இக்கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.Landscape and Poetry என்ற நூலில் இடம்பெற்றுள்ள Nature Poetry Compared என்ற கட்டுரை மொழியாக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சேவியர் தனிநாயகம் தமிழ் செவ்விலக்கியப் பாடல்களில் உள்ள இயற்கைக் கூறுகளை; சமசுகிருதப் பாடல்கள், கிரேக்கம் மற்றும் இலத்தீன் பாடல்கள், ஆங்கிலமொழிப் பாடல்கள் ஆகியவற்றில் காணப்படும் இயற்கைக் கூறுகளோடு ஒப்பாய்வு செய்துள்ளார். சமசுகிருதப் பாடல்களில் காணப்படும் இயற்கை குறித்த அதீதக் கற்பனைகள் தமிழ் இயற்கைப் பாடல்களில் காணமுடியாது. சமசுகிருதத்தில் பூக்கள் வெறும் வர்ணனை மரபில் உள்ளன. ஆனால் தமிழ்ச் செவ்விலக்கியப்பாடல்களில் பூக்கள் குறியீடுகளாகப் பாடப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் சமயமரபு உள்வாங்கப்படவில்லை. ஆனால் சமசுகிருதமரபு சமய மரபை உள்வாங்கியுள்ளது. ஹோமர், ஹெசாய்டு, தியோ கிரிடஸ் ஆகியோர் சங்கப் புலவர்கள் அளவிற்கு இயற்கையை உள்வாங்கவில்லை. சங்க இலக்கியத்தில் நகரங்கள் பெண்ணுக்கான உவமையாகக் கூறப்பட்டுள்ளன. வேறு எந்த இலக்கியத்திலும் இத்தன்மை இல்லை. ஆங்கிலத்தில் காணப்படும் இயற்கைப் பாடல்களைவிட தமிழில் உள்ள இயற்கைப் பாடல்கள் வளமாக உள்ளன. பல்வேறு மொழிகளில் இயற்கை வெளிப்படுத்தப்படும் முறைமையிலிருந்து சங்கப் பாடல்களின் வெளிப்படுத்தும் முறை வேறுபட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழில் தோன்றிய இயற்கைப் பாடல்களை ஆங்கில அல்லது ஐரோப்பியப் பாடல்களோடோ அல்லது சமஸ்கிருதப் பாடல்களோடோ ஒப்பிட இயலாது. எனினும் அவ்வப் பாடல்கள் தோன்றிய நிலப்பரப்பின் இயற்கைச் சூழல் ஆய்வுக் கான அடிப்படைக் காரணியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவின் இயற்கைச் சூழல் குறிப்பிட்ட அமைதி நிலையையும் கட்டுப்பாடுகளையும் கொண்டது. ஆசிரியர் அதனை யும் உற்று நோக்கியுள்ளார். அதன் மலைகள் மிக உயர்ந்தும் வியப்பில் ஆழ்த்தக் கூடியனவாகவும் உள்ளன. வானளாவிய உயரத்தில் மிதப்பவை போலக் காட்சியளித்துக் காண்போரை வசப்படுத்தக் கூடியவை. ஆனால் தென்னிந்தியாவில் உள்ள மலைகள் பசும் காடார்ந்த பகுதியாகவும் தொடர்ந்து மாறுதல் களுக்குட்பட்டும் காணப்படுகின்றன. ஐரோப்பாவில் சூரிய உதயமும் மறைவும் சிவப்பு அல்லது இரத்தச் சிவப்பு நிற முடையது.

ஆனால் அந்தியிருள் மாலை ஃப்ரா ஆஞ்சலி கோவின் ஓவியங்களில் உள்ளது போல அடர்த்தியற்ற அல்லது வெளிர் சிவப்பு நிறத்தையுடையது. ஆனால் வெப்ப மண்டலப் பகுதியின் அந்திமாலை போன்று அடர்ந்த நிறம் வேறெங்கும் இல்லை. ஐரோப்பாவின் நிலக்கிடக்கை புனைவற்ற அமைதி நிலையுடையது. அவர்கள் கூறியது போல ஜெர்மனியில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய நாடுகளிலும் ரோஜா மலர்கள் பொலிவுடையன. கரோத்தின் படத்தில் ரஃபீலின் பழைய மடோனா ஓவியங்களில் காணப்படுவது போன்ற அமைதி நிலை, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இல்லை. இங்கு இயற்கை யின் செழுமை அளவிறந்தும் புனைவுகளோடும் காணப்படுகின்றன.

மரங்களும் மலர்களும் அந்திமாலைப் பொழுதும் மிகப் பொலிவுடையவை. ஒரு கவிஞன் திருப்பரங்குன்றத்தில் காணப்படும் பல்வேறுபட்ட மலர்களைக் கதிரவன் உதிக்கும் கிழக்கு வானத்து வண்ணங்களோடு ஒப்பிடுகிறான். எங்கு நோக்கினாலும் நிறைவும் எல்லையற்ற செழுமையும் நிறை வான உயிர்ப்புமே இயற்கையின் வெளிப்பாடாக உள்ளது. மிதமிஞ்சிய இவ்வண்ணப்பகட்டு இலக்கியங்கள், உடை அலங்காரங்கள் என்று இந்நாகரிகத்தின் அனைத்துக் கூறுகளி லும் காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் இயற்கை அலங்காரமிக்கதாகவும் அணி நலமிக்கதாகவும் காணப்படுவதால் தென்னிந்திய கலைகளும் இசை, இலக்கியம், சிற்பம், ஓவியம் முதலிய அனைத்தும் நுட்பமானதாகவும் மிகுந்த ஒப்பனைகளைக் கொண்டதாகவும் விவரணங்களையுடையதாகவும் அமைந்துள்ளன. தென்னிந் தியக் கோயில்கள் அங்கு உருப்பெற்ற பாடல்களோடு ஒத்திசை வுடையனவாக உள்ளன. விவரணத் தொகுப்புகளாக செதுக்கப் பட்ட கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கோயில்களில் உள்ள மிகப்பெரிய கோபுரமாக எழுப்பப்பட்டுள்ளது. அதைப்போலவே தமிழ்ப்பாடலும் ஒன்றோடொன்று தொடர் புறுத்திப் பாடப்பட்டுள்ளது.

பண்டைய நெடும்பாடல்களும் கூட ஆங்கில இலக்கணத்தின்படி முதன்மை வாக்கியம், எண்ணற்ற துணை வாக்கியங்கள் சேர்ந்து ஒரு அலகாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றோடொன்று தொடர் புடையதாகவும் முழுமையான பொருளைத் தருவதாகவும் உள்ளன. இத்துணை வாக்கியங்களுக்குள் சொற்றொடர்கள் அமைந்திருக்கும். இத்தொடருக்குள்ளாக பெயரடைகளும் அவற்றோடு தொடர்புடைய பெயர்ச்சொற்களும் உள்ளன. மரத்தின் கீழ் தலைவி நின்று கொண்டிருப்பதைக் கூற வந்த புலவர் மரம் நிற்கும் இடம், அம்மரம் தாங்கியுள்ள இலைகள், மலர்கள், அம்மலர்களைச் சுற்றும் வண்டுகள், மரத்தண்டின் அளவு, நிறம் முதலிய பல விவரணங்களையும் தனித்தனி வாசகங்களாக அல்லது தொடர்களாகக் கூறுவர். ஆங்கிலப் பின்புலத்தில் உருவாகிய எளிமையான அமைப்புடைய நவீன ஆங்கில இலக்கியத்தை வாசித்துப் பழகியவர்களுக்கு மேற் கூறப்பட்ட பாடல் உருவாக்க முறைமை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் தமிழ்ப் பின்புலத்தில் உருவாகிய தமிழ் நுண்கலைகளைப் பழகியவர்களுக்கு இவ்வமைப்பு குழப்பத்தை விளைவிப்பதில்லை. காஞ்சிபுரம் அல்லது சிதம்பரம் கோயில் கோபுரங்களை புறத்தோற்றத்தில் பார்த்தி யோன் (கிரேக்க ஆலயம்) உடன் ஒப்பிட்டு நோக்கும் போது கிரேக்கத்திற்கும் தமிழுக்குமான வேறுபாட்டை நம்மால் காணமுடியும்.1 இலக்கியங்களில் பண்டைய நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் பதிவாகியுள்ளன. காளிதாசரின் பாடல்களை வேர்ட்ஸ்வேர்த்தின் முல்லைப்பாடல்களோடு ஒப்பிடுவதைவிட வெர்ஜிலின் முல்லைப்பாடல்களோடு ஒப்பிடுவது எளிமை. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று. இதுவே இந்தியக் கலைகள் குறித்த ரஸ்கின் தவறுதலான கணிப்பிற்கும் கூர்ந்த அறிவுடைய விமர்சகரான ஆலிஸ் மைனல் அவற்றைப் பாராட்டுவதற்குமான வேறுபாடாக உள்ளது.

