ஆண்களை மையமிட்ட இலக்கியப் பரப்பில் ஆண் அடக்குபவ னாகவும் பாடுபொருளாகவும் இருந்திருக்கிறான். பெண் அவனது விழைவிற்கும் புனைவிற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டாள். பெண்ணின் உணர்வுகள் உள்ளவாறு காட்டப்படாமல் ஆணாதிக் கத்தின் குரூரங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தப்பட்டன. பெண்ணும் ‘மனித இனம்தான்’ என்ற உணர்வு கைவரப்பெறாமலே படைப்புகள் பெருகின. தன்னை அடையாளப்படுத்தும் கருவியான மொழி பெண்ணிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டிருந்தது. அவளது வெளிப்பாட்டுச் சாளரங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட சூழலிலும் பெண் எழுத்தாளர்கள் தோன்றினர். ஆனால், தாம் எழுத அனுமதிக்கப்பட்டதே பெருஞ்சுதந்திரம் என்ற நிலையில் அவர்களில் பலர் எழுதினர். ஆண்களின் மூளைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட அவர்களது மூளைகள், மரத்த மூளைகளாய் இருந்து ஆணாதிக்கப் போக்கிற்கு ஏற்ப செயல்பட்டு ஆக்கங்களை வெளிப்படுத்தின.

அடுத்த நிலையில், பெண்ணின் சுயம், வலி உணரப்பட்டு ஆக்கங்கள் வெளியாயின. அதிலும் பெண் இருக்கும் நிலையினை வெளிப்படுத்தி, வாசகர்களுக்கு உணர்த்த முயலும் நோக்கோடு சில தோன்றின. வெளிப்படுத்துவதோடு நில்லாமல் பெண்களை விழுங்கும் குழிகள் எவை? எவ்வழியில் பள்ளங்கள் காத்துக் கிடக்கின்றன என்று எச்சரிப்பது; ஆழ்ந்த குறுகிய பள்ளங்களுள் தள்ளப்பட்ட பெண்களின் திணறலை, சிதைவுகளை வெளிப்படுத்து வது; பெண்ணின் மீட்சிப் போராட்டங்கள்; சுயம் அழிப்புச் செயல்களுக்கெதிரான எதிர்வினைகளைக் காட்டுவது என்ற நிலையில் சில படைப்புகள் அமைந்தன. பெண்ணின் ஒவ்வொரு அசைவும் ஆணதிகார மையத்தால் வரையறைக்குட்படுத்தப்பட்டு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுக்குள் சிக்கிக்கொண் டும் வெளியேறியும் சில பெண்கள், தங்கள் அனுபவப் பிரதிகளை, விருப்பு வெறுப்புகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தி ஆசுவாசம் அடைந்திருப்பதும் வெளிப்படை.

1980 முதல் 2010 வரையிலான முப்பதாண்டு காலச் சிறுகதை வரலாற்றில், குறிப்பாகப் பெண்களுடைய சிறுகதைகள் இக் கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பல சிறுகதை எழுத்தாளர் களின் தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனினும் உதாரணங்களாக, பாமா, உமாமகேசுவரி, தமயந்தி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் சிறுகதைகள் மட்டும் கட்டுரைப் பொருளில் பங்கு வகிக்கின்றன.

இந்தப் பெண் படைப்பாளிகளின் எழுத்துகள் புனைவுகளில் இருந்து விடுபட்டவை. மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை, கருத்தியலை மூலமாகக் கொண்டு அமைந்தவை. யதார்த்தமான இப்படைப்புகளின் வழி, பெண் கருவாகத் தோன்றி வளர்ந்து, பிறந்து தனது உருவத்தையும் சுயத்தையும் இழந்து காடு செல் வதுவரை யிலான சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. இக்காலங் களில் அவள் சந்திக்கக்கூடிய ஆதிக்கங்களையும் வன்முறைகளையும் காட்டுகின்றன. பெண்ணின் சுயத்தை அக்கறையோடும் நியாயத் தோடும் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆணாதிக்கத்திற்கெதிரான கலகக் குரலையும் தன் இருத்தலுக்கான போராட்ட முயற்சிகளையும் இவ்வெழுத்துகளில் அழுத்தமான, ஆழமான நிலைகளில் காணமுடிகின்றது.

