தமிழ்ப்புனைகதை உருவாக்க மரபு குறித்த விரிவான விவரணங் களுடன் கூடிய பதிவு தமிழில் முழுமையாகச் செய்யவில்லை. இம்மரபு குறித்த விவரணத்தேடல் என்பது மிகுதியான உழைப்பை வேண்டி நிற்பது. தனிமனிதர்கள் செய்ய இயலாத பணி. குறிப்பிட்ட திட்ட அடிப்படையில் இணைந்து செயல்படும் குழுவின் மூலமே சாத்தியப்படும் பணிகளில் இதுவும் ஒன்று. தமிழ்ச்சூழலில் தனிப் பட்ட மனிதர்களே தங்களது புரிதல் சார்ந்து ஆங்காங்கே பதிவு செய்கிறார்கள். இதனால் தமிழ்ப் புனைகதை மரபு சார்ந்த வரலாற்றை முழுமையாக அறியும் வாய்ப்பு இல்லை. புனைகதை மரபில் புதினம் பற்றிய குறிப்புகளைத் திரட்டுவது சாத்தியம். அவை முழுநூல் வடிவில் கிடைப்பதால், தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு; சிறுகதைகளைப் பற்றிய விவரணங்களை அறிவது எளிதான பணியன்று; மேலும் எண்ணிக்கை அளவில் மிக அதிகமாக இருப்ப தால், திரட்டுதல், வாசித்தல், மதிப்பிடல் என்பது மிகவிரிவான வேலையாக அமைகிறது. அண்மைக்காலங்களில் தனிப்பட்ட மனிதர்களின் சிறுகதைகள் முழுத்தொகுதிகளாக அச்சிடப்படு கின்றன. இதன்மூலம், அத்துறை தொடர்பாக வருங்காலத்தில் விரிவாகப் பதிவு செய்ய வாய்ப்புண்டு.

இவ்வகையான முழுத்தொகுப்பு இல்லாத சூழலில், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) சோ.சிவபாதசுந்தரம் ஆகியோர் இணைந்து எழுதிய ‘தமிழில்சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூல், பத்திரிகைகளைச் சார்ந்தே எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். வெகுசன வாசிப்பு சார்ந்து, இதழியல் தேவைக்கென எழுதப்பட்ட ‘இதழியல் புனைவுகள்’ குறித்தும் மேற்குறித்த நூல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஆக்கம் குறித்த மதிப்பீடு என்பது இதழ்களில் இடம்பெறுதல் என்ற அடிப்படை யில்தான் அந்நூல் பதிவுகள் உள்ளன. அச்சுப்பண்பாடு சார்ந்து வாசிப்புப் பழக்கத்திற்கென உருவாக்கப்பட்டவைகளை, ஆக்கங்கள் என்று கருதும் போக்கு அந்நூலில் மிகுதியாக இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் குறித்த அக்கறை அந்நூலில் மிகுந்த சிரத்தையுடன் விவாதிக்கப்பட் டிருப்பதை மேற்குறித்தக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். புதுமைப்பித்தனின் இதழியல் செயல்பாடு வேறு; அவரது ஆக்கங்கள் வேறு. இரண்டையும் வேறுபடுத்தும் புரிதல் இந்நூலில் இடம்பெறவில்லை. இருந்தாலும் தமிழ்ச்சிறுகதை தொடர்பான விரிவான பதிவுக்கு அந்நூலைவிட்டால், வேறுநூல் தமிழில் இல்லை. விரிவாகப் பதிவுசெய்யும் தேவை நம்முன் உள்ளது.