சமஸ்கிருதப் பாடல்கள்

சமஸ்கிருத, தமிழ்ப்பாடல்களுக்கும் மேற்கத்திய பாடல் களுக்கும் இடையே இயற்கை சார்ந்த கற்பனை நலன்களின் ஒப்புமை இயல்பாகவே மிக அதிகம். திணைசார் தாவரங்கள், திணைசார் உயிரினங்கள் போன்ற குறிப்பிட்ட பொதுவான காலநிலை அம்சங்களும் திடீர் என்று அல்லாது சீரான வளர்ச்சியின் ஊடாக ஏற்பட்ட பரஸ்பரத் தாக்கங்களுமே தமிழ் இயற்கைப் பாடல்களுக்கும் சமஸ்கிருத இயற்கைப் பாடல் களுக்கும் இடையிலான ஒப்புமைக்குக் காரணம். இவ் வொப்புமை இயற்கை சார்ந்த சொல்லாடல்களிலும் ஆண்-பெண் வருணனைகளிலும் இயற்கை சார்ந்த தொன்மங்களிலும் நாட்டார் வழக்காறுகளிலும் காணப்படுகின்றன. காட்டாக, மலைகளை பூமித்தாயின் முலைகளாகவும் பெண் முகத்தை நிலவாகவும் மேகங்களை யானையாகவும் வருணிப்பது இயல்பு. இளவேனிற்கான வருணனைகளிலும் பொது இயல்பு களைக் காணமுடியும். ஆனால் சங்க இலக்கியங்களுக்கும் சமஸ்கிருத இயற்கைப் பாடல்களுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.2

ரிக் வேதத்தின் பெரும்பகுதி சமய உணர்ச்சிப் பாடல்களாக உள்ளன. பத்தாம் பகுதி மட்டுமே சமயச் சார்பற்ற பாடல்களைக் கொண்டுள்ளன. History of Sanskrit Literature என்கிற நூலின் ஆசிரியர் ஏ.மெக்டோனல் குறிப்பிடுவதாவது “ரிக் வேதத்தின் பாடல்கள் இறை வழிபாட்டுப் பாடல்களாகவே உள்ளன. மேலும் அவை தொன்மங்களாகவும் விளங்குபவை.

இயற்கை நிகழ்வுகள் கடவுள்களாக வளர்ச்சியுறுதல் என்னும் தற்குறிப்பேற்றச் செயல் மிகப்பழமையான ஒன்று. இயல்பு வாழ்க்கையில் மனிதனால் நிகழ்த்த முடியாத செயல் களை/நிகழ்வுகளை வேதகால இந்தியன் அதாவது மிகவும் வளர்ச்சியுறாத சமூகத்தைச் சேர்ந்த மனிதன் இயற்கை நிகழ்வு களை கடவுளாக ஏற்றிக் குறிப்பிடுவது இயல்பு. அந்த இயற்கை நிகழ்வுகள் அவனுக்கு மிகுந்த வியப்பை அளிக்கக் கூடிய தாகவும் உள்ளன. அவன் இயற்கையின் செயல்பாடுகளை குழந்தை மனநிலையில் வியப்பாகவே காண்பான். ஒரு கவிஞன் கேட்கிறான் ஏன் சூரியன் வானத்தினின்று விழ வில்லை; இன்னொரு அதிசயமாக விண்மீன்கள் தினமும் காலையில் எங்கு செல்கின்றன; மூன்றாவது அதிசயமாக அனைத்து ஆறுகளும் கடலில் தொடர்ந்து விழுந்து கொண் டிருந்தாலும் கடல் ஏன் இன்னும் நிறையாமலேயே உள்ளது”3.

கடவுளர் மற்றும் சமயக் கோட்பாட்டில் வடக்கத்திய கருத்துருவாக்கத்திற்கும் தெற்கத்திய கருத்துருவாக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. இயல்பாக அல்லது எதார்த்தமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தமிழ்க் கவிஞனால் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பெறும் முப்பத்து மூன்று கடவுளர் குறித்தும் அவர்களோடு தொடர்புடைய மிக விரிவான தொன்மங்கள் குறித்தும் விளங்கிக் கொள்ள இயலாது. சங்க இலக்கியம் ஆரியச் சமயத்தாலும் கொள்கைகளாலும் பிற்காலத் தில் தாக்கம் பெற்றது என்பதை மிகத் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியும். எனினும் ஆரியத் தாக்கம் பெறாத எஞ்சிய பகுதிகள் அதற்கே உரிய பண்பான எதார்த்த/இயல்புத்தன்மை கொண்டுள்ளது.

தமிழரின் கருத்துருவாக்கம் இயற்கை மீது மனிதப்பேற்றிக் கூறும் தன்மை கொண்டது. எனினும் அவை ஆரியர்களின் தெய்வக் கோட்பாட்டைப் போல அண்டப்பிறப்புக் கோட் பாட்டைப் போல அதீத கற்பனை கொண்டவை அல்ல. பிற் காலத்தில் ஆரியர்களின் கற்பனைப் பண்பு அறிமுகப்படுத்தப் படும் வரை பண்டைய தமிழர்கள் அரசர்களுடைய தோற்றத் திற்கு தெய்வீகத் தன்மை (புராண மரபு) சார்த்திக் கூறியதில்லை. இமயம் அல்லது கங்கையின் தோற்றத்தை பிற்காலக் கவிஞர்கள் குறிப்பிட்டது போல தமது மலைகளுக்கும் ஆறுகளுக்கும் தெய்வீகத் தோற்ற வரலாற்றைக் கூறியதில்லை. வடக்கினின்று ஆரியப் புரோகித சாதியினர் அறிமுகப்படுத்தும் வரை வேதத்தில் குறிப்பிட்ட பலிகளையோ வேள்விகளையோ இவர்கள் செய்ததில்லை.

இவர்கள் தமது கடவுளருக்கு மலையினின்று பெறப்பட்ட பொருட்களையும் தமது குழுவினரால்/குடியினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையுமே படைத்தனர். சோமபானம், அக்னி ஆகிய வழிபாடு அவர்களிடையே வளருவதற்கு/வழக்கத்தில் வருமுன்னரே அவற்றையட்டி இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னரே தினை, செம்மறி ஆட்டுக்கிடாயின் குருதி, தேன், கள் ஆகியவற்றையே கடவுளருக்குப் படைத் தனர்.

பூக்களையோ இலைகள் கனிகளையோ படைத்து “பூஜித்தல்” என்னும் சடங்கு பண்டைய வேத இலக்கியங்களில் இல்லை. இத்தகைய சடங்குகள் திராவிடர்களிடம் உள்ளது. பகவத்கீதையில் பல முறை எடுத்தாளப்பட்ட இது வேதத்துவ பிராமணியத்தால் தனதாக்கப்பட்ட திராவிடச் சடங்கு.4

“ஆன்ம நேர்த்தியுடைய ஒரு மனிதன் இலை, மலர், கனி, நீரைப் பக்தியுடன் எனக்குப் படைப்பானாயின் நான் அதை ஏற்றுக் கொள்வேன்”

இடி முழக்கத்தை வெற்றிக் கொட்டமாகத் தமிழர்கள் கருதினாலும் கூட இடியேற்றை உண்டாக்கும் ‘வியாழன்’ கடவுள் அவர்களிடம் இல்லை. குதிரைகள் காற்றைப் போலப் பறக்கின்றனவாகவும் குன்றுகளின் நறுமணத்தை அவை கொண்டு செல்வதாகவும் கருதும் தமிழர்களிடம் காற்றைக் கட்டுப்படுத்தும் ‘எலியாஸ்’ இல்லை. அலைகளின் மீது திரிசூலம் ஏந்தி எழும் கிரேக்கக் கடல் தெய்வமான நெப்டியூன் அலைகளின் வெண்நுரைகளை மூத்தோரின் வெள்ளிய நரையாகக் காணும் தன்மை தமிழர்களிடம் இல்லை.

ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள அல்லது விழாக்கால வீடுகளையோ நகரினையோ அலங்கரிக்க பூக்களையும் இலை/மலர் மாலைகளைப் பயன்படுத்தியமை குறித்து சமஸ்கிருத/வடமொழிப் புராணங்களில் பெரும்பான்மைக் குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தில் பூக்கள், மலர் மாலைகளின் பயன் பாடு மேற்கூறப்பட்ட தன்மையினின்று மாறுபட்டும் அதற் குரிய அடையாளமும் குறியீட்டுத்தன்மையும் கொண்டதாக விளங்கியுள்ளது. கபிலர், காளிதாசர், வெர்ஜிலின் பாடல்களில் மரங்களின் பெயர்களும் மலர்களின் பெயர்களுமே தனிச்சிறப் புடையனவாக விளங்கியுள்ளன. குளிர் பகுதி வாழுநர்களுக்குக் கதிரவன் பெருமகிழ்ச்சியான ஒன்று என்பதைக் காட்டும் வகையில் கதிரவனைப் பற்றிய புகழ்பாடல்களைக் கொண்ட  யுதிஷ்டிராவின் நளோபாக்யானாவில் கதிரவனைச் சுட்டும் 108 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது போல தமிழர்கள் மாலைப் பொழுதைக் கொண்டாடுகின்றனர்.

“ஓ கதிரவனே குளிர்காலத்தில் வாடும் ஒருவருக்கு உன்னுடைய கதிர்களை விட நெருப்போ, புகலிடமோ, கம்பளி ஆடைகளோ மிகுந்த இதமளிப்பதில்லை”

காடுறைத் தெய்வமா, மலையுறைத் தெய்வமா அல்லது நீருறைத் தெய்வமா என்று தமயந்தியிடம் துறவிகள் கேட்கின்றனர். அவள் காட்டில் உள்ள அழகான அசோக மரம் ஒன்றைக் காட்டி தன்னுடைய நளனைக் கண்டறிய வேண்டு கிறாள். மலைகள், காடுகள், நீரோடைகள் ஆகியவற்றின் விவரணங்கள்/வருணிப்புகள் மிக ஆழ்ந்த உணர்வுகளோடு காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துறவிகளின் குடியிருப்புகளையும் நாடுகடத்தப்பட்ட /தொலைதூரப்பட்ட இளவரசர்களின் குடியிருப்புகளையும் சித்திரிக்கும் பகுதிகள் மிக ஆழமானவை. இது போன்ற சூழல் சித்திரிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. பின்னாளில் இந்தியா முழுவதும் இராமன் சீதையின் அவலச்சூழலே சிறந்த காவிய உதாரணமாகப் பிற்காலக் கவிஞர்களால் எடுத்தாளப்பட்டது.5

தமிழ்ப்பாடல்களில் ‘இளஞ்சூரியன்’, ‘எழுஞ்சூரியன்’ என்பவை தொழுதற்குரியனவாகக் கூறப்பட்டுள்ளன. கவிஞர்கள் கதிரவனின் உதயத்தையும் மறைவையும் மிக விரிவாகச் சித்திரித்துள்ளனர். என்றாலும் அவை கடவுளின் கண்கள் என்றோ விடியலின் துணைவன் என்றோ ஆரம்பகாலக் கவிதைகளில் பேசப்படவில்லை.