பெண், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே எத்தகையதொரு சூழலைச் சந்திக்கிறாள் என்பதைக் ‘கதறல்’ என்ற சிறுகதையில் பாமா சித்திரித்து சமூகத்தைச் சாடுகிறார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, கடுமையான பிரசவ வலியோடு ஒரு பெண் பேருந்தில் ஏற்றப்படுகிறாள். பேருந்து மருத்துவமனைக்கருகில் செல்லும் பொழுது பேருந்திலேயே பிரசவிக்கிறாள். இதனால் சில சிக்கல்கள் நேர்கின்றன. இதைக்கண்ட சக பயணி மல்லிகாவும் மருத்துவமனை நர்சும் டாக்சி வைத்து முன்கூட்டியே அழைத்து வந்திருக்கலாமே என அப்பெண்ணின் குடும்பத்தினரைப் பார்த்துக் கேட்கும்பொழுது, ‘இந்தப் பொட்டக் கழுதையைப் பெறுறதுக்கா டாக்சி வச்சு வரச்சொல்றா, நல்ல காலம். பஸ்சுலயே வந்தாச்சு’ எனப் பெண்ணின் மாமியார் நினைத்துக் கொள்கிறாள். ‘அட நீ வேற சும்மா கெட. வகுத்தெருச்சலக் கௌப்பாதெ. அப்டியாச்சும் ஒரு காளங்கன்னப் பெத்துருந்தான்னா டாக்சி வைக்கலாம்.எல்லாம் வைக்கலாம். இந்தப் பொட்டக் கழுதையைப் பெறுறதுக்கு இதுபோதும். இந்தச் சனியன வீட்ல பெத்துருந்தான்னா இப்ப இந்த நர்சு, ஆயா, தோட்டி, கீட்டினு துட்டச் செலவழிக்க வேண்டாம்’ என்று கூறுவதும் வெகு துல்லியமாகப் பெண்ணின் வாழ்வியல் நிலையைக் காட்டக்கூடியது.

பொட்டக் கழுத, சனியன் - காளங்கன்னு(காளைக் கன்று) என்ற சொற்களும் பெண் குழந்தை என்பதினால் இது போதும் என்ற சலிப்பும் ஆண் குழந்தை என்றால் டாக்சி வைக்கலாம் ; எல்லாம் வைக்கலாம் என்ற பெருமிதமும் அனைத்தையும் உணர்த்தப் போது மானவையாக உள்ளன. பொதி சுமக்கும் கழுதையாகவே பெண் கருதப்படுகிறாள். ஆண் குழந்தை பிறக்கும்பொழுது சிறப்பு ஏற்பாடு களும் சலுகைகளும் மகிழ்ச்சிக்கான வரவேற்பாயும் பெண் பிறப்பு துன்பத்திற்கான குறியீடாகவும் மறுப்பிற்கான சலிப்பாகவும் வெறுப் பாகவும் வெளிப்படுகின்றன. இவ்வளவு போராட்டங்களையும் மீறி அக்குழந்தை உயிரோடிருக்குமா என்ற நிலை. ‘தலப்புள்ளன்னு சொன்னாகள்ள அப்ப தப்பிச்சுரும்’ என்பதன் மூலம் ஏதோ ஒரு நிர்பந்தத்தில்தான் பெண் குழந்தை உயிரோடு வளரவே அனுமதிக் கப்படுகிறது. பெண் நாட்டின் கண் என்று எழுதியிருந்த பலகையைக் கண்ட மல்லிகாவிற்கு ஏளனச் சிரிப்பெழுகிறது. நாட்டின் கண்ணப் புடுங்கிப் புடுங்கி நாயிக்குப்போட்டுட்டா நாடே குருடாத்தான் போகும். குருடாகவே போகட்டும் என்று அவள் கூறுவதன் மூலம் பிறந்த பெண் குழந்தைகள் வீசப்பட்டு நாய்களால் கௌவிச் செல்லும் பாதகம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அறிவுக் கண்ணற்று செயல்படும் சமூகத்தின் கண்மூடித்தனம் துணிச்சலோடு இங்கு சாடப்படுகிறது.

