“எழுத்தை விட வாழ்க்கை நுட்பமானதாகவும், புதிர்கள், எதிர் பாராத திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் முன் எழுத்து பாவம் போல நிற்கிறது” என்று கூறும் ச. தமிழ்ச் செல்வனின் 32 சிறுகதைகளடங்கிய முழுத்தொகுப்பை பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 80களில் தொடங்கிய இவரின் எழுத்துப்பயணம் படைப்பிலக்கியத்தில் காலூன்றி, பண்பாட்டு வெளியில் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கவிதைகளில் மிகுந்த நாட்டமுள்ளவர், சிறுகதைக் களத்தைத் தேர்ந்துகொண்டு யதார்த்ததளத்தில் இயல்பான மொழி, பிரச்சாரமற்ற தன்மை, சிறுகதைக்குரிய சாதுர்யம் கொண்டு இயங்கினார் என்றுதான் ச.த.வின் படைப்புகளைக் குறித்து பொதுவான கருத்தை முன்வைக்க இயலும்.

வெயிலோடு போய், வாளின் தனிமை என்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்தபின் 80களின் நம்பிக்கைக்குரிய படைப்பாளியாக வலம் வந்தவர். இயக்கம் அமைப்பு எனத் தீவிரம் செலுத்தி படைப்பிலக்கியத்தைக் கைவிட்டது அல்லது அவ்வாறு செய்ய நேர்ந்தது எதிர்பாராததும் எவரும் செய்யத்துணியாததுமே. முப்பது சிறுகதைகளுக்கு மேல் எழுதித் தன்னை இலக்கிய வட்டத்தில் ஸ்திரப்படுத்திக்கொண்ட எந்த எழுத்தாளரும் அதைத் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார். அதுதான் நியாயமாகவும் இருக்க முடியும்.

எழுதத் தொடங்கும் போதான மனநிலை ஒருவித எதிர்பார்ப்புகள் சூழ்ந்தது. இதில் படைப்பாளியின் ஆத்மார்த்த உணர்வுகளும் கனவுகளும்கூட அடக்கம். ஒரு எழுத்து முதல்கட்ட அங்கீகாரம் பெற்றபின் அந்த எழுத்து கலைஞனின் மீது வாசகர்களின் ஒட்டுமொத்த கவனமும், எதிர்பார்ப்புகளும் குவிகிறது. அதற்கேற்ப தன் படைப்புலகின் உன்னதங்களை புதிர்களை ரகசியங்களை வலிகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டியது கலைஞனின் தார்மீகக் கடமை.

தமிழ்ச்செல்வன் தனது முப்பதுக்கும் அதிகமான கதைகளின் ஊடாக கரிசல் மண்ணையும் வறுமைப் பிடிக்குள்ளகப்பட்ட விதம் விதமான ஆண் பெண்களையும் சின்னஞ்சிறுவர்களின் ஆசை அபிலாஷைகளையும் காதல்வயப்பட்ட உள்ளங்களின் தகிப்பையும் தவிப்பையும் உறவின் விரிசல்களையும் கலாபூர்வமாகச் சித்தரித்தவர். பாசாங்கற்ற இயல்பான மொழிநடையில் வாசகனை நோக்கி மழைபோல நேரடியாகப் பொழியும் ச.த.வின் கதைகள், உரையாடல் எளிமையையும் கூர்மையான அங்கதத்தையும் தன்னளவில் கொண்டவை.

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திக்கொண்டதன் ரகசியத்தை எவ்வளவு முயன்றும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வளமான இலக்கியப் பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்; இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் எழுத்தாளர்களைச் சந்திப்பதையுமே வாடிக்கையான செயல்பாடுகளாகக் கொண்டவர்; இலக்கியச் சூழலில் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து எதிர்வினையாற்றி வருபவர்; தொடர்ந்து படைப்பிலக்கியச் சூழலில் இயங்காமல் போனதை நான் துரதிருஷ்டவசமானது என்றே கூறுவேன்.

எழுதுகிற கட்டுரைகளில், முன்னுரைகளில் தன்னைக் குறித்த சுயவிமர்சனத்தையும் செய்துகொள்வது தமிழ்ச்செல்வனின் இயல்பு. இது எல்லா எழுத்தாளர்களிடமும் இல்லாத பண்பு. ஒரு சிறிய முன்னுரை ஒன்றில் தனது கதைகளைக் குறித்து இவ்வாறு அவர் எழுதுகிறார்.

