தமிழ் இலக்கிய வகைமையில் இஸ்லாம் மற்றும் கிறித்தவம் சார்ந்த படைப்புகள் சமய இலக்கியங்களாகவே அடையாளப்படுத்தப் பட்டு வருகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ‘தமிழ் முஸ்லிம்’ என்று சுட்டப்பெறும் தமிழர்களைப் பற்றிய படைப்பு களை இஸ்லாமிய ஆக்கங்கள் என்று கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்றாலும் இந்தச் சொல்லாடல் காலங்காலமாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் அம்மக்களைத் தமிழ்ப் பண்பாட்டிற்கு வெளியில் நின்று அடையாளப்படுத்துவதாக உள்ளது. சொந்த மண்ணில் அந்நிய இனமாகக் கருதப்பட்டு/ அடையாளப்படுத்தப்பட்டு வரும் தமிழக இஸ்லாமியர்கள் பற்றிய கதைகளை இந்த அடிப்படையில் மீள்வாசிப்பு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.

சமயம் சார்ந்த அல்லது சமய அடையாளத்தோடு இனம்காணப் படும் இலக்கியங்கள் பொதுவாக அறிவுரைப் பிரம்புகளோடுதான் உருவாக்கப்படுகின்றன. இஸ்லாமியர்களின் படைப்புகளும் இத்தகைய தன்மைகளோடுதான் உருப்பெற்றன. தமிழக இஸ்லாமி யர்களின் சிறுகதை வரலாறு பாரதியின் இரயில்வே ஸ்தானத்தி லிருந்தே (1920) தொடங்குகின்றது. இது குறித்து பல கருத்து முரண்பாடுகளும் உள்ளன. 1948இல் திருச்சி ரசூலின் இரு எலும்புக்கூடுகள் என்னும் கதைத் தொகுதி முதலில் வெளியானது. இதைத் தொடர்ந்து பல கதைத் தொகுப்புகள் வெளியாயின. 1950-60களில் வி.நூர்முகம்மது, ஜேயெம், ஷேக்கோ, ஜெமீலா, மஹதி, மகுதூம் முதலிய பல சிறுகதையாளர்கள் உருவாகினர். 1970களில் இஸ்லாமியர்களைப் பற்றிய சிறுகதைகள் பரவலாக எழுதப்பட்டன. எண்பதுகளிலிருந்து இஸ்லாமியர்களின் படைப்பாக்கம் பல்வேறு பரிமாணங்களில் உருப்பெற்றது. நவீனத்தன்மையோடும் விமர்சனப் பார்வையோடும் படைப்புகள் எழுந்தன. இன்குலாப், தோப்பில் முகம்மது மீரான், களந்தை பீர்முகம்மது, முஜீப் ரஹ்மான், ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், மீரான் மைதீன், ஜாகிர் ராஜா முதலியோர் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களின் பண்பாட்டு வெளிப் பாடாகவே இப்புனைகதைகள் உள்ளன. இவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களை மேம்போக்காகப் பதிவு செய்வதும் அதற்கான காரணங்களை விவாதிப்பதும் எல்லாம் இறைவன் செயல் என்று மதத்தின் மீது பழிபோடுவதுமான பல்வேறு தன்மைகளை இக் கதைகளின் வழியே காணமுடிகின்றது. தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கை தமிழக எல்லைக்குள்ளாக நடத்தப்பட்டு வந்தாலும் அவர்கள் என்னவோ அரபுநாட்டிலிருந்து கப்பல்களில் வந்து இறங்கியவர்களாக மற்ற சமூகங்களால் கருதப்பட்டுவரும் சூழலில் அவர்களை அந்நியர்களாக எண்ணும் போக்கையும் அதனால் கலவரங்கள் ஏற்படுவதையும் மதம் என்னும் கதையில் விரிவாகப் பேசுகின்றார் இன்குலாப். பெரும்பான்மை இந்துக்கள் வாழும் பகுதியில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பெரும் பான்மை இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் இந்துக்கள் எதிர்கொள் ளும் சிக்கல்கள் என்று இரு சூழல்களும் கதைகளாக்கப்பட்டுள்ளன.

1947ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, அதை ஒட்டி எழுந்த மதக்கலவரங்கள், அரசியல் சட்டங்களில் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்படுதல், 1960 களில் மீண்டும் எழுந்த வகுப்புக்கலவரங்கள், 1992இல் பாபர் மசூதி இடிப்பு இவ்வாறு எழுந்த பல்வேறு சூழல்கள் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியது. இத்தகைய பின்புலத்தில் எழுதப்பட்ட கதைகள் சமய நல்லிணக்க அடிப்படையில் அமைந் தவை. உயிர்க்கூட்டமெல்லாம் ஒன்றே (2007) என்னும் சிறுகதையில் இஸ்லாமியன் ஒருவன் இந்துக்களைப் பழிவாங்க நினைத்தபோது முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களைப் பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். தங்கள் மதத்தைச் சேர்ந்தவன் தவறு செய்தாலும் நியாயத்தின்பால் நின்று செயல்படுபவர்களாக இஸ்லா மியர்கள் காட்டப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடையாளத்தை விட இந்தியர்கள் என்னும் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி எழுத வேண்டிய கடப்பாடுடையவர்களாக இஸ்லாமியர்கள் இருந்தனர்.

இந்து ஜ் முஸ்லிம் என்னும் எதிர்மை ஒருபுறமிருக்க இஸ்லாமியர் களுக்குள்ளாகவே பல்வேறு எதிர்மைகள் நிலவிவருகின்றன. தொழுகை, நோன்பு முதலிய அடிப்படைக் கடமைகளை நிறை வேற்றுவதனாலேயே ஒருவன் இஸ்லாமியனாக மதிக்கப்படுவ தில்லை. பூர்வீக இஸ்லாமியன், மதமாறிய இஸ்லாமியன் என்னும் சிந்தனை அந்தச் சமூகங்களுக்கிடையே பல்வேறு ஏற்றத் தாழ்வு களை உருவாக்கின. மதம் மாறிய இஸ்லாமியர்களிடத்திலும் இங்குள்ள சாதிப்புத்தியின் நீட்சி காணப்படுவதை இன்குலாபின் உம்மாவோட முகம் என்னும் கதை குறிப்பிடுகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்கு மேல்தட்டு வர்க்கத்தினர் முட்டுக்கட்டைகளாக இருந்தனர்.