சாவித்திரியோடு தொடர்புடைய அந்திப் பொழுதைக் குறித்த ஒரு பாடல்6

“மிக விரைவில் பெற்ற, அவன் இப்போழ்து அவற்றைக் கட்டவிழ்ப்பான்

துரிதமான தேரில் அமர்ந்து கொண்டு செல்கிறான்

அவற்றின் வேகத்தைப் பறீட்சிக்கிறான் பாம்புகள் இழைவதைப்போல

சாவித்திரியின் கட்டளைப்படி இரவு வந்தது

நெசவாளன் தான் விரித்த வலையினைச் சுருட்டுகிறான்

கடும் உழைப்புக்கிடையில் திறனாளிகள் ஓய்வடைகின்றனர்

பறவைகள் தன் கூட்டை நோக்கிச் செல்கின்றன

விலங்குகள் தன் புகலிடம் நோக்கிச் செல்கின்றன

அனைத்துமே கலைந்து செல்கின்றது சாவித்திரியைத் தவிர”

இப்பாடல் மாலைக்கால இயற்கையோடு தொடர்புடைய நெய்தல் அல்லது முல்லைப் பாடலோடு ஒப்பிடத்தக்கது. இவ்விருவகை இலக்கியங்களிலும் சில சித்திரிப்புகள் ஒப்புமை கொண்டவையாகவும் சில வேறுபட்டும் காணப்படுகின்றன. தமிழர் சமயம் இயற்கையைக் கடவுளாகப் பிற்காலத்தில் உருப்படுத்தத் தொடங்கியது.

காட்டாக, சமயச்சார்பற்றதும் காதலையும் வீரத்தையும் பாடும் பாடல்கள் மறைவாக/குறிப்பாகச் சமயம் குறித்துப் பேசின. பரிபாடல் சமயத்தை மிக வெளிப்படையாகப் பேசுகின்றது. சங்க இலக்கியம் சமயத்தை உள்வாங்காத சம காலத்தில் கிரேக்க/லத்தீன் மற்றும் சமஸ்கிருதத்தில் சமயம் ஓரளவு உள்வாங்கப்பட்டிருந்தது. ஏனெனில் கிரேக்கர்களிடமும் லத்தீன் மக்களிடமும் வட இந்தியக் கவிஞர்களிடமும் மிக வளர்ச்சியுற்றிருந்த தொன்மவியல் தமிழர்களிடம் இல்லை.

மனிதன் வணங்கத்தக்க அதீத இறைமையியல் சார்ந்த ஒன்றாக இயற்கை விளங்குகிறது என்று பாடும் இயல் புடையன. முருகன் மீதும் திருமால் மீதும் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் மட்டும் இவற்றோடு ஒப்புமை கொண்டவையாக உள்ளன. ஏனெனில் அவை பிற்காலத்தைச் சேர்ந்ததாகவும் ஆரியத்தின் தாக்கம் வளர்ந்து வருவதற்குச் சான்றாகவும் விளங்கியவை. புரோகிதச் சாதியைச் சேர்ந்த கவிஞர்களுக்கு கவிதையின் முதன்மைப் பொருளாகவும் எழுச்சியூட்டும் பொருளாகவும் சமயம் விளங்கியது. இயல்பான மக்களாக வாழ்ந்த தமிழ்க் கவிஞர்களுக்கு காதலும் போரும் அறம் சார்ந்த நடத்தைகளுமே கவிதையின் பொதுவான பொருண்மைகளாக விளங்கின.7

சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய இயற்கைப் பாடல்களை விட சங்க இலக்கியங்களே பெரும்பாலும் இயற்கையைப் பின்புலமாகக் கொண்டு பாடப்பட்டவை. காளிதாசரை பண்டைய காலத்திற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். அவர்தம் நாடகங்களும் காவியங்களும் பிற்கால தமிழ்ப் பாடல்களோடும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற காப்பியங்களோடும் ஒப்பிடத்தக்கவை. பெரும் பாலான சங்கப்புலவர்களின் காலத்திற்கு இரண்டு/மூன்று நூற்றாண்டுகள் பிந்தையவர் காளிதாசர். இயற்கை உவமைகளை மிக நேர்த்தியாகப் பயன்படுத்துவதும் மிக ஏராளமான மலர்களையும் இலைகளையும் இவர்தம் கதைமாந்தர்களால் பயன்படுத்தப்படுவதும் இவருடைய மலைசார்ந்த உணர்வு நிலைகளும் சங்க கால இயற்கைப் பாடல்களோடு ஒப்புமை கொண்டவை. இந்திய இலக்கியங்களில் சமஸ்கிருதம் மற்றும் பாலியைத் தவிர்த்து கிடைக்கக்கூடிய ஒரே இலக்கியமான பண்டைய தமிழ் இலக்கியத்தின் அறிமுகமில்லாத ஒருவருக்கு இவை மிகுந்த வியப்பை அளிக்கலாம்.8

மேலும் இவை தவிர, சகுந்தலை(அங்கம். 4) வரிகளான;

“மலபார் குன்றுகளின் மீதுள்ள சந்தன மரத்திலிருந்து உரிக்கப்பட்ட பட்டை போல நான் எனது தந்தையின் மார்பிலிருந்து கிழிக்கப்பட்டேன்.”

 இவ்வரிகள் பொதுவான செய்தியை/கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதைவிட தென்பகுதியை அவர் அறிந்து வைத்திருந்தார் என்பதையே காட்டுகிறது. அதேசமயம் இயற்கையைப் பற்றிய இவரது அடிப்படைக் கருத்துக்கள்/சித்திரிப்புகள் சமஸ்கிருதப் பாடல் களுக்கே உரிய தனித்த பண்புகளோடு மிகுந்த ஒப்புமை கொண்டவை. கடல் பற்றி பெரிய அளவிலான எந்த உணர்வு நிலையும் தென்படவில்லை. மலைகள், ஆறுகள், மரங்கள் குறித்த அவரது சித்திரிப்புகள் பேராசிரியர் ரைடல் குறிப்பிடுவது போல சங்க இலக்கியத்தில் இல்லாத பகுப்புணர்வைக் கொண்டுள்ளது.

காளிதாசரின் ரீது-சம்ஹாரத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் அதில் கூறப்படும் காலநிலையிலமைந்த சங்க இலக்கியத்தின் சில பாடல்களையும் ஒருங்கே வைத்துப் படிக்கும் போது காலநிலைகளைச் சித்திரிப்பதில்/விளக்கியுரைப்பதில் எந்த அளவிற்குப் பழமையானதாகவும் மிக வளர்ச்சியுற்ற நிலை யிலும் தமிழ்க்கவிதையியல் அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். காலநிலைகளைப் பற்றிய காளிதாசரின் கருத்துக்கள் சங்கப் புலவர்களோடு முரணியும் ஆரம்பகட்ட நிலையிலும் உள்ளன. கவிஞனின் இளநிலை முயற்சியாகவே இதனை ஆய்வாளர்கள் கருதினர். மேலும் கருத்தை/காட்சியை உருப்படுத்திக் காட்டுவதில் புறநிலையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுவதற்காக இது எடுத்துக் கொள்ளப்பட்டது.

காளிதாசர் காலநிலைகளையும் அதையட்டிய நில இயல்புகளையும்/சூழல்களையும் விவரித்துள்ளார். ஆனால் அவை காதலின் பல்வேறு படிநிலைகளையோ காதலர்களின் வேறுபட்ட மன உணர்வுகளையோ குறியீடாக/உள்ளுறை யாகச் சுட்டுவதாக விளக்கப்படவில்லை.9 புணர்தலிலும் பிரிதலிலும் மட்டுமே கருத்தைச் செலுத்தியுள்ளார். நில இயல்புகளைப் பற்றிய இவரது விவரிப்புகள் சில தமிழ்ப் புலவர்களோடு ஒப்புமையுடையனவாக உள்ளன. ஏனெனில் மத்திய இந்தியாவின் பருவ காலநிலைகள் தமிழகப் பருவ காலநிலைகளோடு குறிப்பிடத்தக்க ஒப்புமை கொண்டவை. ஆனால் இயற்கையின் மறுமலர்ச்சியையும் வாழ்க்கையின் புதுமைத்தன்மையையும் காளிதாசர் தன்னுடைய காண்டங் களில் காலநிலைகளூடே விவரித்துள்ளமை தென்பகுதிக்கு ஏற்புடைத்தன்று.

முதற்காண்டத்திலிருந்து வேனிற்காலம் குறித்த கீழ்க்கண்ட வரிகள் தமிழ்ப்பாடல்களில் உள்ள பாலைத் திணையோடு ஒப்பிடத்தக்கவை.

“பயணிகளாகிய தலைவன்மார்கள் தத்தம் தலைவியை விட்டுப் பிரிதல் என்கிற தீயால் வாடியதால் தாங்க இயலா கொடுங்காற்றின் காரணமாக பூமியில் குவிந்து கிடக்கும் தூசுக் குவியலைச் சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் சூடேறிக் கிடப் பதைக் காண்பதற்குக் கூட இயலவில்லை. கடுஞ்சீற்றமுடைய சூரியனால் கடுமையாகச் சுட்டெரிக்கும் வெயில் அவர்களின் அண்ணத்தை தாகத்தால் வளரச் செய்தது. விலங்குகளோ வேறுகாட்டை நோக்கி நகரத் தொடங்கின. சூரியக் கதிர்களால் ஏற்படும் கொடும் வெப்பத்தால் காட்டுப் பன்றிகளின் கூட்டம் நீரின்றி வறண்டு மணலால் நிரம்பிக் கிடக்கும் குளத்தைத் தம் கூரிய முகத்தால் குடைந்து கொண்டிருக்கும். அத்தகைய வறண்ட நிலத்தில் ‘பத்ர முஸ்தா’ என்கிற புல்லைத் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை.