”என் முதல் தொகுப்பை வாசித்து விட்டு சில நண்பர்கள் எழுத்து என்பது வாழ்க்கைக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமா என்று பாராட்டினார்கள். அப்போது அதுபோதை தந்தது. 27 வருடங்களுக்குப் பிறகு அதே கதைகளை இப்போது நான் வாசிக்கும்போது என் கிராமத்தின் ஆன்மா என் கதைகளில் இல்லாததை உணர்கிறேன். அழுத்தம் பெறாத கதைகளாக சின்னவயதில் எழுத்தாளனாகிற ஆசையில் வேகவேகமாக எழுதிப் பார்த்த கதைகளாகவே இவை என் முன்னால் விரிந்து கிடக்கின்றன. அதிருப்தியில் முகம் சுளிக்கிறேன். மொத்தமாவு இவ்வளவு தான். இதைத்தான் மாற்றி மாற்றிச் சுட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என்கிற வருத்தம் இருக்கிறது.” இப்படியெல்லாம் கூட ஒரு எழுத்தாளர் தன்னைக் குறித்து சுயவிமர்சனம் செய்துகொள்ள முடியுமா? இங்குள்ள எத்தனை பேருக்கு இந்த தைரியம் இருக்கிறது... தெரியவில்லை. காதலியின் நினைவுகளில் பித்தேறிய காதலன் ஒருவன் தன்னைத்தானே சுயவதம் செய்துகொள்கிற மாதிரி இது அதீதமாக இருக்கிறதே என்று நான் அவருடைய இந்த முன்னுரையை வாசித்து அதிர்ந்து போயிருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த முன்னுரையை வாசித்தபிறகு என்னால் ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடிந்தது. இது ச.த.வின் எழுத்தைக் குறித்த அவரின் சுய மதிப்பீடாக இருக்க வாய்ப்பில்லை. இடையறாது எழுத்தை நேசிக்கும் ஒரு எழுத்துக் கலைஞன் இத்தனை காலம் நம்மால் எழுத முடியாமல் போனதே என்னும் குற்றவுணர்வுக்குள்ளாகையில் நிகழும் யதார்த்தமே தவிர வேறில்லை என்பது தான் அது.

35க்கும் அதிகமான நாவல்கள், நூற்றுக்கணக்கிலான சிறுகதைகள், நிறைய குறுநாவல்கள் எழுதிய ஜெயகாந்தன் எழுத்தை நிறுத்திக் கொண்டது குறித்து...” அவர் எழுதியபோது “கலைஞன், எழுதாதபோது மேலும் கலைஞன்” என்பார் சுந்தரராமசாமி. இதை தமிழ்ச் செல்வனின் நிலையுடன் ஒப்பிட்டுக் காண இயலாதெனினும் தமிழ்ச்செல்வன் கதைகளைக் குறித்த சுந்தர ராமசாமியின் ஒரு மதிப்பீட்டை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.

“எடுத்துக்கொண்டிருக்கும் அனுபவங்கள்மேல் இருவக்கு இருக்கும் பிடிப்பு, அந்த உலகங்களை எழுப்ப அவற்றில் கொள்ளவேண்டிய தேர்வுகளின் சூட்சமங்கள், கொல்லத்தெரியும் கலை, அதைவிடப் பெரிதான சொல்லாமல் விடத்தெரியும் கலை ஆகியவை இவருக்கு மிக நன்றாகக் கைவந்திருக்கின்றன. திறந்த மனத்துடன் இவர் அனுபவங்களை எதிர்கொள்வதும் ஜீவன்களின் பரிதவிப்பில் இவர்கொள்ளும் நெகிழ்வும், ஒவ்வொரு கதையிலும், கலைப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன”. தமிழ்ச்செல்வனின் கதைகளை வாசித்து அவரை ஒரு மிகச் சிறந்த கதைசொல்லி என மதிக்கத் தெரிந்த எனக்கு அவருடைய கதைகளைக் குறித்த பிறரின் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்கிற வாய்ப்பு போதுமான அளவு கிடைக்கவில்லை. ஏனெனில் 80களின் எழுத்தாளர்களை இடைவிடாமல் பேசுகின்ற நிலை இன்றைய சிற்றிதழ்ச் சூழலில் இல்லை. முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களைத் தொடர்ந்து பேசிவரும் நாம் நமக்கு சற்று முந்தைய தலைமுறைகளை மனம் திறந்து பேசத் தயக்கம் காட்டுகிறோம்.

