தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடாக மாற்றியுள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட வில்லை. இந்நிலைப்பாடு ஆதிக்கச் சமூகத்தில் உள்ள பெண்கள் மட்டுமே பதவிகளில் அமர வாய்ப்பு அதிகமுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இக்காரணத்தைக் காட்டித்தான் மிக்க அதிகாரமுள்ள இந்தியாவின் உயர்மட்ட அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தம் அமலாக்கம் பெறாமலே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பதவிகள் உள்ளாட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எல்லா நிலைகளிலும் செய்யப்பட்டு, அந்தப் பதவிகளுக்குப் பெண்களும் போட்டியிட்டு இன்று பத்து லட்சம் பெண்கள் பதவிகளில் இருக்கின்றனர்.

பத்து லட்சம் பெண்கள்  பதவியில் இருக்கின்றனர் என்றவுடனே ஓர் அடிப்படையான கேள்வியை அனைவரும் கேட்கின்றனர். இந்தப் பெண்கள் கூட்டம் அதிகாரத்திற்கு வந்தவுடன் என்ன மாற்றத்தைச் செய்த்து? என்னென்ன மாற்றங்களை நம் சமுதாயத்தில் இவர்களுடைய செயல்பாடுகளில் வெளிப்படாகப் பார்க்கிறோம்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு சில கருத்துக்களை நாம் பரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகிறது. ஒன்று ஏன் 33 சதவீதத்திற்கு குறையாமல் பதவிகளில் பெண்களுக்கு இடம் தர வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன? அடுத்து பதவிகளுக்கு வந்தபின் இந்தப் பெண் பிரதிநிதிகள் சந்திக்கின்ற பிரச்சினைகள் என்னென்ன? இவர்கள் தங்களுடைய பங்கு பணிகளை நிறைவேற்ற எப்படிப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் பெண்களின் சாதனைகள் எவ்வளவு வேதனைகளுக்குப் பின் வந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

உலகம் முழுவதும் ஒரு கோட்பாடு நிலவுகிறது. பெண்கள் கூட்டமாகப் பொது இடங்களுக்கும், முடிவுகள் எடுக்கின்ற பதவிகளுக்கும் வரும்போது பல மாற்றங்கள் சமூகத்தில் இவர்களுடைய செயல்பாடுகளால் ஏற்படும் என்பதுதான் என்னுடைய மையக்கருத்து. இந்நிலையில் நம் நாடு அடிப்படையில் ஓர் ஆணாதிக்க சமுதாயமாக இருக்கின்ற காரணத்தால் ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு வரும் பெண்கள் மிகப்பெரிய மாற்றங்களை உடனே உருவாக்கி விடுவார்கள் என்று கருதுவது தவறானது. மாற்றங்கள் வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஏனென்றால் இந்தியச் சமுதாயத்தில் ஆதிக்க மனோபாவம் மேலோங்கி இருக்கின்ற காரணத்தால் இப்படி தேர்ந்தெடுத்துப் பதவிக்கு வருகின்ற பெண்களை ஒட்டுமொத்தமாகப் நிராகரிக்கின்ற தன்மையால், அரசாங்கம் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கிவிட்டது. இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களை பொம்மைப்போல் பதவிகளில் அமர வைத்துக்கொண்டு ஆட்சி அதிகாரம் புரியும் ஆதிக்க மனோபாவம்தான் நம் நாட்டில் நிலவுகிறது. சூழலைப் புரிந்துகொண்டு திறமையுடன் தங்களது பணிகளை நிகழ்த்தும் பெண்களைத் தவிர்க்க இயலாமல் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் இன்றைய ஆணாதிக்கச் சமூகம் இருக்கின்றது. எனவே நம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பெரும்பாலோர் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்களேயன்றி தலைமையேற்று மக்களுக்கு வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கமுடியாது. ஆகையால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவிகளுக்கு, முறையான பயிற்சியைத் தந்து, அவர்கள் களத்தில் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது அவர்களுடன் நின்று உதவி செய்ய ஆதரவான நிறுவனங்களும், அமைப்புகளும் தேவை என அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

            இந்தச் சூழலில் பல பெண்கள் தாங்களாகவே மிகப்பெரிய போராட்டங்களை ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக நடத்தி மிகப்பெரிய சாதனைகளை நடத்தி வந்துள்ளனர். இந்தச் சாதனைகள் அனைத்தும் மிகப்பெரிய சோதனைகளைக் கடந்து, இன்னல்களைக் கடந்து சாதிக்கப்பட்டவையாகும். இவைகளைப் பார்த்தபிறகு பல நாடுகள் நம்மைப் பார்த்து பிரமிக்கிறார்கள். பல நாடுகளிலிருந்தும் இந்தப் பெண் தலைவர்களின் சாதனைகளைப் பார்க்க வருகிறார்கள்.

            பல பஞ்சாயத்துத் தலைவர்கள் எனக்கு அதிகாரம் இல்லை, பணம் இல்லை இந்தப் பஞ்சாயத்தில் என்று ஓலம் இடும் நிலையில், கே. ராயவரம் பஞ்சாயத்துத் தலைவராக இரண்டு முறை இருந்த கே. ராணி சாத்தப்பன் பாலிதின் பயன்படுத்தாத சுத்தமான கிராமமாக, கிராம மக்களை வைத்தே மாற்றிவிட்டார். சுற்றுச்சூழலுக்கு ஒர் எடுத்துக்காட்டாகவும், சுகாதாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி பல பரிசுகளைப் பெற்றவர்.