தமிழ்ப்புனைகதை உருவாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் தொடங்கியது.காப்பிய மரபு சார்ந்த சிந்தனை மரபில் புதினங்கள் உருவாக்கப்பட்டன. அவை ஓரளவிற்கு அந்த காலச்சூழலோடு, தமிழின் புதினங்களாக உருப்பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழில் புதினம் உருவாகிவிட்டது. ஆனால் சிறுகதை என்னும் வடிவம், அடிப்படையில், இதழியல் தேவையால் உருப்பெற்றது என்று கூறமுடியும். ஐரோப்பியச் சூழலில் அப்படித்தான் அது உருவானது. இதழியல் என்பது, பக்க அளவு, வாசிப்பு மரபு ஆகிய கட்டுப்பாடுகளை உள்வாங்கும் தன்மையுடையது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தமிழில் தமிழ் இதழியல் கால்கொள்ளத் தொடங்கியது. முழுவளர்ச்சி பெறும் வாய்ப்பு இல்லை. சமயப் பரப்பல் சார்ந்த செயல்பாடுகளே அன்றைய இதழியலின் முதன்மையான தேவையாக இருந்தது. வாசிப்புப் பழக்கம் நோக்கிய உருவாக்கமாக இதழியல் அமையும் வாய்ப்பு அன்றில்லை. எழுத்துப் பயிற்சி மிகமிகக் குறைவாக இருந்த காலமும் அது. எழுத்துப் பயிற்சி இல்லாமல் வாசிப்பு மரபு எவ்வாறு உருப்பெறும்?

ஆனால், சமயப் பரப்புதலுக்கு உதவும் வகையில் குட்டிக் கதைகளை அச்சிடும் மரபு உருவானது. கிறித்துவ சமய இதழ்களில் இப்பண்பு வெளிப்பட்டது. கால வளர்ச்சியில், ஐரோப்பிய மற்றும் கீழைத்தேய கதைகள் மொழியாக்கம் செய்யப் பட்டோ, தழுவலாகவோ வெளிவரும் வாய்ப்புகள் உருவாயின. ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), முப்பத்திரண்டு பதுமை கதைகள் (1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), ச.ம.நடேச சாஸ்திரி தொகுத்த திராவிட பூர்வக் கதைகள் (1886) போன்ற தொகுப்புகளைக் கூற முடியும் (விரிவுக்குப் பார்க்க: சிட்டி - சிவபாத சுந்தரம் நூல்) இவற்றை வெறும் கதை மரபுகளாகக் கருதலாம். இவை சிறுகதைகள் அன்று. இவ்வடிவத்திலிருந்து தான் சிறுகதை உருவானது என்று கருதும் மரபும் சரியெனக் கூறமுடியாது. நவீனச் சிந்தனை மரபும் இதழியல் கட்டமைத்த வடிவமும் சிறுகதை எனும் மரபு உருவாகக் காரணமாக அமையும். வெறும் கதை சொல்லல், நகைச்சுவைக் கதை சொல்லல், சோதனைக்கதை சொல்லல் ஆகியவை சிறுகதை மரபுக்கு மூலமாக அமைய முடியாது.

சிறுகதை உருவாக்க வரலாறு குறித்து எழுதுவோர், கதை சொல்லல், சிறிய கதைசொல்லல் ஆகிய வடிவத்திலிருந்து சிறுகதை வடிவத்தைப் புரிந்துகொள்ள முயலுகிறார்கள். இதனால்தான் ‘சங்க காலத்துச் சிறுகதைகள்’ (மு.அருணாசலம்) எனும் நூற்பெயரும் உருவாகிவிட்டது. இம்மரபை முற்றிலும் மறுபரிசீலனை செய்யும் தேவை இருப்பதாகக் கருதுகிறேன். தமிழ்ச்சூழலில் சிறுகதை வடிவத்தைக் கண்டெடுத்தவரும் அதனை இதழியல் மரபு சார்ந்து நிலைபேறு கொள்ளச் செய்தவரும் புதுமைப்பித்தன் தான். அதற்கு முன் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளாகக் கூறப்படுபவை அனைத் தும் சமயமரபு சார்ந்த - நாட்டார் மரபு சார்ந்த போதனைக் கூறுகளைக் கொண்ட கதைத்தன்மைகளை உள்வாங்கியவை. நவீன மரபை அவை உள்வாங்கவில்லை. நவீன சிந்தனை மரபிற்குள் இருந்து இவ்வடிவத்தை அவர்கள் புரிந்து கொண்டதாகக் கூறமுடியாது.