குடும்ப வன்முறை, சமூக வன்முறை என இருநிலையிலும் பெண் தாக்கப்படுகிறாள். பாமாவின் ‘பொன்னுத்தாயி’ என்ற கதையில், ஆணாதிக்கத்தால், கணவன் என்ற அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பொன்னுத்தாயி எல்லா மரபார்ந்த, சமூகம் சார்ந்த மூடத்தனத்தைக் கடந்து யதார்த்தமான நிலையில் வாழமுற்படுபவளாக வெளிப்படு கிறாள். குடித்துவிட்டு, அடித்துக் கொடுமை செய்யும் கணவனை விட்டுப்பிரிகிறாள். குழந்தைகளையும் அவனிடம் விட்டுவிடு கிறாள். சுயதொழில் செய்து வாழ முற்படுகிறாள். இதற்காகத் தான் வாழும் சமூகத்தால்(ஆண்கள்+பெண்கள்) ஏளனப்பேச்சிற்கு உள்ளாகிறாள். ‘கல்லயும் புல்லயும் கெட்டிகிட்டு இம்புட்டு நாளா நாம்பட்டது போதும்’ என்று பொன்னுத்தாயி கூறுவது, கல்லானா லும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று போதிக்கப்படும் ஆண்சார்ந்த அறிவுரையைத் தகர்க்கச் செய்வதாக உள்ளது. பண்பாடு சார்ந்து கழுத்தில் சுமையாகக் கிடக்கும் அந்தத் தாலியினால் வெறொரு பயனுமில்லை என்பதை உணர்ந்தவளாய் அதை அறுக்கிறாள். தாலியை விற்று, முதலீடாக்கி சிறு கடையை உருவாக் குகிறாள். கல்வி பெறாதவளாகப் பொன்னுத்தாயி இருப்பினும் யதார்த்தத்தை, சுயத்தை உணர்ந்தவளாக ஆதிக்கத்தை மீறுவதாக அவளது செயல்பாடுகள் உள்ளன.

கணவனுக்கு அடங்கி ஒடுங்கியிருப்பது பெண்மையின் இலக் கணம் என்பது போலவே ஆணுக்கும் இலக்கணம் வகுக்கப்பட் டிருக்கிறது. ‘ஒரு பொம்பளய அடக்கமாட்டாதவனல்லாம் என்னய்யா ஆம்பள ; இவனுக்கு மீச ஒரு கேடு’ என்ற சொற்கள் சமூகத்தின் ஆண்மை பற்றிய எதிர்பார்ப்பை முன்வைக்கின்றது. ‘இவெ ஒரு ஆம்பளையா? சரியான பொட்டப் பெய. போலிசுடேசன் வரைக்கும் போயி புருசன அடி வாங்க வச்சவள இன்னும் உசுரோட உட்டுட்டுப் பாத்துக்கிட்டு இருக்கானே. வெறும்பெய. நானா இருந்தா அங்ன டேசன்ல வச்சே அவா சங்க நெருச்சுக் கொன் றுப்பேன்’ என்று மூக்காண்டியைப் பிற ஆண்கள் ஏசுவதன்மூலம், பெண் உயிர் வாழ்வதே ஆண் போடும் பிச்சையினால்தான் என்று கருதும் நிலை வெளிப்படுகிறது. கணவன், மனைவியை அடிக்கும் பொழுது யாராவது தட்டிக்கேட்டால் இது குடும்பப் பிரச்சினை என்றுகூறி விரட்டும் சமூகம், மனைவி புகாரின் பேரில் கணவன் அடிவாங்கியதை மட்டும் சமூகப் பிரச்சினையாகவே பார்க்கிறது. ‘பெண் எழுச்சி’ என்பதை ஆணாதிக்க சமூகம் ஜீரணிக்கமுடியாமல், ஒருதலைப்பட்சமாக நின்று கொதிப்பதை வெளிக்கொணர்கிறது.

