PUCLபொழிலன் உள்ளிட்ட 15 செயற்பாட்டாளர்கள் மீதான அரச துரோக வழக்குகளைத் திரும்பப் பெறுக! பியூசிஎல் கண்டன அறிக்கை

1956 இல், மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது, நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு தனி மாநிலமாக மாறியது. இதைத் 'தமிழ்நாடு நாள்' என்று ஆண்டுதோறும் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டு தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது (அரசாணை (நிலை) எண் 118/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை/21.10. 2019).

இந்த வருடம் நவம்பர் முதல் நாள் அன்று, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, தமிழ்நாடு நாளைக் கொண்டாடும் வகையில், ஒரு முன் மொழிவாகத் தமிழகத்திற்கென கொடியொன்றை வடிவமைத்து, கொடியேற்றும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

கர்நாடக மாநிலத்தைப் போல, தமிழகத்திற்கும் தனிக் கொடியை அரசு வடிவமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், இந்தக் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு அனுப்பியிருந்தது. ஆனால் நவம்பர் முதல் நாளன்று, இந்தக் கூட்டமைப்புச் சார்பாக வடிவமைக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கு, தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் காவல் அறிவிக்கைகள் மூலம் தடை விதிக்கப்பட்டது. ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்குக் கூடத் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நவம்பர் முதல் நாளன்று, இந்தக் கூட்டமைப்பால் வடிவமைக்கப்பட்ட கொடியை ஏற்றிய செயற்பாட்டாளர்கள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் ஜான் மண்டேலா ஆகியோர் பள்ளிக்கரணை காவல்துறையால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 353 (அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தாக்குதல்), 506 (1) (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 124 A (அரச துரோகம்) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு (FIR No: 1443/2020; STM/S10P5/458/2020) நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

அதேபோல், செயற்பாட்டாளர்கள் சேகர், லோகநாதன் உள்ளிட்ட 13 பேர் திருவொற்றியூர் காவல் துறையால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143 (சட்டப் புறம்பான கூடுகைக்கான தண்டனை), 188 (அரசு ஊழியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை மீறுவது), 124 A மற்றும் Epidemic Diseases Act-பிரிவு 3 (சட்ட மீறலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு (FIR No. 5684/2020; H8 THIRUVOTTIYUR PS/004504/2020) நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A (அரச துரோகம்) ஆங்கிலேய காலனிய ஆட்சியால், விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்காகவும் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குவதற்காகவும், 1870 இல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

காந்தியடிகள், பகத் சிங், திலகர், அரவிந்தர், லஜபதி ராய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்தப் பிரிவின் கீழ் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றனர். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டப் பிரிவு நடைமுறையிலிருப்பது, மக்களாட்சிக்கானப் பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

பிரிவு 124A இன் இருப்பை உறுதி செய்த கேதர்நாத் சிங் எதிர் பீகார் மாநிலம் (1962) {Kedar Nath Singh v. State of Bihar (1962)} வழக்கில் கூட, ஒருவரின் கருத்து உடனடியாக (imminent) பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாலோ அல்லது வன்முறையைத் தூண்டினாலோ ஒழிய, 124A பிரிவை கருத்துரிமையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியது.

மேலும், Common Cause & Another v. Union of India (2016) வழக்கில், உச்சநீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124A இன் கீழ் வழக்குகளைப் பதியும் பொழுது, அதிகாரிகள், கேதர்நாத் சிங் வழக்கில், அரசியல் சாசன அமர்வு வழங்கிய வரையறையை அவசியம் பின்பற்ற வேண்டுமென கூறியுள்ளது.

ஆனால், பல பத்தாண்டுகளாகவே அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனக் கருத்துரிமையை உரக்கப் பேசும் பலரை அரச துரோகிகளாகக் கருதி ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கைது செய்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்த வரை, கடந்த காலங்களில், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த செயற்பாட்டாளர் எஸ்.பி. உதயகுமார் மற்றும் ஆயிரக்கணக்கானப் பொதுமக்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாடகர் கோவன், மே 17 இயக்கச் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி போன்ற பலரின் மீது அரச விரோதப் பிரிவு பாய்ந்துள்ளது.

பெரும்பாலும் இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், வழக்கின் இறுதியில் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் நிலையில், கைது மற்றும் விசாரணைக் கைதியாக வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலமே கருத்துரிமையாளர்களைத் தண்டிக்கும் வழிமுறையை ஆட்சியாளர்கள் பின்பற்றி வருவது கண்டிக்கத் தக்கது.

இந்தப் பின்னணியில், தமிழ்நாடு கொடியை ஒரு முன்மொழிவாக வடிவமைத்து, அதை ஏற்ற முயன்ற பொழிலன் உள்ளிட்ட 15 செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளை கருத்துரிமையின் அடிப்படையிலேயே அணுக வேண்டும். அவர்களின் செயல்பாடுகள், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வரையறையின் படி, உடனடியாக வன்முறைக்கு வித்திடவோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ இல்லை என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மக்கள் சிவில் உரிமைக் கழகம், பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

1. பிணை மனு நிலுவையிலிருக்கும் பொழிலன் மற்றும் ஜான் மண்டேலா ஆகியோரை எவ்வித நிபந்தனையுமின்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

2. பொழிலன் உள்ளிட்ட 15 செயற்பாட்டாளர்களின் மீதான அரச துரோகம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் எவ்வகை நிபந்தனையுமின்றி தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

3. கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124A ஐ, இந்திய அரசு, சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க, சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வர வேண்டுமென மக்கள் சிவில் உரிமைக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.

                                   ###

“கருத்துரிமை ஒரு மனித உரிமை. அந்த அடித்தளத்தின் மேல்தான் சனநாயகம் கட்டியெழுப்பப் பட்டுள்ளது. கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் எந்தச் செயலும், சனநாயகத்தைக் கட்டுப்படுத்தும் செயலே!”

~தீயா கான், நார்வே நாட்டைச் சார்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் குறும்பட இயக்குநர்.

மக்கள்சிவில்உரிமைக்கழகம்(PUCL)

Pin It