ஜாகிர் ராஜாவின் கட்டாந்தரை என்னும் கதையில் மீன்காரனாக வரும் நத்தர்ஷா சொந்த உழைப்பில் கட்டிய வீட்டை இடித்துவிடுகின்றனர். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவனாக அவன் மாற்றப்படு கிறான். ஹசன் முகைதீனின் நெசவுக்காரத் தெருவில் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த மன்சூர் “பக்கத்திலே நின்னு தொழுதா சமத்துவம் வந்துடுமா? தொழும்போது அருகருகே நின்று இறைவனை வணங்குவதில் இழப்பில்லாத சமத்துவத்தை தர தயாராகி இருக்கும் சமூகம், தொழுகை முடிந்த பின் சமூகத்தளத்தில் எங்களை அடிமைப்படுத்துகிறதே, அது ஏன்?”(2009: 67)என்று குறிப்பிடுவதன் மூலம் அங்கு நிலவும் அசமத்துவம் விளங்குகின்றது. இதற்கான தீர்வாக அவர் கல்வியை முன்வைக்கின்றார்.

இஸ்லாமியர்களின் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணிக் கும் கட்டுப்படுத்தும் அமைப்பாக ஜமாத் உள்ளது. இதன் அங்கத் தினர்களாக உள்ளவர்கள் பொருளாதாரத்திலும் சாதியிலும் மேல் நிலையில் இருப்பவர்கள். ஊருக்குள் அல்லது குடும்பங்களுக் கிடையில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதற்குத் தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக உள்ளனர். பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதிகளாக விளங்கும் இவர்கள் மார்க்கச் சட்டப்படி தீர்ப்பு வழங்குபவர்களாக இல்லை. வசதி படைத்தவர்களுக்கு ஒருவாறும் ஏழை மக்களுக்கு ஒருவாறும் தீர்ப்பு வழங்குகின்றனர். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் தீர்ப்பு, பல்லாங்குழி விளையாட்டு ஆகிய கதைகளில் இதைக்குறிப்பிடுகின்றார். ஜமாத்தார்களின்கீழ் ஆலிம்கள் (சமயக் கல்வியாளர்கள்) கைப்பாவையாக உள்ளதைத் தோப்பிலின் ‘வானவர்கள் செல்லுமிடங்கள்’ என்னும் கதை விளக்குகின்றது. பள்ளி வாசலில், தொழுகை நடத்துபவர்கள், பள்ளியில் மற்ற வேலைகளைச் செய்யும் மோதின்கள் உள்ளனர். இவர்களின் வறுமை பல கதைகளில் சித்திரிக்கப்படுகின்றது. சமயக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பினும் இவர்கள் ஊர்த்தலைவர்/ஜமாத் தலைவரின் கூலிகளாகவே உள்ளனர். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் இவர்களை எதிர்மனநிலையில் பதிவு செய்வதற்கு உரிய காரணங் களைக் கவனிப்பது அவசியம்.

இஸ்லாம் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் பெருகி வருவதாகவும் இதனால் சமய அடிப்படைகள் சீர்குலைந்து போவதாகவும் குற்றஞ் சாட்டி அவற்றைச் சீர் செய்வதற்காகத் தோன்றிய இயக்கமாக வகாபியம் உள்ளது. முகம்மது இப்னு அப்துல் வகாப் சவூதி அரேபியாவில் நஜ்து என்ற பகுதியில் கல்வி, வணக்கம் ஆகிய வற்றில் சிறந்த குடும்பம் ஒன்றில் கி.பி.1699இல் பிறந்தவர். இவ்வியக்கம் தோன்ற மூலகாரணமாக இருந்தவர் இவர். இக் கொள்கையாளர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் உள்ளவற்றைத் தவிர்த்த எதையும் எதிர்ப்பவர்கள். தூய்மைவாதம் பேசுபவர்கள். தர்கா பண்பாட்டிற்கு எதிரானவர்கள். இஸ்லாம் சமயத்தைப் பரப்பிய சமய நெறியாளர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத்தலமாக மாற்றி அவர்களைக் கடவுளர்களாக மாற்றுகின்றனர் என்னும் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

இதனை ராஜகுமாரனின் நேர்ச்சை என்னும் கதை விளக்கமாகப் பேசுகின்றது. இந்த அடக்கத் தலங்கள் தர்காவாக மாற்றப்பட்டு அதற்கான நிர்வாகத்தினர் ஏழை மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குர்ஆன் கூறும் சட்டங்களை இவர்கள் கடைபிடிப்பதில்லை என்றும் இதற்கு சமயத் தலைவர்களே துணைநிற்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். பயம் என்னும் கதையில் பேய்பிடித்தல், அதனை ஓட்டுதல் என்பது உளவியல் சார்ந்த நோய்தான் என்றும் சமயகுருமார்கள் இதனைப் பயன்படுத்திப் பணம் செய்கின்றனர் என்றும் கூறுகின்றார். தங்கள் புரோகிதத் தொழில் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காகத் தவறான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் இவர்கள் பரப்பி வருவதாகக் கூறி இது இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்க வல்லது என்று தூய்மைவாதத்தை வலியுறுத்துகின்றனர்.