பொன்னுத்தாயி ஆணாதிக்கத்திற்கெதிரான கலகக்குரலை வெளிப்படுத்துகிறாள். பிள்ளைக என்ன எனக்கு மட்டுமா பிள்ளைக? அவெ அக்கருமத்தத் தணிக்கத்தான வருசயாப் பிள்ளைகளப் பெறவச்சான் வளத்துப் பாக்கட்டும் என தனக்குத்தானே பேசுவதும், பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்க நினைத்த கணவனிடம், பிள்ளைகளை ஏன் தன்னிடம் விடவேண்டும் என்று கேட்டும், பெத்தவாதான் பிள்ளைகளை வளர்க்கணும்னு சட்டமா என்ன? எனக் கேள்வி கேட்டு உறுதியாக மறுக்கிறாள். ‘இவள்ளாம் ஒரு பொம்பள தானா? கொஞ்சம்கூட பிள்ளப் பாசமே இல்லியே, ஆம்பள கெணக்காவுல மதம் புடுச்சுப்போயி அலைறா. எந்தக் காலத்துல புருசங்கிட்ட பிள்ளைகல உட்டுட்டு பொட்டச் சிறுக்கி இப்பிடி அலையக் கண்டோம்’ என்று பலரும் பொன்னுத்தாயின் செயல் பாட்டை எதிர்த்து ஏசுகிறார்கள். இதை பொருட்படுத்தாத பொன்னுத் தாயி தன்வலியை உணர்ந்து சுயமாக முடிவெடுக்கிறாள். மரபார்ந்த கட்டிலிருந்து விடுபட்டு இயல்பான சிந்தனையை முன்னெடுக் கிறாள். ‘தாய்மை’, ‘புனிதம்’ ‘பதிபக்தி’ என்ற ஆணாதிக்கச் சிலந்தி வலைப் பின்னல்களைத் துடைத்தெறிகிறாள்.

ஆணதிகார உலகில் பெண்களின் உடல் உல்லாசப் பொருளாகக் கொள்ளப்பட்டு அவர்களது உழைப்புப் பின்தள்ளப்பட்டது. பலம் - பலவீனம் என்ற முரண்பாட்டில் உண்மை உணர மறுக்கப்பட்டது. ஆணுக்கு இணையான பெண், இணையாகவோ ஒருபடி மேல்நின்று உழைத்தாலோ அதன் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படுகிறது. இந்த முரணைக் ‘காடு கரைகள்ள ஆம்பளக்குச் சமமா வேல செஞ்சுட்டு கூலி மட்டும் அவனைவிட கொறவா வாங்குறியே’..அதுமாதிரி ‘பஸ்சுலயும் ஆம்பளக்கு மூனு ரூவா டிக்கெட்டுன்னா பொம்பளைக்கு ரெண்டுரூவா போடச் சொல்லுரதுதான’ என்று அதென்ன ஞாயம்? என்ற கதை கேட்கிறது. இதில் நியாயத்தைக் கேட்க பெண் முன்வரும்பொழுது, அவளின் தாழ்த்தப்பட்ட நிலையை எடுத்துக்காட்டி உனக்கெல்லாம் பேச இதில் உரிமை யில்லை நீயே ஒரு அடிமை என்று அவளின் குரல்வளை நெறிக்கப் படுவதையும் உணரமுடிகின்றது.

உடலாகவே பெண் பார்க்கப்படுகிறாள். அதை மீறி அவளுக்கு எந்தவிதமான சிறப்பும் இல்லை. அந்த உடல்கூட ஆணின் கட்டுக்குள் சிக்கியது என்ற நிலைப்பாடு உள்ளது. அவளின் உடல்மீது அதிகாரம் செலுத்துபவனாக ஆண் இருக்கிறான். ‘இல்லாமல்லி’ சிறுமியாக இருக்கும்பொழுது பன்றியால் கடிக்கப்பட்டு ஒரு மார்பகத்தினை இழக்கிறாள். அழகுடையவளாய் இருப்பினும் இக்காரணத்தினால் அவளைத் திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை. ஆணோடு சேர்ந்து இல்லறம் நடத்தும் தகுதியை இழந்தவளாகப் பார்க்கப்படுகிறாள். புல்லறுக்கச் சென்ற இடத்தில் காட்டுக்கார நாய்க்கர் அவளிடம் ஏளனமாக, ‘இருக்கறே ஒன்னே நல்லாத்தா இருக்கு’ என்று கூறி பாலியல் வன்முறைக்குட்படுத்த முயல்கிறான். அப்பொழுது தன்னிடமிருந்த அரிவாளால் அவனது கையை வெட்ட முற்படுகிறாள். அரிவாள் அவனது கண்ணில் பட்டு ஒரு கண்பார்வை போய்விடுகிறது. இவ்வாறு தன்முயற்சியால் அவனிடமிருந்து தப்பிக்கிறாள். பெண் யாரையும் சார்ந்து வாழ வேண்டியவள் அல்ல என்பதை இந்த ‘ஒத்த’ என்ற சிறுகதை வலியுறுத்துகிறது.

