தமிழில் சில எண்களை உச்சரிப்பதில் பிழைகள் உள்ளன. அப்பிழைகள் திருத்தப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

70 என்ற எண்ணை ‘எழுபது’ என்று உச்சரிக்கிறோம். எழுபது என்ற சொல்லைப் பிரித்தால் ஏழு + பத்து என பிரிக்கிறோம். ஏழு பத்துகளைக் கொண்டது என்பது இதன் உள்ளடக்கம். அதேபோல், 80 என்ற எண்ணை ‘எண்பது’ என்று உச்சரிக்கிறோம். எண்பது என்ற சொல்லைப் பிரித்தால் எட்டு + பத்து எனப் பிரிக்கிறோம். எட்டு பத்து களைக் கொண்டது என்பது இதன் உள்ளடக்கம். இவ் வகையில், 90 என்ற எண்ணை தொண்டு + நூறு = தொண்ணூறு என்றுதான் பிரிக்க முடியும்.

(குறிப்பு : தொல்காப்பியத்துக்கு முனைவர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள விளக்கவுரை நூலில் பக்கம் 171-ல் “தொண்ணூறு. பழைய வடிவம் தொண்டு + பத்து = தொண்பது என்பது பாவாணர் கருத்து” என்ற விளக்கம் உள்ளது.)

பழந்தமிழில் 90 என்ற எண் ‘தொண்ணூறு’ என்று சொல்லப்படாமல் ‘தொண்பது’ என்றே சொல்லப்பட்டு வந்தது என்பதே அதன் விளக்கம். அத்துடன் ‘ஒன்பது’ என்ற சொல்லைக் குறிக்க ‘தொண்டு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

90 என்ற எண்ணை தொண்டு + நூறு என்று பிரித்தால் அந்த எண்ணில் ஒன்பது நூறுகள் இருப்பதாகப் பொருள். ஒரு நூறுகூடத் தன்னகத்தே கொண் டிராத ஒரு எண்ணை ஒன்பது நூறுகளைக் கொண்ட எண்ணாக ‘தொண்ணூறு’ என உச்சரிப்பது எவ்வளவு மோசமான பிழை என்பதை நாம் உணரவேண்டா?

இதுபோல 900 என்ற எண், தொண்டு + ஆயிரம், தொள் + ஆயிரம் ஆகி, தொள்ளாயிரம் என்று உச்சரிக் கிறோம். ஒரு ஆயிரத்தைக்கூட தன்னகத்தே கொண்டிராத ஓர் எண்ணை, ஒன்பது நூறுகளைக் கொண்ட எண்ணை, ஒன்பது ஆயிரம் கொண்ட எண்ணாகத் ‘தொள்ளாயிரம்’ என்று உச்சரிப்பதும் மிகப் பெரிய பிழையாகும். எனவே, 9-ஐ ‘தொண்டு’ என்றும், 90-ஐ ‘தொன்பது’ என்றும், 900-ஐ ‘தொண்ணுறு’ என்றும் உச்சரிப்பதே சரியாக இருக்கும்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் குடியரசு, விடுதலை இதழ்களில் பயன்படுத்திய ணை, லை, னை போன்ற எழுத்துகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியதுபோல இந்த மாற்றத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவர முயலுவோம்.

- இர.முருகேசன்

Pin It