கானாயி குஞ்ஞிராமன் (1937- )
சென்னை கலைக்கல்லூரியில் பயின்றவர். 1957இல் ஓவியம் கற்க சென்னை வந்து கே.சி.எஸ். பணிக்கரைச் சந்தித்தார். பணிக்கர் இவரிடம் ஒரு சிற்பியைக் கண்டு சிற்பத்துறைக்கு திசை திருப்பினார். சிற்பக்கலையை தேவி பிரசாத் ராய் சௌத்திரியின் மாணவராகக் கற்றார். சென்னையில் சிற்பக்கலை பட்டயப் படிப்புக்குப் பின் லண்டனில் உள்ள Slaid School of Arts இல் மேற்கல்வி பெற்றுத் திரும்பினார். திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கானாயியின் கலை வாழ்க்கை நிறையப் போராட்டங்களை சந்தித்தது. இன்று கேரளம் எங்கும் கானாயியின் சிற்பங்களைக் காணலாம்; குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்றாவது உள்ளது. இவர் தற்போது கேரள லலித்கலா அக்காதமி தலைவராக உள்ளார். கலைக்கு அளிக்கப்படுகின்ற பெருமைக்குரிய ‘ராஜா ரவிவர்மா’ விருது பெற்றவர். ஒரு லட்சம் ரூபாயும் பட்டயமும் சிற்பமும் கொண்டது இப்பரிசு. இப்பரிசுக்கான சிற்பத்தை வடிவமைத்தவரும் கானாயிதான்.
சாகித்ய அகாதமி தங்கள் மோணோகிராம் வெளியிட்டுள்ளது. தில்லியிலிருப்பவர்கள் அங்கீகரித்தது சந்தோஷம்தானே?
நான் தில்லிக்குப் போகவில்லை. அவர்கள் இங்கே வந்து புத்தகம் வெளியிட்டார்கள். சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நாற்பதாண்டுகளுக்கு மேல் வேறெதிலும் ஈடுபடாமல் மதச்சார்பற்ற கலைக்காக நான் போராடிவந்தேன். அதில் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன்.
சிற்பக் கலைக்காகப் போராட வேண்டி வந்தது என்றா கூறுகிறீர்கள்?
சிற்பக் கலையைக் கோவில்களின் மதில் சுவர்களுக்கு வெளியே பொதுவிடத்திற்கு கொண்டு வந்த முயற்சியைப் போராட்டமா கவே கருதுகிறேன். அதற்காக துணிச்சலுடன் செயல்பட்டேன். சிற்பம் மதம் சார் கலையாக இருந்தது. மரபுக்கலையாகவே இருந்து வந்த சிற்பக்கலைக்கு ஒரு தன்னிச்சையான, சுதந்திரமான இருப்பை உருவாக்க இயன்றது. சிற்பத்தை கலைத்துறைக்குள் கொண்டுவர இயன்றது. நிறையவே எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி வந்தது. உடல்மீதான தாக்குதல்களுக்குப் பயந்து வாழ்ந்த நாட்களுமுண்டு. ‘மலம்புழா’விலும் ‘வேளி’யிலும் தொழிலாளர்கள்தான் எனக்குப் பாதுகாப்பளித்தனர். நான் அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்தேன். ஆசான் நினைவகத்திலும் கூட அந்த அச்சுறுத்தல் தொடர்கிறது.
மாத்யமம் இதழில் நடத்திய எதிர்வினைகள் பற்றி நீங்கள் கருதுவதென்ன?
யக்ஷி போலவொரு சிற்பம் அமெரிக்காவில் கூடக் கிடையாது. கேரளமாக இருந்ததால் மட்டுமே அதைச் செய்ய இயன்றது. இங்குள்ள சாதாரண மக்கள் கூட அதை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவில்கூட வேறெங்கும் அதைப் போலொரு சிற்பம் இல்லை. அமெரிக்காவில் நான் ‘யக்ஷி’யின் சிலைடு காட்டிய போது ‘இதெல்லாம் உங்கள் நாட்டில் எப்படி நடந்தது’ என்று சிலர் என்னிடம் வியப்புடன் கேட்டனர். நிர்வாணம் இந்த அளவு பாப்புலர் ஆக (நவீன கலையில்) வேறெங்கும் இல்லை. ‘யக்ஷி’ ஒரு திருப்புமுனையாகி விட்டதல்லவா? சாதாரணமாக இதுபோன்ற சிற்பங்கள் தனியார் முதலீட்டில் மட்டுமே செய்யப்படும். ஆனால் ‘யக்ஷி’யும் ‘வேளி’யும் ஒரு பொது முதலீடென்பதை நீங்கள் மறக்கக் கூடாது. தனியாரின் பணமல்ல; அரசாங்க முதலீடு - பொதுமக்கள் பணம். சிற்பம் என்ற ஊடகத்தைப் புழக்கப்படுத்தி அங்கீகரிக்கச் செய்தது சிறு விஷயமொன்றுமல்ல.