இக்கதை ஆணின் இச்சையைத் தீர்க்கும் உறுப்புக்களாக மட்டுமே பெண் அடையாளப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றது. அதை மீறிய அடையாளம் அவர்களுக்கிருப்பதாகச் சமூகம் சிந்திப்ப தில்லை. அந்த அடையாளத்தை இழக்கும்பொழுது ‘அடிமைகளாக் கப்பட்ட பெண் இனம்’ என்ற அந்தப் படிநிலைக்கும் கீழாகத் தள்ளப்படுகிறாள். இல்லாமல்லி திருமணத்திற்கு முன்னரே மார்பகத் தினை இழந்ததினால் அவளுக்குத் திருமணம் என்பது மறுக்கப் பட்டது. தன்னை வன்முறைக்குட்படுத்த முயன்ற காட்டுக்காரனை இல்லாமல்லி வெட்டுகிறாள். அவனது கண் பறிபோனது. தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாள். பெண் உடல் உறுப்புகள்கூட ஆணுக் கானவையாகவே பார்க்கப்படுகின்றன. ‘என்ன செய்தாலும் பொறுமையைக் கையாளுதல்’ என்ற அடக்குமுறையிலிருந்து மீறி சுயத்தைத் தேடுபவர்களாகப் பெண்கள் உள்ளனர். பாலியலுக்கு உகந்தவள் அல்ல(மார்பகத்தை இழந்ததினால்)என்ற திருமண நிலையிலிருந்து பின்தள்ளப்பட்ட இல்லாமல்லி, அங்கீகரிக்கப் படாத களவு வாழ்க்கைக்கு மட்டும் அழைக்கப்படுகிறாள். இதி லிருந்து ஆணாதிக்க உலகின் தீர்க்கமான தந்திரச் செயல்பாடுகளை அறியலாம்.

பெண்ணின் உடற்கூறு, மனக்கூறு எப்படிச் செயற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்துவதொன்றே ஆணாதிக்கத்தின் தன்மையாக உள்ளது. சிறுமி, பருவம் அடைந்தாலே அவள் தவறு செய்வதற்கு, தவறு செய்ய தூண்டுவதற்கு ஏதுவானவள் எனக்கருதி காவலுக்குட் படுகிறாள். பருவம் அடையவில்லையென்றால் அதுவும் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதை உமா மகேசுவரியின் வடு சித்திரிக்கிறது. பூங்கொடி வயதுக்கு வரவில்லையென்று பரிகாரம் செய்வதற்காகப் பூசாரியுடன் ஓர்இரவு தனியாக விடப்படுகிறாள். அவன் அவளைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான். சிறுமி என்றும் பாராமல், மறுநாள் அவளை அழைத்துச் செல்ல வந்த தாயிடம், அவன் இன்னும் நான்கு இரவுகள் இதுபோல் அழைத்துவந்து விடவேண்டுமென்கிறான். அவன் முகத்தில் தட்டால் தாக்கிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடுகிறாள் பூங்கொடி. இவ்வாறு சிறு பருவத்திலிருந்தே பெண்ணின் உடல் ஆணுக்கானதாயும் ஆணுக்கு ஏற்றதாயும் மாற்றப்படுகிறது.

