கவிதை, சிறுகதை என்ற இருவிதமான படைப்பு வெளிகளில் இயங்கிவருபவர் தேன்மொழி. திருவாரூரில் பிறந்த இவர் தஞ்சையில் இலக்கியச்சோலை என்ற அமைப்பை நிறுவி பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவரது கவிதைகள் துறவிநண்டு என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன.

“நெற்குஞ்சம்” தேன்மொழியின் முதல் சிறுகதைத்தொகுப்பு. இதில் கடல்கோள், நிலக்குடை, நாகாபரணம், பேச்சிமரம், நெற்குஞ்சம், மீன்கொத்திகள் வரும்நேரம், நாகதாளி, நாவாய்ப் பறவை, மரப்பாச்சி மொழி, தாழி என மொத்தம் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

தேன்மொழியின் படைப்புவெளியில் பெண் பாத்திரங்களின் பதிவு அதிக அளவில் இடம் பெறல் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. படைப்புமொழி கவிதைத்துவம் மிக்க தன்மையில் அமைந்துள்ளது. சில இடங்களில் எளிய மொழிநடை இடம்பெற்று வாசகனுக்குப் பல்வேறு புரிதல்களை அளிக்கிறது. மேலும் கதைகளின் உள்ளே பல்வேறு படிமங்களும் காட்சிப்படுத்தப் படுவதை உணரமுடிகிறது.

இயற்கையுடன் இணைந்து வாழும் மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளை காட்சிப்படுத்தல், சமகால வாழ்வியலை பிரதிபலித்தல் போன்றவைகளை இச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பாகக் குறிப்பிட முடிகிறது. கதை மாந்தர்கள் தங்களது கடந்த கால வாழ்வியல் நினைவுகள், சமகால உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றை வாசகனுக்குச் சொல்கிற தன்மை இவரது படைப்பு உத்தியாக உள்ளது. இயற்கைக்கும் மனிதர்களுக்குமிடைப்பட்ட உறவு வெளியைச் சில இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.

நிலக்குடை, பேச்சிமரம், மீன்கொத்திகள் வரும் நேரம், மரப்பாச்சி மொழி, தாழி போன்ற கதைகள் எளிய மொழியில் நடப்பியல் வாழ்வை உணர்த்துகின்றன. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் இவரது கதைகளுக்கான களங்களாக அமைந்துள்ளன. கவிதைத்துவமான மொழியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார். அவற்றுள் சில பகுதிகள், “சிறுமி ஒருத்தி பொறுமையாய்ச் சேகரித்துப் பின்பு அலட்சியமாய் இறைத்துவிட்டுப் போன பூக்களைப் போல என் இரவுக்கனவுகள் இறைந்து கிடந்தன” (கடல்கோள்). “இரவு கறைகள் அற்றது. களங்கம் அற்றது. இரவுக்குப் பகை நிலவு. இரவை அழித்து நிலவு தன்னை ஏற்றுகிறது. அமாவாசை நாளில் இரவு நிலவைத் தோல்வியுறச் செய்து தன் விஸ்வரூபத்துடன் சம்மணமிட்டு அமர்கிறது” (நாகதாளி).

‘நிலக்குடை’ என்ற கதை பண்ணை வீட்டிற்கு வேலைக்குச் செல்லும் கிளியம்மா என்ற பாத்திரத்தை நம் மனதில் நிறுத்துகிறது. அதிகாரத்துவம்மிக்க பண்ணையாரின் வக்கிர உணர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது. குடும்ப அமைப்பு பற்றிய பல்வேறு வினாக்களை முன்வைக்கின்ற தன்மையில் ‘நாகாபரணம்’ அமைந்துள்ளது. மேலும், மனதிற்குள் உணர்வுகளைப் பூட்டிவைத்தே வாழப்பழகிய மனிதர்களைப் பிரதிபலிக்கிறது.

