிகப்பெரிய சமூக இழிவு. இந்த கணினி யுகத்திலும் இந்த இழிநிலை தொடர்கிறது என்றால், அதற்கு நம் சமூக அமைப்பின் இறுக்கமான சாதியக் கட்டுமானம்தான் காரணம். இச் சமூகப் பேரவலத்தை ஐ. நா அவை கடுமையாகக் கண்டித்துள்ளது.

அய். நாவின் மனித உரிமைக்கான ஆணையமும், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் சார்பு ஆணையம் ஆகியனவற்றின் சார்பில் 2002 மே 27 முதல் 31 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ‘அடிமைத் தனத்தின் சமகாலத்திய முறைகள்’ என்ற பணிக்குழுவின் 27 ஆவது அமர்வில் கையால் மலம் அள்ளுதல் என்பது மிக மோசமான நாகரிகமற்ற முறையிலான வேலை என்று அறிவித்துள்ளது. பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 1993 சூன் 5 ஆம் தேதி, மத்திய அரசு உலர் கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமானத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இச்சட்டத்தின் படி, விதிகளை மீறுகின்ற நபருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் தண்டம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் கூட இச்சட்டத்தின் படி தண்டிக்கப்படவில்லை. அப்படியானால், கையால் மலம் அள்ளும் முறை எங்குமே இல்லையா? இருக்கிறது.

அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என்று எல்லாவற்றிலும் இந்த அவலம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கண்கூடான சாட்சியாக தொடர்வண்டித் துறையை எடுத்துக் கொள்ளலாம். நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமான தொடர்வண்டித் துறை, வெளிப்படையாகவே இந்த அவலத்தை அரங்கேற்றி வருகிறது. தண்டவாளங்களில் விழுந்து கிடக்கும் மனித மலங்களை, கைகளால் அள்ளி ஒரு மனிதன் சுத்தப்படுத்துவதை சக மனிதர்களின் சாட்சியங்களோடு மத்திய அரசின் நிறுவனமே நடத்திக் கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் கண்களில் இந்த அவலக்காட்சி படவில் லையா அல்லது வர்க்கப் போராட்டம் இந்த இடத்தில் மட்டும் விலகிச் சென்றுவிடுகிறதா?

தண்டிக்க வேண்டிய சட்டமும் 2003 ஆம் ஆண்டுடன் கண்மூடிக் கொண்டது. இச்சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளும் எழுந்து கொண்டிருக்கின்றன. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் ஒவ்வோராண்டும் தனது ஆண்டறிக்கையில் இச்சட்டத்தை முறையாகச் செயல்பட வைக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒருவேளை இச்சட்டம் புதுப்பிக்கப்பட்டாலும், முன்பிருந்த மயக்க நிலைதான் தொடரும். என்ன செய்வது, தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டங்கள் கூட தீண்டாமைக்கு உள்ளாகின்றன.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 35,000 பேர் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதிலும் இவர்களின் எண்ணிக்கை 5. 77 லட்சம் எனத் தெரிகிறது. இவர்களில், பெரும்பான்மையோர் அருந்ததி யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஆண், பெண் இருபாலரும் கையால் மலம் அள்ளுகின்ற பணியில் ஈடுபடுகின்றனர். செருப்பு, கையுறை உள்ளிட்ட, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி கழிவுகளை அகற்றும் போது நேரடியான நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். தோல் வியாதிகள், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பல தீராத வியாதிகளால் அவதிப்படுகின்றனர்.

சிறிது நேரம்கூட சகித்துக்கொள்ள முடியாத மலத்தின் நாற்றத்திலேயே நாளெல்லாம் உழன்றுகிடக்க வேண்டியிருப்ப தால், அவர்களின் சுவாசக் காற்றிலேயே அந்நாற்றம் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. இந்நாற்றம் மூக்குக்கும், மூளைக்கும் தெரியாமல் இருக்க, ஆண் பெண் இருவருமே சாராயத்தின் தயவினை நாடுகின்றனர். இது தொடர்வதால், குடல், இரைப்பை நோயினால் இறக்க நேரிடுகிறது. இத்தொழிலாளர்களுடைய குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிகாலையில் செல்லும் பெற்றோர் இரவில்தான் பணிமுடிந்து திரும்பும் நிலை. பெற்றோர்களின் நேரடிக் கவனிப்பும், கல்வியும் கிடைக்காத காரணத்தால் காலப்போக்கில் அக்குழந்தைகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற பேராபத்தும் உண்டு.

துப்புரவுப் பணியாளர்களின் நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள 1960 இல் ‘துப்புரவு நிலை விசாரணைக் குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவின் களப்பணியின் மூலமாக, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் இத்தொழிலில் இருந்து விடுபடவே விரும்புகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதே குழுவிடம், மூன்று தலைமுறைகளாக இத்தொழிலைச் செய்து வருவதாகப் பெண்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவர்களின் உணர்வுகளை இந்தச் சமூகம் சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அரசியல் சாசனம் அளிக்கின்ற மனித மாண்புக்கு இவர்களும் உரியவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தீண்டத்தகாத வர்கள் எனப்படுகின்ற மனிதர்களாலும்கூட இவர்கள் தீண்டப்படுவதில்லை. இவர்களின் நிலையில் மாற்றம் வர, சுகாதாரமான வசிப்பிடங்கள், தரமான மருத்துவ சிகிச்சைகள், குழந்தைகளுக்கு நல்ல கல்வி ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும். படித்துவரும் இளைய தலைமுறைக்கு தகுதியான அரசுப் பணிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

உலர் கழிப்பிடங்களாக இருந்தாலும் சரி, தண்ணீர் பயன்படுத்தும் கழிப்பிடங்களாக இருந்தாலும் சரி, கடைசியில் கழிவுகளை அப்புறப்படுத்துதல் என்று வரும்போது மீண்டும் குறிப்பிட்ட மனிதர்களைத் தானே அதற்குப் பயன்படுத்துகின்றது இந்த சமூகம்.  

எனவே தூய்மைப் பணிகளின் அனைத்து நிலைகளும் நவீனமயமாக்கப்பட வேண்டும். சமூகத்தின் கழிவுகளை இதுகாறும் அகற்றிச் சுத்தப்படுத்தி வருகின்ற அந்த மாண்புமிக்க மனிதர்களுக்கு மாற்று வேலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்பதுதான் இனிமேல் முழக்கமாக முன் வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு வாளி வழங்க வேண்டும், சோப்பு கொடுக்க வேண்டும் என்பன போன்ற அற்பக் கோரிக்கைகளை முன்வைப்பது, அவர்களை நிரந்தரமாக மலக்குழிக்குள்ளே குடியிருக்கச் செய்துவிடும். எனவே, ‘கைகளால் மலம் அள்ளும் ’ முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.

- இரா.உமா

Pin It