இலைகள் உதிர்ந்த மரங்களின் மீது அமர்ந்து கொண்டு எல்லா பறவைகளும் தவித்துக் கொண்டிருக்கும். அயர்ச்சியுற்ற குரங்கினங்கள் மலைக்குகைகளில் சென்று தங்கும்.

காட்டுத் தீயால் நிலத்தின் எல்லா பகுதிகளும் எரியூட்டப் பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் பரவிய காட்டுத் தீ எல்லா விலங்கினங்களையும் துன்புறுத்தியது. காற்றினால் மேலும் வளர்ந்த தீ மலைப்பள்ளத்தாக்குகளையும் எரித்தது. காய்ந்த மூங்கில்களில் பட்டு பெரும் சப்தத்தோடு முன்னேறிச் சென்று மிக வளர்ந்த தீ புல்வெளியினூடே பரவிற்று.

தீயினால் சுட்டெரிக்கப்பட்ட உடல்களைக் கொண்ட யானை, நரி, சிங்கங்களின் கூட்டம் நண்பர்களைப் போன்று ஓரினக் குழுக்களாகக் காணப்பட்டன. அவை பரந்த பரப்பைக் கொண்ட ஆற்றங்கரைகளில் தங்கின”.

மழை குறித்துப்பாடப்பட்ட கீழ்க்கண்ட வரிகள் சங்கப் புலவர்களை நினைவூட்டுவனவாக உள்ளன.

“மின்னலின் ஒளியில் பெண் சென்ற வழி தென்படுகிறது. பிரிந்து சென்றவர்களின் மனைவிமார்கள் மனவேதனையில் சுற்றியலைகின்றனர். தாமரை போன்ற கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தவாறுள்ளன. இலைகளை ஒத்த கீழுதடுகளைக் கொண்ட அவர்கள் அணிகளையும் ஒப்பனை களையும் களைந்தவாறுள்ளனர் ” (காண்டம் 2)

நான்காவது காண்டத்தின் தொடக்கத்திலுள்ள சில வரிகள் குளிர்காலத்தில் ஒப்பனைப் பொருட்களையும் அணிகலன் களையும் பயிலாதிருத்தலை/பயன்படுத்தாதிருத்தலைக் குறித் துப் பேசுகின்றது. இவ்வரிகள் இவற்றோடு ஒப்புமையுடைய நெடுநல்வாடை வரிகளை நினைவுபடுத்துகின்றன.10 காளிதாச ரின் மேக தூது அவர்தம் மிகச் சிறந்த படைப்பாகும். வால்மீகியின் கருத்தை எடுத்துக் கொண்டு, மனைவியிட மிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட யக்ஷ, மேகத்தைத் தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது. தன்னுடைய அன்பு கலந்த ஆறுதல்களைத் தூதாக அனுப்புகிறார். உயிரற்ற பொருளைத் தூது அனுப்பப் பயன்படுத்துவதில் காளிதாசருக்கே மறுப்பு இருந்திருக்கலாம். ஐந்தாவது பாடலில் விமர்சனத்திற்கு உரியதாகக் கொள்ளப்பட்டதற்கு எதிராகத் தாமே முரணித்துள்ளார்.

‘தொடர்பு கொள்ள என்ன வாய்ப்புள்ளது’ என்று கூறி ‘புகை, ஒளி, நீர் மற்றும் காற்றாலாகிய மேகத்திற்கும் கேட்டல் அறிவினையுடைய படைப்புகளால் மட்டுமே கொண்டு செல்லப்படும் தூதுவிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும், தொடர்பு கொள்ள என்ன வாய்ப்புள்ளது’ என்கிறார். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஆர்வ மேலீட்டால் யக்ஷ மேகத்தைத் தூது செல்லக் கோருகிறார். காதலால் பீடிக்கப்பட்ட நபர்களால் இயல்பாகவே உயிரற்ற பொருளுக் கும் உயிர்ப்பொருளுக்கும் வேறுபாட்டைக் கண்டறிய இயலாது. சங்க இலக்கியத்திலும் மேகம், நிலவு, கடல், கதிரவன், காற்று, வண்டு முதலியன முன்னிலைப்படுத்திப் பேசப்பட்டுள்ளன. ஆனால், அவை மிகச் சுருக்கமாக காதலர்களின் துன்பத்தைக் குறிப்பிடுதல் போன்ற சூழலில் பயன்படுத்தப்பட்டன.

தலைவியின் துயர அழுகை குறித்து,

யாரணங் குற்றனை கடலே

... ... ...

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே (குறுந்.163)

(நள்ளிரவிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றாயே நீ யாரால் வருத்த முற்றாயோ கடலே) என்று தலைவி கேட்டதாக உள்ளது.

மறையும் சூரியனை நோக்கி... ...

கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின்

அவரை நினைத்து நிறுத் தென்கை நீட்டித்

தருகுவை யாயின் தவிருமென் நெஞ்சத்

துயிர்திரியா மாட்டிய தீ   (கலி.142)

என்றும்

நிலவில் உள்ள முயலிடம்...

திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயல்

எங்கள் இதயத்துள்வழிக் காட்டீமோ

காட்டீயா யாயின் கதநாய் கொளுவுவேன்

வேட்டுவ ருள்வழிச் செப்புவேன் ஆட்டி

மதியடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த

என்னல்லல் தீரா யெனின் (கலி.144)

என்று பாடியுள்ளார்.

இந்தியாவில் இயற்கையைப் பாடும் கவிஞர்களில் காளிதாசர் குறிப்பிடத்தக்கவர். அவர்தம் பாடல்களில் நில இயல்புகள், நீர் அமைப்புகள் (ஏரிகள்), காடுகள் ஆகியவை முதன்மையாக இடம்பெற்றிருக்கும்.

கிரேக்க, லத்தீன் பாடல்கள் (கவிதையியல்)

சங்கப் புலவர்களின் கருத்துக்கள் பதினெட்டு/பத்தொன் பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பியக் கவிஞர்களின் கருத்துக்களைக் காட்டிலும் கிரேக்க லத்தீன் படைப்பாளிகளின் கருத்துக்களோடு உறவுடையனவாக உள்ளன. இயற்கை குறித்த கவித்துவ வெளிப்பாடும் (உலக வரலாற்றில் நீண்டகாலம் வரை) பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டுள்ளன. மனித இனத் தொடக்க காலத்தில் இயற்கையைப் பாராட்டுதல்/வியத்தல் என்பது மிக எளிமையாகவும் குழந்தைத்தனமாகவும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. மிக வளர்ச்சியுற்ற பிற்காலத்தில் நாகரிகம் முன்னேறிய சூழலில் நகரிய வாழ்க்கை வாழ்ந்த மனிதன் இயற்கையைப் பின்புலமாக்கித் தூரப்படுத்தினான். மூன்றாவது கட்டத்தில் நாகரிகம் மிக வளர்ந்த சூழலில் இயற்கை என்பது வசதியாகவும் துணையாக/ஆறுதலளிப்பதாகவும் நம்பிக்கை யாகவும் காணப்பட்டது. ஷேர்ப்பின் Poetic Interpretation of Nature என்கிற நூலில் வீனட் குறிப்பிட்ட மேற்கோளில் குறிப்பிடப்பட்டவை.

“ஆன்மா என்பது சமூக உறவுகளால் பண்படுத்தப்படுவது. குறிப்பாக, அதனால் பாதிக்கப்படுவது சமூகத்தால் தொல்லைக் கும் துன்பத்திற்கும் ஆளாகும் ஆன்மாவிற்கு இயற்கையின் வளமும் அழகும் புதிரான ஆற்றலாக உள்ளது. வெம்மையையும் கொந்தளிப்பையும் மையமாகக் கொண்ட நாகரிகத்தினின்று வெளியேறி இயற்கையை நாடும் ஆன்மாவிற்கு அதன் பலமும் ஆழமும் புரியாத புதிராகவே உள்ளது.11

இயற்கை குறித்த நவீனப் பார்வையை இது விளக்கவல்லது. ரூஸோ, கதே மற்றும் வேர்ட்ஸ்வர்த்தின் காலம் வரை உலகில் இதுவே பிரபலமாக இருந்தது. இயற்கை குறித்த கருத்துக் களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் பரணருக்கும் சுப்பிர மணிய பாரதிக்கும் உள்ள வேறுபாட்டைப் போல வெர்ஜி லுக்கும் வேர்ட்ஸ்வர்த்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

ஹோமர், ஹெசாய்டு, தியோகிரிடஸ் ஆகியோர் சங்கப் புலவர்களுக்கு முந்தையவர்கள். இயற்கையை இவர்கள் ஒருபோல விரும்பி உள்வாங்கினாலும் தமிழ்ப் புலவர்கள் அளவிற்கு முதிர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்த வில்லை. காப்பியக் கவிஞரான ஹோமர் இயற்கை விளக்கங் களுக்கு நேரமில்லாத அளவிற்கு மிக வேகமாக கவிதைகளை நகர்த்திச் செல்வார். எனினும் தமது நாயகர்களின் அசைவுகளை/இயக்கங்களை இயற்கையோடு இயைந்தவாறே படைத்துள் ளார். “ஹோமரின் ஒவ்வொரு இயற்கை விளக்கமும் ஒரு நீருற்று, ஒரு பசுமை நிலம், நிழலடர்ந்த சோலைகளைக் கொண்டு மிக அழகாகக் கட்டமைக்கப் படுவதாகக் கருதப் படுகிறது.” என்கிற ரஸ்கின் கூற்று விமர்சனத்திற்குரியது. ஒடிசியிலும் இலியட்டிலும் இடம்பெற்றுள்ள இயற்கை நலன்களையும் உணர்வு நிலைகளையும் யாராலும் மறுக்க முடியாது எனினும் கிரேக்கக் கவிஞன் இயற்கையை விளக்கி யுரைப்பதில் வளமாக இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், கிரேக்க நாட்டுப்பகுதியின் இயற்கை நலன்கள் வெப்ப மண்டலங்களில் உள்ள இயற்கை நலன் களைப் போல வளமானதாக/செழுமையானதாக இல்லை. மேகங்களற்ற நீல வானத்தில் நிகழும் சூரியனின் மறைவு ஏதேனுக்கும் வெப்ப மண்டலப் பகுதிகளுக்கும் இடையே எந்த அளவிற்கு வேறுபாடுடையனவோ அந்த அளவிற்கு ஹோமரின் எளிமையான இயற்கைச் சித்திரிப்புகளுக்கும் சங்க இலக்கியச் சித்திரிப்புகளுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன.12

