sebastinbook

(Sebastian & Sons, A Brief History of Mridangam Makers, T.M.Krishna: (2020), Westland publication private Limited. Chennai - 600 096)

தமிழர்களின் பாரம்பரிய தோல் இசைக்கருவிகளுள் ஒன்று தண்ணுமை. இதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சியாக உருப்பெற்ற ஒரு தோல் இசைக்கருவியே மிருதங்கம். மத்தளம் என்ற பெயரும் இதற்கு உண்டு. ‘மிருதுத் தன்மையுடனும் மெதுவாகவும் கொட்டினால் எழும் இனிமையான ஒலியினால்’ மிருதங்கம் என்று இக்கருவி பெயர் பெற்றதாக நாராயணசாமி (1948: 19) குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இசைநிகழ்ச்சிகளில் சிறப்பான இடம் மிருதங்கத்திற்கு உண்டு. சதிர் (பரதநாட்டியம்) இசைப்பாடல், பாடலுடன் நிகழும் கதைகூறும் நிகழ்த்துதல் (கதாகாலட்சேபம்), பஜனை என்பனவற்றுள் இதன் பங்களிப்பு தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

மிருதங்கம் என்ற இசைக்கருவியை உருவாக்குவோரின் சுருக்கமான வரலாறாக இங்கு அறிமுகம் செய்யும் நூல் அமைந்துள்ளது. என்றாலும் மிருதங்கம் உருவான வரலாறு அதன் இசைநுட்பம் என்பனவற்றில் ஆசிரியர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மிருதங்கத்தில் உருவாக்குவதில் உள்ள தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வெளிப்படுத்துவதுடன் நூலாசிரியர் நின்றுவிடவில்லை. அதன் பின்னால் மறைந்துள்ள சாதி சார்ந்த நுண்ணரசியலை இந்நூல் நாம் அறிந்துகொள்ளும்படிச் செய்கிறது.

நூலாசிரியரும் நூலும்

இந்நூலாசிரியரான தோடூர் மாடபுசி கிருஷ்ணா 1976 -ல் சென்னையில் பிறந்தவர். எழுத்தாளராகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் இசைப்பாடகராகவும் விளங்குபவர். செவ்வியல் இசையை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்வதிலும் அம்மக்களின் கலைத்திறனை வெளிக்கொணர்வதிலும் ஆர்வம் கொண்டவர். இதன் அடிப்படையில் ‘சென்னை கலைத்தெருவிழா‘ ‘சென்னை புறம்போக்குப் பாடல் விழா‘ போன்ற எதிர்க்குரல் வெளிப்படுத்தும் கலைநிகழ்வுகளில் பங்காற்றி வந்துள்ளார்.

‘தென்னிந்திய இசை: கர்நாடகக் கதை‘ என்ற தலைப்பிலான தம் ஆங்கில நூலில் (2013) கர்நாடக இசை உலகில் இடம்பெற்றுள்ள சாதிய மேம்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இசைக்கருவி செய்வோரின் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ படைப்புத்திறன் குறித்தோ அதில் பதிவு செய்யவில்லை. இது அவருக்கு ஒரு உறுத்தலாகவே இருந்துள்ளதன் வெளிப்பாடாக இந்நூலை அவர் தனியாக எழுதியுள்ளார்.

மிருதங்கம் என்ற இசைக்கருவியின் வரலாற்றையோ அது தொடர்பான இசை நுட்பங்களையோ வாசகனுக்கு அறிமுகம் செய்வதைவிட அதை உருவாக்கும் கலைஞர்களின் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதில் இவர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மிருதங்கம் உருவாக்குவோரை மையமாகக் கொண்ட நூலுக்குள் நுழையுமுன் மிருதங்கம் என்ற இசைக்கருவி குறித்து சில பொதுவான செய்திகளை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

மிருதங்கம்

மத்தளம் அல்லது மிருதங்கம் என்று அழைக்கப்படும் இசைக்கருவியின் அமைப்பு குறித்து சி.கு.நாராயணசாமி (1948: 30 - 31) தம்முடைய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நடுவில் பெருத்தும், வலது இடது பக்கங்களிலும் வலப்புறம் சிறிது அளவு குறைந்தும் இடதுபுறம் சற்று அளவு விரிந்தும் இருக்கும். மண்ணினால் செய்யப்பட்ட இரு பூந்தொட்டிகளை வாயோடு வாய் பொருத்தினால் எவ்வாறு இருக்குமோ அவ்வுருவத்தைக் கொண்டிருக்கும்.”

