"நாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்?" என்னும் கட்டுரை அவதூறானது. எந்தவிதமான புள்ளிவிபரமும் இல்லை. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகாசி பகுதிகளில் நாடார் முஸ்லீம் தகராறு மதரீதியாக எவ்வளவு நடந்துள்ளது என்ற புள்ளிவிபரம் தர கட்டுரையாளரால் முடியுமா? பாஜக-வுக்கு நிதி கொடுக்கிற நாடார்கள் பற்றிய புள்ளி விபரங்கள் உண்டா? நாடார்களிடம் திமுகவும் அதிமுகவும் நிதிகள் பெற்றதேயில்லையா? நாடார்களிடம் நிதி வாங்கித்தான் பாஜக தமிழ்நாட்டில் உயிர் வாழ்கிறதா?

சாதாரண பெட்டிக்கடை வைத்திருக்கிற நாடார்களைக்கூட சரவணா ஸ்டோர்ஸ் ரேஞ்சுக்கு இழுத்து விட்டிருக்கிறார் கட்டுரையாளர். கீற்றுக்கு ஆசிரியர் குழு கிடையாதா? தணிக்கை கிடையாதா? இப்படி ஒரு அவதூறு கட்டுரையை எப்படி வெளியிடலாம்? பொன்.இராதாகிருஷ்ணன், தமிழிசை இவர்கள்தான் ஒட்டுமொத்த நாடாருக்கும் பிரதிநிதியா? மிகவும் வருத்தப்படத்தக்க செய்திகள் பல இருக்கின்றன. நாடார் மித்திரன் பத்திரிகை பற்றித் தெரியுமா? 40, 50 ஆண்டுகளாகத்தான் நாடார்கள் முன்னேறிவிடார்கள் என்ற கூற்று எவ்வளவு மடத்தனமானது என்பது கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்கலாம். கீற்றுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? நாடார் மித்திரன் பத்திரிக்கை இணையத்தில் கிடைக்கிறது. 1920 -ல் வெளிவந்தது. பெரியாருடனான பேட்டிகூட ஒன்று அதில் உள்ளது.

பர்மா, இலங்கை என எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருந்ததோ அங்கெல்லாம் போய் கஷ்டப்பட்டு வேலைசெய்து, நல்ல பெயர் வாங்கி சம்பாதித்த இனம் அது. ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் இனமல்ல. வியாபாரம் செய்வது, கடைவைத்துச் சம்பாதிப்பது அத்தனை எளிதான வேலையா? ஊர் உறங்கும்போது விழித்திருந்து, தூக்கம் தொலைத்து, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சம்பாதித்த இனம் அது. நல்ல தூக்கம், நல்ல உடை, நல்ல உணவு உண்டது இல்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற இனம் அது. மண்டைக்காடு கலவரம் பற்றி கள ஆய்வு செய்யச் சொல்லுங்கள் கட்டுரையாளரை; அல்லாவிட்டால் சும்மா இருக்கச் சொல்லுங்கள். கீற்றுக்கும் இந்த அவதூறில் பங்குண்டா?

ஏதோ காமராஜரால்தான் நாடார் இனம் முன்னேறிவிட்டது என்பதன் மறைமுகக் குறிப்புதான் 40, 50 ஆண்டுகளில் நாடார்கள் முன்னேறிவிட்டார்கள் என்ற கூற்று. காமராஜர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தட்சண மாற நாடார் சங்கம் வலுவாக இருந்தது; பல பள்ளிக்கூடங்கள் நாடார் சங்கம் பெயரில் இருந்தன. சௌந்தரபாண்டியன் நாடாரைப் படிக்க வைத்ததே காமராஜர் என்று நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள் போல இருக்கிறது. ஆதித்தனார் குடும்பமும், தினத்தந்தியும் காமராஜரின் ஆசீர்வாதத்தால்தான் வெளியாயினவா? தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், காமராஜர் நாடார்களுக்காகக் கட்டிகொடுத்த அல்லது அனுமதி கொடுத்த பள்ளியில் படித்தாரா? நாடார் சங்கப் பள்ளிகளெல்லாம் தமிழகத்து நிதியைக் கொண்டு காமராஜர் கட்டிக் கொடுத்தவையா? தெ.பொ.மீ.யும், ம.பொ.சி.யும் கூட காமராஜர் வளர்த்துவிட்டவர்கள்தாமா?

