தமிழ்ச் சிறுகதை மரபில் பெண்ணியம், தலித்தியம் சார் படைப்பு கள் 1980க்கு பிறகு மிக வீரியமாகத் தமிழகத்தில் எழுதப்பட்டன. அதனடிப்படையில் தலித்தியம் சார்பான கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் முதலான வடிவங்களின் மூலம் தன்னுடைய சாதியத்திற்கு எதிரான நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கில் தலித் படைப்பாளிகள் படைத்து வந்துள்ளனர். இந்தச் செழுமையான மரபின் ஊடாகச் சிறுகதை மரபுசார் சில தலித் ஆளுமைகள் தமிழ்ப் படைப்பு சூழலில் அடையாளப்படுத்தப்பட்டனர். குறிப்பாக, 1980-2010 ஆண்டுகளுக்கு உட்பட்ட தலித் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிட்டவர்கள் பற்றி மட்டுமே இங்கு விவாதிக்கப்படுகின்றது. அவர்கள், அன்பாதவன், விழி.பா. இதயவேந்தன், உஞ்சைராசன், யாக்கன்... போன்றோர்.

தமிழகத்தில் படைப்புச் சூழலில் சிறுகதை வகைமைகளுள் தலித் சிறுகதை எனும் மரபு உருவாக்கம் பெற்றது. இம்மரபில் தலித் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் பண்பாட்டு அடையாளங் களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. அதனடிப் படையில் தலித் சிறுகதை மரபினை மூன்று நிலைகளில் பகுத்து கொள்ளலாம்.

-     சிறுகதை மரபில் தலித் சிறுகதை படைப்பு ஆளுமைகள்

-     தலித் படைப்பாளியின் ஆக்கங்கள் குறித்தான விவரணங்கள்

-     இன்றையச் சூழலில் தலித் சிறுகதையின் போக்குகள்

***

தமிழகத்தில் தலித், தலித்தியம் தொடர்பான படைப்பு ஆக்கங்கள் உருப்பெற்று வந்த சூழலில் சிறுகதை தொடர்பான ஆக்கங்களும் உருவாக்கம் பெற்றன. அம்மரபில் தலித் மக்களின் அன்றாட வாழ் வியல்சார் பண்பாட்டு அடையாளங்கள் தலித் படைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. இப்பதிவு மூலம் எதிர்காலத் தலைமுறைகளுக்குத் தன்னுடைய சமூகம் எத்தகைய கொடுமை களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளும் ஆவணமாகச் சிறுகதை மரபைத் தலித் படைப்பாளிகள் கையில் எடுத்துள்ளனர்.

தலித் படைப்பாளர்களால் படைக்கப்படும் புனைவு இலக்கியம் தலித் படைப்பு ஆக்கங்கள் மரபில் எத்தகைய புரிதலை முன்வைக் கிறது என்பது குறித்துப் பேரா. வீ.அரசு குறிப்பிடுகையில்,

“புனைவு இலக்கியம்(திவீநீtவீஷீஸீ) தலித் மரபில், கவிதைகளைப் போலவே புதிய மொழியில் செயல்படுகிறது. இம்மொழி இதுவரை பதிவாகவில்லை. எதார்த்தவியல்(ஸிமீணீறீவீsனீ) எனும் தன்மை உண்மையைத் தேடுவதாகும். இருப்பதைச் சொல்லுவதில்லை. தலித் மரபு என்பது உண்மையை நோக்கிய போராட்டமாகவும் அந்த உண்மையைப் புதிய மொழியில் பதிவு செய்வதாகவும் அமைகிறது. தமிழின் வளமான புனைகதை மரபு, தலித் கதை உருவாக்க மரபின் ஊடாக உருப்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் “தங்கிவிடும்“ ஆபத்தை இம்மரபு முறியடிக்க வேண்டும்.(வெட்சி; 2009: 12)”

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் தலித் மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்பான கதைகள் தமிழகத்தில் உருவாக்கம் பெற் றுள்ளன. இத்தகைய தலித் சிறுகதை மரபில் பல்வேறு பகுதி சார்ந்த எழுத்தாளர்கள் தன்னுடைய படைப்புகளில் ஒருசில கொள்கை - கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். ஆனால், பொது வாக அனைத்து எழுத்தாளர்களும் சில கருத்துகளில் ஒன்றுபடு கின்றனர்.