இஸ்லாமியத்தில் சமயத் தூய்மைவாதம் எதனை நோக்கமாகக் கொண்டது? என்று காணும்போது சில உள்ளார்ந்த நோக்கங்கள் தெரிய வருகின்றது. அரபுச் சூழலில் சமயம் என்பது மிக வலுவான அரசியற் காரணியாக விளங்கியது. யார் அரச அதிகாரத்திற்குரிய வர்கள் என்ற நிலைப்பாட்டில் சமயம் சார்ந்தவற்றைப் பயன்படுத்து கின்றனர். நபி முகம்மது வாய்மொழி வரலாறுகளின் வழி குரைஷி குலமே மிக முக்கியமாக, அரபுச் சமூகத்தின் பின்பற்றத்தக்க குலமாக வும் ஆளும் தகுதி படைத்த உயர்குலமாகவும் கருதப்பட்டுள்ளது (2010 : 28). நபி முகம்மதுவின் வழித்தோன்றல்கள், அஷ்ரபுகள் அல்லாத பிற இனத்தவர்கள் அரச உரிமைக்கு உரியவர்கள் அல்ல. உள்ளூர்க் கலாச்சார உள்வாங்கல்களுடன் வாழும் மக்கள் அரபுச் சமூகத்தில் அஷ்ரபு அல்லாதவர்களாகவும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். எனவே இஸ்லாமியத் தூய்மைவாதம் பேசுவதன் மூலம் இம்மக்களை இஸ்லாமிய மைய நீரோட்டத்தினின்று விலக்கமுடியும். அது அதிகாரம் சார்ந்த விலக்குகளுக்கும் அடிப்படையான காரணியாக அமைந்துவிடுகின்றது.

ஹமீது அல்கர் எழுதிய “Wahhabism: A Critical Essay” என்னும் நூலுக்கான விமர்சனத்தில் “வஹாபிசத்தின் உச்சகட்ட சாதனை சவூதி அரேபியாவில் ராஜ்ஜியத்தை நிறுவியதே என்பதாகக் கீழைத்தேய வாதிகள் மற்றும் - வஹாபி மற்றும் வஹாபியரல்லாத - அரபு முஸ்லிம்களின் ஆக்கங்களைப் பயன்படுத்தி அல்கர் வாதிடுகிறார்” என்று அப்தர் ரஹ்மான் கோயா குறிப்பிடுகின்றார். மேலும், சவூதிகள் எஞ்சிய முஸ்லிம் உலகில் மேற்கூறிய அமைப்புகள் ஊடாக வஹாபி கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டுத் தங்களின் எண்ணை வளத்தைப் பயன்படுத்திச் செய்துவரும் நடவடிக்கைகளையும் நூலாசிரியர் விளக்குகிறார். இக்கருத்துக்களைக் காணும்போது அரபுச் சூழலில் அதிகாரத்தையும் மற்ற இஸ்லாமிய நாடுகளில் வணிகத்தை யும் நோக்கமாகக் கொண்டு இவை செயல்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்தியச் சூழலில் இந்தத் தூய்மை வாதம் சாதி சார்ந்த நடைமுறைகளோடு ஒத்துப்போவதைக் கொள்ள முடியும். இதனை “தர்கா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அடித்தட்டு முஸ்லிம்களை இழிந்தவர்களாக, காபிர்களாக, பித்அத்துகளை மேற்கொள்பவர்களாகக் கருதுவது தௌகீது பிராமணியத்தைக் கட்டமைக்கும் வகாபிகளின் நவீன தீண்டாமைப் பார்வையாகவும் மாறியுள்ளது” (2010 : 10) என்று கூறும் ரசூலின் கூற்று மெய்ப்பிக் கின்றது.

தமிழக இஸ்லாமியர்களின் பண்பாடு என்று அடையாளப் படுத்தப்படுவதில் ஒன்று தர்கா பண்பாடு. சமயப் பரப்பாளர்களின் அடக்கத்தலங்களைக் களமாகக் கொண்டு பல கதைகள் உள்ளன. தர்கா என்பது வழிபாட்டிற்குரிய இடமாக மாறிவிடுகிறது, இதனால் மக்கள் இறைவனை நினைக்காமல் இறையடியவர்களை நினைத்தும் வழிபட்டும் வருகின்றனர். இது இறைவனுக்கு நிகர் வைக்கும் அடிப்படைத் தத்துவத்திற்கு எதிரான பண்பு என்று பல குற்றச்சாட் டுகள் வைக்கப்படுகின்றன. இது போன்ற விவாதங்கள் ஒருபுற மிருக்க இந்த இடம்(தர்கா) யாரால் நிரப்பப்பட்டுள்ளது என்று கவனிப்பது அவசியம். இங்கு பெண்களே அதிகம் வருகின்றனர். தர்காவின் வளாகத்தில் நிர்கதியாக்கப்பட்ட மனிதர்கள் பலர் காணப்படுவர். இவர்களில் பலர் சொந்த பிள்ளைகளால் கைவிடப் பட்டவர்களாகவும் தமக்கென ஒரு புகலிடம் இல்லாத நாடோடி களாகவும் அன்றாட உணவின்றித் துன்புறுபவர்களாகவும் உள்ளனர். இங்கு வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நேரும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக இதைப் பயன்படுத்துகின்றனர். இங்கு நேர்ச்சையாக வழங்கப்படும் உணவு எல்லோருக்கும் பகிர்ந் தளிக்கப்படுகின்றது. எனவே வாழ்க்கையைத் தவற விட்டவர்களுக் கும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களுக்கும் இந்த இடம் அடைக் கலமாகவும் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களுக்கு வடிகாலாகவும் உள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகத் தொழுகை, நோன்பு, ஜக்காத் என்னும் கொடை, ஹஜ் பயணம் முதலியவற்றைக் கூறுவர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதப்பட்டுள்ளன. கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே அதற்கான பலனை மறுமை உலகில் பெறுவாய் என்று தற்காலிக சமாதானத்தைச் சொல்லும் கதைகள் தொடக்க காலத்தவை. நோன்புக் காலத்து வழங்கப்படும் ஜக்காத் என்னும் கொடை ஏழை மக்களுக்கு வழங்கப் படுவது. இதை மையமாக வைத்து எழுதப்பட்ட இயல்பு என்னும் கதையில் “நோன்புன்னா மட்டும் எங்க மேல அன்பு காட்றது, அது முடிஞ்சதும் எங்களை விரட்டுறதுன்னு நீங்க எல்லாம் வேஷம் போடறீங்க” (2002: 121) என்று கூறுவதன் மூலம் நோன்பு காலத்து இஸ்லாத்தை அனுசரித்த ஒரு வாழ்க்கை அதன்பின்பு இயல்பான சுயநலவாழ்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழ்வதாக பர்வீன் பானு குறிப்பிடுகின்றார்.