தமிழ்ப் பாடல்களைவிட கிரேக்கப் பாடல்களில் நீரோடை மற்றும் நீரூற்றின் வருணிப்புகள் மிகுந்த சுவையுடையவை. மேலும் தமிழ்ப் பாடல்களில் இல்லாத தொன்மம் சாற்றப்பட்ட இயற்கைக் கூறுகள் கிரேக்க, லத்தீன் பாடல்களில் மிகுதியாக உள்ளன. Dionysius, Hermes, Pan    போன்ற இயற்கைக் கடவுளர்கள் தமிழர்களிடம் இல்லை. அவர்கள் பூமிக்கு மனிதத்தன்மை சாற்றினரேயழிய வழிபாட்டு மரபை உருவாக்கும் அளவிற்கு அவற்றை வளர்த்தெடுக்க வில்லை. Aeschylus கூறுவது போல,

“எல்லா கடவுளரும் பூமிக்கு வருமுன்பு நான் வணக்கத்தின் வழி அழைத்துக்கொண்டிருந்தேன்” (Eumenides,1.f)

வேகமாகச் செல்லும் நீரோடை, ஆறு, நீரூற்று, மிக உயர்ந்த பெரும்பாறைகளின் வரிசை ஆகியவற்றைக் காணும் கிரேக்கன் அவற்றைத் தாண்டி இயங்கும் தெய்வீக சக்தியைக் கண்டான். காடுகளும் குன்றுகளும் சமவெளிகளும் ஓடைகளும் மரங்களும் இலைகளும் மக்கள் கூட்டத்தின் கடவுளர் உலகத்தில் பெரும் பான்மை அல்லது சிறுபான்மை முக்கியத்துவம் பெற்ற பக்தி வடிவங்களாகக் கொள்ளப்பட்டன. தமிழ் மக்களுக்கும் அவர்தம் காடுகளும் மலைமுகடுகளும் குறுங்காடுகளும் கடவுட்தன்மை கொண்டவையாக விளங்கின.

வெர்ஜில், ஹோரஸ், லூக்ரிடஸ் ஆகியோர் ஏறக்குறைய சங்கப் புலவர்களுக்குச் சமகாலத்தவர்கள். இவர்கள் ரோம் நகர், நாகரிகத்தின் உச்சத்தை அடையும் காலத்தில் காணப்பட்ட வர்கள். ஆனால் அவர்தம் இயற்கை சார்ந்த உணர்வு வெளிப்பாடுகள் ஐரோப்பியக் கவிதையூடே வெளிப்பட்டன. ரோமானியர்கள் எப்போதும் நாட்டை நேசிக்கத் தவறியதே இல்லை. மேலும் ரோமானியர்களிடையே காணப்பட்ட மாளிகை பிரசித்திபெற்ற கோவில்களுக்கும் நகர்களுக்கும் இணையான எதுவும் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழர்கள் பட்டனங்களிலும் நகரங்களிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். தமிழரின் பண்டைய இலக்கியங்களில் தென்னிந்திய துறைமுகப் பட்டினங்கள் குறித்தும் உள்நாட்டுத் தலைநகரங்கள் குறித்தும் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தமிழர்களின் மிக நேர்த்தியான நகர்சார் திட்டங்களும் தெருக்கள், பூங்காக்களின் மீது செலுத்திய கவனமும் குடியிருப்புப் பகுதிகளை நாற்புறங்களாகப் பகுத்தல், அழகிய சிற்ப வேலைப்பாடுள்ள கட்டிடங்களைக் கட்டுதல், எழுநிலை மாடங்களை எழுப்புதல் முதலியனவும் பண்டைய இலக்கியங் களில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

வேறு எந்த இலக்கியங் களிலும் இல்லாத பெண்ணுக்கு நகரத்தை ஒப்புமையாகக் கூறுதல் என்பது தமிழ் இலக்கியங்களில் மிக இயல்பான ஒன்றாக அமைந்திருப்பது வியப்பளிக்கின்றது. தலைவன் தான் மணந்த அல்லது மணக்கவிருக்கும் பெண்ணைக் குறித்த மகிழ்ச்சியின் நிறைவைக் கூற விரும்பும் புலவன் தனக்கு மன நிறைவளிக்கக் கூடியதாகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் விளங்கும் அழகிய நகரைத் தவிர வேறு எதையும் ஒப்புமையாக/உவமையாகக் கூறமாட்டான். ஒரு நகரம் அழகிற்குரிய குறியீடாகவும் விளங்குகின்றது. எனவே தான் நகரின் அழகு பெண்ணிற்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

“அமெரிக்காவின் நியூயார்க் நகரைப் போன்று அவள் மிக வளமானவள்” அல்லது “லண்டன் மாநகரைப் போன்று உனது தேவ தூதர்களோடு வந்து என்னைச் சந்திப்பாயாக!” என்று கூறுவது நவீனக் காதுகளுக்கு மிகப் புதுமையான ஒன்றாக இருக்கலாம். இதைப் போன்றே பண்டைய தமிழ்ப் புலவர்கள் நகரினையும் பட்டினங்களையும் உவமைகளாகப் பயன்படுத்தினர். அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரினையும் பட்டனங்களையும் தேர்வு செய்தனர். இவை மன்னனுக்கும் மக்களுக்கும் மிகச் செழிப்பையும் மிகுந்த வளத்தையும் கொடுக்க வல்லவை. குறிப்பிட்ட மன்னர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சில நகரங்கள் பற்றிய குறிப்பு பெரும்பான் மையாக இடம்பெறுவதுண்டு. பெண்கள் மிக அழகானவர்கள் என்றும் வளமானவர்கள் என்றும் குறிப்பிடுவதற்கு,

தண்குட வாயில் அன்னோள் (அகம் 44)

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன (அகம் 46)

திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன (அகம் 60)

 என்று பாடியுள்ளனர்.

“வந்திசின்” என்றும் “தொண்டி அன்ன நின் பண்புபல கொண்டே”(ஐங்.175) என்றும் கூறும் தலைவன் கூற்றில் உள்ள தொண்டி மேற்குக் கடற்கரையில் மிகப் பெரும் துறைமுகமாக விளங்கிய பகுதி.13 காதலர் மொழியில்/கூற்றில் பழமையான தும் புகழுடையதுமான எல்லா பட்டினங்களும் நகரங்களும் உவமையாகப் பாடப்பட்டுள்ளன. தமிழர்கள் நேர்த்தியான நகர வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆனால் நகரத்தின் மீதான அவர்தம் ஈடுபாடு இயற்கை மீதான அவர்களின் விருப்பத்தை எந்த வகையிலும் இடையீடு செய்யவில்லை.

மாறுதலற்ற ஒருபடித்தான நகர வாழ்வினின்று சிறு விடுபடுதலாக தமிழர்கள் விழாக்களையும் கடலில்/ஆற்றில் ஆடும் விளையாட்டுக்களையும் இயற்கை எழிலார்ந்த பகுதி களில் அமைந்த புனிதத்தலங்களுக்கு யாத்திரை செல்வதையும் மேற்கொண்டுள்ளனர். இயற்கை மீது கொண்ட காதலே தமிழர் சமயம் தோற்றம்பெறக் காரணமாக அமைந்துள்ளது என்பதை நம்மால் காணமுடிகிறது.

மிகச் சிறந்த தத்துவவியலாளரான லூக்ரிடஸ் அவ்வப்போது அச்சத்தையும் மதிப்பையும் தருகிற கணநேர இயற்கைச் சித்திரிப்புகளைப் படம்பிடித்துக் காட்டுபவர். நகர வாசியான ஹோரேஸ் தன்னுடைய நாட்டை(நகரை) புகழ்ந்தும் தனக்கு விருப்பமான நாட்டுப்புறச் சூழலையும் குறித்து மிகுதியாக எழுதியுள்ளார். ஆனால் இயற்கை குறித்து மிகுதியாகப் பாடியவர் வெர்ஜில். இவர் இயற்கையை விவரித்தும் விரும்பியும் இயற்கையோடு ஒத்த உணர்வு கொண்டும் விளங்கியுள்ளார். இவரைச் சங்கப் புலவர்களோடு ஒப்பிடுவது அத்துணை எளிதல்ல. சங்கப் புலவர்கள் மரபார்ந்தவர்களாகவும் உள்ளனர். வெர்ஜில் மரபார்ந்தும் தியோகிரிடஸைப் பிரதி பலித்தும் தன்னுடைய பாடல்களைப் படைத்துள்ளார். அவை நாட்டார் வாழ்வை விளக்குவதாகவும் உள்ளன. ஆனால், “Georgics” (உழவுத் தொழில் குறித்தப் பாடல்கள்) இல் நேரடி யாகவும் மிக வெளிப்படையாகவும் வெர்ஜில் எழுதியதைப் போல இவை அமையவில்லை. எனினும் சங்க இலக்கியங் களில் ஊடுருவிக்கிடக்கும் அதே துல்லியத்தன்மை, நுட்பமான விளக்கங்கள், மனிதத்தன்மையேற்றப்பட்ட இயற்கை சார்ந்த உணர்வு நிலைகள் இவற்றிலும் காணப்பட்டன. திணைசார்ந்த நீண்ட விளக்கங்களோடு அமைந்த நெடும்பாடலான மலைபடுகடாத்தை ‘Georgics’ உடன் ஒப்பிடலாம்.

பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து,

அகல்இரு விசும்பின் ஆஅல் போல,

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை

நீலத்து அன்ன விதைப்புன மருங்கில்

மகுளி பாயாது மலிதுளி தழாலின்

அகளத்து அன்ன நிறைசுனைப் புறவில்

கௌவை போகிய கருங்காய் பிடிஏழ

நொய்கொள ஒழுகிய பல்கவர் ஈர்எண்

பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்

கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல்

விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு இருவிதொறும்

குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை (மலை.99-110)

வெர்ஜில் தன்னுடைய பெருங்காப்பியத்தில் (Aeneid) இயற்கைக் காட்சிகளைப் பற்றிய மென்மையான உவமைகளை யும் நீண்ட விவரிப்புகளையும் குறிப்பிடுவதோடு ஐரோப்பிய வாழ்க்கையில் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலாகத் தான் உணர்ந்த ஒப்புமைகளையும் சில பகுதிகளில்/பத்திகளில் குறிப்பிட்டுள்ளார். பூசாரிணியின் அச்சத்திற்குரிய அணுகுமுறை யால் பூமி நடுக்குறுவதாகவும் மலைகள் அதிர்வுறுவதாகவும் ஆறாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார். மானுடக் கதாமாந்தர் களை கிளர்ந்தெழச் செய்யும் உணர்வு நிலைகளுக்கும் வெளியுலகத்து எதார்த்த நடைமுறைகளுக்கும் இடையே உள்ள ஒத்துணர்வுகளை நான்காம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது டிடோவின் உள்ளத்து எழும் கிளர்ச்சிக்கும் அதற்கு முரணாக உள்ள இரவின் அமைதிக்கும் இடையில் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

“இரவு  வந்தது; புவி முழுதும் களைப்புற்ற படைப்புகள் ஆழ்ந்த துயில் கொண்டன. கானங்களும் காட்டாறுகளும் ஓய்வில் மூழ்கின; நட்சத்திரக் கால்கள் அவற்றின் பாதையில் இழைந்து கொண்டிருந்தன. நாடு முழுதும் அமைதி நிலவிற்று. இரவு வரை விலங்குகளும் களிப்புற்ற பறவையினங்களும் ஏரி நீர்ப்புறங்களிலோ முள்ளார்ந்த புதர்க்காடுகளிலோ உறங்கிக் கிடந்தன. ஆனால் ஆழ்ந்த துயரத்தில் இருந்த பொனீஷியனோ (பீனிஷ் நாட்டவன்), இரவுப் பொழுதைக் கண்களிலும் முலைகளிலும் தாங்கியிருந்த அவளோ துயில் கொள்ள வில்லை. அவளது துயர் இரட்டிப்புற்றும் அவளது காதல் பித்தேறியும் போன நிலையில் மிகக் கோபத்தோடு உலாவிக் கொண்டிருந்தான்” (Aeneid IV,521-531)

மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான வெர்ஜில் பயன் படுத்திய இம்முரண் சங்க இலக்கியங்களில் மிகப் பெரும் பான்மையாகக் கூறப்பட்ட ஒன்று. தினசரி வாழ்க்கையில் இவைகளையும் பல்வகைப் பூக்களையும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் பயன்படுத்தவில்லையானாலும் தமிழர் களைப் போல இவர்களும் அவற்றில் மிக விருப்பமுடைய வர்கள். அவர்தம் ஆயர்கள் இலைகளாலும் மலர்களாலும் ஆன தலைமாலையினைச் சூடித் தங்களை அலங்கரித்துக் கொண்டவர்கள்.

“தலையினின்று பூமாலை நழுவி விழ கணத்த மதுச்சாடி யினைக் கீழிறக்கினான்” (Ec.VI)

ஆர்காடி(கிரீஸ் தேசத்துப் பகுதி)யின் ஆயர்கள் ஐவி (திண்பச்சை இலைகளையுடைய கொடி)யின் இலைகளால் அலங்கரித்துக் கொண்ட கோட்ரஸ் எனும் கவிஞன் பொறா மையினால் துயருற்றான் அல்லது எனது சிறப்பினைத் தாண்டி என்னைப் புகழ்ந்திருந்தால் கையுறையளித்து எனது புருவங் களைக் கட்டியிருந்தால், பாணனின் கொடிய நாக்கு என்னைத் துன்புறுத்தியிருக்காது. நெட்டிலிங்க மரத்தினில் ஆல்சைட்ஸ் பெருமகிழ்ச்சியுற்றான். மதுவினில் லாச்சஸ் மிர்டில்(செடி வகை)இல் வீனஸ், அழகிய புன்னை மரத்தினில் பியோபஸ் ஹோசலி(குறுமர வகை) ஃபில்லிஸ் மகிழ்ச்சியுற்றான். ஃபில்லிஸ் அவை அனைத்தையும் விரும்பினாலும் ஹேசல் அளவிற்கு மிர்டிலையோ பியோபஸ் புன்னை மரத்தை விரும்பி யதைப் போலயோ புன்னை மரத்தையோ விரும்பாதிருக்கலாம். (Ec.VII)

லத்தீன் நாட்டுக் காதல் கவிஞனான காட்டிலஸ் தனது காதலை (லெஸ்பியா) நேரடியாகவும் எவ்வித கவித்துவ வெளிப்பாடுகளின்றியும் குறிப்பிட்டுள்ளான். புறப்பாடல் களைப் பாடிய தமிழ்ப் புலவர்களைத் தவிர்த்து வேறு எந்த(அகம் பாடிய) புலவர்களிடத்தும் இத்தகைய தன்னியல்/சுய உணர்வுகளைக் கண்டறிய முடியாது.

புறப்பாடல்கள் சிலவற்றிலும் கூட இயற்கை குறித்த குழுப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை தனது (புலவர்) சுய செய்திகளுக்கான சிறு பகுதியாகக் காணக்கிடைக்கின்றன.14 கபிலரும் பரணரும் காதல் பாடல்களில் சொந்த அனுபவங்களைத் தான் எழுதினார்களா? அல்லது தனது கற்பனைத் திறத்தையும் நாடகமாக்கத் திறனையும் மேம்படுத்தும் பயிற்சியாக அவற்றை மேற் கொண்டனரா? என்பதை நம்மால் அறியவே இயலாது.

சங்க காலப் பாடல்களினின்று நேரடியாக ஒரு தலைவனின் பெயரைக் கூட நம்மால் அறிய முடியாது. அகப்பாடல்களில் ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்பது மரபு. சங்க இலக்கியத்தில் இயற்கைக்கும் காதலர்க்கும் நேரடிக் குறிப்புகள் காணக் கிடைப்பதில்லை. ஆனால் இயற்கை குறித்த தெளிவான எளிமையான விவரிப்புகளோடு பிற தேசத்து இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. சங்கக் கவிதையியல் மிகச் சிறந்த இயற்கை குறித்த தனிப்பாடல்களைக் கொண்டுள்ளன. எனினும் அவை கவித்துவ வெளிப்பாட்டில் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டும் சில கட்டுப்பாடுகளுக்கிடையிலும் பாடப்பட்டுள்ளன.

ஆங்கிலக் கவிதையியல்

ஆங்கில இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் வரை இயற்கை குறித்த கவித்துவ வெளிப்பாடுகளில் வெர்ஜிலிய மரபு தொடர்ந்து கொண்டிருந்தது.15 சாசர், ஸ்பென்ஸர் ஆகியோர் புத்திலக்கியத்தை உருவாக்கினர். எனினும் நாடகவியலாளராக இன்பத்தையும் துன்பத்தையும் மேம்படுத்திக் காட்ட இயற்கையைச் சூழல்களாகப் பயன்படுத்திய ஷேக்ஸ்பியரே இந்த ஒப்பீட்டு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்.

பண்டைய காலத்திலேயே ஐரோப்பியப் பருவநிலைகள் மனிதனுள் ஏற்படும் உணர்வு நிலை/உடல்நிலை மாற்றங்களை ஒப்பிட்டுக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளனர். இளவேனிற் காலம் மனிதனின் வாலிப/இளமைக் காலத்திற்கும் இலையுதிர் காலம் மனிதனின் அழிவுக்காலத்திற்கும்/இறுதிக்காலத்திற்கும் குறியீடாகக் கூறப்பட்டது. மேலை நாட்டுக் கவிஞர்கள் பருவ நிலைகளின் சுழற்சியில் மாறுதல்களையும் வகைகளையும்/பல்தன்மைகளையும் கண்டனர்.

தமிழ்ப்பாடல்கள் ஐவகைத் திணையின் கீழ் வகுக்கப்பட்டது போல ஐரோப்பியப் பாடற் தொகையினை இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், இலையுதிர்/கூதிர் காலம், பனிக்காலம் ஆகிய நான்கு பருவ நிலை கீழ் வகைப்படுத்தலாம். கவிதை வெளிப்பாட்டிற்கு ஏற்றபடி, தமிழ் நாட்டின் ஆறு கால நிலைகள் இயற்கையின் புறத்தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல்களையோ பல் தன்மையினையோ ஏற்படுத்தவில்லை. ஐரோப்பாவில் காணப்படும் முதுவேனிற் காலத்திற்கும் பனிக்காலத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் தமிழகத்து மழைக்காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் ஒப்பிடுவோமானால் அங்குள்ள பல்தன்மை/பெரும் மாறுதல் தமிழ் நாட்டில் காணப்படவில்லை. உறைபனியும் பனிக்கட்டிகளும் இங்குள்ள இயற்கைச் சூழலில் இல்லாமையால் பெரும் மாறுதல் களுக்குரிய நில அமைப்புகளை நாம் கொண்டிருக்கவில்லை. எனினும் தமிழர்களின் இயற்கையமைதி அவர்களுக்கு ஈடானது. பல்தன்மையையும் மாறுதல்களையும் பருவகால நிலையில் காணமுடியாவிட்டாலும் நில அமைப்புகளில் தமிழர்கள் காண்கின்றனர். எனவே பல்தன்மைக்கும் பகுப்புக்கும் நிலத்தை அடிப்படைக் கூறாகவும் நிலத்தை மாறுபடுத்திக் காட்டும் பருவகால மாற்றத்தை துணைமைக் கூறாகவும் கொண்டனர். பருவகாலங்களில் ஏற்படும் புறக்காட்சியின் தாக்கத்தில் ஐரோப்பியக் கவிதைகள் அமைந்திருக்க தமிழ்ப்பாடல்கள் திணை அடிப்படையில் அமைந்துள்ளன.