பாரதியும் வ.வே.சு.அய்யரும் அ.மாதவையாவும் எழுதிய கதைகளை மேற்குறித்தப் பின்புலத்தில் புரிந்து கொள்வது நல்லது. நவீனச் சிந்தனை மரபுக்கும் நவீன வடிவ உருவாக்க மரபிற்கும் தொடர் புண்டு. புதுக்கவிதை உருவாக்க மரபை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். புதுமைப்பித்தன் காலத்தில்தான் தமிழில் சிறுகதை உருவாக முடியும். புதுமைப்பித்தன் உருவாக்கினார். தொடக்கமே மிக வீரியமிக்கதாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். புதுமைப் பித்தன் ‘மணிக்கொடி’யில் எழுதிய கதைகளின் வளர்ச்சிப் பரிமாணத் தையும் உணரமுடியும். பி.எஸ்.இராமையா நடத்திய ‘சிறுகதை மணிக்கொடி’யில் தான் அவரது உச்ச வளர்ச்சிப் பரிமாணத்தை முழுமையாக அறியலாம். ‘துன்பக் கேணி’ கதையை வாசிப்பவர்கள் இதனை உணரமுடியும். இந்தப் பின்புலத்தில், தமிழ்ச் சிறுகதை உருவாக்க மரபுகளை, ஆளுமைகளை முதன்மைப்படுத்தி பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.

-              புதுமைப்பித்தன் ஆளுமை மரபு

-              ஜி.நாகராஜன் ஆளுமை மரபு

-              பூமணி உள்ளிட்ட பலர் ஆளுமை மரபு

-              கோணங்கி சார்ந்த ஆளுமை மரபு

இந்த வகையான புரிதல் என்பது, தமிழ்ச் சிறுகதை உருவாக்க மரபில் புதிய தடம் நோக்கிப் பயணப்பட்டவர்கள் என்று கருதலாம். வடிவச் சோதனையாளர்களாகச் செயல்பட்டவர்களை முதன்மைப் படுத்திப் பார்க்கும் மரபு தமிழில் உண்டு. மௌனி, லா.ச.ரா., நகுலன், பிரமிள் ஆகியோர் இப்பின்புலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய வர்களே. வடிவத்திற்குள் செயல்படும் கருத்துநிலை சார்ந்தே, ஆளுமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் மற்றும் ஜி.நாகராஜன் ஆளுமைகள் செயல்பட்ட காலங்களில் தமிழ்ச்சிறுகதை மரபின் பதிவு செய்ய வேண்டிய ஆளுமைகளாகப் பின்கண்டவர் களைப் பட்டியல் இடலாம்.

புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், ரகுநாதன், வல்லிக்கண்ணன், சண்முகசுந்தரம் என்றொரு பிரிவை இனம்காண முடியும். ந.பிச்சமூர்த்தி, மௌனி, லா.ச.ரா., க.நா.சு., சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், ரஸிகன், தி.ஜானகிராமன், கா.சி.வேங்கடரமணி, , கரிச்சான்குஞ்சு என்ற பிரிவைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் 1930 தொடக்கம் 1965 வரை எழுத்துலகில் செயல்பட்டவர்கள்.

இந்த மரபின் தொடர்ச்சியாகவே ஜி.நாகராசன், அம்பை, நீல.பத்மனாபன், பூமணி, கிருஷ்ணன் நம்பி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், வண்ணதாசன், பிரபஞ்சன், சி.ஆர். இரவீந்திரன், வீர.வேலுசாமி, என்.ஆர். தாசன், ஜெயந்தன், பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன் என்றொரு பிரிவைக் காணலாம். பிரமிள், நகுலன், ந.முத்துசாமி, சார்வாகன், அசோகமித்திரன், மா.அரங்கநாதன், இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்), சா.கந்தசாமி, ஆ.மாதவன், ஆதவன், சூடாமணி, நாஞ்சில் நாடன் என்றும் பட்டியல் இட வேண்டும்.