-     தலித் மக்களுக்கு ஆதிக்க சாதியினர் - மேல்தட்டு வர்க்கத் தினரால் ஏற்படும் வாழ்க்கைக் கொடுமைகளைப் பதிவு செய்தல்.

-     தலித் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் பண்பாட்டு அடையாளங்களும் கதைகளில் உருவாக்கம் பெறுதல்.

-     தலித் எழுத்தாளர்கள், தன்னுடைய கதைகளில் உருவாக்கப் படும் கதாபாத்திரங்கள் மற்ற சாதியினரால் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்த பதிவும் அதற்குத் தீர்வையும் கொடுத்துக் கதைகளை முடித்தல்.

மேற்குறித்த கருத்து நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழகத் தலித் எழுத்தாளர்களில் அபிமானி, அழகிய பெரியவன், அன்பாதவன், ஆதவன் தீட்சண்யா, விழி.பா. இதயவேந்தன், இமையம், உஞ்சைராசன், ஜே.பி. சாணக்யா, ப.சிவகாமி, சோ. தர்மன், பாமா, யாழன் ஆதி, யாக்கன், ஸ்ரீதர கணேசன் போன்றோர் தலித் சிறுகதை எழுத்தாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

***

தலித் எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் அன்பாதவன், விழி.பா. இதயவேந்தன், உஞ்சைராசன், யாக்கன், ஸ்ரீதர கணேசன் முதலானவர்களின் சிறுகதைகளை மட்டுமே வகைமாதிரியாக இக்கட்டுரை விவாதிக்கின்றது.

தலித் எழுத்தாளர்கள் குறித்த படைப்பு ஆக்கங்களில் அன்பாதவனின் சிறுகதைத் தொகுதிகளான தீச்சிற்பம்(2004), மும்பை சிறுகதைகள் எனும் இரண்டு படைப்பு மூலமாகச் சிறுகதை மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இரு சிறுகதை ஆக்கங்களின் மூலம் வெளிப்படும் கருத்து நிலைப்பாடு, ”அன்பாதவனின் படைப்புகளின் முக்கியத்துவம் மெய்ப்பொருள் வெளிப்பாட்டுத் தன்மையில் சமூகம் சார்ந்த விமர்சனங்கள் அமைந்த படைப்புகளுக்கே அதிக முன்னுரிமை தங்திருக்கின்றார். எடுத்துக் காட்டாக, தீச்சிற்பம் சிறுகதைத் தொகுப்பின் அநேகக் கதைகளில் அதிகாரிகளின் அதிகாரப்போக்கை (கிஸீtவீ ணிstணீதீறீவீsலீனீமீஸீt) சாடியிருக் கிறார் (வெட்சி;2009:50)”. இக்கருத்தின் மூலமாகத் தமிழ்ச் சிறுகதை மரபில் தலித் சிறுகதைகளில் அன்பதாவன் கதைகளும் இடம்ª பற்றிருப்பது கவனத்திற்குரியது.

தலித் சிறுகதை எழுத்தாளர்களில் அடுத்தது உஞ்சைராசன் ஆவார். இவர் 1975 -80 காலகட்டங்களில் தமிழ்ப் படைப்புலகத்திற்கு அடையாளம் காணப்பட்டவர். இவர் தன்னுடைய பெயருக்கு முன்னால் உஞ்சையர் விடுதி எனும் தன்னுடைய ஊரின் பெயரையும் இணைத்து எழுதியவர். இவருடைய படைப்புகள் தலித் மக்களின் பிரச்னைகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளன. இவருடைய படைப்பு ஆக்கங்களும் செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை. அதாவது, கவிதை, சிறுகதை படைப்புகளும் விவாதம், மேடைப் பேச்சு, தலித் பண்பாட்டுப் பேரவை முதலான செயல்பாடுகளும் உஞ்சைராசனின் அடையாளங்களாகும். 