‘யக்ஷி’யின் நோக்கமென்ன? உளவியல் ரீதியாகத் தூண்டுவதா?
அப்படியேதும் சொல்வதற்கில்லை. நிர்வாணம் இந்திய மரபில் உண்டு. தாயை-இயற்கையை இந்திய சிற்ப மொழியில் நான் வெளியிட்டேன். அது ஒரு வெடிகுண்டாக வெடித்தது. நமது பாலியல் சார் கற்பிதங்களும் அணுகுமுறைகளுமே அதற்குக் காரணம்.
இந்த அளவுக்கு பெரியபெரிய சிற்பங்களை உருவாக்குவது ஏன்?
ஒருவேளை எனது ஊரிலுள்ள தெய்வங்களின் உருவ அமைப்பின், தனித்துவத்தின் தாக்கமாக இருக்கலாம். பெரிய - உயரமான கிரீடம் - இருபத்தைந்து அடிக்கு மேல் கூட உயரமான பகவதி தெய்வங்கள், வட்ட வடிவில் விசாலமான கிரீடம் கொண்ட தெய்வங்கள் இவையெல்லாம் என் ஊரிலிருக்கின்றன. தெய்வத்தை சிற்பமாக மட்டுமே என்னால் காண இயலும். பெரிய அளவுகளில் செய்ய அகாதமிக் கல்வியும் பயிற்சியும் எனக்கு உதவியது. சந்தானராஜின் ஓவியங்கள் கூட தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
ஓவியங்கள் சிற்பியிடம் தாக்கம் செலுத்துவதெப்படி?
சிற்பியால் தவிர்க்க இயலாதது ஓவியம். அனைத்து விதமான காட்சிக் கலையிலும் ஓவியத்தின் பங்கு இன்றியமையாதது. நடனத்தின் அடிப்படைத் தத்துவம் அரங்க அசைவின் அடிப்படைத் தத்துவம் - கான்டூர் லைன் டிராயிங்காக இருக்க வேண்டும். ஓவியம் பயில வரும் மாணவர்களை சிற்பக்கலை கற்பிக்க வேண்டுமென்று சொல்வது அதனால்தான். முப்பரிமாணத்தை இரு பரிமாணமாக்க அது மிகவும் உதவும்.
யக்ஷி, வேளி சிற்பங்களில் கான்டூர்லைன்ஸ் ஒரே மாதிரியானவை அல்லவே?
சூழலுக்கு ஏற்ப அது மாறும். ‘யக்ஷி’க்கு ‘ரஃப்’ ஆன ஒரு இஃபக்ட் அவசியமானதால் கான்டூர் லைன்கள் தடிப்பானதாக அமைந்தது. ‘வேளி’யில் அப்படிச் செய்யவில்லை. அங்கு கான்டூர் லைன்கள் வெளி (atmosphere)யில் முயக்கப்பட்டுள்ளது.
சிற்பங்களின் அமர்த்தலில் உள்ள தனித்தன்மையால் தானே இது நிகழ்கிறது?
அது மட்டுமல்ல. வழக்கமாகச் சிற்பங்கள் ஏதேனுமொரு வைப்பு மேடையின் மீது நிறுவப்படும். இங்கு நான்தான் முதன்முறையாக வைப்பு மேடையற்ற சிற்பங்கள் செய்தேன். சிற்பத்தை இயற்கை / சூழலுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தினேன். சிற்பம் அமைகின்ற இயற்கைக்கு ஏற்ப கான்டூர் லைன்ஸ் மாறும்.
சிற்பங்களின் textureரிலும் மாற்றம் உள்ளதே?
Texture கலையின் ஒரு கூறு. பொதுவாக எல்லாச் சிற்பிகளும் அவரவருடைய பாணியில் இதைச் செய்வார்கள். எனது செயல்களுக்கு ஏற்ற Texture நான் தேர்வு செய்கிறேன். ‘யக்ஷி’ சிற்பத்தில் அது கரடுமுரடாக இருந்தது. சங்குமுகம் சிற்பத்தில் அப்படியில்லை. உண்மையில் சிற்பம் ஒளி நிழலின் மாயவித்தை. அதை நிகழ்த்துவதில் texture இன்றியமையாதது. texture வடிவை மாற்றுகிறது. மனிதனே நிற்கிற, மனிதனின் நிற்கிற உருவம் ஆகிய இரண்டில் மனிதனின் நிற்கிற சிலை உருவமே நம் மனம் கவரும்.
ஃபிகரேட்டிவ் (Figurative) படைப்புக்கள்தானே நிறையவும்?
ஃபிகரேட்டிவ், அப்ஸ்ட்ராக்டும் செய்கிறேன். அது ஒரு மொழி. இரண்டு முறைகளிலும் ஈடுபடுகிறேன். எந்த ஒன்றோடும் தனித்த அதீத நாட்டம் கிடையாது.