கவித்துவ எண்ணங்களை மெருகூட்ட இயற்கையைப் பயன்படுத்தும் தமிழ்ப்புலவர்களின் அடிப்படைப் பண்பு ஷேக்ஸ்பியரிடமும் உள்ளது. காட்டாக, மேக்பத்தில் புயல் மீவியல்புத் தன்மையோடு ஆட்சி செய்கிறது. சூனியக்காரிகள் எப்பொழுதெல்லாம் காட்டப்படுகின்றனரோ அப்பொழுதெல் லாம் இடியும் மின்னலும் பின் தொடர்ந்து காட்டப்படும். ஜூலியஸ் சீசர் கொலையுறப்போவதை சீற்றமிகு இயற்கை யுடன் ஒரு இரவுப்பொழுது பல தீநிமித்தங்களுடன் முன்னறி விப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

‘நீண்ட நெடிய இரவுப் போழ்தில் புதிரான ஒரு பறவை ஆரவாரித்துக் கொண்டிருந்தது’ (மேக்பத். 3)

டங்கன் மகாராஜா தனது பரிவாரங்களோடு தோன்றும்போது மகிழ்வூட்டுகிற ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் அந்த இரவில் அவருக்கு நிகழப்போவதற்குமான முரணை இவ்வாறு எழுதுகிறார்.

‘இந்தக் கோட்டை மிகவும் மகிழ்ச்சியளிக்கிற இருக்கை யைக் கொண்டுள்ளது. புலன்களுக்கு இதமளிக்கும் வகையில் காற்று விரைவாகவும் இனிமையாகவும் வீசுகிறது’

பாங்கோ பதில்

வேனிற்காலத்து இவ்விருந்தினர் ஆலயத்தில் தங்கியிருக் கும் மார்ட்லெட்(குருவி வகை), மேலுலகே விரும்பத்தக்க தனது மாளிகையில் வாசம் செய்ய வேண்டுவதாகச் சான்று பகர்கிறது (காட்சி 1 பகுதி.6)

கிங்லீயருக்குள் ஏற்பட்ட புயல் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனக் கொந்தளிப்பில் மனிதனின் செயல் பாடுகளுக்கும் முதிய மன்னனின் நெஞ்சத்து எழும் சீற்றத் திற்கும் தொடர்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. இதைப்போலவே வெப்பமிக்க கோடைக்காலத்துப் பாழ்நிலப் பகுதியினைப் பின்புலமாகக் கொண்டு காதலர்களின் பிரிவுத்துயரைத் தமிழ்ப் புலவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். நெடுநல்வாடையில் துயருறும் மானுட நிலையினை இவ்வாறே காட்டியுள்ளனர்.

ஷேக்ஸ்பியருக்குப் பின் ஜேம்ஸ் தாம்ஸன் இவ் ஒப்பீட்டாய் விற்குப் பொருத்தமுடையவர். “The Seasons” என்கிற அவருடைய கவிதையின் உள்ளார்ந்த பொருண்மைக்காகவன்றி பருவகாலம் குறித்து பல நூறு வரிகளைத் தம் கவிதையில் எழுதியுள்ளார் என்பதைக் கருத்திற்கொண்டு இவருடைய கவிதைகள் இங்கு ஒப்பீட்டாய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. போப்பிற்குப் பின்பும் அவருடைய மீட்டழைப்பிற்குப் பின்பும் இயற்கையிடத்துத் திரும்புமாறு தாம்ஸன் வலியுறுத்தி யுள்ளார். இயற்கையைக் குறித்து மிக அழகாகவும் ஆழமாகவும் காலநிலைகளின் எல்லா தன்மைகளிலும் மரங்கள், மலர்கள், விலங்குகளைக் குறித்து விரிவாகவும் எழுதியுள்ளார். தூய அன்பிற்கான குறியீடாக இளவேனிற்காலத்தைக் குறிப்பிட்டுள் ளார். அதனை “சோலைகளின் உணர்வு மேலீடு” என்று அழைக்கிறார்.

நைட்டிங்கேல் பறவைகளே உமது பாடலைக் கொடுப்பாய்

என்னுடைய கவிதை வரிகளுக்கிடையில்

புதிரான உனது ஆன்ம மெல்லிசையைப் பொழிவாய்

முதல் பகுதியிலிருந்து குக்கூ பாடுவதை

என்னால் உணர முடிகிறது.

எப்படிப் புகழ்வது என்பதறியாதபடி

இளவேனிற் காலத்து இன்னிசை - சோலைகளின் உணர்வு மேலீடாக                          (Spring, 576-581)

தத்துவத்தின் புகழைப்பாடும் தருணத்தை முதுவேனிற் காலம் கொடுத்துள்ளது. இலையுதிர்காலத்தில் வாழ்க்கையின் தத்துவத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். பனிக்காலத்தில் சுற்றி யுள்ள அனைத்தும் தற்காலிக/நிலையற்ற அழிவில் இருப் பதைக் கண்டார். அவை பெரும்பாலான இறவா மனிதர்களை அவருக்கு நினைவூட்டியது. தாம்ஸன் சில இடங்களில் மிக நுட்பமான விவரிப்பாளராகவும் குறிப்பிட்ட இடங்களில் கணக்கீட்டாளராகவும் இருந்துள்ளார். தமிழ்ப் புலவர்கள் சித்திரித்துள்ள வாழ்க்கைக்கும் இவருடைய கவிதைகளில் குறிப்பிட்டுள்ள வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனினும் தமிழ்ப்புலவர்களைப் போல இயற்கையிலிருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ள முயற்சித்தும் அவற்றின் தோற்றத்தை தத்துவார்த்தப்படுத்தியும் உள்ளார். தமிழ்ப்புலவர்கள் அறம் சார்ந்த, தத்துவார்த்தப் பார்வையினை இலக்கியங் களுக்கேற்ப மிகச் சுருக்கமாகவும் மறைக்குறிப்பாகவும் வெளிப் படுத்தியுள்ளனர். ஆனால் தாம்ஸன் அறனாளனாக இருந்து இயற்கைப் பாடங்களை(அப்படி எதுவும் இல்லாத நிலை யிலும்) தேடும் தன்மையினைக் காணும்போது அவை புதுமையாகவும் சில நேரம் வலிந்து கூறுவதாகவும் உள்ளன.

ஸ்காட்லாந்து பெரும்பாலான இயற்கைக் கவிஞர்களைக் கொண்டிருந்தது. அந்நிலப்பகுதி சீரற்றது. காடுகளும் மலைகளும் சூழ்ந்திருந்தமையால் மலைசார்ந்த இயற்கை உணர்வுகளைக் கொண்டிருந்த புலவர்கள் அங்கு தோன்றினர். அவர்களில் பர்ன்ஸ் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது படைப்புகளில் மனிதனுக்கு முதலிடமும் இயற்கைக்கு அடுத்த இடமும் கொடுத்திருப்பதும் இயற்கையையும் காதலர்களை யும் பிணைத்துக் கூறும் தன்மையும் இவரிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. “எப்பொழுதும் இயற்கை இரண்டாவது, மனிதத்துவம் முதன்மையானது. சில நேரங் களில் மனிதனின் செயல்பாடுகளையும் உணர்வு மேலீட்டை யும் விளக்கும் அரங்கக் கூறாக பின்புலத்தைப் பாடியுள்ளார்.”16 அரங்கக் கூறு என்பது இயங்கும் தன்மையது எனவும் உயிர்ப்புள்ளது என்பதையும் ஏற்கனவே அறிந்த நிலையில் இயற்கை குறித்த சங்கப் பாடல்களின் கருத்தை விளக்க “அரங்கக் கூறு” என்பது சரியான சொல்லாக உள்ளது.

கிரே தனது ‘எலிஜி’யிலும் கொலின்ஸ் தனது ‘ஒடே டு ஈவ்னிங்’கிலும் இயற்கை சார்ந்த ஒத்துணர்வுகளைச் சிலவாறு எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். எனினும் ஸ்டாப்ஃபோர்ட் ப்ரூக் குறிப்பிட்டுள்ளதைப் போல வேர்ட்ஸ்வர்த் இயற்கை வாதத்தை மிக உச்ச நிலையில் வெளிப்படுத்தியுள்ளார். கிரேக்க மற்றும் லத்தீன் கவிஞர்கள் இயற்கைப்  பொருட்களை முன்னிறுத்தும் போது அவர்களுடைய பாதுகாவலுக்குரிய தெய்வங்களையும் மீண்டும் மீண்டும் முன்னிறுத்திக் கூறு கின்றனர். தமிழ்ப் புலவர்கள் கடவுளர்களோடு இவற்றைத் தொடர்புறுத்துவதில்லை. காதலினாலும் அதன் துன்பத்தி னாலும் தாக்குற்ற தலைவி கடலை நோக்கி ஏன் இவ்வாறு ஓலமிடுகிறாய்? நீயும் என்னைப் போல யாராலாவது கைவிடப் பட்டாயோ என்று கேட்பதாக எழுதுகின்றனர். ஆனால் வேர்ஸ்வர்த், “பேராற்றல் மிக்கவன் எழுந்தான்” என்று எழுதுகின்றார்.