என்கிறார். நம்முடைய கலைத்துறையில் உள்ள ஒரு வேறுபாடான ஒரு இயல்பு என்னவென்றால் நம் கலைகளை எவ்வாறேனும் தெய்வங்களுடனும் புராணங்களுடனும் இணைத்துவிடுவது. இது ஒருவகையில் குறிப்பிட்ட கலைக்கு புனிதத்தன்மையை வழங்கிவிடும். இவ்வகையில் மிருதங்கமும் புராணத்தன்மையை ஏற்றுள்ளது.

மிருதங்கன் என்ற அசுரனைக் கொன்று அவன் தலையைத் துண்டித்து, புலித்தோல் போர்த்தி உருவாக்கப்பட்டதே மிருதங்கம் என்றும் இக்கருவியை நந்திதேவர் இசைப்பதாகவும் ஒரு புராணச்செய்தி உண்டு (மேலது:6). சிவனுக்கு விருப்பமான இசைக்கருவி என்றும் மத்தள மாதவன் என்ற பெயரையும் தாங்கியவன் என்றும் வேறொரு புராணம் கூறும். சிவன் நடனமாட திருமால் மத்தளம் கொட்ட பிரம்மன் கைத்தாளம் போட கலை நிகழ்வுது போன்ற கோவிற் சிற்பங்களும் உண்டு (மேலது).

மிருதங்கத்தின் வலது பாகத்தில் சிவனும் இடதுபாகத்தில் விஷ்ணுவும் நடுப்பாகத்தில் பிரம்மனும் அமர்ந்திருப்பதாகவும் ‘ஓம்’ என்னும் பிரணவ நாதத்தை ஒலிக்கச் செய்வதாகவும் புராணச்செய்தி உண்டு (மேலது 99). இப்புராணச் செய்திகள் புனிதமான ஒன்றாக மிருதங்கத்தை அறிமுகம் செய்துள்ளன என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

மிருதங்கம் செய்வதற்கென்று சில குறிப்பிட்ட மரங்களை தமிழர்கள் தேர்வு செய்திருக்கின்றனர். அவை வருமாறு. தென்னை, பலா, வேம்பு, சந்தனம், கருங்காலி, தேக்கு, பனை, பூவரசு என்பனவாகும்.

மிருதங்கத்தின் தோல்

‘இரண்டு கைகளாலும் கொட்டி முழக்கும் தோல்கருவியான’ மிருதங்கம் சற்று வேறுபாடான முறையில் தோல்களால் போர்த்தப்பட்டுள்ளது. ஆட்டுத்தோல், பசுமாட்டுத்தோல் என்ற இரண்டு தோல்களும் மத்தளத்தில் இடம்பெற இத்தோல்களை இழுத்துக்கட்டும் நீண்ட வார் எருமைத்தோலால் ஆனது.

மிருதங்கம் வாசிப்போர்

இந்திய நாட்டின் நிகழ்த்துக் கலைகள், புராணங்களோடும் சாதிகளோடும் ஏதேனும் ஒருவகையில் இணைக்கப்பட்டிருக்கும் உண்மை நம் அனைவருக்கும் தெரியும். இவ்வகையில் மிருதங்கம் கொட்டுபவர் ‘உயர்குடிப் பிறநதவனாகவும் அழகுடையவனாகவும்’ இருக்கவேண்டும் என்று ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற நூல் குறிப்பிடுகிறது(மேலது) அதேநேரத்தில் இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது யார் உருவாக்குகிறார்கள் என்பது இம்மிருதங்க வரலாற்றில் வெளிப்படுத்தப்படவில்லை. இக்குறையை மிகச்சரியாகவே இந்நூல் போக்கியுள்ளது.