ஹஜ் பயணம் என்பது இறைவனுக்காக மேற்கொள்ளப்படும் பயணமாகக் கூறப்படுகின்றது. காலப் போக்கில் சமுதாய மதிப்புக்காக மட்டும் ஹஜ் பயணம் செய்ய எத்தனிக்கும் மனிதர்களாக இவர்கள் மாறிவருவதை களந்தை பீர் முகம்மதுவின் யாசகம் என்னும் கதை விளக்குகின்றது. ஹஜ் பயணம் செய்து திரும்புபவர்கள் ஹாஜியார் என அழைக்கப்படுகின்றனர். இந்தப் பட்டத்தின் மீதான ஆசையே இதற்கு காரணம் எனப்படு கின்றது. ஹஜ் பயணம் வசதி படைத்தவர்களுக்காகச் சொல்லப் பட்டது. ஆனால் வசதியற்ற சிலர் கடன் வாங்கியும் சொத்துக்களை அடமானம் வைத்தும் செல்கின்றனர். ‘அத்தாவின் வாக்குறுதிகள் உயிரோடிருக்கின்றன’ (2007) என்னும் கதையில் இரண்டு பெண் களைத் தன் செலவில் மணமுடித்துக் கொடுப்பதாகச் சொல்லி ஹஜ் பயணம் செய்த தந்தை பயணத்தில் இறந்துவிடுகிறார். இதனைக் கேள்வியுற்ற மகள், பக்தியின் பெயரால் நடத்தப்படும் கொலை யாகவே இதைக் கூறுகிறாள். அடிப்படைக் கடமைகளைப் பேணுவதில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சரியான புரிதலின்றி சமூக மதிப்பைப் பெறுவதற்காகச் செய்யும் செயல்கள் யாவும் இக்கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன.

இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிப்பதில் அவர்தம் பொருளாதாரச் சூழல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் வெளிநாட்டு வேலைகள் மூலம் கிடைக்கின்றது. இதை ஒட்டிய பல கதைகள் உள்ளன. வெளிநாட்டில் வேலைக்குச் சென்று இளைஞர்கள் படும் பாட்டினை ஜாகிர் ராஜாவின் வெக்கை என்னும் கதை விளக்குகின்றது. மீரான் மைதீனின் ரோசம்மா பீவி (2002)யும் இதே கருத்திலானது. மஜ்னூன் தன் மனைவி மக்களை விட்டு வெளிநாட்டில் வாழும் வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதை இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திராணியற்று என் ஆண் உறுப்பைக் கொண்டு மூத்திரம் பெய்வது மட்டும் தான் சாத்தியம் என்று கூறும் இயலாமைச் சொற்களிலிருந்து விளங்கிக் கொள்ளமுடிகிறது. வெளிநாட்டு வாழ்க்கை என்றாலே சொகுசான வாழ்க்கை என்று உள்நாட்டார் கருதுவதும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள் உள்நாட்டைச் சொர்க்கமாகக் கருதுவதுமான இரட்டைத் தன்மை பல கதைகளில் பேசப்படுகின்றன. வெளிநாட்டு மாப்பிள்ளை என்பது மணவாளனின் மிகப் பெரிய தகுதியாக இன்று வரை கருதப்பட்டு வருகின்றது. வெளிநாட்டு வேலைக்கு வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்கின்றனர்; இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு மற்றவர்களிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தி தவறான வழி களுக்கு இட்டுச்செல்கிறது என்பதை இன்குலாபின் விபத்து என்னும் கதை விளக்குகின்றது.

பல்வேறு தரப்பிலான இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு கதைகளாக்கப்பட்டுள்ளன. விளிம்பு நிலை மாந்தர்களின் சிக்கல் களைத் தோப்பில், இன்குலாப், களந்தைப் பீர்முகம்மது, ஜாகிர் ராஜா கதைகள் சித்திரிக்கின்றன. நெசவுத்தொழில், பீடி சுற்றுதல், நாவிதத் தொழில், கபறுகுழி வெட்டுதல், மீன்பிடித்தல், நகர்ப்புறச் சேரிகளில் வசித்துக்கொண்டு உயர்சாதிக் குடியிருப்புகளில் வேலை செய்தல், துப்புரவுத் தொழில், நிரந்தரக் குடியிருப்பு இன்றி நாடோடி வாழ்க்கை வாழும் முஸாபர்கள் முதலிய பல்வேறு மக்களைப் பற்றிய கதைகள் எழுதப்பட்டுள்ளன.

தோப்பில் முகம்மதுவின் சுருட்டுப்பா என்னும் கதை இறந்தவர்களுக்குக் குழிவெட்டும் தொழில் செய்பவரைப் பற்றியது. இத்தொழிலை விடுத்து வேறு தொழிலைச் செய்யச் சொல்லும் மனைவியிடம், “இங்கு கஷ்டப்பட்டால் நாளெ மஹ்ஷரில் சுகிக்கலாம். என் வாப்பாவும் வாப்பாவின் வாப்பாவும் எல்லாரும் கபுறுதான் வெட்டிப் பொளச்சாங்க. நான் ஏழாவது தலைமுறை. தெரியுமா? நமக்கொரு மவன் உண்டுன்னா அவனும் கபுறுதான் வெட்டுவான்.” (2009: 206) என்று கூறுகின்றார். இக் கூற்று தன் தொழில் மீதான பக்தியைக் காட்டுகின்றது. மற்ற சமூகத்தவரால் இழிவாகக் கருதப்படும் தொழில்கள் மீது மத அடிப்படையிலான புனிதத்தன்மையைக் கட்டி இதைச் செய்பவன் மறுமையில் சிறப்பான வாழ்வைப் பெறுவான் என்று அதே தொழிலில் நீடிக்கச் செய்யும் தந்திரத் தன்மையை இதில் காணமுடிகிறது.