            முதன் முதலில் ராமநாதபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க மழைநீர் சேகரிப்பை எல்லா வீடுகளிலும் ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கி உலகவங்கியின் பாராட்டுதலைப் பெற்று மூன்றாவது முறையாக பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சாதனை படைத்தவர் மைக்கேல் பட்டினத்தின் தலைவி ஜேசுமேரி.

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழைக்குழந்தைகள். எனவே அவர்களின் குறை போக்குவதுதான் என் வேலை எனக் கூறி, பள்ளித் தோட்டத்தில் காய்கறி, கீரை போட்டு பராமரித்து அவைகளைச் சத்துணவுக்குத் தினமும் தந்த சாதனை படைத்திருப்பவர் நூத்துலாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் கலா. அதேபோல் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் அதிகமிருப்பது தலித் வாழும் பகுதியில். எனவே ஆரம்ப சுகாதார மருத்துவமனையுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரத்தசோகையிலிருந்து இந்த ஏழைப்பெண்களை விடுவிக்க பாடுபட்டது அதே பஞ்சாயத்துத் தலைவிதான். பொதுவாக ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை போன்ற பிரச்சினைகளை ஐ.நா நிறுவனங்களும் அறிஞர்களும் தான் பேசுவார்கள். நம் அரசியல்வாதிகள் பேசுவது இல்லை. ஆனால் இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் இதனைப் புரிந்து செயல்பட்டது பலரை வியக்க வைத்திருக்கிறது.

இதேபோல் தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு பாலர் பள்ளியைச் செப்பனிடுவதும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு நகம் வெட்டுவதும், அவர்களைக் கழிப்பறையை உபயோகிக்கப் பழக்குவதும், தனது தலையாயக் கடமை என எண்ணி வேலைகளைச் செய்து தலித் இனக் குழந்தைகளின் சுகாதாரக் கலாச்சாரத்திற்குப் பாடுபட்ட உரத்துப்பட்டி சின்னம்மா மிகப்பெரும் சாதனையாளராகக் கருதப்படுகிறார்.

பன்னாட்டுக் கம்பெனிக்காக தங்கள் ஊரில் உள்ள தாது மணலை அள்ளியபோது அதற்காகக் குரல் கொடுத்து ஊர் மக்களைத் திரட்டி போராடி இயற்கை வளத்தைப் பாதுகாத்த வாண்டுவாஞ்சேரித் தலைவராக இருந்த ராணி முனியக்கண்ணு ஒரு இயற்கைப் பாதுகாப்புப் போராளி என்றே சொல்லவேண்டும். இப்படித் தமிழ்நாட்டில் கண்களுக்குத் தெரியாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக வேலைகளைச் செய்து ஓர் அற்புதமான புரட்சியைச் செய்து கொண்டுள்ளார்கள்.

பெண் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு உள்ள இன்னல்கள் எண்ணிலடங்காதவைகள். குடும்பத்தில் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோது நம் பிரச்சினைகளைப் பேச நாம் ஏன் அடுத்தவரைக் கெஞ்ச வேண்டும் என எண்ணி, பெண் பிரதிநிதிகளுக்காகவே ஒரு சங்கத்தை நிறுவி, பதிவு செய்து பெண் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்துப் போராடி பல வெற்றிகளைக் கண்டவர் ஆனைக்குப்பம் பஞ்சாயத்துத் தலைவி பொன்னி. இவர் பல தலைவிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.

இப்படி சாதனையாளர்களின் பட்டியலில் உள்ள தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துப் பெண் தலைவர்கள் அனைவரும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சமூக அக்கறைக் கொண்ட பெண்தலைவர்கள் உள்ளாட்சி பதவிகளில் குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். பீகார் மாநிலம் பல நிலைகளில் பின்தங்கி உள்ளது, ஆனால் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கி பல மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது. எனவே பெண்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ளாட்சி மற்றும் மேல்நிலைகளில் உள்ள பதவிகளிலும் 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றபோதிலும் பெண் பதவியாளர்களின் பின்னணியிலும் ஆண் தலைமை ஆதிக்கமும் தலையீடும் இருக்கின்ற சமூகப் பின்னணியிலிருந்து தங்களது நிலைப்பாட்டை உணர்ந்து செயலாற்ற வேண்டிய கருத்தாக்கம் கொண்டவர்களாக மாற்றுவது என்பது சாதனைப்பட்டியலை வாசித்தல் என்ற ஊக்க வார்த்தைகள் மட்டும் போதாது. அரசியல் அமைப்புகளுக்கான வேலைப்பாடுகளுக்கு மட்டும் பயிற்சி, படிப்பு, அறிமுகம் என்ற எந்த முன் அனுபவமும் தேவையில்லாதது என்ற நிலைப்பாட்டினை உள்ளாட்சி பதவிகளிலாவது மாற்ற வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆட்பட்டுள்ளோம். அத்தகைய பதவிகளில் அமரும் பெண்கள் புதிய சமூகத்தின் மாற்றங்களாக உருவாக இத்தகைய நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியவை.

செ.சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11

Pin It