‘பேச்சிமரம்’ ஒரு மனிதனுக்கும் பனைமரத்துக்குமான உணர்வுவெளியைக் காட்சிப்படுத்துகிறது. கிராமப்புற மக்களின் சடங்குகள் நம்பிக்கைகளுள் பல இக்கதையில் இடம்பெற்றுள்ளன. “மாலை நேரங்களில் ஒரு சில பெண்கள் மரத்தினடியில் சூடம் ஏற்றிக் கும்பிட்டு, அங்குகிடக்கும் மண்ணை எடுத்து திருநீறாக நெற்றியிலும் தாலியிலும் பூசிக்கொள்வார்கள். சூலிப்பெண்கள் பெருத்த வயிறுகளில் மண்ணை அள்ளிப்பூசும்போது வயிற்றின் உள்ளுக்குள் இருக்கும் பிள்ளை புரண்டு கொடுக்கும் பூரிப்பு முகத்தில் கொப்பளிக்கும்” (ப-58)

கிராமப்புறத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் படிக்கும் ஒருவரின் விடுதி வாழ்க்கையின் பதிவுகளை ‘நெற்குஞ்சம்’ உணர்த்துகிறது. மனித மனத்தின் மெல்லிய உணர்வுகளை குருவிகள் மீது ஆய்வு மாணவர் கொண்ட அன்பின் வழி படம் படிக்கிறார். “குருவிகள் குஞ்சத்தின் மீதமர்ந்து நெல்மணிகளை முத்தமிட்டு, முத்தமிட்டுக் கொஞ்சின. ஒரோயரு நெல்மணியை மட்டுமே கொத்தும். ஒரு மணி கூட கீழே சிந்தாது பார்த்துக்கொள்ளும். கொறித்த உமி மட்டும் கீழே கிடக்கும். குருவிகள் குஞ்சத்தை சுற்றி சந்தோஷத்தில் கும்மியடித்து வரும்” (ப-75) விடுதி அறையில் தனிமையில் இருக்கும் இவருக்கும் அறைக்குள் பங்கெடுக்கும் சிட்டுக்குருவிகள், நார்த்தங் குருவிகள் போன்றவற்றிற்குமான அன்பை இக்கதை உணர்த்துகிறது.

‘மீன்கொத்திகள் வரும் நேரம்’ - முஸ்லீம் சமூக வாழ்நிலைகளைச் சித்தரிக்கிறது. இக்கதையில் வரும் ஆயிஷா என்ற பாத்திரம் வாசகனின் மனதில் பல்வேறு வினாக்களை எழுப்புகிறது. மேலும் பெண் உடல் மீதான ஆண்களின் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ‘அத்தம்மா’ என்ற பெண் பற்றி சித்திரிக்கும் ஒரு பகுதி, “அதிகபட்சமா, வயது நாற்பத்தைந்து இருக்கும். எங்க அத்தம்மா, அது புத்திக்கே அது யாருன்னு தெரியாதபோது எங்கள் ஊர் ஆண்களின் பொதுச் சொத்தாக இருந்தது”.(ப-85) இத்தொகுப்பில் இறுதியாக அமைந்த ‘தாழி’ என்ற சிறுகதை ‘சுனாமி’ வந்து சென்றபின்பான மரணங்களைக் காட்சிப்படுத்துகிறது. மனிதர்களுக்குள்ள மரணம் பற்றிய உணர்வு நிலைகளையும் வலிகளையும் ஆழமாக உணர்த்துகிறது.

கவிதைத்துவமான படைப்புமொழியில் மனித மனங்களின் பல்வேறு உணர்வுகளையும் சமகால வாழ்வியலையும் உணர்கின்ற தன்மையை தேன்மெழியின் முதல் சிறுகதைத்தொகுப்பான நெற்குஞ்சம் வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது.

பார்வை நூல்

தேன்மொழி, நெற்குஞ்சம், மணற்கேணி பதிப்பகம், புதுச்சேரி, 2009

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ் வானொலி வரலாறு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It