ஓர் இனத்தின் சுய மரியாதை, அவர்களின் தொடர்ச்சியான தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தோடு தொடர்புடையது. தலித் பண்பாட்டு பழக்க வழக்கங்களும், அடையாளங்களும் அதிகமான தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. அவர்களுடைய பண்பாட்டிற்கான இடம் மேலதிகமாக நிராகரிக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினரின் நாகரிகப்படுத்தும் செயல்களும், தலித் மக்கள் மீதான ஒட்டுமொத்த அக்கறையின்மையும் - தலித் மக்களை பண்பாட்டு ஒதுக்குதலுக்கும் அடையாளச் சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கின்றன.
தலித் என்பது ஒரு ஜாதி அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பது குறித்த ஒரு கூட்டு விழிப்புணர்வு; சீரழிக்கப்பட்ட தலித்துகளின் விருப்பங்கள், கனவுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகர மாற்றங்களை அடைவதற்கானப் புரிந்துணர்வு.
ஓவியங்கள் மூலம் மாற்று வாழ்வியலை மீட்டெடுப்பதற்கான பண்பாட்டியல் கூறுகளை கண்டெடுத்து, அதன் மூலம் பொதுப் பார்வையில் அதற்கொரு புதிய பொருளை உருவாக்கும் வகையில், அண்மையில் கேரளாவில் நடைபெற்ற தலித் மற்றும் பழங்குடி ஓவியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட ஓவியங்களே இவை. இப்பயிற்சிப் பட்டறையை "விகாஸ் அத்தியாயன் கேந்திரா' (Vikas Adhyayan Kendra) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஓவியங்களை டாக்டர் அம்பேத்கர் மேற்கோள்களோடு (ஆங்கிலம்) நாட்காட்டியாகவும் வெளியிட்டுள்ளனர். கிடைக்குமிடம் : ஒயாசிஸ் புக்ஸ், 29/17, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004
பேசி : 98405 - 48257