அனுபவங்கள் சொல்லவியலாத அளவு சிக்கலாகும் போது கலையின் உருவம் அப்ஸ்ட்ராக்ட் ஆகுமென நவீனத்துவவாதிகள் சொல்கிறார்களில்லையா?
அறிவியல் வளர்ச்சி காரணமாக ஐரோப்பிய நவீனத்துவக் கலையில் பற்பல இயக்கங்கள் தோன்றின. அங்கு அறிவியலில் புதுப்புது கண்டுபிடிப்புக்கள் நிகழ்கின்றன. இங்கே அப்படி என்ன இருக்கின்றது. இங்கே சாதியும் மதமும் மூடநம்பிக்கை களும்தான் இன்னமும் நம் சிந்தனையை வழிநடத்துகிறது. இங்கே மேலைநாடுகளில் இருப்பது போன்ற பார்வைகள் ஏற்படுவது கடினம்.
வேளி, பய்யம்பலம் போன்ற இடங்களில் மிகவும் வித்தியாசமான எதிர்பாராத இடங்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிசைனிங் வாய்ப்புக்கள் தானே அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது?
நவீனத்துவக் கலையில் ‘டிசைனிங்’ இன்றியமையாதது. செஸானும், பிக்காசோவும் தமது கலைப்படைப்புகளில் டிசைனிங்கை தாராளமாகவே பயன்படுத்தியுள்ளனர். செஸானின் ‘இயற்கை’ பற்றிய ஓவியங்களில்கூட அதைக் காண லாம். மான்ட்ரியானின் ஓவியங்களிலும் டிசைனிங் ஆற்றலைக் காணலாம். மான்ட்ரியானின் ஓவியங்கள் ஆர்க்கிடெக்சரில் மாற்றம் ஏற்படுத்தின. டிசைனிங் ஆற்றலால்தான் அது நிகழ்கிறது. உருவத்திற்கு அடிப்படை வடிவம் அளிப்பது டிசைனிங்தான். அடிப்படையான வடிவத்தை எளிமைப்படுத்தினால் டிசைனாக மாறும். சிலர் அதனை Functional designஇற்கு கொண்டு செல்கின்றனர். Commercial artஇல் இதுதான் பயன்படுகிறது. ஒவ்வொரு ஓவியரும் டிசைனை ஒவ்வொரு முறையில் பயன்படுத்துகின்றனர். Constantin Brancusi மினிமல் டிசைனை வைத்துக் கொண்டு சிற்பங்கள் செய்தார். அவற்றை டிசைன் மட்டுமே என்று கூறுபவருண்டு. ஆனால் சிற்பிக்கு அது ஒரு உன்னதக் கலைப்படைப்புத்தான். கலை வெறும் Decoration மட்டும் அல்ல. பிரான்குசி ஒரு புதிய காட்சிமொழியைக் கொண்டுவந்து சிற்பக்கலையில் புரட்சி செய்தார்.
பிரான்குசியைப் போல நவீனச் சிற்பக்கலையின் மொழியைப் படைத்த ஆல்பர்டோ ஜியாகொமெட்டி ஊடகத்தை மிகவும் மினிமல் ஆகவே பயன்படுத்துகிறார். அவரது பாணி பற்றி...
மிகவும் தனித்துவம் வாய்ந்த கலைஞர் ஜியாகொமெட்டி; அவர் இருப்பியல்வாதக் கலைஞர். சார்த்தரின் நண்பர். அவரது சிற்பங்களை பிற சிற்பிகளின் சிற்பங்கள் போல மதிப்பிட்டுவிட முடியாது. அவரது தரிசனத்தின் வெளிப்பாடாகவே அதைக்கருதி அணுகவேண்டும்.
ஊடகத்தைப் பயன்படுத்துவதில் நுண்மை - பருண்மை வேறுபாடுகளுண்டல்லவா...?
அவற்றை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. கலைஞன் மிகப்பொருத்தமானதைத் தேர்வு செய்யலாம். கலைப்படைப்பில் அது எவ்வாறு வெளிப்படும் என்பதையே சிந்திக்க வேண்டும்.
தங்களின் பாணி பற்றி...
பாணி உயிர்ப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். கருத்தைத் தொடர்புறுத்த இயல வேண்டும். சுதந்திரமே எனது கலையின் பாணி.
அது நவீனத்துவக் கற்பிதமல்லவா?
ஆமாம். கலை, சுதந்திரம் என்பதற்கான மாற்றுச்சொல். ஆகவே அது முன்தீர்வுகளால் ஆகக்கூடாது. ஸ்டைல் உருவாக வேண்டும்; உருவாக்குவது அல்ல. தனித்துவமான, தனதாகிய ஸ்டைல் தானே வரும். ஸ்டைல் போலச் செய்துவிட்டால் அது மிமிக்ரி ஆகிவிடும். ஸ்டைல் இயல்பாக உருவாகி எழுந்து வருவது.