மௌனிக்கு என்றிருக்கும் 20 கதைகள் தான் அவரை ‘சிறுகதையின் திருமூலர்’ ஆக்கியுள்ளது என்கிறார்கள். மௌனியும் கூட “இந்த என் இருபது கதைகளைப் படித்துப் புரிந்துகொள்ள நூற்றாண்டுகள் பிடிக்கும்” என்றார். தமிழ்ச்செல்வனுக்கு இந்தக் கூற்றுகளிலெல்லாம் உடன்பாடு இருக்க முடியாது. ஒருமுறை அவருடனான உரையாடலின்போது சமகாலத்தில் எழுதப்படும் சிறுகதைகளைக் குறித்து தனது திருப்தியின்மையைக் குறிப்பிட்டார். தமுஎகச-வின் மாநில மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டிய இலக்கிய அறிக்கைக்காக அவர் எல்லா சிறுபத்திரிகைகளையும் புரட்டி சிறுகதைகளாகத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்த நேரம் அது. “எல்லாக் கதைகளையும் படித்துப் பார்க்கையில் பாலியல் விஷயங்கள்தான் தூக்கலாக இருக்குதப்பா...” என்றார். இது சமகாலக் கதைகளைக் குறித்த அவரின் முழுமையான மதிப்பீடு அல்ல என்றாலும் இதில் உண்மை இல்லாமலும் இல்லை என்றே எனக்குத் தோன்றியது.

தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு மாறிவிட்டது என்கிறார்கள். வாஸ்தவம்தான். முக்கியமான சிறுபத்திரிகைகள் எனக் கருதப்படுவனவற்றில் வெளிவருகின்ற கதைகளைப் படிக்கையில் இது புலப்படுகிறது. ஆனால் சுந்தரராமசாமியின் உழைப்பு, வண்ண நிலவனின் தீவிரம், பிரபஞ்சனின் கச்சிதம், வண்ணதாசனின் லயிப்பு, நாஞ்சில்நாடனின் அங்கதம் என எதுவுமே இல்லையோ என்றும்தோன்றுகிறது. அவர்களிடமில்லாத பிற அம்சங்கள் இவர்களிடத்தில் இருக்கிற மாதிரியும் படுகிறது. தமிழ்ச்செல்வன் என்றில்லை; 80களில் அடையாளம் பெற்ற எல்லா படைப்பாளிகளுக்கும் இந்தத் தயக்கம் இல்லாமல் இல்லை. அவர்களிடமிருந்து படைப்புகளுக்குப் பதிலாக எழும் நீண்ட மௌனத்துக்கு இதுதான் காரணமாகவும் இருக்கமுடியும்.

இனி தமிழ்ச்செல்வன் கதைகளைக் குறித்துப் பார்ப்போம். எனது கிராமத்தின் ஆன்மா என் கதைகளில் இல்லாததை உணர்கிறேன். என்கிற தமிழ்ச்செல்வனின் சுயமதிப்பீட்டிலிருந்து தொடங்கலாம் என்று கருதுகிறேன். ஆனால் ‘பாவனைகள்’ என்னும் முதல் கதையிலேயே அவர் கிராமத்தின் ஆன்மாவை வாசகனுக்குத் தரிசிக்கத் தருவதாக உணர்கிறேன். தீப்பெட்டி ஆபீஸிலிருந்து தீப்பெட்டிக் கட்டுகள் வாங்கிவந்து ஒட்டி அதன் வருவாயில் ஜீவனம் நடத்தும் ஒரு வறிய குடும்பம். அம்மா தீப்பெட்டி ஆபிசுக்குப் போய் கட்டுகளை வாங்கிக்கொண்டு வந்து சேருவாள். அம்மா வருவதற்கு முன்னதாக பிள்ளைகளுக்குப் பசி எடுத்திருக்கும். தம்பிக்காரன் அழத்தொடங்க அண்ணன் டின்னில் துழாவி கொஞ்சமாய்க் கிடக்கும் அரிசியில் ஒரு கை அள்ளி தம்பியின் வாயில் போட்டு ”இதத் தின்னுகிட்டே சித்த நெரம் வெளாடிட்டு வா. அதுக்குள்ளே அம்மா வந்துருவா...” என்று சமாதானப்படுத்துவான். மனதில் “ராக்கட்டு ஒட்டும் பரபரப்பிருக்கும். ரா வேலைக்குப் போகும் அப்பாவுக்கோ குளிக்கக்கூட நேரமிருக்காது. “ என்னடி இன்னும் சோறாக்கலையா” என்று மனைவியை விரட்டுவார். “வடிச்சிர்றேன்” என்கிற மனைவியிடம் “சோத்தப் பொங்கி பயகிட்ட குடுத்துவிடு” என உத்தரவிட்டு வெளியேறுவார்.