நூல் வெளிப்படுத்தும் செய்தி

நூலின் தலைப்பிற்கு ஏற்ப இந்நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞரான செபஸ்தியான் என்பவரையும் அவரது மகன்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதும் முயற்சியில் செல்வம் என்று அழைக்கப்படும் செல்வராஜ் என்பவரை எப்படியாவது சந்தித்து உரையாடவேண்டும் என்று நூலாசிரியர் முடிவெடுத்துள்ளார். இவர் மிருதங்கத்தை உருவாக்கி வந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

பாலக்காடு மணி அய்யர் என்ற புகழ்வாய்ந்த இசைக்கலைஞரின் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் மிருதங்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர். தஞ்சாவூரில் வாழ்ந்துவந்த இவர் சென்னையின் நங்கநல்லூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தவர். இவரை சந்திப்பதற்கு நங்கநல்லூர் சென்ற அனுபவத்தையும் நங்கநல்லூர் ஊர் உருவாக்கம் குறித்தும் சில சுவையான செய்திகளுடன் நூலைத் தொடங்குகின்றார்.

அத்துடன் மிருதங்கம் என்ற இசைக்கருவியின் அமைப்பு, அதன் வரலாறு குறித்த நுணுக்கமான செய்திகள் பலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். காவிரித் தண்ணீருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு குறித்த பிராமணர்களின் நம்பிக்கையையும் இவற்றின் ஊடாக வெளிப்படுத்துகிறார்.

தஞ்சையில் மராட்டியர் ஆட்சி நிலைபெற்றபின் மராட்டியப் பண்பாட்டுத் தாக்கம் அன்றைய தஞ்சை மாவட்டப் பிராமணர் வட்டாரத்தில் ஏற்பட்டதாகவும் இதன் ஒரு பகுதியாக மிருதங்கம் அறிமுகம் ஆனதாகவும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். மராட்டியர்களுடன் மிருதங்கம் தயாரிப்போர் வந்திருக்கலாம் என்ற வாய்மொழி வரலாறு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை ஆய்வுக்குரியன.

இவை ஒருபுறம் இருக்க இந்நூலின் மையச் செய்தியாக வெளிப்படுவது மிருதங்கத்தில் இடம்பெறும் பசுவின் தோல் குறித்து ஆசிரியர் கூறிச்செல்லும் செய்திகள்தான் என்று நான் கருதுகிறேன். இந்நூலை ஏற்கெனவே படித்தோரும் இனிமேல் படிப்போரும் என் கருத்தில் இருந்து மாறுபாடு கொள்ளலாம். எப்படியோ! என் வாசிப்பை இங்கு நான் பதிவு செய்துவிடுகிறேன்.

பசுத்தோலும் மிருதங்கமும்

ஆட்டுத்தோல், பசுவின் தோல், எருமையின் தோல் என மூன்றுவகையான தோல்கள் மிருதங்கத்தில் இடம்பெறுவதை கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். இதில் பசுவின் தோல் எவ்வாறு பெறப்படுகிறது என்பதை இந்நூலாசிரியர் சற்று விரிவாகவே எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்களுள் ஒருவரான உமையாள்புரம் கே.சிவராமன் அவுட்லுக் (2003) இதழுக்காக ஆனந்த் என்பவருக்கு அளித்த நேர்காணலின்போது மிருதங்கத்தில் இடம்பெறும் பசுத்தோல் குறித்து குறிப்பிட்டுள்ளார். மிருதங்கம் செய்வதற்கென்றே பசுக்களைக் கொல்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் எப்படியாயினும் அவை இறைச்சிக்காக கொல்லப்படப் போகின்றன, அவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்படும் பசுவின் தோல்தான் மிருதங்கம் உருவாக்கப் பயன்படும் என்பதாக அவர் கூற்று அமைந்திருந்தது. ஆனால் உமையாள்புரம் சிவராமனிடம் பணியாற்றிய ராஜமாணிக்கம் என்பவர் இதற்கு நேர்மாறாக மிருதங்கம் செய்வதற்காகவே பசு ஒன்றைத் தேர்வு செய்து அதனைக் கொன்று அதன் தோலை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

