குருதிச் சேற்றில்
குழைந்து போகத்
தன் மகனைத்
தேர்க்காலில் தள்ளி...

கதவைத் தட்டிய
தன் கையை
ஏகலைவன்போல்
வெட்டித் தந்து...

சிலம்பால் வளைந்த
செங்கோலைத்
தம் உயிர்க்குறடால்
நிமிரச் செய்து...

இப்படி நீதிக்காய்
தம்மையே
தண்டித்துக் கொண்டபோது
நீதியின் வீச்சு
புரிந்தது!

இன்று
கீழ்க்கோர்ட்டிலும்
மேல்க் கோர்ட்டிலும்
இருட்டறை வௌவால்போல்
நீதிகள் தலைகீழாய்...

தண்டனையும் தலைக்குனிவும்
நீதிமானுக்கல்ல;
ஆராய்ச்சிமணியடிக்கும்
பசுக்களுக்கே!

- வ.இளங்கோ, திண்டுக்கல்

Pin It