சுருட்டுப்பா இறந்துவிடும் சூழலில் அவர் பிணத்திற்கு யார் குழி வெட்டுவது என்னும் சிக்கல் ஏற்படுகிறது. ஊர்த்தலைவர்கள் நாவிதச் சமூகத்தினரை அழைத்தனர். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். பின்பு பொருள் வசதியற்ற ஒருவனை அழைக்கின்றனர். அவனும் மறுத்து விட பிணம் ஆற்றில் விடப்படுகிறது. இவ்வகைத் தொழிலைச் செய்ய அடுத்த தலை முறையினர் இல்லாத சூழலில் இவர்கள் யாரை அழைக்கின்றனர் என்பதிலிருந்து சமூகத்துப் படிநிலைகளை விளங்கிக் கொள்ளமுடி கிறது. இதே சிக்கலை நத்தர்ஷாவின் செப்பு தூக்கி (2002) என்னும் சிறுகதையும் பேசுகின்றது.

இஸ்லாமியக் குடியிருப்புகள் பற்றிய சித்திரத்தை இக்கதைகள் வழியாகக் காணமுடிகின்றது. ஊர்ப்புறங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் தொழில் ரீதியாக அமைந்துள்ளது. நெசவுக்காரத் தெரு என்னும் சிறுகதையில் தெருவிற்குள் புதிதாக முளைத்த நான்கு வீடுகளில் எதுவும் தெருவிற்கான அங்கீகாரத்தைப் பெறவில்லை. அவற்றில் ஒன்று வஹ்ஹாபி குடும்பம், இரண்டு இந்துக்குடும்பம், மூன்று நாவிதர் எனப்படும் ஒசாக்குடும்பம், நான்கு ஷியாமுஸ்லிம் குடும்பம். இவர்கள் நால்வரையும் அந்த தெருவின் அங்கத்தினராக அம்மக்கள் கருதவில்லை. நெசவுக்காரத் தெருவின் உறுப்பினர்களாக எத்தனிக்கும் தன்மையை அம்மக்களிடையே காணமுடிகிறது.

ஜாகிர் ராஜாவின் கட்டாந்தரை என்னும் கதையில் மீன்காரன் ஒருவன் தன் (மேல்தட்டு வர்க்கத்தினர்) குடியிருப்பிற்குள் வீடு கட்டுவதை அனுமதிக்காத மக்கள், “போச்சு.. போச்சு.. ஊர்மானமே போச்சு.. மானஸ்தனுங்க இருக்கிற தெருக் குள்ள மொதல் மொதலா மீங்காரன் நொழையுறான். இனிமேக் குடியானவன், பறை, பள்ளு, சக்கிலி, ஜாதியெல்லாம் சகட்டுக்கும் வந்துடும்”(2004: 141) என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்தம் குடியிருப்பு அமைப்புக்களில் பேணப்படும் மேட்டிமைத்தனத்தை யும் சாதிய மனோபாவத்தையும் விளங்கிக் கொள்ளமுடியும். ஆனால் இந்த அமைப்பு நகரக்குடியிருப் புக்களில் இல்லை. எனில் நகரங் களில் எவ்வித பாகுபாடுகளும் இன்றி வாழ்கின்றனரா என்றால் இல்லை. ஜமாத் அமைப்புக்களில் இந்த படிநிலைகளைப் பேணுகின்றனர்.

தோப்பிலின் வானவர்கள் செல்லுமிடங்கள் என்னும் கதையில் பெருநகர ஜமாத்தினர் வெளியூர் வாசி ஒருவர் இறந்துவிட்ட சூழலில் அவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர். மேலும் அடக்கத் தலங்களில் யாரை எங்கு அடக்கம் செய்யவேண்டும் என்பதையும் ஜமாத்தினரேத் தீர்மானிக் கின்றனர். உயர்தர மக்களை வடபக்கமும் நடுநிலையானவர்களை தென்பக்கமும் பெரிய மருத்துவமனையில் இறந்துபடும் அனாதை கள், யாசகர்களாக வந்து பள்ளிவாசலில் தங்கி இருக்கையில் திடீரென இறந்துவிடுகின்ற முஸாபிர்கள், ஜமாத்தில் உள்ள அடிமட்ட ஏழைகள் முதலானோரைக் கீழ்ப்புறமுள்ள அனாதைக் கபர்ஸ்தானத் திலும் அடக்கம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய பாகுபாடு குறித்து பின்காலனியச் சூழலில் அடித்தள முஸ்லிம்கள் குறித்த உரையாடல் என்னும் கட்டுரையில் ஹெச்.ஜி.ரசூல் (2010) விரிவாகப் பேசியுள்ளார். இதில் ‘தீண்டத்தகாத சாதியிலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்களைப் பிற முஸ்லிம்கள் ஒன்றாகக் கருதுவதில்லை. இவர்கள் பொது மையவாடியை (அடக்கத்தலம்) பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டவர்கள்’ (2010: 24)என்னும் செய்தியைக் குறிப்பிடுகின்றார். தோளோடு தோள் உரசித் தொழுவது மேன்மையானது என்று சமத்துவத்தைக் கற்பிக்கும் இஸ்லாத்தில் இத்தகைய பாகுபாடுகளையும் இதற்கான விதிமுறைகளையும் இவர்கள் எங்கிருந்து பெறுகின்றனர் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.