தம் தேடலின் ஒரு பகுதியாக நூலாசிரியர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள மாட்டிறைச்சிக்கூடம் ஒன்றிற்குச் சென்று பார்வையிட்டு கள ஆய்வையும் அங்கு நிகழ்த்தியுள்ளார். அவர் கேட்டறிந்த செய்திகளின் சுருக்கத்தைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

மிருதங்கம் ஒன்று தேவையென்று ஒருவர் கூறினால் மிருதங்கம் தயாரிப்பவர்கள் மாட்டிறைச்சிக்கூடத்துக்குச் செல்வார்கள். அங்கு வெட்டப்படுவதற்காக வந்துள்ள பசுவைப் பரிசோதிப்பார்கள். ஆரோக்கியமாகவும் நன்றாக மயிரடர்ந்து மென்மையான தோலைக் கொண்டதாக உள்ள பசு ஒன்றைத் தேர்வு செய்வார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் பசு இருமுறை கன்றை ஈன்றதாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் மிகவும் வயதானதாகவும் இருக்கக்கூடாது. இவ்விதிமுறையே, மிருதங்கத்திற்கான தோலிற்காகத் தேர்வு செய்யும் எருமைக்கும் ஆட்டிற்கும் பொருந்தும். இவையும் பெண்விலங்காகவே இருக்கவேண்டும். ‘சுத்தமத்தளம்’ என்ற மிருதங்கம் செய்ய காளையின் தோல்தான் தேவைப்படும்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் விலங்கின் தோலை உரிக்கும்போது அதிக அளவில் கத்திக் காயம் தோலில் இடம்பெறக்கூடாது. இவ்வாறு தென்படின் அதை ‘கத்தியடி’ என்பர். இவ்வாறு தோலின் தரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பசு, எருமை, ஆடு என்பன வெட்டப்பட்டு குறிப்பிட்ட முறையில் தோல் உரிக்கப்படும்.

சில மிருதங்கக் கலைஞர்கள் தானாகவே இறந்துபோன விலங்கின் தோலைத்தான் பயன்படுத்துகிறோம் என்று உண்மைக்கு மாறாகக் கூறுகிறார்கள். தானாக இறந்துபோன விலங்கின் தோல் மிருதங்கத்துக்குப் பயன்படாது என்று ஜான் பிரிட்டோ என்பவர் நூலாசிரியரிடம் கூறி அதற்கான காரணத்தையும் இவ்வாறு விளக்கியுள்ளார்:

மிருதங்கம் தயாரிக்க ஒரு விலங்கை வெட்டும்போது அதன் கழுத்து துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் அதன் உடலிலுள்ள தோலிற்குக் கீழேயுள்ள ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் வடிந்துவிடும். இதனால் தோலின் உட்பகுதியில் வெப்பம் இராது. இது தோலுக்கு நெகிழ்ச்சித் தன்மையைக் கொடுக்கும்.

ஆனால் இயல்பாக இறந்த விலங்கின் உடலில் ரத்தம் உறைந்து, அட்டை போன்று தோல் நெகிழ்ச்சியற்று இருக்கும். அதைத் தண்ணீரில் முக்கி உலரவைக்கும்போது தோல் விறைப்பாக இருக்கும். சில தோல் வியாபாரிகள் ஏமாறும் தன்மையுடைய மிருதங்கத் தயாரிப்பாளர்களிடம் தோலின் அடிப்பகுதியில் உப்பைத் தடவி தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்த விலங்கு என்று கூறிவிடுவர். இச்சூழ்ச்சியை அறிந்தவர் உட்பகுதியை நக்கிப் பார்த்து பூச்சிகள் உள்ளதா என்று கண்டறிவார்கள்.