மேற்குறித்த 1965 - 1980 இடைப்பட்ட ஆளுமைகளிலிருந்து முற்றிலும் பல்வேறு வகையில் செயல்படும் ஆளுமைகள் 1980களில் தொடங்கி இன்றும் செயல்படுகின்றனர். இவ்வகைப் போக்கின் வேகம் தொண்ணூறுகளில் வீரியம் கொண்டது. அது பெண்ணிய எழுத்து, ஒடுக்கப்பட்ட தலித் எழுத்து, சிறுபான்மை மக்களான இஸ்லாமிய எழுத்து, ஆகியபண்புகளை முதன்மைப்படுத்தி பல்வேறு பரிமாணங் களை உள்ளடக்கிய, குறிப்பாக வடிவம் சார்ந்த பிரக்ஞையோடு உருவான எழுத்துகள் எனக் கடந்த முப்பது ஆண்டுகளை மதிப்பிட முடிகிறது. இதில் சுமார் 90 ஆளுமைகளின் பட்டியல் கிடைக்கிறது. புதுமைப்பித்தன் காலத்தில் சுமார் இருபது ஆளுமைகள் என்றால், அதன் அடுத்த கட்டத்தில் சுமார் 30 ஆளுமைகளை பட்டியல் இடலாம். இவ்வெண்ணிக்கை மூன்று மடங்காகியிருப்பதைக் காண்கிறோம். (இந்த ஆளுமைகளின் அகரவரிசைப் பட்டியல் இவ்விதழின் இறுதியில் ஆவணம் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளது.) இந்தக் கட்டம் தொடர்பான பதிவுகளை இச்சிறப்பிதழில் பதிவு செய்துள்ளோம்.

தமிழ்ச்சிறுகதை உருவாக்க மரபின் மூன்று கட்டங்களாக 1930 - 1965, 1966 - 1980, 1981 - 2010 ஆகிய காலப்பிரிவைக் கூறலாம். இதழியல் வளர்ச்சி, இயக்கம் சார் கருத்துரிமைகள், வாசிப்போர் பெருக்கம், புனைகதை மரபு நமது அன்றாட செயல்பாட்டின் பிரிக்க இயலாத ஒன்றாக உருப்பெற்றுள்ள சூழல் எனப் பல்வேறு புரிதல்களை உள்வாங்கியே மேற்குறித்த பாகுபாட்டை வசதி கருதி செய்துள்ளோம்.

ஒரு வகையில் க.நா.சு.வின் பட்டியல் மரபின் இன்றையப் புரிதல் சார்ந்த பட்டியல் மரபாக இதனைக் கொள்ளலாம். க.நா.சு.வைப் பட்டியல்காரர் என்று சொன்னாலும் அவர் தான் நமது புனைகதை மரபைக் கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்தியவராக இருந்தார். அவ்வகைச் செயல்பாடும் நமக்குத் தேவைப்படுகிறது. க.நா.சு. நூற்றாண்டில் அவரது அந்தப் பணியை நினைவு கூறும் தேவையுண்டு.

இவ்வகையில் தமிழில் சிறுகதை உருவான இறுதிக் காலகட்டம் குறித்த உரையாடலாக அமைந்துள்ள இவ்விதழ் முற்காலங்களின் தொடர்ச்சியே. அதனைப் புரிந்து கொள்ளும் போக்கில் மேற்குறித்தச் செய்திகளின் பதிவைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

தமிழ்ச்சிறுகதை மரபின் மூன்று கட்டங்கள் என்ற மேற்கண்ட குறிப்பைப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் பல்வேறு பரிமாணங் களைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

-              ஐரோப்பியப் புத்தொளி மரபை உள்வாங்கி, நமது மரபுக்கான புதிய வடிவத்தைக் கண்டறிந்த சூழல் உருப்பெற்றது. ஐரோப்பிய மரபுகள் என்பது அறிதலாக அமைந்தது. அதுவே நமது மரபாக வடிவம் பெறவில்லை. இதற்கு முந்தைய காலச் சூழலில் ஐரோப்பிய மரபை அப்படியே உள்வாங்கும் செயல்பாடுகள் நடைமுறையில் இருந்தன; அல்லது நமது வைதீக மரபின் புராணியம் சார்ந்த கதைசொல்லல் மரபு வெளிப்பட்டது. இம்மரபுகளைப் புறந்தள்ளி நமக்கான மரபைப் புதுமைப்பித்தன் கண்டெடுத்தார். தமிழ்ச்சிறுகதைப் புனைவின் தொடக்கம் நிலைபேறு கொண்டது.