இஸ்லாமிய சமூகத்தில் பெண்ணுக்கான இடம் என்ன என்பதைக் கதைகள் வழியாகத் தேடும் போது இரண்டு வகையான பெண்களை அடையாளம் காணமுடிகின்றது. ஒன்று சமயத்தை/சமூகத்தை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் தன்னுடைய எல்லா நிலைமை களுக்கும் இறைவனே காரணம் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வது; இரண்டு சமயத்திற்குள்ளாக நின்று தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்ப்பது. இறக்கை இழந்த பறவைகள் என்னும் கதையில் சமூகத்திற்காகப் போராடி இறந்த ஒருவனது மனைவியும் மகளும் நிர்கதியாக்கி விடப்படுகின்றனர். தன்னுடைய நிலையினை எண்ணி, “இதில் யாரையும் குறை கூற முடியாது. எல்லாம் விதி என்று கூறி எல்லாத் தவறுக்கும் தவறு இல்லாததற்கும் பொறுப்பாளியான இறைவனையே குற்றம் சொல்ல வேண்டும்” (2009: 104) என்று குற்றத்தை இறைவன் மீது சுமத்தி சமூகத்தில் உலவும் அயோக்கியர்களை அங்கீகரிக்கும் போக்கு இன்றும் காணப்படுகின்றது.

இஸ்லாமியப் பெண்கள் பற்றிய பெரும்பாலான பதிவுகள் திருமண வாழ்க்கையில் ஏற்படும் விரிசல்களை ஒட்டியவை. குழந்தையின்மை, வரதட்சணை, உடல்நலக்குறைவு முதலிய பல காரணங்களுக்காக ஆண்கள் மணமுறிவு செய்வதாகப் பல கதைகள் உள்ளன. தோப்பிலின் கதைகளில் பெற்ற தாய், வளர்ப்புத்தாய் என்று இரண்டு தாய்மார்கள் பற்றிய செய்திகள் உள்ளன. குழந்தையின்மை காரணமாகச் செய்யப்படும் மறுமணம் மூத்த மனைவியின் சம்மதத்தோடு நிகழ்த்தப்பட்டு கணவனின் குழந்தையைத் தானே வளர்ப்புத் தாயாக இருந்து கடைசிவரைப் பராமரிப்பவளாகக் காட்டப்படுகிறாள். இந்நிலை இன்றும் பல இடங்களில் உள்ளன. ஆண் தனக்கான வாழ்க்கைத் துணையை இரண்டு, மூன்று, நான்காகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கும் சட்டம் போர்க்காலச் சூழலில் உருவானது. ஆனால் இன்றும் நடைமுறை வாழ்வில் அரபு நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.

தமிழக இஸ்லாமி யர்களிடத்து இத்தகைய வழக்கம் பரவலாகக் காணப்படவில்லை யெனினும் உடனுக்குடன் தலாக் சொல்லி மணமுறிவு செய்து கொள்கின்றனர். குட்டி ஆடு என்னும் கதையில் மணமுறிவினைப் பயன்படுத்தி ஆண் பல பெண்களைத் திருமணம் செய்வதாகக் காட்டியுள்ளார் தோப்பில் முகம்மது மீரான். பல்லாங்குழி விளையாட்டு என்னும் கதையில் மனைவியின் தங்கையை விரும்பி மணமுடித்துவிட்டு பின்பு அவள் ஊனத்தைக் காரணம் காட்டி மணவிலக்கு செய்கிறான் ஆண். எனவே தலாக் என்னும் மண முறிவைத் தன் சுயநலத்திற்கான கருவியாக ஆண் பயன்படுத்து வதைப் பல கதைகள் சித்திரிக்கின்றன. மணவிலக் கினை ஜமாத்தார்களே முன்னின்று செய்து வைக்கின்றனர். எனவே இத்தகைய ஆண்களுக்கு ஜமாத்தார்கள் உடந்தையாக இருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

பெண்கள் ஆண்களை மணமுறிவு செய்வதான கதைகளும் உள்ளன. இதனை குல்உ என்று குறிப்பிடுவர். ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் தீர்ப்பு என்னும் கதையில் பொறுப்பற்ற குடிகாரக் கணவனை மணவிலக்கு செய்வதாகக் கதை அமைந்துள்ளது. இப்பெண்ணின் செயலை ஆசிரியர் மெச்சினாலும் ஊரார் அவளைக் கேலி செய்வதாகவே காட்டப்படுகின்றது. எந்த இடத்தில் பெண் சுயசிந்தனையோடு செயல்படுகிறாளோ அங்கு அவள் ஒழுங்கீன நடவடிக்கையுடையவளாகச் சுட்டப்படுகின்றாள். கணவன் செய்யும் எல்லா செயல்களையும் பொறுத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தன் உடலையும் உழைப்பையும் அவனுக்காக அர்ப்பணிப்பவள் மிகச் சிறந்த பெண்ணாகப் பரிமளிக்கிறாள். பெரும்பாலான கதைகள் பெண்ணை எதிர்மனநிலையில் பதிவு செய்கின்றன. கணவனால் விரட்டப்பட்ட பெண்ணை அவள் தாய் ஏற்க விரும்பாமல் கணவன் வீட்டிலேயே வேலைக்காரியாகக் காலங்கழிக்கச் சொல்வதாகவும் கதைகள் உள்ளன.