பாலக்காடு மணி அய்யர் என்ற சிறந்த மிருதங்கக் கலைஞர் தேர்வு செய்த பசுவைக் கொன்றே மிருதங்கம் தயாரிக்கப்படுகிறது என்ற உண்மையை உணர்ந்தே இருந்தார். மிருதங்கத்திற்கான தோலைப் பெறுவதற்காகக் கொல்லப்படும் பசுவைத் தம் வீட்டிற்கே அழைத்துவரச் செய்து அதன் தோலின் தரத்தைக் கண்டறியும் ஆற்றல் அவருக்கு இருந்துள்ளது. அதை விலைக்கு வாங்கி அதைக் கொல்ல அனுமதித்துள்ளதும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செயல் மணிஅய்யரை பாதித்துள்ளது. ஏனெனில் ‘வேதவாத்தியம்‘ என்றே மிருதங்கத்தைக் குறிப்பிடுவார்கள். இப்படி ஒரு புனிதமான இசைக்கருவி செய்வதற்காக ஒரு பசுவைக் கொல்வது சரியானதுதானா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. இதற்கு விடைகாண காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியாரைச் சந்தித்து விடைகாணவேண்டும் என்று நினைத்துள்ளார்.

ஆனால் இதில் தயக்கம் ஏற்படவே மகாத்மா காந்தியால், தன் ‘மனசாட்சியின் பாதுகாவலர்’ என்றழைக்கப்பட்ட ராஜாஜியிடம் இக்கேள்வியைக் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தார். அவ்வாறு கேட்டபோது மிக நுட்பமான சாத்திரச் சான்றுகளை இவரிடம் கூறாமல் மிகவும் யதார்த்தமாக ‘நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது’ என்ற பழமொழியைக் கூறி இவருடைய வினாவுக்கு விடையளித்துவிட்டார்.

ஆசிரியர் தம் தேடலில் மிருதங்கம் செய்தது யார்? அதைப் பராமரித்துப் பழுதுபார்த்தது யார்? இவர்கள் சமூகத்தில் எங்கிருந்து வந்தார்கள்? இவர்கள் பின்பற்றிய தொழில்நுட்ப முறை என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடை கண்டுள்ளார். இவ்வகையில் மிருதங்கம் என்ற தோலிசைக் கருவியின் வரலாறாக இதைக் கொள்ளமுடியும்.

மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத்துறைகளில் ‘பொருள்சார் பண்பாடு‘ (மெட்டீரியல் கல்ச்சர்) என்ற வகைமை உண்டு. இந்நூல் அவ்வகைமையைச் சார்ந்ததுதான். ஆனால் அடிப்படையில் வேறுபாடான சில கூறுகளைக் கொண்டுள்ளது.

நூலின் முக்கியத்துவம்

மிருதங்கம் உருவாக்கத்தில் ஈடுபடும் தச்சர்கள், விலங்குகளின் தோலைத் தேர்வுசெய்து அதைப் பொருத்தும் தோல் தொழிலாளர்கள் என்ற இரு பிரிவினரின் தொழில்நுட்ப அறிவையும் மிக நுணுக்கமாக ஆய்வு செய்து நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். தகவலாளர்கள் கூறிய செய்திகளை மெருகூட்டாது உள்ளது உள்ளபடியே பதிவு செய்துள்ளார். சான்றாக, தஞ்சைப்பகுதி பசுவின் தோல்தான் .மிருதங்கம் தயாரிப்பில் பொருத்தமான தோல், சுவரொட்டிகளையும் ஞெகிழிக் கழிவுகளையும் உண்பதால் பசுவின் தோல் தரம் குறைந்துவிட்டது என்று கள ஆய்வில் கூறப்பட்ட செய்திகளையும் பதிவு செய்துள்ளமையைக் குறிப்பிடலாம்.