-              மேற்குறித்த மரபை வளர்த்தெடுக்கும் வகையில் சங்கிலித் தொடர் மரபில் இதழியலும் உருவானது. ஒரே முதலாளி பல இதழ்களை நடத்தினார். ‘செய்தி’ என்பதைப் பெறுவதற்கான அறிவியல் கருவிகளும் புழக்கத்திற்கு வந்தன. ஆங்கில மொழிசார்ந்த வாசிப்போடு, வட்டார மொழிசார்ந்த வாசிப்பை முன்னெடுக்கும் சூழல் உருவானது.

-              எழுத்துப் பயிற்சி மிக விரிவாக வளர்ச்சி பெற்றது. வாசிப்போர் எனும் பிரிவு உருவாகியது. புத்தகம் சேர்க்கும் மரபும் நூலக உருவாக்கமும் நடைமுறைக்கு வந்தன.

-              பல்வேறு சமூக இயக்கங்கள் உருவாயின. கருத்துநிலைகள் சார்ந்த உரையாடல்கள் உருவாயின. இடதுசாரி இயக்கம், தேசிய இயக்கம், திராவிட இயக்கம் எனும் செயல்பாடுகள் பொதுவெளியில் வாசிப்பு மரபின் வீரியத்தை வளர்த் தெடுத்தன.

-              குறிப்பிட்ட கருத்துநிலை சார்ந்த ஆக்கங்கள் உருவாயின. இடதுசாரி சார்பு எழுத்தாளர், காந்திய எழுத்தாளர், வெகுசன வாசிப்பு சார்ந்த எழுத்துக்காரர் என்ற புரிதல்கள் உருவாயின.

-              இரண்டாம் உலகப்போர் சூழல், தமிழில் பதிப்பகங்கள் உருவாக வழிகண்டன. பதிப்பகங்கள் இதழ்களையும் நடத் தின. எழுத்து என்னும் ஆளுமை புரிந்து கொள்ளப்பட்டது.

-              மேற்குறித்தத் தன்மைகள் தமிழ்ப்புனைவின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலமாக அமைந்தன. புதுமைப்பித்தன் தொடங்கி அழகிரிசாமி வழியாக கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் எனும் தொடர்ச்சி உருவானது. ந.பிச்சமூர்த்தி தொடங்கி க.நா.சு., லா.ச.ரா, தி. ஜானகிராமன் என்ற மரபும் வலுப்பட்டது.

1930 - 1965 என்ற காலகட்டத்தின் போக்குகளாக மேற்கண்ட வர்களை இனம் காணமுடிகிறது. இதற்கு முந்தைய காலச் சூழலில் இவ்வகையான போக்குகளைக் காண முடியாது.

1965-1980 என்ற காலகட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும்.

-              அரசியல் கருத்துநிலைகள் சார்ந்த இளைஞர்கள் தமிழகக் கிராமப்புறங்களில் உருவானார்கள். எழுத்துப் பயிற்சி என்பது மிகப்பரவலானது. எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியது. கிராமங்களில் வாசிப்புப் பழக்கம் பரவலானது.

-              முதல் கட்டத்தில் ஆங்கில மொழிவழிப் பயிற்சி பெற்றவர் களே ஆக்கங்களைச் செய்தனர். இந்தக் காலச்சூழலில் ஆங்கில மொழியறியாத படைப்பாளிகள் உருவாயினர். புதுமைப்பித்தன் மரபைச் சார்ந்து வந்த படைப்பாளிகளில் ஆங்கில வாசிப்பு மரபு மிக்கவர்களே அதிகம். இக்காலச் சூழலில், ஆங்கில வாசிப்பு மரபு உடையவர்கள் மிகக் குறைவு. இதனால், தமிழ்மண்ணின் வீரியம் ஆக்கங்களாக வடிவம் பெற முடிந்தது.