பின்நவீனத்துவம் மிமிக்ரியை அங்கீகரிக்கின்றதே...
அந்த மிமிக்ரியை இங்கு கூறவில்லை. பின்நவீனத்துவம் கலைஞனின் சுதந்திரத்தை அதிகரித்தது. ஜிutஷீக்ஷீ செய்யாமலேயே கலைப்படைப்பில் ஈடுபடலாமென்ற நிலை ஏற்பட்டது.
ஓவிய - சிற்பக் கலைகளின் இணைவால் உருவான Installation art இன்று புழக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்ஸ்டலேஷன் கூறுகள் தங்கள் படைப்புக்களிலும் காணப்படுகின்றதே.
இன்ஸ்டலேஷன் என்பது வைப்புநிலைக் கலை. ஒரு சாதாரணமான பொருள் ஒரு தனிப்பட்ட சூழலில் கலைப் படைப்பாக அங்கு மதிப்புப் பெறுகின்றது. நான் பிரிட்டனில் படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே அங்கு இன்ஸ்டலேஷன் கலை புழக்கத்திலிருந்தது. நான் இங்கு 1979இல் இன்ஸ்டலேஷன் படைப்பைச் செய்தேன். இன்ஸ்டலேஷன் இரண்டு வகை; Permanent installation, Instant installation. எனது ‘முக்கோலப் பெருமாள்’ ஒரு பெர்மனன்ட் இன்ஸ்டலேஷன். இன்ஸ்டன்ட் இன்ஸ்டலேஷனும் நான் செய்திருக்கிறேன். ஐரோப்பாவில் Pop art, Minimalist art, Readymade art இவை இன்ஸ்டலேஷனில் தாக்கம் செலுத்தின. எங்கும் வியாபார நோக்க உற்பத்திப் பொருட்கள் பெருகும் வேளை அவற்றை கலைப்படைப்பாக்கும் முயற்சியும் ஏற்படும். அங்கே டானிகிரேக், இன்னும் சிலரும் இதை முன்பே செய்துவிட்டனர். நான் எனது மாணவர்களிடம் முன்பே இது பற்றிக் கூறிவந்தேன். சிலர் சோதனைகள் செய்து வெற்றி பெற்றுள்ளனர். சிலர் ஐரோப்பியரின் வெறும் மாதிரிகளாகித் தோல்வியடைந்தனர். ஐரோப்பியர் கீழை நாடுகளிலிருந்து நிறையவே எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றைத் தமதாக உருமாற்றிக் கொள்வர். நாம் அவற்றை மாதிரிகளாக பின்பற்றுவோம்.
இன்ஸ்டலேஷனுக்குப் பல தளங்களுண்டு. இதை முதன்முறை யாக கவிஞரும் ஞானியுமான ஸ்ரீநாராயணகுரு பயன்படுத்தினார். ஆச்சரியப்பட வேண்டாம். இதை நான் பல வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பொதுவாகக் கருவறையில் கடவுட்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் குரு அருவிப்புற ஆற்றங்கரையில் கிடந்த உருளைக் கல் ஒன்றை எடுத்து நிறுத்தியபோது அதுவொரு கடவுட் சிலையானது. கவிஞருமான குரு வெறும் கல்லைச் சிற்பமாக்கினார்.
இருபதாண்டுகளுக்குப் பின் ஐரோப்பாவில் தாதாயிஸ்டுகளும் இதைத்தான் செய்தனர். வழியோரம் வீசியெறியப்பட்டதொரு போர்சிலைன் கழிவறை - யூரினல் (1914)ஐ மார்ஷல்துஷாம்ப் கலைப்படைப்பாக்கினார். நாராயணகுருவின் சிலைப் பிரதிஷ்டையையும் இதே பொருளில் காணலாம். ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாததை ஒரு கல் பிரதிஷ்டையால் சொல்ல இயன்றது. அதுதான் சிற்பத்தின் ஆற்றல். சிற்ப மொழியின் வரம்பற்ற வாய்ப்பு. இதைத்தான் கலையுலகில் துஷாம்ப் செய்து காட்டினார். இரண்டும் யதார்த்துவத்துக்கெதிராக விடப்பட்ட சவால்கள். தாதாயிஸ்டுகள் கல், கண்ணாடியால் கலைப்படைப்புக்கள் செய்தனர். குரு பல ஆண்டுகள் முன்பே இதைச் செய்தது - இப்படியரு தரிசனம் ஏற்பட்டது வியப்புக்குரியது.
ராஜாரவிவர்மா ஐரோப்பியக் கலையை பதிவு செய்தார். குரு கவிஞரானதால் அவரே அறியாமல் இது நிகழ்ந்துள்ளது. ஓவியத்தில் ரவிவர்மா செய்ததற்கு நிகரான செயல் இது. குரு சிற்பத்தின் ஆற்றலை உணர்ந்திருந்தார். பின்னாளில் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார். இப்பொருட்களை எல்லாம் ஐரோப்பியக் கலையுலகம் பின்னர் பயன்படுத்தியது.