கற்பு, கற்புநிலை எனக் கொடி தூக்கிப் பிடித்துக்கொண்டும் இயல்பாக உள்ள பெண்களைச் சந்தேகித்தும் வாழ்வது ஆண்களின் குணாம்சத்தில் ஒன்றாக மாறிப்போனது. ஆனால் ஆண்கள் பல பெண்களோடு வாழ்வது என்பது ஆண்மையின் அடையாளமாகக் காணப்படுகிறது. இவ்வாறாக, மனைவியை விடுத்துப் பிற பெண்க ளோடு தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள், உமாவின் மூடாத சன்னல், கற்கிளிகள் வழி காட்டப்பெறுகின்றனர். தன் தங்கையோடு உறவு வைத்திருக்கும் கணவனது நிலையறிந்து மனைவி தீயிலே இறக்கிறாள். இப்படி வாழும், வாழப்பழக்கப்பட்ட ஆண்கள்தான், கற்புநிலை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் தேவைப்படும்பொழுது, தனது வசதிக்காக, சுயமேம்பாட்டிற்காக மனைவியை அவளுடைய விருப்பமின்றியே பிற ஆடவரிடம் உறவு வைத்துக்கொள்ள நிர்பந் திக்கிறார்கள். சீதாவைப் பலவந்தப்படுத்தித் தன் பதவி உயர்வுக்காகத் தன் மேலதிகாரியோடு இருக்கச் செய்யும் கணவன் பற்றிப் ‘பொருள் வயின் உறவு’ ஏளனம் செய்கிறது.

குடும்பத்தில் சமையலறை எனும் சிறையில் சிக்கிக்கொண்டு ஒரு பிணைக்கைதியாக, புகுந்தகம் எனும் கொள்ளையரிடம் மாட்டி கடைசிவரை பிணைக்கைதியாகவே பெண்கள் போராடும் நிலை உண்டு. திருமணம் என்ற நிர்பந்தத்தில் பிணைக் கைதியாகும் பெண்ணின் நிலை என்ன? மீளமுடியுமா? வாழ்வா சாவா?என்ற போராட்டத்திலேயே அவள் காலம் கழிகிறது. இந்த நிலையைத் தமயந்தி துளசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிணைக்கைதி என்ற கதையில் காட்சிப்படுத்துகிறார். துளசியின் கணவன் பசவப்பா கொள்ளையர்களால் கடத்தப்படுகிறான். செய்தியைத் தொலைக் காட்சியில் பார்த்தோம் என்று கூறிக்கொண்டு துக்கம் விசாரிக்க வென்று மூத்த மாமியாரும் அவரது மருமகள்களும் குழந்தைகளும் படையெடுக்கின்றனர். மலைபோன்ற மாவைப் பிசைந்து உணவாக்கி அவர்களுக்குப் படைக்கிறாள். துக்கம் விசாரிக்கவென்று வந்தவர்கள் உல்லாசத்திற்காக ‘முத்தியாலமடு’ சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அங்கு அவர்கள் உண்பதற்காகத் துளசியால் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. வேளா வேளைக்கு உணவுப் பண்டங்களும் காபியும் அவர்களுக்குத் தயாரிக்கும் பொறுப்பு. குழந்தைக்குப் பாலூட்டவோ, கணவனைப் பற்றி நினைத்துப் பார்க்கவோ நேரமின்றி சமையல் வேலை. அனைத்து வேலையும் பார்த்துவிட்டு வருபவளுக்கு மிஞ்சுவதோ ஒரு வாய் சோறும் கழுவ வேண்டிய மலைபோல குவிந்த பாத்திரங் களுமே. வந்தவர்கள் உண்டு உண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதுதான் வேலை. கணவன் பற்றிய தகவலை அவளிடம் கூறுவோர் யாருமில்லை. மாமியார் அவளது மனவலியை, உடல்வலியை நினைத்துப் பாராமல் ஏசிக் கொண்டும் ஏவிக்கொண்டுமிருந்தாள். டிபன்கடை, காபிக்கடை என மாறிமாறி கடை போட்ட துளசி, வேலைகளை முடித்து, இரவு பத்து மணிக்கு மேற்பட்டு படுக்க வருகிறாள். கணவனை நினைத்து அழ முற்படும் அந்த நேரத்தில், தனது பெரியம்மா மகன் வந்திருப்ப தாகவும் அவனுக்கு உணவு ஏற்பாடு செய்யும்படியும் மாமியாரின் கட்டளை. தனது துன்பத்தைக்கூட வெளிப்படுத்தி ஆசுவாசப்பட முடியாத பிணைக்கைதியாய் அங்கிருப்பது துளசியே. இப்படி ஆணாதிக்க நோக்கில் உருவமைக்பட்ட சமையலறை முதலையாய்ப் பெண்களை விழுங்கிவிடுகிறது. மாயாஜால உலக வித்தைபோல, பெண்ணும் முதலையின் வயிற்றிலே வாழ கற்றுக்கொண்டிருக் கிறாள். சமையலறையே பெண்ணுக்கான, குடும்பத்தலைவிக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் உருவாக்கித் தருவதாக நம்பி பெண்களும் அந்தப் பின்கட்டிலேயே தங்களை ஒடுக்கிக்கொள் கிறார்கள்.