மிருதங்கம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தோல் வேலை செய்பவர்கள் தீண்டாமை என்ற சமூகக் கொடுமைக்கு ஆளானவர்கள். மிருதங்கக் கலைஞர்கள் சாதியப் படிநிலையில் மேலே இருப்பவர்கள். ஆயினும் இவ்விரு பிரிவினருக்கும் இடையே இணக்கமான நல்லுறவு நிலவியதை எடுத்துக் காட்டியுள்ளார். சிறந்த மிருதங்கக் கலைஞரான பாலக்காடு மணிஅய்யர் இசைநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, தம் மிருதங்கத்திற்குத் தேவையான தோல் தொடர்பான பணிகளைச் செய்யும் ஒருவரைத் தம்முடன் முதல்வகுப்பில் அழைத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருநாளைப்போவார் (நந்தனார்) வரலாற்றைக் கூறும் சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணம் நூலில் புலைப்பாடியில் வாழும் நந்தனாரின் சிவத்தொண்டு குறித்துக் குறிப்பிட்டுள்ளார் (செய்யுள்:1052-1053). அதில் சிவன் கோவில்களில் உள்ள பேரிகைக்குத் தேவையான தோல், விசிவார் (சாட்டை), வீணைக்கும் யாழுக்கும் தேவையான நரம்புகள், பூசைக்குத் தேவையான கோரோசனை1 என்ற மணப்பொருள் ஆகியனவற்றை நந்தனார் வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொருள்கள்

1 கோரோசனை: இது மஞ்சள் நிறமான ஒரு மணப்பொருள். தோலுரிக்கப்படும் பசுவின் வயிற்றில் இருந்து கிடைப்பது.

இறந்த மாட்டைத் தோலுரிப்பதால் கிடைப்பவை. சேக்கிழாரின் காலம் கி.பி 12ஆவது நூற்றாண்டாகும். அப்போதே தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவினரின் உதவியுடனேயே இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியே மிருதங்க உருவாக்கத்தில் தீண்டாமைக்கு ஆட்பட்டுள்ள மக்கள் பிரிவினரின் பங்களிப்பு.

தீண்டாமையைக் கடைபிடிக்கும் வைதீகம் தனக்குத் தேவை ஏற்படும்போது அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் தன்மையது என்பதை நாம் உணரும்படி இச்செய்திகள் உணர்த்துகின்றன.

பின்இணைப்புகள், துணைநூற் பட்டியல், பொருள்சுட்டி என்பன நீங்கலாக 399 பக்கங்களைக் கொண்ட இந்நூலிலிருந்து மிருதங்க உருவாக்கத்தில் இடம்பெறும் பசுத்தோல் குறித்த செய்தியை மட்டுமே இக்கட்டுரையில் வெளிப்படுத்துவது முழுமையான நூல் அறிமுகமாகுமா என்ற வினா எழுவது இயற்கை.

இன்றைய சமூக நிகழ்வுகளே இதற்குக் காரணம் என்பதுதான் இவ்வினாவுக்கான விடையாகும். பால் வற்றிப்போன, கிழடுதட்டிப்போன பசுக்களை விலைக்கு வாங்கி அழைத்துச் செல்வோரும் கொல்லப்பட்ட பசுவின் இறைச்சியை விற்போரும் கொடும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். கும்பல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.

கொலையும் செய்யப்படுகிறார்கள். பிணையில் வரஇயலாத குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். இத்தகைய சமூகச்சூழலில் மிருதங்கம் என்ற இசைக்கருவியின் மீது போர்த்தப்பட்டுள்ள புனிதப் போர்வையை இந்நூல் விலக்கிக் காட்டுகிறது. மிருதங்கத்தில் மறைந்துள்ள சாதி-மதம் சார்ந்த ஒரு நுண்ணரசியலை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

துணைநின்ற நூல்

1. சி.கு. நாராயணசாமி முதலியார் (1948) மத்தளம் கற்கும் முறையும் அதன் சிறப்பு வகையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ் வெளியீடு

2.ஸ்ரீமத் திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள்.(2014) சேக்கிழார் நாயனார் அருளிச் செய்த பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம்.(முதற் காண்டம்) தருமை ஆதீனம் வெளியீடு மயிலாடுதுறை

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It