உஞ்சைராசனின் கதைகளான, சாதிகெட்டவன், துணி, அடிமைக் கும் அடிமை, தனிக்கிராமம், ஆத்திரம், பழி, மறுப்பு, நெருப்பு, உறுதி, நாளும், மாநாடு, சொந்தக்கால், கோவம், போதை, எதிர்ப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை மட்டுமல்லாது “எகிறு(தலித் சிறு கதைகள் - 1996)” தொகுப்பும் அடங்கும். மேற்குறிப்பிட்ட கதைகள் சில இதழ்களில் வெளிவந்தவை. மேலும் ஒருசில கதைகள் ”எகிறு(1996)” எனும் தலைப்பில் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது.

உஞ்சை ராசனின் கதைகள் வெளிப்படுத்தும் கருத்து நிலைப்பாடு மற்ற படைப்பாளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது. அவற்றின் தன்மை என்ன? என்பது குறித்துப் பேரா. வீ. அரசு குறிப்பிடுகையில்,

“டேனியல் கதைகளின் வளர்ச்சியைத் தெளிவை உஞ்சை ராசன் கதைகளில் நாம் பார்க்க முடியும். உஞ்சை ராசன் கதைகள் உடலால், உள்ளத்தால், சுற்றுப்புறச்சூழலால் பலவகையிலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தன்னுணர்வு சார்ந்தே கோவத்தைக் காட்டுகின்றன. தலித் மக்கள் மீதான ஊகங்கள் எவ்வளவு பொய்யானவை என்பதை இவரது கதைகள் பேசுகின்றன( கவிதாசரண், செப் - அக், 1996: 91)”.

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் தலித் எழுத்தாளராக அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட உஞ்சை ராசன் தலித் மக்களின் வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளின் பதிவாகவும் அவற்றிற்கு எதிரான குரலாகவும் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் என்றே குறிப்பிடலாம்.

தலித் எழுத்தாளர்களாக இனங்காணப்பட்ட விழி.பா. இதய வேந்தன், யாக்கன் இருவரும் சிறுகதை மரபில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, விழி.பா.இதயவேந்தன் 1991களுக்குப் பிறகு அதிக அளவில் சிறுகதைகளை எழுதியுள்ளார். அத்தகைய கதைகள் தொகுக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அத்தொகுதிகளின் விவரணங்கள் இணைப் பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு முற்றி லும் மாறாக, யாக்கன் இதழ்களில் மட்டுமே கதைகளை எழுதி யுள்ளார். அவை அந்தந்தக் காலச்சூழலில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிரான பதிவாகவும் அவற்றிற்கான தீர்வாகவும் எழுதப்பட்டவையாகும்.

ஸ்ரீதரகணேசன் தலித் சிறுகதை மரபில் குறிப்பிடத்தக்கவர். இவருடைய கதையின் கரு குறித்துக் குறிப்பிடுகையில்,

“நான் கதைக்காக எங்கும் அலைந்ததேயில்லை. கதை என்னை வந்தடைகிறது” என்று பெருமிதப்படுபவர் கணேசன். இவரது அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக ஆராயும் போது இரண்டு பிரிவுகளுக்குள் அவை அடங்குகின்றன. ஒன்று ஒரு ஆலைத் தொழிலாளியாய் கம்யூனிஸ்ட் இயக்கம் சார் கண்ணோட்டத்துடன் இலக்கியத்தைக் கையில் எடுத்த நிலையில் சில கதைகள் மற்றது தொழிலாளி என்பதைவிட தான் ஒரு தலித் என்ற அடையாளத்தை முனைத்து சாதியரீதியிலான பதிவுகளைக் கொண்டைவை சில. அதனதன் தாக்கம் மிகையாக இருந்தனவேயன்றி அனைத்துக் கதைகளிலும் வர்க்கமும் சாதியமும் இணைந்தே இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை (வெட்சி,2009,254).