பெண் என்றாலே நகை, சொத்து முதலியவற்றுக்காக அலைகின்ற பிறவியாகப் பல கதைகள் உள்ளன. இவ்வாறு பெண்ணை விமர்சித்தும் எதிர்மன நிலையிலும் படைத்து அவர்களின் துன்ப உலகையும் படம்பிடிப்ப வர்களாக ஆண்களே உள்ளனர். பெண்படைப்பாளர்களின் கதைகள் இவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளதா என்றால் பெரும்பாலான கதைகள் சமய எல்லைக்குள்ளிருந்து மதபோதனைக்கான தொனி யோடு உள்ளன. இந்நிலை பெண்படைப்பாளர்களின் பலவீனத்தைச் சுட்டுகின்றது என்பதைவிட பெண் சார்ந்த சிக்கல்களை ஆண்கள் எழுதும்போது உள்ள சுதந்திரம் பெண் படைப்பாளர்களுக்கு இல்லை என்பதையே காட்டுகின்றது. இஸ்லாமிய பெண் படைப்பாளர்களின் சிக்கல்களை அவர்கள் எடுத்துக் கொள்ளும் கதைக்களன்களைக் கொண்டு தீர்மானிப்பதை விட அவர்களால் கவனப்படுத்த முடியாத கதைக்களன்களைக் கொண்டே தீர்மானிக்க முடியும். பெண்கள் மீது கட்டப்படும் மதச்சட்டங்கள் சமய எல்லைக்குள்ளாக இருக்கின் றதோ இல்லையோ ஆண் அதிகார எல்லைக்குள்ளாக இருக்கின்றது என்பதை ஆண்படைப்பாளர்களின் கதைகள் வழியாகவே உணர முடிகின்றது. எனவே கதையுலகிற்குள்ளாக மட்டுமன்றி கதைக்கு வெளியிலும் பெண் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றாள்.

இஸ்லாமிய அடிப்படைகளில் இல்லாத அல்லது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பல இன்றளவும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஒன்று வரதட்சணை. பெண்களுக்கு மஹர் பணம் கொடுத்து ஆண்கள் மணமுடிக்க வேண்டும் என்பதே சட்டமாக இருக்க இதற்குத் தலைகீழான நடைமுறையே இன்று பின்பற்றப் பட்டு வருகின்றது. இது இங்குள்ள பிற சமூகங்களில் உள்ள பண்பாட்டுத் தாக்கம் என்று கூறுவதை விட ஏற்கனவே பின்பற்றப் பட்டு வந்த பண்பாட்டு எச்சம் என்றே கூறலாம். சமயச் சட்டங்கள் இது போன்ற இடங்களில் நெகிழ்வுத்தன்மையோடு பின்பற்றப் படுகின்றன. இது போலவே வட்டி வாங்குவதும் கொடுப்பதும் மிகப்பெரிய பாவமாக இஸ்லாம் குறிப்பிடுகின்றது. ஆனால் ஹஜ் முடித்து வந்த ஹாஜிமார்களே வட்டித்தொழில் செய்வதாகப் பல கதைகள் உள்ளன. எனவே மதச்சட்டங்களைத் தங்கள் தேவை களுக்கு ஏற்ப மாற்றியும் நெகிழ்த்தும் பின்பற்றி வரும் சூழல் மிகுந்து காணப்படுவதைக் கதைகளின் வழி அறியலாம்.

இஸ்லாமியர்களின் புனைகதை உலகில் மிக முக்கிய அம்சமாக அதிசயக் கதையாடல்கள் உள்ளன. சமயப் பரப்பலில் அதிசயக்கதை யாடலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவை புனிதத்தன்மையைப் பேணுவதற்காகக் கட்டப்படுபவை. இவை வாய்மொழிக் கதை யாடல்களாகக் காலந்தோறும் சொல்லப்பட்டு வருபவை. சூழலுக் கேற்ப பல திரிபுகளை உட்கொள்வது இதன் இயல்பு என்றாலும் அவை அந்தந்த காலப் பின்புலத்தை விளக்கவல்லவை. சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்னும் கதையில் இத்தகைய மீபுனைவுகள் எவ்வாறு கட்டப்படுகின்றன என்பதைத் தோப்பில் அழகாகக் காட்டியுள்ளார்.

பின்நவீனத்துவப் பாணியில் எழுதும் முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை தொகுப்பு பழங்கதை மரபினை மீட்டுருவாக்கம் செய்கின்றது. இக்கதைகள் வழியாகக் கதையாளர்கள் எதைச் சொல்ல முனைகின்றனர் அல்லது எவற்றைச் சொல்ல இந்தக் கதைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று காண்பது இக்கதைகளுக்கான அவசியத்தைப் புலப்படுத்தும். இது குறித்து ஹெச்.ஜி.ரசூல், “மன்னர்கள் அடிபணிதல், உயிர்மீட்பு, நோய் தவிர்ப்பு, அறிவின் ஆற்றலை வெளிப்படுத்துதல், கொடியவர் களுக்கு எதிரான போராட்டம், ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவும் பண்பு என்பதான பல கருத்தாடல்களை இந்த கராமத்துகளின் (அதிசயக் கதையாடல்கள்) அடித்தள கட்டமைப்பு மாற்று அறவியல் களாக கொண்டுள்ளன” (2009: 137) என்கின்றார். இஸ்லாமியப் புனைகதையாளர்கள் இவற்றைத் தீமைக்கு எதிரான போராட்ட மாகவே காட்டியுள்ளனர். தோப்பில் கதைகளில் இவை மிக விரிவாகப் பதிவாகியுள்ளன.

மரணம் தொடர்பான கதையாடல்கள் மிக சுவாரஸ்யமானவை. இறந்த பின்பு மனிதன் என்னவாகிறான்? என்கிற கேள்வி காலங் காலமாகக் கேட்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றது. ஒவ்வொரு சமயமும் அதற்கான விளக்கங்களை அச்சமய அடிப்படையில் கூறுகின்றன. இஸ்லாம் சமயம், ஒருவன் இறந்த பின்பு அவனுடைய பாவங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கான பிரதிபலனை அவன் அடைவான் என்று கூறுகின்றது. இறந்தவனை அடக்கிய பின்பு அவனிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை வெளியில் இருந்து சமயபோதகர் சொல்லிக் கொடுப்பதாக ஒரு சடங்கு செய்யப்படும். இதனை மையமாகக் கொண்டு சூட்சும இடைவெளி என்னும் கதை அமைந்துள்ளது.