 அய்யா வேலை பார்க்கிற ஆயில் மில்லுக்குப் போவதென்றால் மூத்தவனுக்கு உற்சாகம். அய்யா எடுத்துக் கொடுக்கும் கடலைப் புண்ணாக்கு அல்லது எள்ளுப் புண்ணாக்கை வாயில் குதப்பிக்கொண்டு ஜாலியாக தூக்கு வாளிக்குள்ளே தம்பிக்காகவும் கொஞ்சம் புண்ணாக்கை ஒளித்துக்கொண்டு வரலாம் என்கிற நினைப்பு அம்மா சோறாக்கிக் கொண்டிருக்கையில் ‘டைண்டைண்’ என்ற மணிச்சத்தம் மிக்சர் வண்டியிலிருந்து கேட்கிறது. அண்ணன் காரன் டவுசரைக் கையில் பிடித்துக்கொண்டு தெருவுக்கு வேகமாக ஓடுகிறான். அதே தெருவைச் சேர்ந்த இவனைப் போன்ற அனேகம் சிறுவர்கள் அரைகுறை ஆடையுடனும் அம்மணமாயும் வந்து சேருகின்றனர். ‘ஹைய்ய்’ என்கிற கூப்பாடு வண்டியை வரவேற்று தெருக்கோடிவரை சென்று வழியனுப்புவது அவர்களின் வாடிக்கை. இவர்களால் அந்த வண்டியிலுள்ள பலகாரங்களைப் பார்த்து கற்பனையில் திளைக்க மட்டுமே முடியும். நிஜத்தில் அதை வாங்கிப் புசிக்கும் தகுதியற்றவர்கள். சிறுவர்களில் ஒருவன் வண்டியிலிருக் கும் லட்டுக்கு நேராகக் கையை நீட்டி ஒன்றை எடுப்பது போல பாவித்து வாயைப் பெரிதாகத் திறந்து லட்டை உள்ளே திணப்பது போலக் காட்டி ”ஞ்......ஞ்ம்.... ஞ்ஞ்ம்...ஞ்ம்....” என்று சத்தமிட்டு மெல்லுவதாக அபிநயிக்கிறான். அவனைப் போலவே எல்லாச் சிறுவர்களும் வெறும் வாயை மெல்லுகின்றனர். இப்போது லட்டை மெல்லுவதாகக் கற்பனையில் திளைத்தவனின் குட்டித் தம்பி வண்டியிலுள்ள பலகாரத்தை நோக்கி கையை உயர்த்தி நீட்டி எல்லோரையும் போல செய்ய முயற்சிக்கிறான். இந்த இடைவெளி யில் மற்றொரு சிறுவன் எம்பிக் குதித்து

 லட்டைப் பிடிக்க முயற்சிக்கிறான். அவசரத்தில் கண்ணாடியில் கை பலமாய்ப்பட்டு ‘டப்’ என்று சத்தம் கேட்கிறது. சிறுவர்கள் தெறித்து ஓடுகின்றனர். குட்டித் தம்பி மட்டும் அகப்பட்டுக் கொள்கிறான். வண்டிக்காரன் குட்டித் தம்பியின் காதைப் பிடித்து திருகுகிறான். அண்ணன்காரன் வந்து தம்பியை விடுவித்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அழுகை. அம்மா சமாதானம் சொல்கிறாள். “நாளைக்கி அய்யாகிட்ட சொல்லி அல்வா வாங்கித் திம்போம்” என்கிறாள். அல்வா என்றதும் அழுகை நிற்கிறது. வண்டிக்காரன் நினைப்பு வந்து மீண்டும் அழுகிறான். “அழாதடா... அய்யாவுக்கு சோறு கொண்டுட்டுப் போவம்ல, அப்ப உனக்கு திங்க எள்ளுப் புண்ணாக்கு கொண்டாரேன்” என்று அண்ணன் சொல்கிறான். அல்வாவை நம்புவதைவிட புண்ணாக்கை நம்பலாம். இது நிச்சயம் கிடைக்கும். அண்ணனால் இதைக் கொண்டு வரமுடியும் என்று யதார்த்தத்தை உணர்ந்தவனாகத் தம்பி அழுகையை நிறுத்துகிறான்.