ஆற்றுக் கல்; பொதுவழி யூரினல் இவை இரண்டும் சூழல் மாற்றப்பட்டு ஒரு வைப்பு மேடை (Pedestal)யில் வைக்கப் பட்டபோது புரட்சிகரமானது. குரு ஓர் ஆன்மீகவாதியாக இருந்து செய்ததை தாதாயிஸ்டுகள் கலைஞர்களாக நின்று செய்தனர். குருவிடமிருந்து நமது கலைஞர்கள் இன்ஸ்டலேஷனைக் கற்கவேண்டும்.
ஹென்றிமூர், ழான் ஆர்வி இவர்களின் ஸ்டூடியோவுக்கு நான் சென்றபோது அங்கு இதே பொருட்களைக் கண்டேன். பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமான கற்கள் பாலிஷ் செய்தனவும் செய்யாதனவுமாக வைக்கப்பட்டிருந்தன. சூழலே ஒரு பொருளைக் கலைப்படைப்பாக்குகிறது. கோவில்களுக்குள்ளும் சுவர்களிலும் தூண்களிலும் இருந்து வந்த யக்ஷியை ஒரு திறந்த வெளியில் நிறுத்திய போதும் இதுதான் நிகழ்ந்தது. அது மரபுக்கலையின் மறுவடிவாக்கமல்ல.
செவ்வியல் கலையில் அணி அலங்காரத்துடன் காணப்படுகின்ற யக்ஷியை அலங்காரமேதுமின்றி உட்கார வைத்திருக்கிறீர்களே?
ஐரோப்பாவில் கூட நிர்வாணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒரு மலையாளி செய்தபோது அப்படியன்றும் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. கலைவரலாற்றில் இதற்கு நிகராக ‘எட்வர்ட் மானோ’வின் ‘லஞ்ச் ஆன் த கிராஸ்’ என்ற ஓவியம் ஒன்று மட்டுமே உள்ளது. கோட்டும் சூட்டும் அணிந்த ஆடவர்களுக்கிடையே முழுநிர்வாணமாக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அங்கு அது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது அவர்களின் மனோபாவத்தையே மாற்றி அமைத்தது. யக்ஷி கேரளத்திலும் அதே மாற்றங்களை உருவாக்கியது. அந்த நாட்களில் ‘கஸாக்கின்டெ இதிகாசத்திலும் இது இருந்தது. ஓ.வி. விஜயன் ஒருமுறை என்னிடம் கூறினார் “நீங்கள் அதிர்ஷ்டக்காரர். இது போலொரு புத்தகம் எழுதி யிருந்தால் என்னை என்ன செய்திருப்பார்கள்!’’ சிற்பங்களின் ஆற்றல் அளப்பரியது. சிற்பமானதால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. ஃபிகரேட்டிவ் ஆர்ட் ஆக இருந்தும்கூட ஏற்கப்பட்டது. இங்கே எழுத்துக்கு மட்டும்தான் பிரச்சினைகள்.
இன்ஸ்டலேஷன் ஆர்டிற்குப் பின்னர் பெர்பமன்ஸ் ஆர்ட், கன்செப்சுவல் ஆர்ட், நியோ டாடா போன்ற ஓவியக்கலை இயக்கங்கள் மேற்குக் கலையுலகில் தோன்றின. அவற்றிற்கு நிகராக நமது கலையுலகில் மாற்றங்கள் நடந்துள்ளனவா?
ஐரோப்பாவில் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து கலைத்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. கலையை ஓர் அருளாக அவர்கள் கருதுவதில்லை. புதியமொழி கண்டடையவே முயல்கின்றனர். இங்கு அப்படியில்லை. பெருமளவும் பகடியும் மிமிக்ரியும் மட்டும்தான். இந்திய மரபின் ஏதோ தொலைதூரச் சுவடுகள் தென்படுவதால் சில தப்பித்து நின்று விடுகின்றன.
மரபைப் பற்றிக் கூறியதால் கேட்கிறேன். மெட்ராஸ் காலேஜ் ஆப் ஆர்ட் அன்ட் கிராப்டின் கலைப் பாரம்பரியம் என்ன? கல்லூரி முதல்வராக இருந்த டி.பி.ராய்சௌத்ரி புகழ்பெற்ற சிற்பியாக இருந்தவராயிற்றே?