இதில் “புதைகுழிக் குள்ளே கிடக்கும் சடலத்திற்குப் பதில் சொல்லிக்கொடுக்கும் லெப்பைக்கு உள்ளே கேட்கப்படும் கேள்விகள் எப்படித் தெரியும்? இவர் சொல்லும் பதிலை உள்வாங்குவதற்கான கேள்விப்புலன் அந்த மய்யத்திற்கு(சடலத்திற்கு) உண்டா?” (2009: 371)என்று பல சந்தேகங்களைத் தோப்பில் முன்வைக்கின்றார். இறந்தவரின் நன்மை தீமைகளைக் கணக்கெடுக்க இருவர் வருவர். இறந்தவருக்கும் இந்த இருவருக்கும் இடையிலான உரையாடலை மையமாகக் கொண்டு நாகூர் ரூமியின் விசாரணை என்னும் கதை அமைந்துள்ளது. இதில் நன்மை தீமை என்பது எதனை அடிப்படையாகக் கொண்டது என்பதை விவாதித்துள்ளார். தொழுவதும் நோன்பு நோற்பதுமான அடிப் படைக் கடமைகள் மட்டும் நன்மையைத் தந்துவிடுவதில்லை. மனிதநேயம் தான் இவற்றின் அடிப்படை என்பதை விளக்கியுள்ளார்.

தமிழக இஸ்லாமியர்களும் அவர்தம் படைப்புகளும் தமிழ்ப் பண்பாட்டு எல்லைக்குப் புறம்பாகத் தள்ளப்படுவதை விளக்கு கின்றது இந்நீண்ட கால நடப்புகளின் நெட்டோட்டம். இஸ்லாமியச் சிறுகதைகள் என்று ஒரு வசதிக்குச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இவை தமிழ்ச் சிறுகதைகளாக தமிழர்களின் வாழ்வைச் சொல்லும் கதைகளாகவே உள்ளன. சமயம் சார்ந்த கூறுகளை மிகைப்படுத்தி அல்லது முன்னிறுத்திக் கூறும் கதைகளைத் தாண்டி மக்களைப்பற்றிய அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன. இவற்றைச் சமயம் எல்லைக்குள்ளாக நிச்சயம் நிறுத்த முடியாது. வெளியி லிருந்து வந்த சமயம் என்று இவற்றைப் புறந்தள்ளும்போது அந்த சமயத்திற்குள்ளாக வாழும் இந்த மண்ணிற்குரியவர்களையும் புறந்தள்ள நேரிடுகிறது. இத்தகைய புறந்தள்ளல்களை வாசிப்புத் தீண்டாமை என்று கூறுவதைத் தவிர வேறு எப்படி அடையாளப் படுத்த முடியும்.

பார்வை நூல்கள்

அப்தர் ரஹ்மான் கோயா, வஹாபி சித்தாந்தம் பற்றிய விரிவான, பக்கச்சார்பற்ற ஓர் விமர்சனம், www.islamiyasinthanai.com.2002.

பிறைநதிபுரத்தான், வஹாபி இயக்கமும் வர்ணாஷிரம லோகலிஸ்டுகளும், www.thinnai.com.2004

கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், ஹெச்.ஜி.ரசூல், ஆழி பப்ளிஷர்ஸ், 2009

தலித் முஸ்லிம், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், 2010

சிறுகதைத் தொகுப்புகள்

பாத்திமுத்து சித்தீக், ஒற்றைப் பறவை, பாமு பதிப்பகம், 2001

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலை வனம் போல, முரண் பதிப்பகம், 2010

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், போன்சாய் மரங்கள், உயிர் எழுத்து பதிப்பகம், 2011

களந்தை பீர்முகம்மது (தொகுப்.), சலாம் இஸ்லாம் - சமீபத்திய இசுலாமிய சிறுகதைகள், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

தோப்பில் முஹம்மது மீரான், வேர்களின் பேச்சு, அடையாளம், 2009

ஜாகிர் ராஜா, செம்பருத்தி பூத்த வீடு, அனன்யா வெளியீடு, 2004

ஜாகிர் ராஜா, பெருநகரக் குறிப்புகள், அனன்யா வெளியீடு, 2007

முஜீப் ரஹ்மான், தேவதைகளின் சொந்தக் குழந்தை, புதுப்புனல், 2005

களந்தை பீர்முகம்மது, பிறைக்கூத்து, இருவாட்சி, 2008

ஹசன் முகைதீன், இ.எஸ்.எம்., நெசவுக்காரத் தெரு, புதுப்புனல், 2009

இன்குலாப், பாலையில் ஒரு சுனை, அன்னம் வெளியீடு, 1992

ஹனிபா, எம்.எம்., மொய்யெனப் பெய்யும் மழை, ஆசாத் பதிப்பகம், 2000

ஹசன் முகைதீன், இ.எஸ்.எம்., வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லை, புதுப்புனல், 2009

ஹசன் முகைதீன், இ.எஸ்.எம்., உயிர்ச் சந்தையில் ஓவியங்களின் தகவல் பலகை, புதுப்புனல், 2006

மீரான் மைதீன், ரோசம்மா பீவி, திணை வெளியீட்டகம், நாகர்கோவில், 2000

பாத்தி முத்து சித்தீக், மல்லிகை மொட்டுகள், 1996

சாலி, ஜே.எம்., நோன்பு, வாசுகி நூலகம் வெளியீடு, வேடந்தாங்கல், 1990

ஹிமானா சையத், விருந்து, ருசி, 1990

நத்தர்ஷா, பெத்தமனசு, மீரான் மைதீன், கவர்னர் பெத்தா, நாகூர் ரூமி, குட்டியப்பா, ஸ்நேகா பதிப்பகம், சென்னை

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“சங்க இலக்கியப் பிரதிகள்வழி அறியலாகும் பண்டைத் தமிழ்ச் சமூக அமைப்பு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It