பெண் எழுத வெளி என்பது தேவை. அவளுடைய வெளிமுழு வதும் குடும்பச்சிக்கல்களாலும் பராமரிப்புப் பணியினாலும் அடைக் கப்பட்டுள்ளது. அவ்வாறு அடைக்கப்பட்ட வெளியிலிருந்து விடுபடும்பொழுது தன்திறமையை வெளிப்படுத்த முனைகிறாள். தமயந்தியின் துரு, போராடும் பெண்ணைக் காட்டுகின்றது. அலுவலகப்பணி, குடும்பப்பணி என்ற இரட்டைச் சுமையோடு, நடுநிசி ஒன்றரை மணிக்கு எழுந்து பிறரது உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகச் சப்தமில்லாமல் சமைத்து, மாமியார், கணவன், குழந்தை என ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான உணவினைத் தயாரித்து, முன் இரவிலே குழந்தைக்குத் தலைவாரி சடை பின்னி இவ்வளவு வேலைகளையும் முடித்துவிட்டு, காபி கூட குடிக்க நேரமின்றி, தான் கிளம்பி வீட்டைப் பூட்டிக்கொண்டு விடிகாலை மூன்று மணிக்கு அலுவலகப் பேருந்தைப் பிடிக்கிறாள் சரஸ்வதி. ஐந்து நிமிடம் தாமதமானதால் ஓட்டுநரிடம் ஏச்சு. இது பெண்ணின் நிலை. ஆனால் அதே பேருந்தில் சக ஆண்அதிகாரியின் நிலை வேறு. என் மனைவி எழுப்பி விடாததால் தாமதமாகிவிட்டது. நல்லா டோஸ் விட்டேன். இனி ஜென்மத்துக்கும் லேட்டா எழுப்பி விட மாட்டா. அலறியடிச்சு எழுந்து சட்டைய மாட்டிகிட்டு வர்றதுக் குள்ளே தாவு தீர்ந்துடுச்சு என வியர்வை நாற்றத்தோடு பேசுகிறார். நல்லா சூடா டீ கொடுத்தா எம்பொண்டாட்டி. கொஞ்சம் தூக்கம் கலைஞ்சிருக்கு என்கிறார். இங்கு ஆண் பெண் இருவருமே அலுவலகத்தில் பணி புரிந்தாலும் பெண்ணின் நிலை வேறானதாக உள்ளது. அலுவலகத்தில் பெண்கள் சந்திக்கும் ஆண்களின் பாதகத் தினைத் தமயந்தியின் மாமிசம், திசை போன்ற கதைகள் முன்வைக் கின்றன.

பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை என்பனவற்றோடு ஆடை, அணி, வாகனம், நடை, பேச்சு, உணவு, உறக்கம், உடல், உயிர் என அனைத்துச் சுதந்திரங்களும் பறித்தெடுக்கப்பட்டு, படும் அவத்தைகளை இவை எடுத்துக்காட்டுகின்றன. பெண், குழந்தை பெறவில்லையென்றால் அவளைப் படுத்தும்பாட்டினை, கேள்விக் கணைகளை உமாவின் கரு எடுத்துக்காட்டுகிறது. சுயம் இழந்த நிலையில் உயிர்வாழப் பிடிக்காமல் தற்கொலையாவது செய்து கொள்ளலாம் என நினைத்து, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தனது உணர்வுகளைத் தற்கொலை செய்துவிட்டு வாழும் பெண்ணைத் ‘தற்கொலை’ சித்திரிக்கிறது. 