-              அமெரிக்க எழுத்து மரபு, சோவியத் மற்றும் சீன எழுத்து மரபு என்பது 1940கள் தொடங்கித் தமிழில் செயல்பட்டது. 1950களில் அத்தன்மைகளின் செல்வாக்கு மிகுதி. ஆனால், இத்தன்மையின்றி, இடதுசாரி கருத்துநிலை; அதன் எதிர்க் கருத்துநிலை எனும் படைப்பாளிகள் இக்காலத்தில் தமிழ்ப் புனைவுலகில் உருவாயினர்.

-              தாமரை இதழ்வழி (குறிப்பாகத் தி.க.சி.) இக்காலச் சூழலில் சிறுகதைப் படைப்பாளிகள் பலர் உருவாக வழி ஏற்பட்டது. இடதுசாரி கருத்துநிலை என்பது தமிழ் ஆக்கங்களில் இயல் பாகச் செயல்படும் சூழல் உருவானது. தமிழ்க்கிராமங்கள், புதிய கண்ணோட்டத்தில் புனைவுகளில் இடம்பெறத் தொடங்கின. (தமிழ்ச்சினிமாவிலும் இத்தன்மை இக்காலத் தில் உருவானது.)

-              தமிழில் சிறுபத்திரிகை மரபு என்பது வலுவாக உருவானது. 1959இல் ‘எழுத்து’ முதல் அதன் வீரியம் பல்பரிமாணங்களில் செயல்பட்டது. தமிழ்ப்புனைவு சார்ந்த விரிவான உரையாட லுக்குச் சிறுபத்திரிகைகள் களம் அமைத்தன. (விரிவுக்குப் பார்க்க: வீ.அரசு, தமிழ்ச்சிறுபத்திரிகை அரசியல் : 2003) தமிழ்ச்சிறுகதைகள் புதிய பரிமாணத்தில் உருப்பெற இக்காலச் சூழலின் சிறுபத்திரிகைகள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இம்மரபு 1990கள் வரை தொடர்ந்தது. 1995 களுக்குப் பின் அது வேறு திசைக்குச்சென்றது.

-              நக்சல்பாரி இயக்கம், அவசர நிலைச்சட்டம் ஆகிய பிற நிகழ்வுகள் படைப்பாளிகளிடத்தில் உருவாக்கிய தாக்கங்கள், புனைவிலும் வெளிப்பட்டதைக் காண்கிறோம்.

தமிழ்ச்சிறுகதை மரபின் அண்மைக்கால கட்டம் (1980-2010) பல்வேறு புதிய பரிமாணங்களை உள்வாங்கியதாகக் கருத லாம். அத்தன்மைகளைப் பின்வரும் வகையில் புரிந்து கொள்ளலாம்.

-              1980களில் உலக அளவில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் படைப்பாளிகளிடத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. குறிப்பாகச் சோவியத் தகர்வு புதிய கருத்துநிலைத் தேடலுக்கு அடிப்படையாக அமைந்தது.

-              தேசிய இனச்சிக்கல் குறித்தப் புதிய உரையாடல்கள் உருவா யின. இடதுசாரிகள் பெரியாரின் கருத்துநிலைகளைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினர்.

-              பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மை இயக்கம், பின்நவீனத்துவம் ஆகிய பல்வேறு அணுகுமுறைகள் உருவாயின. இப்பின்புலத்தில் இவ்விதழில் கட்டுரைகளை உருவாக்கி யுள்ளோம். இத்தன்மைகள் புதிய படைப்பு முறைகளை முன்மொழிந்தன. தமிழ்ச்சிறுகதை அத்தன்மைகளுக்கு முகம் கொடுத்தது.

-              பெண்ணிய எழுத்து என்பது வலுவான பிரிவாக வடிவம் பெற்றது. எண்ணிக்கையில் கூடுதலான பெண் சிறுகதைப் படைப்பாளிகளும் உருவாயினர்.

-              வடிவச் சோதனைகள், பெரிதும் நடைமுறைக்கு வந்தன. இவை தமிழில் புதியவகைச் சிறுகதைகள் உருவாக வழி கண்டன. சிறுகதையின் மொழி மாறியது. புதிய மொழிகள் உருவாயின.

Pin It