ஸ்ரீதரகணேசனின் கதைகளில் வெளிப்படும் கருத்துகளை பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

தலித்துகளின் போராட்டங்கள், தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு, சாதி அடிப்படையில் தனித்தனி தெருக்கள், தலித் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சாதிய வர்க்கப் போராட்டம், சாதிய இந்துகள் தலித்துக்கு ஏற்படுத்தும் கொடுமைகள் மட்டுமல் லாது தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் கதைப் பொருண்மைகள் அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் ஸ்ரீதரகணேசன் தலித் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். அதுமட்டுமல்லாது படைப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

***

தலித் சிறுகதை உருவாக்க மரபில் 1980 -2010 காலகட்டத்தில் தமிழ்ச் சிறுதை மரபில் தலித் எழுத்தாளர்களாக அடையாளப்படுத்தப் பட்டவர்களில் ஒருசில எழுத்தாளர்களை மட்டுமே இக்கட்டுரை விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளது. இவர்களில் தலித் மக்களின் பிரச்சினைகள், சாதிய விடுதலைப் போராட்டங்கள், பண்பாட்டு அடையாளங்கள், பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் எனும் கருத்து நிலைப்பாட்டின் அடிப்படையிலே சிறுகதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம், கதை - கதாபாத்திரம் - கதையின் கரு - மொழிநடை - அன்றைய நிகழ்வுகள் முதலானவை.

தமிழகத் தலித் சிறுகதை மரபில் எழுத்தாளராக இனங்காணப் பட்டவர்கள் கதை மட்டுமல்லாது கவிதை, நாவல்,கட்டுரைகள் (தலித்திய சிந்தனைகளை முன்வைத்து) எழுதி வருகின்றனர். மேற் குறிப்பிட்ட படைப்புகளில் சிறுகதை மரபு மிகுந்த கவனத் திற்குரியது. அதாவது, தன்னுடைய கருத்து - கற்பனைக்கு ஏற்பச் சமூகத்திற்கு அறிவிக்கும் சிந்தனையைத் தன்னுடைய எழுத்துகளின் மூலமாக வெளிப்படுத்துதல் என்கிற போக்கே இன்றைய சூழலில் காணப்படுகின்றது.

தமிழ்ச் சிறுகதை மரபில் வட்டாரம், பெண்ணியம் எனும் பொருண்மைசார் கதை மரபில் தலித் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகளைத் தலித்தியம் தொடர்பான கதை மரபில் இணைத்தே குறிப்பிடலாம். இம்மரபில் தலித் மக்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாது வரலாற்றின் ஆவணங் களாகக் கதைகளும் எழுத்தாளர்களும் திகழ்கின்றனர் என்றே குறிப்பிட வேண்டும்.

***

பார்வை நூல்

2009 - வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - பரிசல் வெளியீடு, சென்னை.

தலித் எழுத்தாளர்களின் சிறுகதை ஆக்கங்கள்

அன்பாதவன்

தீச்சிற்பம்(2004), மும்பை சிறுகதைகள்

விழி.பா. இதயவேந்தன்

நந்தனார் தெரு (1991), வதைபடும் வாழ்வு (1994), தாய்மண்(1996), சிநேகிதன் (1999), உயிரிழை (2000), அம்மாவின் நிழல்(2001), தலித் சிறுகதைகள்(தொகுப்பு நூல் (2002), இருள் தீ(2003), மலரினும் மெல்லிது (2004), அப்பாவின் புகைப்படம் (2006), புதைந்து எழும் சுவடுகள்(2007) (வெட்சி; 2009:68)

உஞ்சை ராசன்

சாதிகெட்டவன், துணி, அடிமைக்கும் அடிமை, தனிக்கிராமம், ஆத்திரம், பழி, மறுப்பு, நெருப்பு, உறுதி, நாளும், மாநாடு, சொந்தக் கால், கோவம். போதை, எதிர்ப்பு, எகிறு(தலித் சிறுகதைகள், 1996)

யாக்கன்

குருத்துவேலி (தலித் முரசு, பிப்ரவரி 2004), இருளில் முளைத்த மிருகம், முற்றுகை, காலாண்டிதழ்(சூலை - அக்டோபர் 2008), கலகத்தின் சினைகள் (முற்றுகை, காலாண்டிதழ்23, 2009)

குறிப்பு

இக்கட்டுரை வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் (2009) தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ் அற இலக்கியப் பதிப்பு வரலாறு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It