அவன் வேலைகள்
பூதகணங்களாகித் தெரிந்து தொலைய
அவள் உன் காலடிக் கீழ்
எறும்பாகிப் போயிருந்தாள்

அவன் தடத்தில்
மிதிபடாமல் தப்பித்தபடி
அவனுக்கான மழைக்கால உணவுக்காய்
ஊர்ந்தபடியே இருந்தாள்

வீடு மழைக்கால சிறையிருப்பில்
காலியானபோழ்து
அவனை நிரப்பிக் கொள்ள
லென்சுகள் கொண்டவளைத் தேடினான்

பிணங்களோடும் புணர்ந்துவிட
தயாரான போழ்தில்
தீண்டலில் பெண்ணாகிவிட முடியா
அகலிகையாகினாள்

தொட்டவுடன் பெண்ணாக
அவன் இராமனுமில்லை
அவள் கல்லானது சாபத்தாலுமில்லை

மரம் கல்லானது
யுகவாழ்வின் பரிணாம வளர்ச்சி
தலவிருட்சமாய்த் தொட்டு
கண்ணில் ஒத்திக் கொள்ள வேண்டியதுதான்
பூக்கும் காய்க்கும் மரம் என்பது பொய்யாக

- திலகபாமா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.