ராய்சௌத்ரி மிகவும் பிரபலமானவர். அவர் செவ்வியல் ரசனைகள் கொண்டவர். அவர் பணி ஓய்வு பெற்றபின் நான் அங்கு மாணவனாகச் சென்றேன். இருப்பினும் அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் கே.சி. எஸ். பணிக்கர் முதல்வராக இருந்தார். அவரும் சௌத்ரியின் மாணவரே எனினும் அவரது கலைப் பாணியை கொஞ்சமும் விரும்பாதவர் பணிக்கர். பணிக்கர் இம்ப்ரஷனிசப் பாணியைப் பின்பற்றுபவர். சௌத்ரி பணிக்கர் இருவரின் கலைக் கொள்கைகளுக்காக சென்னைக் கலைக் கல்லூரியில் கோஷ்டி மோதல்கள் கூட நடந்துள்ளன. பணிக்கர் மாணவர்களை நவீனத் துவ இயக்க அசைவுகள் நோக்கி வழிநடத்தினார். சௌத்ரி நவீனத்துவத்தைப் புறக்கணித்திருந்தார். இவர்களிடையே கடுமையான கருத்து மோதல்களும் போட்டா போட்டிகளும் நடந்து வந்துள்ளன. சென்னைக் கலைக் கல்லூரி வளாகத்தில் சௌத்ரி செய்த ‘சுதந்திரத்தின் சிலை’ ஒன்றிருந்தது - பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த மாபெரும் சிலை. அகாடமிக் ஸ்டடிக்கான ஒரு உன்னத மாதிரி அது. சௌத்ரி பணி ஓய்வு பெற்றபின் பணிக்கரும் பிறரும் அச்சிலையை உடைத்து தகர்த்து எறிவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அச்செயல் என்னை மிகவும் துன்புறுத்தியது. ஒருக்காலும் செய்யக்கூடாத ஒரு செயலாக நான் இன்றும் அதைக் காண்கிறேன். சிற்பக்கலை மாணவர்கள் பார்க்கவும் பயிலவும் உதவும் அற்புதமான சிற்பம் அது.
பழமையைத் தகர்த்தெறியும் ஒரு ப்யூச்சரிஸ்ட் ஆவேசமாக அதைக் காணலாமே?
பணிக்கரின் அச்செயல் ஒரு ப்யூச்சரிஸ்ட் கலைச்செயல் பாடல்ல. சௌத்ரியின் அடையாளங்கள் ஒன்றுகூட மிச்ச மிருக்கக் கூடாது என்ற பிடிவாதம் மட்டுமே அது.
ராய்சௌத்ரிக்குப் பின்...
ராய்சௌத்ரிதான் என்னிடம் தூண்டுதல்களை உருவாக்கியவர். அவரது மாணவரான உலகநாத முதலியார் எனது ஆசிரியர். அவர் சௌத்ரியின் பாணியைத் தொடர்ந்து வந்தார். புதுமையை ஏற்கத் தயங்கினார். நான் வகுப்பற்ற வேளைகளில் புதுமையாக ஏதேனும் செய்து வந்தேன். நான் இல்லாத வேளைகளில் அவர் அவற்றை நாசமாக்கி விடுவார். நான் ஓர் இரையாக இருந்தேன் என்றுதான் கூறவேண்டும்.
ராய்சௌத்ரியின் சிற்பங்கள் - Portraitகள் பிரபலமானவை. இந்திய சிற்பக்கலை வரலாற்றில் அவரது இடம் பற்றி...
அவரது படைப்புக்கள் பல இடங்களில் உள்ளன. இங்கு Public art சிலைகள் அரசர்களும் பிறரும் அவையனைத்தும் செவ்வியல் விதிகளுக்கேற்ப செய்யப்பட்டவை. அதிகாரத்தின் வலிமை தோரணை அவற்றில் வெளிப்படுகின்றன. அவை அதிகாரத்தின் காட்சிப்படுத்தல்கள். ஐரோப்பிய சிற்பக்கலை ஆதிக்கம் இந்தியத் தன்மையை இல்லாமல் செய்கிறது. இந்த இயல்பை மீறி வர சௌத்ரி பாடுபட்டார். நிறைய பங்களித்தும் இருக்கிறார்.
ராம் சிங்கர் பெயிஜினின் சிற்பங்கள் பற்றி...
நிறைய மாறுதல்களை உருவாக்கிய சிற்பி அவர்தான். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அவர் செயல்பட்டு வந்தார். அவர் Free lance ஆக உருவாக்கிய சிற்பங்கள் கூட பெரிய மாறுதல்களுக்கு காரணமாகியுள்ளது.
தன்ராத் பகத்தின் கலைத்தன்மையை எப்படி மதிப்பிடலாம்?
நமது சிற்பிகளிடையே இந்திய இயல்பை உண்மையாக பிரதிபலித்தவர் பகத். அதற்காகவே அவரது படைப்புகள் கவனிப்புப் பெற்றன. சிற்பக்கலையை இந்தியப்படுத்த அவர் மிக முயன்று பங்காற்றியுள்ளார். இந்தியக் கலையின் மெல்லியல் தன்மையை அவரது படைப்புக்களில் காணலாம்.
ராம்சிங்கரிடமும் இவ்வியல்பு இருந்ததே...
இருந்தது. போகப்போக ராம்சிங்கர் அளப்பரிய மேலைத் தாக்கம் உடையவராகி விட்டார்.