கிரேக்க, லத்தீன் கவிதைகளில் மனிதனின் நாடகத்திற்கத் தளமாக இயற்கை முன்னிறுத்தப்படுகின்றது. தமிழ்ப்பாடல் களில் மனிதனின் நாடக வாழ்வோடு ஒத்துணர்வுடையதாக இயற்கை காட்சிப்படுத்தப்படுகிறது. நாடகமாக்கப்படும் மனித உள்ளுணர்வுகளுக்கேற்ப இயற்கையும் தன்னியல்பில் மாறுபடுவதாகக் காட்டப்படுகிறது. ஆனால், வேர்ட்ஸ்வர்த் படைப்புகளில் இயற்கை என்பது மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது. அண்ட வாழ்வை மேற் கொண்டுள்ள தன்மைத்தாகவும் தன்னைத் தானே நேசித்துக் கொள்வதாகவும் நம்மோடு உறவு கொள்ள இயலுவதாகவும் இயற்கையைச் சித்திரித்துள்ளனர். வேர்ட்ஸ்வர்த் இயற்கை யைக் கடவுளாகக் கருதினார். இயற்கையின் ஒவ்வொரு கூறும், குன்றுகளும் மரங்களும் நெடுஞ்சுனைகளும் கொடும்பாறை களும் காட்டாறுகளும் மாலை விண்மீன்களும் துடிப்பான வாழ்க்கையுடையவை. அவை ஒவ்வொன்றுக்கும் உள்ளுணர் வும் ஆன்மாவும் இருப்பதாகக் கற்பிதம் செய்துள்ளார். அதே சமயம் அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கவும் ஒன்று படுத்தவும் செய்கிற ஒரு ஆன்மாவை மேலும் கற்பிக்கிறார்.17

மேகங்களிலும் காற்றிலும் உள்ள கலை நீ

பசுமையிலும் சோலைகளிலும் உள்ள கலை நீ

.. ...  ... ...

மறையும் சூரிய ஒளியில் குடியிருக்கும்

சுழலும் கடலில், வீசும் காற்றில்

நீல வானத்தில் மனித மனத்தில்

அசைவுகளில் உணர்வுத் திளைப்பில், தூண்டப்பெறும்

எல்லா எண்ணங்களில், எல்லாப் பொருட்களின் சிந்தனைகளில்

எல்லாவற்றிலும் ஊடுருவிச் செல்லும்.

கிளர்ந்தெழும் தனது அளவிலா எண்ணங்களை அண்டத்தில் உள்ளடக்கி இயற்கை என்று அழைக்கப்படும் படைப்புகளின் வடிவில் தந்துள்ளார். மனிதனுக்கான களமாக இயற்கையைப் பார்க்கும் பண்டைய பார்வை உண்மையானது என்றும் கருதுபவர்கள் வேர்ட்ஸ்வர்த்தின் பிந்தைய நவீனப் பார்வை பொய்யானது என்றும் கருதுகின்றனர். ஆனால் இதனை மறுக்க இயலாது. இயற்கையை வெளிப்படுத்திக் காட்டுவதில் ஒரு புதிய தன்மையைத் தொடங்கிவைத்ததிலும் நேரிய பங்களிப்பைச் செய்ததிலும் வேர்ட்ஸ்வர்த் குறிப்பிடத்தக்கவர். 18

சமய நம்பிக்கைகளின் தாக்கமின்றிக் காணப்படும் பண்டைய தமிழ்ப் புலவர்களின் பாடல்களில் கடவுளரின் இருப்பு ஊடுரு வியிருப்பது ஒருவருக்கு வியப்பைத் தரும். பரிபாடல் வரிகளாவன:

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; (பரி: 3,63-68)

பகவத்கீதையிலும் இதைப் போன்ற வரிகள் உள்ளன.

அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே        (20)

எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றில்லை               (39)

எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து அழகுடைத்து, வலிமையுடைத்து - அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர் (41) (பத்தாவது அத்யாயம்).

மேற்கூறப்பட்ட தமிழ் மற்றும் சமஸ்கிருதப் பாடல்களின் உணர்ச்சி மிக்க வரிகள் பக்தியை வரையறுப்பன. இவை தமிழர்களின் சமயச் சார்பற்ற கவிதையியலின் தாக்கம் பெறாதவை. அதோடல்லாமல் பண்டைய காலத்தில் தமிழர்களின் இயற்கை வெளிப்பாட்டுத் திறத்தில் அறிமுகமான புதிய போக்கின் காரணமாக உருப்பெற்றவை.

Notes:

1. The writer admits the classic simplicity of Pallava art

2. Alice Meynell, Essays, London, 1925, p.152 ff; Cr.C.E.Robinson, Zitto Hellas, London, 1946, p.182 : “No where can this principle be more clearly observed than in the Greek’s own language-always a faithful mirror of a people’s mentality. In style and structure Greek linguistic methods were a complete contrast to our own. The easy-going, loose-minded Englishman will express his ideas in a series of independent sentences ranged side by side, as it might be a row of single-room hunts. The Greek preferred to build a more complex and more comprehensive edifice. Viewing a group of ideas as a logical unity, he would bring them all together into one long period in which through the subordination of clause to clause he was able to bring out explicitly the inter-connection between idea and idea-‘a lot of little pieces of string’ as the school boy ruefully put it, ‘all tied together in one enourmous knot’. But literary knots, when skillfully tied, serve a valuable purpose. By their very complexity they focus the mind of the logical interplay of ideas and it was to their precise grasp of logical relationships that the Greeks owed the unique clarity of their thought”

3. Arthor A.Macdonell, History of Sanskrit Literature, p.67, London, 1924.

4. S.K.Chatterji, Race Movements and Prehistoric Culture, in Vedic Age, London, 1951, p.160 : “The characterstic offerings in the Puja rite, viz., flowers, leaves, fruits, water, etc., are not known to the homarite, except in instances where it has been influenced by the Puja. It has been suggested with good reason that puja is the pre-aryan, in all likelihood the Dravidian form of worship, while the homa is the Aryan: and throughout the entire early vedic Literature, the puja ritual with flowers, etc. offered to an image or symbol is unknown. The word puja from a root puj, appears, like the thing it connotes, to be of Dravidian origin also. This word of root is not found in any Aryan of Indo-European Language outside India. Proffessor Mark Collins suggested that the Sanskrit word puja (from the root puj was deduced later) was nothing but a Dravidian Pu “flower” plus root+ge “to do” (palatalized to je), which is found in Tamil as chey, in Kannada as ge and in Telugu as che. Puja pu-ge, pu-je, pu-che was thus a “flower ritual”. A “flower service”, pushpa-karma, just as homa was described as pasu-karma or religious service entailing the slaughter of an animal”.

5. See S.B.Das Gupta, Aspects of Indian Religious Thought, pp.166-188, culcutta, 1957.

6. A.A.Macdonell, History, o.c.; p.79.

7. On the differences between Aryan and Dravidian religious, see P.T.srinivas Iyengar, Pre-Arayan Tamil Culture, passim and H.T., pp.102-115.

8. The erotic poetry of Hala in prakrit does not use Nature as a regional background. See sushil Kumar De, Ancient Indian Erotics and Erotic Literature, Calcutta, 1959.

9. Sri Auro bindo, Kalidasa, Calcutta, 1929, p.36 : “He fell back on the life of sensuous passion with images of which, no doubt, his ungoverned youth was most familiar.”

10. Ritusamhara edited by R.S.Pandit, Bombay, 1942; edited by M.A.Male, Bombay, 1916.

11. J.C.Shairp, Poetic Interpretation of Nature, o.c.; p.236.

12. On Nature in Greek and Latin poetry see also H.R.Fairclough, Love of Nature among the Greeks and Romans, New York, 1930; G.Soutar, Nature in Greek Poetry, London, 1939; W.F.Jakson Knight, Roman Vergil, London, 1943.

13. Aink;175. Cfr.K.N.Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, o.c.,p.98.

14. T.P.Meenakshisundaram, The Theory of Cankam Poetry, in Tamil Culture, vol.I, No.I, P.41

15. J.Ingram Bryant, The Interpretation of Nature in English Poetry, Tokyo, 1932; F.W.Moorman, The Interpretation of Nature in English poetry from Beowulf to Shakespeare, pp.215-239, Strassburg, 1915.

16. Stopford A.Brooke, Naturalism in English poetry, London, 1920, p.130.

17. Norman Lacey, Wordsworth’s View of Nature, Cambridge, 1943.

18. J.W.Beach, The concept of Nature in Nineteenth Century English Poetry, New York, 1936,pp.158-251.

குறிப்புகள்

  1. 1) ஃபிரா ஆஞ்சலிகோ - இத்தாலிய ஓவியர் (1395-1455)
  2. 2) டர்னர் - பிரித்தானிய ஓவியர் (1775-1851)
  3. 3) கோரத் - பிரெஞ்சு ஓவியர் (1796-1875)
  4. 4) ரஃபீல் - இத்தாலிய ஓவியர் (1483-1520)
  5. 5) ரஸ்கின் - ஆங்கிலேய கலை விமர்சகர் (1819-1900)
  6. 6) ஆலிஸ் மைனல் - ஆங்கிலேய எழுத்தாளர், விமர்சகர் (1847-1922)
  7. 7) ஜூபிடர் - வானம் மற்றும் இடிக்கான ரோமானிய இயற்கைக் கடவுள்
  8. 8) எலியாஸ் - காற்றுக்கான கிரேக்கக் கடவுள்
  9. 9) நெப்டியூன் - கடலுக்கான ரோமானிய இயற்கைக் கடவுள்                               (மொ-ர்)

மொழியாக்கம் : மு.நஜ்மா 

Pin It