ஒரு மௌனம் ஒரு மரணம்
பெயரிடப்படாத மௌனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன.
அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.
யாருமற்ற
மூன்றாம் ஷாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத் துவங்கின.
மௌனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது.
இரண்டாம் இயேசு
சிலுவைகள் சுமந்து திரிந்தவன்
தன்னை இரண்டாம் இயேசு என்றபோது
நீங்கள் கைதட்டி வரவேற்றீர்கள்.
நீண்ட தாடியும் காவி நிற பற்களுமாய்
அவன் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.
அவனது பலவர்ண சிலுவைகளில் கவரப்பட்ட
குழந்தைகள் பலூன்விற்பவனை தொடர்வதுபோல்
பின்தொடர்ந்து சென்றனர்.
பசும்பாலும் நெய்யும் அவனுக்களித்து
மகிழ்ந்தார்கள் உங்கள் இல்லத்தரசிகள்.
எல்லோருக்கும் சொர்க்கத்தில் இடமிருக்கிறது
என்றபடி சிரித்தான் அவன்.
உடன்சேர்ந்து கோணல் உதடுகளுடன்
அப்போதும் கைதட்டி சிரித்தீர்கள் நீங்கள்.
உலகின் மிக மோசமான பெண் - 1
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை,
அவளது தேவை,
ஓர் ஓநாயை ஒத்திருந்தது.
அவளது கறுத்த இதழ்களில்
வழிந்தபடி இருந்தது முந்தைய தினத்தின்
எச்சில்கள்
குழந்தையொன்றின் விரல்களை
கொறித்துக்கொண்டிருந்தன
அவளது கூரிய பற்கள்.
துடிதுடித்த குழந்தையின்
கதறலை அலைபேசிக்குள்
முகம் மறைத்து கடந்தனர்
சிலர்.
கவிதைக்குள் மறைந்துகொண்டேன்
நான்.
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை...
உலகின் மிக மோசமான பெண் - 2
நவீனத்தின் நீட்சியே
நான்கு காதல் என்றிடுவாள்.
புணர்ச்சியே பின்நவீனத்தின்
கோட்பாடு என்பாள்.
புரியாக் கவிதை எழுதும் ஐவரின்
கலியுக திரௌபதி
நான் என்றும் சொல்வாள்.
புரட்சிப்பெண் அவளின்
கண்களில் வழிகின்ற நஞ்சில்
நான்கு துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
அவள் உலகம்
அவள் வாழ்வு
அவள் அவள் அவள்
அவள் உலகில் தான்
அமைதியாக இருக்கிறாள் அவன்.
ஆதாம் ஏவாள்
ஏதேன் தோட்டம்
வரைந்திருக்கிறேன் என்றது
குழந்தை.
ஆதாமும் ஏவாளும் எங்கே
என்றேன்.
அந்த ஆப்பிள் மரத்திற்கு
பின்னால் நிற்கிறார்கள்
இதுகூட தெரியாதா உனக்கு
என்றபடி சிரித்தது.
மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.