ராகவ் கனேரியின் சிற்பங்கள் பற்றி...
ராகவ் கனேரியின் சிற்பங்கள் மோசமானவையல்ல. ஆனால், அவற்றிற்கு இந்தியத்தன்மை குறைவு.
சோம்நாத் ஹோரின் சிற்பங்கள் கவனித்ததுண்டா?
சமூக விழிப்புணர்வு ஊட்டுவன ஹோரின் சிற்பங்கள்.
இவர்கள் நிறைய பங்களிப்புச் செய்திருக்கிறார்களே...
இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் அதிகமாக இயலும். அவர்கள் (ஒவ்வொரு நிறுவனங்களில்) அனைவரும் கற்பித்து கற்பித்து வெறுமையடைந்து போனார்கள். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நல்ல கலைஞன் - முதல்தேதி சம்பளம் வாங்குபவனாக இருக்கக் கூடாது.
கானாயி ஒரு டூரிசம் சிற்பி. சுற்றுலாத் துறையை வளர்க்க சிற்பங்கள் செய்தவர் என்ற உங்கள் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
சுற்றுலாவை ஊக்குவிக்க நான் ஒரு சிற்பமும் செய்ததில்லை. சுற்றுலா வணிகமயமாகிப் போனபின் என் ஆர்வம் குறைந்து போனது. கேரளத்தின் பொதுநிதி பயன்படுத்தி பொதுமக்களுக் காக செய்த கலைப்பணி என்னுடையது. மக்கள் அதை வரவேற்றனர் எனக்கு ஆதரவளித்தனர்.
கலையைப் புரிந்துகொள்ள அழகுணர்ச்சி வேண்டுமென்ற கருத்து நிலவுகிறதே; குறிப்பாக நவீனத்துவவாதிகள் இப்படிக் கூறினார்களே.
அதுதேவையில்லை. அப்படிக் கருதுவது தவறு. கொள்கைகள் கலை அல்ல. நவீனத்துவ கலை கலையைக் கொள்கைகளுள் பிணைத்தது. மக்களுக்கு கொள்கைகள் அல்ல, கலைதான் தேவை. நல்ல இசைதான் தேவை.
நவீனத்துவ வாதிகள் கலையைப் பூடகமாக்கி விட்டார்களே?
நவீனத்துவவாதிகள் பூடகமாக்கினர். கலை கருத்தைத் தொடர்புறுத்த வேண்டும். எப்படி கருத்தைத் தொடர்பு றுத்துவது என்ற தேடல் கலைஞனுக்கு வேண்டும். கலையைக் கொலை செய்துவிடக் கூடாது. பூடகத்தன்மை கலைஞனிடம் இருக்கட்டும். சமூகத்தை அதில் தள்ளிவிடக்கூடாது. பூடகத்தை அழிப்பதே கலைஞனின் வேலை. நமது நாட்டிலும் கூட பூடகத்தன்மையை ஒரு டிரேட் மார்க்காக வைத்துக் கொண்டி ருப்பவர்களுண்டு. மீண்டும் மீண்டும் ஒரே பொருளை வெளியிடு வது பின்னர் பூடகமாக்கிக் குழப்புவது. தமது வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யத் துடிக்கிற வணிக மனநிலையின் அவசரம் அது. மதத்தில் இருப்பது போன்ற மூடநம்பிக்கைகள் கலையிலும் உண்டு. சிலர் அந்த நம்பிக்கையை சுரண்டிப் பயன்கொள்கின்ற னர். கலையின் நோக்கம் தூய்மையை உருவாக்குவது.
நீங்கள் நிறைய Portrait செய்திருக்கிறீர்கள். Portraitகளில் எதை நிறைவேற்ற முயல்கிறீர்கள்?
நிறைய கால அவகாசத்தோடு செய்ய வேண்டிய வேலை Portrait எனக் கற்றுக் கொண்டுள்ளேன். பட்டம் தாணுப்பிள்ளை, விக்ரம் சாராபாய், ஈ.எம்.எஸ்., தேவராஜன், மன்னத்து பத்மநாபன் போன்ற பிரபலங்களை Portrait செய்திருக்கிறேன். Portrait ஒருபோதும் போட்டோகிராஃபிக் உருவமல்ல. மனிதனின் / நபரின் அக ஆளுமையையும் அதில் வெளிப்படச் செய்யவேண்டும். புறவடிவம் மட்டுமாக அமைந்துவிடக் கூடாது.
ஒப்புமை ஒரு சிக்கலல்லவா?