வறுமை உருவாக்கும் கோரச் சித்திரத்தை இதைவிடவும் வலிமையாக ஒரு எழுத்துக் கலைஞனால் வரைந்து காட்ட இயலுமா என்பது என் கேள்வி. இது ஒரு உலகத்தரமான கதை என்பதும் என் வாசக அபிப்பிராயம்.

தீப்பெட்டி ஆபிசுக்குள் நிகழும் ‘அசோக வனங்கள்’ கதையில் தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் மீதான வன்முறையும் வசைகளும் தமிழ்ச்செல்வனால் உளவியல் ரீதியாக அணுகப்பட்டுள்ளது.

‘வெயிலோடு போய்’ ச.த.வை தமிழ்ச் சூழலில் வலுவாக அடையாளப்படுத்திய கதை. அன்பின் இழப்பையும் ஏமாற்றத்தையும் அது கிளர்த்துகின்ற வலியையும் அழுத்தமாகப் பேசிய கதை. திரைப்படமாகவும் வெளியாகி வெற்றி கண்டது.

‘கருப்பாசாமியின் அய்யா’ கிராமத்து யதார்த்தத்தை அதேமொழியில் பேசிப்பார்த்த படைப்பு. கருப்பசாமி கருப்பசாமியின் அய்யா, காளியம்மா என மூன்று கதாபாத்திரங்களின் வழியே தமிழ்ச்செல்வன் சித்திரித்துக் காட்டுகின்ற உலகம் வினோதமானது. கருப்பசாமியின் அய்யாவைப் போன்ற வேடிக்கை கலந்த மனிதம்தான் வாழ்க்கையை இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் சுவாரசியமாகவே எதிர்கொள்ளவைக்கிறது. தீப்பெட்டி ஆபீஸைக் களமாய்க் கொண்டு மேலும் விரிகின்ற கதைகளாக ‘அப்பாவின் பிள்ளை’, ‘சுப்புத்தாய்’ போன்றவை அமைகின்றன.

‘வாளின் தனிமை’யைக் குறித்து நான் ஏற்கெனவே தாமரை இதழில் எழுதியிருக்கிறேன். இந்தக் கதையை மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு எடுத்துக்கொள்ளும் நேரங்களில் நாங்கள் எங்கள் கிராமத்தில் விற்றுப் புசித்த எங்கள் பரம்பரை வீடும், அங்கிருந்த பாரம்பரியப் பெருமையுள்ள பொருட்களும் ஞாபகத்தில் வந்து போவதைத் தவிரக்க முடியவில்லை. வாளின் தனிமையில், வாள் சுப்பையாவுடன் பேசுகிறது. அவரைக் கோபிக்கிறது. எள்ளி நகையாடுகிறது. மேஜிகல் ரியலிச உத்தியை துருத்தாமல் பிரயோகித்துப் பார்த்த தமிழ்ச் சிறுகதை என்று இதைக் கூறுவேன். ”சின்ன பிள்ளைக்கு அழகு விளையாடறது, அய்யாவுக்கு அழகு கம்பெடுத்து காட்டுக்கு காவலுக்குப் போறது, அப்பத்தாளுக்கு அழகு கதை சொல்றது, வாளுக்கு அழகு நியாயத்துக்கான சண்டையில் ஒரு வீரன் கையில் சுழல்றது, உனக்கு அழகு இப்படி பஸ்ஸில் எச்சில் வழியத் தூங்கறது” ஒரு சிறுகதையில் உரையாடல்கள் அமைக்கும் பாங்கிற்கு உதாரணமாகத் தமிழ்ச்செல்வனின் பல கதைகளை இவ்வாறு அடையாளப்படுத்தலாம். “இப்படி வாளையே பாத்துக்கிட்டிருந்தா அடுப்பில உலை கொதிக்காது” என்கிறாள் மனைவி. “யோவ் விளக்கெண்ண! பரம்பரை மயிரு மட்டைனுக்கிட்டுப் ப்பளிக் ஆயுதம் வச்சிருக்கிறது சட்டப்படி குற்றம் தெரியுமா? என்கிறார் ஏட்டையா. விடாபிடியாக அந்த வாளுடன் வாழ்கிறார் சுப்பையா.

