பெருமளவில் புதினங்களின் வழியாகவே அறியப்பட்டிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சாமுண்டி’ (2006). இதனையடுத்து ‘சு.தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள்’ (2010) எனும் தொகுப்பு வெளிவந்துள்ளது. ‘சாமுண்டி’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள எட்டு கதைகள், ஆசிரியரின் பிற கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மனிதனும் சமூகம்/குடும்பங்களோடு கொண்டுள்ள உறவு நிலைகளை புதிய பரிமாணங்களோடும் யதார்த்தமாகவும் பல சிறுகதைகள் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் சு.தமிழ்ச்செல்வியின் கதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவரின் சிறுகதைகள் யாவும் தம்முள் புதினங்களின் பெரும் பரப்பை வைத்திருப்பவை. பெண், வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இழப்புகளையும் இப்புனைவுகள் அனைத்தும் பதிவு செய்துள்ளன. இக்கதைகளில் அமைந்த மைய பெண் கதாபாத்திரங்கள் புனைவுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன. இத்தகையப் பின்புலத்தில் இப்புனைவின் போக்கானது பின்வரும் நிலைகளில் இயங்குகிறது.

முதலாவதாக இவரது கதைகளில் நிலம் ஒரு பாத்திரமாக உயிர்கொள்வதை ஒரு வாசகர் எளிதில் உணரமுடியும். நிலம் அல்லது இயற்கை மேல் கொண்டுள்ள மனிதனின் உறவு என்பது மனிதர்களுக்கு இடையே நிலவும் உறவின் முக்கியத்துவத்தைவிட சற்றும் குறைந்ததில்லை என்று இவரின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்களைப் பற்றியும் அவளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் யதார்த்தமாக ஈரம், யதார்த்தம், கொடும்பாவி போன்ற கதைகளில் புனையப்பட்டுள்ளன.

மழை/வெயில் என்று பார்க்காமல் வயல்காட்டில் உழைக்கும் பெண்களையே இக்கதைகள் கதை மாந்தர்களாகக் கொண்டுள்ளன. அன்றாடம் உழைத்துப் பெறும் கூலியே அவர்களுக்கு உணவாக மாறுகிறது.

ஒரு குடும்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வகைத் தேவைகளுக்கும் பணமே முதற்காரணமாக இருப்பதால் அதைத் தேடிய வாழ்க்கைப் போராட்டமும் பணப்பற்றாக்குறை அல்லது பணமின்மை போன்ற காரணங்களால் குடும்பம் எதிர்கொள்கின்ற சிக்கல்கள்/சிதைவுகளை சமூகவியலாளர்கள் பதிவு செய்தாலும் படைப்பாளர்கள் கதைகள்வழி அவற்றைச் சித்திரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனை இத்தொகுப்புப் புனைவுகளில் இழையோடுவதை ஒரு வாசகனால் எளிதில் உணரமுடியும்.

இதனையடுத்து, சமூகத்தில் ஒடுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டுப் பல துன்பங்களுக்கு நடுவே தன் வாழ்வை நகர்த்தும் பெண்களின் பல நிகழ்வுகளையும் காலச்சுமையில் அன்றாடம் உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்பு என அவரவரின் வாழ்வியல் போராட்டங்களையும் இருசி, தொம்பா, வதம், பாஞ்சாலி, காவல், தவம் முதலான புனைவுகள் உணர்த்துகின்றன. இப்புனைவுகளின் மூலம் சாதாரண மக்களின் வாழ்வியல் முறைகளை எளிதில் கட்டமைக்கலாம்.

- குடிப்பழக்கம்

- பிற பெண்ணோடு தொடர்பு

- மனைவியை விடுத்து வேறு திருமணம் செய்து கொள்ளுதல்

- கணவன் இருந்தும் வேறொருவரை நினைத்தல்

போன்ற கணவன்/மனைவியின் செயல்களையும் பாலியல் வன்மங்களையும் மேற்கண்ட புனைவுகளின் மூலம் அறியலாம். அண்ணன்கள்/அண்ணிகள் செய்யும் இடர்ப்பாடுகளை அனுபவித் துப் பல நிலைகளில் குடும்பத்தைத் தாங்கும் சூழல் பெண்ணின் கடமையாக்கப்பட்டுள்ளதை ‘இருசி’ எனும் புனைவு உணர்த்து கிறது. குறிப்பாகத் தன் பிறந்த வீட்டில் இருக்கும்போது செய்யும் மாடு மேய்க்கும் வேலை, திருமணம் நடந்த பின்பும் அதே வேலை எனச் சூழலுக்குத் தகுந்தாற்போல் மாறும் பெண்ணின் வலியையும் அதே சமயத்தில் திருமணம் ஆன பின்பு பெண்கள் படும் நிலை யினையும் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சு.தமிழ்ச்செல்வி. இதற்குமாறான பெண்ணையும் தன் புனைவின்மூலம் அடையாளப் படுத்துகிறார். அதாவது, கணவனை விட்டுப் பிரிந்து வந்து தன்னம்பிக்கையோடு தனியே வாழ்தல் எனும் நிலையினை ‘தவம்’ எனும் புனைவின்வழி அறியலாம். இப்புனைவுகளில் பயின்றுவரும் பல்வேறு நுட்பமான கூறுகளோடு இதனை வாசித்தால் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை எளிதில் உணரமுடியும்.

சாமுண்டி, சன்னியாசி, வீரன் முதலான புனைவுகளின்வழி தொன்மக் கதையாடலின் புதிர் தன்மைகளை அறியலாம். மேலும் நம்பிக்கைகள்/சடங்குகள், கிராமிய வாழ்வின் எளிமை எனப் பல நிகழ்வுகள் நிரம்பியவை இச்சிறுகதைகள். சு.தமிழ்ச்செல்வியின் புனைவுகளுள் ஏற்படும் மனச்சிக்கல் பிரச்சனை இயல்பாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசகனையும் பால்யகாலத் திற்கு அழைத்துச் செல்லும் இப்புனைவு சிறு பிள்ளைப்பருவ மனோநிலையை வாசகனிடத்தில் உண்டுபண்ணுகின்றன. இவை யதார்த்தம்.

சமூகத்திலுள்ள நடைமுறை நிகழ்வுகள், சில மரபு சார்ந்த மதிப்பீடுகள், மனித வாழ்விலுள்ள பல சிக்கல்களைப் பல பரிமாணங்கள் வாயிலாக இவரின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. எளிய மனிதர்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்களின் மொழியிலேயே பதிவு செய்பவை. இக்கதைகளின் மூலம் சிக்கலான மனித மனத்தின் அந்தரங்கங்களை பதிவு செய்து நம்மிடம் கையளிக்க இவரால் இயல்கிறது.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “செவ்வியல் இலக்கியங்கள்: தொல்லியல் தரவுகள்” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It