ஒப்புமை வேண்டும். பிரபலங்களின் Portrait செய்யும்போது உருவ ஒற்றுமை இல்லாமல் இயலாதே? ஆனால் முன்பு சொன்னது போல நபரின் அக ஆளுமை அதில் வெளிப்பட வேண்டும். நபரின் உருவமல்ல. அதை போட்டோவாக எடுத்து விடலாம். நான் ஈ.எம்.எஸ்.இன் Portrait செய்தபோது அவரது முதுமைக்கால உருவத்தைத் தேர்வு செய்தேன். இடதுகைப் புத்தகப் பக்கங்களுக்கிடையில் அவர் ஒரு விரல் வைத்துக் கொண்டிருக்கிற நிலையில் வாசித்துக் கொண்டிருக்கிறார். வலதுகை சோர்வும் தளர்ச்சியும் உண்டென்றாலும் முஷ்டியைச் சுருட்ட இயலுமெனும் குறிப்புத் தோன்றச் செய்திருந்தேன். ஈ.எம்.எஸ்.இன் மனைவி வந்து பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்சிக்காரர்களுக்கும் பிடித்திருந்தது.
சிற்பக்கலை வாயிலாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சிற்பக்கலை வழியாக காட்சிக் கல்வியை அளிக்க இயன்றிருப் பதாகக் கருதுகிறேன். கலைப்பாரம்பரியத்தையும் அதன் வழியாக மன உலகங்களையும் மாற்ற இயன்றுள்ளதெனவும் கருதுகிறேன்.
இது எப்படி நிறைவேறியது?
நான் படைப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். வேறு எதிலும் நான் ஈடுபடவில்லை.
கலையின் இன்றைய சூழ்நிலைகள் பற்றி...
இன்று கலை சந்தை மயமாக்கப்பட்டுவிட்டது. அதாவது சந்தைக்கலையாக உள்ளது. கலைஞர்கள் நுகர்வோருக்கான உற்பத்திகளையே செய்து வருகின்றனர். அது சந்தையில் விற்பனையாக வேண்டும். எனவே அது பணமதிப்பு நோக்கு உடையது. ஒரு தொழில் சார் உற்பத்தியாதலால் அதில் கலைமதிப்பு குறைவு. பணமதிப்பு அதிகம். கலைஞர்களுக்கு வேலை செய்ய நேரம் வாய்ப்பதில்லை. பெரும்பாலும் றிக்ஷீஷீ ஓவியர்கள் கலைப்பணி தொழில்சார்ந்து விட்டதால் றிக்ஷீஷீ வேலையும் ஸ்டுடியோ வேலையும் செய்ய வேண்டி வருகிறது. சினிமா நடிகர் ஸ்டார் ஆவது போல ரசிகர் மன்றம் வேண்டும். அந்த நடிகர்கள் சினிமாவின் நடிப்புக்கலை பற்றி ஒருபோதும் வாய்திறக்க மாட்டார்கள். ஏழ்மை மிக்க நாடுகளில் மட்டுமே இப்படி நடக்கும். கலையை விற்கப் போகக் கூடாது. வாங்க ஆட்கள் வரவேண்டும்.
இங்கு கலை பிற ஊடகங்களோடு கொண்டுள்ள உறவு எப்படிப்பட்டது?
இங்கு அப்படியன்றுமில்லை. ஐரோப்பாவில் அப்படி யல்ல. பல ஊடகங்களில் பணியாற்றுபவர்கள், சிந்தனை யாளர்கள் இணைந்து செயல்படும் அமைப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நிகழ்கிறது. அங்கு புதிய கலை இயக்கங்கள் இவ்வாறு உருவாகின்றன. இங்கே அதுபோன்ற தொடர்புகள் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.
இதுவரை செய்த உங்கள் படைப்புக்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?
எனது படைப்புக்களுக்கு நிகரான வேறு படைப்புக்கள் இல்லை. இந்தியாவில் எங்குமே இல்லை. ஐரோப்பாவிலும் இல்லை. கேரளத்தின் பாரம்பரியம் இதை நிறைவேற்றியிருப்பதாக நான் கருதுகிறேன்.
குறிப்புகள்
மலம்புழா: பாலக்காட்டில் உள்ளது. மலம்புழா அணைக்கட்டு பூங்காவில்தான் புகழ்பெற்ற ‘யக்ஷி’ சிலை உள்ளது.
வேளி : திருவனந்தபுரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பூங்கா.
ஆசான் நினைவகம் : குமாரனாசானுக்கு கேரள அரசு உருவாக்கி வரும் நினைவகம். கானாயி அங்கும் சிற்பங்கள் உருவாக்கி வருகிறார்.
தெய்யம் : வடகேரளப் பகுதிகளில் இன்றும் இருந்து வருகின்ற நாட்டார்கலை.
சங்குமுகம் : திருவனந்தபுரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற ‘கடற்கன்னி’ சிலை அங்கு உள்ளது.
பய்யாம்பலம் : கண்ணூர் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ள சிற்பப் பூங்கா.
முக்கோலப் பெருமாள் : கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பம்.
உரையாடியவர்: எ.டி.மோகன்ராஜ்
தமிழில்: ந.மனோகரன்
('சமகாலிக மலையாளம்' சனவரி 2009 இதழில் வெளிவந்த பேட்டி)