இதுபோன்ற கதைகளில் தமிழ்ச்செல்வன் கிராமத்து ஆன்மாவாக இயங்கி வாசர்களுடன் உரையாடுவதாகவே உணர்கிறேன். என்னளவில் அவர் ஒரு ‘தெக்கத்தி ஆத்மா’வாகவே வெளிப்படுகிறார். எனவே அவரின் சுயமதிப்பீடு ஒருவித உணர்ச்சி வேகத்தில் எழுந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘பதிமூணில் ஒண்ணு’ என்றொரு கதை நம்முடைய தமிழ்நாட்டு கிராமப்புறச் சிறுவர்களின் ஒட்டுமொத்த மன உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஊடாக இன்றைய கல்விமுறை அவலங்களைக் கூர்மையாகப் பகடி செய்கிற தொனியிலும் எழுதப்பட்டுள்ளது. படைப்பாளியின் மொழி என்பது ஒன்றுதான். அம்மொழியை இடத்துக்குத் தகுந்த மாதிரி கதைக்களத்துக்குப் பொருத்தமாக, கதாபாத்திரங்களின் தன்மைக்கொப்ப ஒலிக்கச் செய்வதில்தான் படைப்பாளியின் வெற்றியின் சூக்குமம் அடங்கியுள்ளது. வட்டார வழக்குப் பிரயோகமும்கூட அப்படித்தான். தமிழ்ச் செல்வன் இந்த இரண்டு கூறுகளையும் கவனமாகக் கையாள்வதால் அவருடைய படைப்பு வெற்றிக்கு மிக நெருக்கமாகவே எப்போதும் இருக்கிறது.

தமிழ்ச் செல்வனின் ஒவ்வொரு கதையையும் குறித்து அதன் இயல்புக்கேற்ப பல பக்கங்களில் எழுதிக்கொண்டே செல்லலாம். லங்கர்பாய், அரக்குமுத்திரை, ஏவாளின் குற்றச்சாட்டுகள், பின்னணி இசை இன்றி போன்ற சில முக்கியமான கதைகளைப் பேசாமல் விட்டுச் செல்வது எனக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. 32 கதைகளடங்கிய இந்தத் தொகுப்புக்குப் பதிப்புரை எழுத வாய்த்தபோது நான் இவ்வாறு எழுதினேன்.

“தூய அன்பின் மகத்துவம் உதாசீனப்படுத்தப்படுகையில் எழும்பும் சோகலயங்களை இவர் தன் கதைகளில் ஒரு தேர்ந்த இசைக் கலைஞனைப் போல இசைத்துக்காட்டுகிற பாங்கு அலாதியானது. பெண்களின் அகவெளியை நுட்பமாக அவதானித்தவராக தமிழ்ச்செல்வன் பல கதைகளில் வெளிப்படுகிறார். ஆண் பெண் உறவின் சிக்கல்களை இத்தனை நெருக்கமாக நின்று அலசிப் பார்த்தவர்கள் தமிழில் குறைவு. குழந்தைகளின் மெல்லிய மன ஓட்டங்கள், ஆசைகள், துக்கங்கள் இவருடைய எழுத்தின் வழியே துல்லியமான சித்திரிப்பைப் பெறுகிறது. எதை எழுதினாலும் அதுவாகவே மாறும் தன்மை நல்ல கலைஞனின் அடையாளம். அந்த பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்.”

கதைகள் எழுதாமல் கழித்த கால் நூற்றாண்டில் தமிழ்ச்செல்வன் ஒரு பண்பாட்டுப் போராளியாக, தலைமைப் பண்பில் மிளிர்ந்தவராக அறிவொளி இயக்கச் செயல்வீரராக மறுஅவதாரம் எடுக்க முடிந்திருப்பது பலம். இந்த இடைவெளியில் கிடைத்த அனுபவங்களை அவர் படைப்பிலக்கியமாக எழுதிப் பார்க்கவேண்டும். எல்லாத் தோழர்களும் ஒருங்கிணைந்து செய்யவேண்டிய தலையாய பணி அவரை மீண்டும் கதைகள் எழுத வைப்பதுதான். ஆம் அந்தப் பேனாவின் தனிமையைப் போக்கவேண்டும்.

பார்வை நூல்

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை .

(கட்டுரையாளர் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர்)

Pin It