கை விளங்காமல், வாய் பேசாதிருந்த தாயற்ற மல்லிகா என்ற பெண்ணை இளைஞர்கள் வன்முறைக்குட்படுத்தியதைத் தமிழ்ச் செல்வியின் வதம் எடுத்துக்காட்டுகிறது. இதில் எந்த உணர்வுமற்று நடந்துகொள்ளும் மல்லிகா இளைஞர்களின் கொடுஞ்செயலுக்குப் பிறகு ரௌத்ரமாகிறாள். தன்னை வன்முறைக்குட்படுத்திய இருவரையும் சூலம் கொண்டு துரத்திக்கொண்டு செயற்படுகிறாள். காவல் என்ற கதையில் இளநீர் வெட்டி விற்கும் பெண் பொன்னி யிடம் எதிர்கடைக்காரன் சேட்டைகள் செய்கிறான். அவனைச் சரி கட்ட உதவி ஆய்வாளர் வனிதாவின் துணையை நாடுகிறாள் பொன்னி. பொழுது விடிவதற்காகக் காத்திருந்தபொழுது வந்து சேர்ந்தது வனிதாவின் சாவுச்செய்திதான். ஆய்வாளர் பாபுவின் இச்சைக்கு உடன்படாததன் பொருட்டு வனிதா கொல்லப்படுகிறார். இந்த நிலையில் பொன்னி கல்லில் வைத்து தன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்ததாகக் கதை முடிகிறது. படித்த, படிக்காத எல்லா நிலையிலுள்ள பெண்களும், சிறுமியரும் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களால் பலவந்தப் படுத்தப்படுவதை ஒட்டுமொத்தக் கதைகள் காட்டுகின்றன.

இவ்வாறாக, பெண்கள் சமூகத்தாலும் குடும்பத்தாலும் பல நிலைகளில் அடக்கப்படுவதையும் அழிக்கப்படுவதையும் இவ்வகை எழுத்தாளர்களின் கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிப்படுத் துவதோடு நில்லாமல் அவற்றிற்கான தீர்வுகளையும் கலகக்குரலை யும் எதிர்வினைகளையும் யதார்த்தமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற பெண்கள் கூட்டமடி என்று பாரதி ஏசிய பெண்போலன்றி அறிவுக்கண் கொண்டு சிந்தித்துச் செயல்பட்டு அடக்குமுறையை எதிர்க்கும், மறுக்கும் திறமுடையவர்களாகப் பெண்களைக் காட்டுகின்றன. இந்த எதிர்ப்பு களும் மறுப்புகளும் எல்லா காலங்களிலும் யதார்த்த நிலையில் பெண்களிடம் இருந்திருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்வது ஆணாதிக்க உலகிற்கு கௌரவக் குறைச்சல் என்பதால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் மேற்கண்ட எழுத்தாளர்களின் எழுத்துகள் மறைக்காமல், புனையாமல், செதுக்காமல் பெண்நிலை சார்ந்து எழுதப்பட்டவை. மனுஷியாகப் பெண் பார்க்கப்படவில்லை என்ற எதார்த்தத்தில் கதைகள் இயங்கு கின்றன. எனினும் மனுஷியாகப் பெண் பார்க்கப்படவேண்டும் என்ற சமூக நீதி தேடும் எதிர்கால எதார்த்தக் குரல்களாகக் கதைகள் பளிச்சிடுகின்றன.

சிறுகதைத் தொகுதிகள்

உமா மகேஸ்வரி, மரப்பாச்சி, சென்னை : தமிழினி, 2002

..........., தொலைகடல், சென்னை: தமிழினி, 2004

............ அரளிவனம், சென்னை : எனிஇந்தியன் பதிப்பகம், 2008

தமயந்தி, சாம்பல் கிண்ணம், சென்னை: போதி, 2001

........... அக்கக்கா குருவிகள், சென்னை : போதி, (இ.ப.)2003

........... வாக்குமூலம், சென்னை: போதி, 2010

தமிழ்ச்செல்வி.,சு. சு.தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள், திருச்சி: உயிர் எழுத்து பதிப்பகம், 2010

தேன்மொழி, நெற்குஞ்சம், புதுச்சேரி : மணற்கேணி பதிப்பகம், (இ.ப.) 2010

பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், கோயம்புத்தூர் : விடியல் பதிப்பகம், 2003

(கட்டுரையாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெண்ணிய நோக்கில் தொன்மங்களை ஆய்வுசெய்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்)

Pin It