வியாபாரத்தை நம்பி வாழுகிற ஓர் இனம் எப்படி அரசியலில் கவனம் செலுத்தும்? சுதந்திரத்திற்குப்பிறகு எல்லாரும்தான் முன்னேறிவிட்டார்கள். நாடார்களும் சுதந்திர இந்தியாவில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவதூறு கிளப்ப என்ன இருக்கிறது? இது பொறாமையின் வெளிப்பாடு. முஸ்லீம் - நாடார் இனக்கலவரங்களின் பட்டியலை நீங்கள் கட்டுரையாளரைக் கொண்டு வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாத கட்டுரையை ஏன் நீங்கள் வெளியிட வேண்டும்? கீற்றுக்கு தார்மீகப் பொறுப்பும் கடமையும் இல்லையா? அல்லது கீற்று ஒரு சார்பானதாகத்தான் வெளியிடுமா? தனிப்பட்ட நபர்கள் மீதான விமர்சனத்தை ஓர் இனத்தின் மீது திணிக்கலாமா? வாழவே தகுதியற்ற தேரிக்காடுகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயிர்செய்து முன்னேறிய இனம் நாடார் இனம். தென் பகுதியில் நாடார்கள் வாழும் பகுதிகளைப் போய்ப் பாருங்கள். கால்டுவெல் வாழ்ந்த இடையன்குடி ஊருக்கு நீங்கள் சென்றதுண்டா? போய்ப் பாருங்கள் பகுத்தறிவாளர்களே! அங்கே போய் ஒருவாரம் தங்கிவிட்டு வந்து பேசுங்கள். உங்கள் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நானும் திருநெல்வேலிக்காரன்தான். எங்கள் ஊரிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாடார்களுக்குப் போட்டியாக எங்கும் எனக்குத் தெரிந்து இல்லை. அவர்கள் தொழில் வேறு, நாடார்கள் தொழில் வேறு. இது வரை எங்கள் பகுதியில் நாடார் முஸ்லிம் இனக்கலவரம் நடந்ததில்லை. எனக்கு கட்டுரையாளர் குறிப்பிடும் 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கோ நடந்த ஒரு கலவரத்தைக் காட்டி, ஒட்டுமொத்த நாடார்களையும் பழிகூறும் வன்மம் எங்கிருந்து வந்தது? இதே கட்டுரையை இன்னொரு சாதியைப் பற்றி எழுத கட்டுரையாளரால் முடியுமா? நாடார்களும் மார்வாடியும் ஒன்றும் சண்டைக்கு வரமாட்டார்கள் என்ற மெத்தனம்தானே.

தென்பகுதியிலே காணப்படுகின்ற, கிடைக்கின்ற ஓலைச்சுவடிகளில் பெரும்பான்மையானவை நாடார்களால் எழுதப்பட்டவை. நீங்கள் குறிப்பிடுகிற மிகவும் கீழ்நிலையிலிருந்த நாடார்களால் எழுதப்பட்டவை; வில்லுப்பாட்டு போன்ற நிகழ்த்துகலைகள் மூலம் நிகழ்த்தப்பட்டவை. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் மருத்துவச்சுவடிகள் அவர்களால் எழுதப்பட்டவை; அங்கே காணப்படும் சித்த மருத்துவமனைகள் அவர்களால் காலங்காலமாக நடத்தப்படுபவை. களரி பைட்டு தெரியுமா? கத்திச் சண்டை தெரியுமா? இவை கன்னியாகுமரி மற்றும் கேரளத்தோடு தொடர்புள்ளவை; நாடார்களோடும்தான். "ஆசான்" என்ற சொல்லாடலின் பொருள் தெரியுமா?

நீங்கள் நினைக்கிறமாதிரி அது அடங்கிக் கிடந்த இனமல்ல, அடக்கி வைக்கப்பட்ட இனம். காட்டிக்கொடுப்பவர்களாலும் கூட்டிக்கொடுப்பவர்களாலும் கோள்சொல்லி அரசின் உதவியோடு அடக்கி வைக்கப்பட்ட இனம்.

உங்கள் கட்டுரையாளரை நாடார்களிடம் களஆய்வு செய்யச் சொல்லுங்கள். இராஜ உபசாரம் உங்களுக்கு நாங்கள் தரமாட்டோம். முள்ளுமீன் குழம்போ, கருவாடோ வறுத்து ஐ.ஆர்.8 அரிசிச் சாப்பாடு தருவார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்ததை தின்று தீர்க்கிற குணம் அவர்களுக்குக் கிடையாது. அதனால் அரசியலுக்கு அவர்கள் வரமாட்டார்கள்; கோடிகோடியாகக் கொட்டிக் கொடுக்க மாட்டார்கள்; கோடி கோடியாக கொள்ளையும் அடிக்க மாட்டார்கள்.

அது சரி, பட்டணத்திலே உங்கள் தெருவிலே அல்லது கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிச்சயம் ஒரு நாடார் கடை இருக்கும். அங்கே நீங்கள் பொருட்கள் வாங்கியிருப்பீர்கள். மற்ற கடைகளைவிட ஒரு ரூபாய் குறைத்தே பொருட்களை அவர் உங்களிடம் விற்றிருப்பார். அவரை எப்படி ஒரு கொள்ளைக்கூட்டம் போல சித்தரிக்க உங்களால் முடிந்தது? மோடியின் சமீபத்திய 'டிமானிடைசேசனால்' மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நாடார்களின் சிறுவியாபாரிகளும் கடைக்காரர்களும்தான். அவர்கள் என்றாவது பாஜக வுக்கு நிதி கொடுத்துப் பார்த்திருக்கிறீர்களா?

பகுத்தறிவு பேசி, கொஞ்சம் கூட பகுத்தறிவே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு ஜாதியை இழிவு செய்யும் பகுத்தறிவை உங்களுக்குப் போதித்தது யார்? அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

- இராஜரெத்தினம்

Pin It