1956இல் அடிகளால் எழுதப்பட்ட இக்குறு நூல், மீண்டும் வெளியிடப்படுகிறது. இதனைக் கண்டெடுத்து கொடுத்தவர் ஆய்வாளர் தெ.மதுசூதனன் ஆவார்.

பேராசிரியர் அவர்களது கிறித்தவப்பணி, தமிழ்ப்பணி ஆகியவற்றை அறிந்த அளவிற்கு அவரது அரசியல்பணி குறித்துத் தமிழ்ச்சமூகம் பெரிதும் அறிந்திருக்கவில்லை. தனிச்சிங்கள மொழிச் சட்டம், சிங்களப் பேரினவாதிகளால் 1956இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் அரசியல், பொருளாதார பண்பாட்டுக் கூறுகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆவணம் அமைந்துள்ளது. உலகில் பன்மொழிச் சூழல் எதிர்கொள்ளப்படுவதை இதில் அடிகள் தெளிவுபடுத்தியுள்ளார். சிறுபான்மை தேசிய இனத்தின் மீது பெரும்பான்மை தேசிய இனம் நடத்தும் ஒடுக்குமுறைகளில் முதன்மையானது மொழி அழிப்புச் செயல்பாடு. இது இன அழிப்புச் செயல்பாட்டிற்கு இட்டுச்செல்லும். 1956ஆம் ஆண்டில் அடிகள் பதிவுசெய்துள்ள கருத்துகள் இன்றைய சூழலில் மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதை அறிகிறோம்; சமயவாதியாக, தமிழ்ப்பேராசிரியராக மட்டும் அடிகளாரைக் கட்டமைக்க விரும்புவோர், இந்த ஆவணத்தை வாசிக்கவேண்டும்.

1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் பிரதிநிதிகள் மன்றத்தில் நிறைவேறிய பொழுதும் தமிழ் மக்கள் தம் உரிமைகளை எதிர்காலத்திற் பெறக்கூடுமென்று, ஒருவாறு எதிர்பார்த்தார்கள். சென்ற நான்கு ஆண்டுகளாக தமிழரின் மொழி உரிமை நிலை இன்னும் வலிமையிழந்து கொண்டே வந்துள்ளது. இன்று அமுலாகும் தமிழ் வழங்கும் சட்டங்கள் ( Tamil Provision Act ) நம் மக்களின் உரிமைகளைப் பொருட் படுத்தாது தம் நாட்டிலேயே கீழ்நிலைக் குடிகளாகத் தமிழ் மக்களை ஆக்கிவிட்டது.

இவ்வாண்டில், தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையின் வலிமையால் தம்முரிமைகளை நிலைநாட்டாவிடின் எதிர் காலத்தில் அவற்றைப் பெறப்போவதில்லை.

எனவே இவ்வுரிமைகளை மீண்டும் பெறுவதற்கு நாம் ஆக்க வேண்டிய பணிகள் சிலவுள:-

1. தமிழன் ஒவ்வொருவனும் காலை வழிபாடு செய்யும் போது தமிழினத்தின் மொழி உரிமைகளைப் பெறுமாறு இறைவனின் திருவருளை வேண்டி நிற்க வேண்டும். இறைவன் எல்லாம் வல்லவன். அவன் திருவருள் இருந்தால் நீதியும் அமைதியும் இன்பமும் நாம் அடைவோம் என்பது ஒருதலை.

2. இவ்வாறு இறைவனை வழிபடுவதுடன், தமிழ் உரிமைகளைப் பெறுவதற்குத் தான் எத்தகைய தொண்டு ஆற்றக்கூடும் என்று தன் உள்ளத்தை வினவ வேண்டும். இவ்வியக்கங்களில் என்னால் இயன்ற மட்டும் தொண்டாற்றியுள்ளேனா? பொருள் உதவி செய்தேனா? இவ்வியக்கங்களில் உறுப்பினனாக ஈடுபட்டேனா? கருத்து வேற்றுமைகள் இருப்பினும் அவ்வேற்றுமை களைப் பொருட்படுத்தாது இவ்வியக்கங்களில் ஈடுபட்டு ஒத்துழைத்தேனா? என் நலத்தைக்கருதி தமிழ் இனத்தைக் காட்டிக்கொடுக்க முயன்றேனா? அல்லது நானும் என் குழந்தைகளும் சிங்களத்தைப் பயின்று முன்னேறவும் தமிழை மறக்கவும் எண்ணினேனா? என்றெல்லாம் தன் நெஞ்சத்தை வினவி, ஒவ்வொரு நாளும் தான் இவ்வியக்கங்களுக்கு ஆற்றும் தொண் டினைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

3. அரசியல்வாதிகள் அரசியற்றுறையில் நம் உரிமைகளைப் பெற நிகழ்த்தும் இயக்கங்களுடன் நாம் ஒத்துழைத்தல் வேண்டும்.

4. நீதிமன்றத்தில் தனிச்சிங்களச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங்கோண்மைச் சட்டம் என்று நாம் விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மலேயா வில் இருக்கும் தமிழர் பலர் ஒத்துழைக்கின்றனர். இவ்வழக்கு விரைவில் தொடங்கும். இவ்வழக்கின் செலவு முதலியவற்றிற்கு தமிழ் மக்கள் பொருள் உதவி கொடுத்தல் வேண்டும். தமிழ் வழக்கறிஞர்கள் உதவி செய்தல் வேண்டும். அரசியல் மீது வழக்குத் தொடுப்பது வீண் என்று கருதுவாரும் உளர். ஆயினும் உலகறியு மாறும் நீதிமன்றங்களின் நடுநிலைமை உண்மை யின்மைகளைப் புலப்படுத்துமாறு இவ்வழக்கினை நடத்துவது இன்றியமையாதது. ஆங்கில நாட்டின் சட்டவல்லார் பலர் தனிச்சிங்களச் சட்டம் நீதிக்கு முரண்பட்டது என்று முடிவு கூறியிருக்கின்றனர்.

5. ஈழத்தின் சட்ட மன்றங்களிலும் பிரிவுகவுன்சிலிலும் (Pricy Council) இவ்வழக்கில் நாம் தோல்வியடைந்தால், அல்லது அதே நேரத்தில் ‘‘ஹேக்’’ கிலிருக்கும் உலகப் பொது நீதிமன்றத்தில் (Internatonal Court of the Hague) நாம் வழக்குத் தொடர்தல் வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் ( United Nations) நம் உரிமைகள் இழந்தது பற்றி முறையிட வேண்டும். சைப்பிறஸ் ஆகிய சிறு தீவினர் இவ்வாறு உழைத்ததால் தம் உரிமைகளைப் பெற்றனர். சைப்பிரஸ் தீவில் இருப்பவர்கள் ஒன்பது இலட்சம் மக்கள்தான். அவர்களுள் 30% துருக்கி மொழி பேசுவோர். 70% கிரேக்க மொழிபேசுவோர். இலங்கை யில் நிகழ்ந்தவாறே அங்கும் கலகங்கள் நிகழ்ந்தன. அம்மக்களும் மொழி உரிமைகளுக்காக இடைவிடாது போராடியதாலும், ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் முறையிட்டதாலும் இன்று இருமொழிகளும் சமநிலை பெற்று விளங்குகின்றன. சட்டவல்லாரின் கழகம் ( International Commission of Jurists)  நம்நாட்டிற்குக் குறிப் பாளரை (observers) அனுப்புமாறு நாம் கேட்க வேண்டும்.

6. ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் முறையிடுவதற்கு இனக் கலகங்களில் நிகழ்ந்த கொடும் நிகழ்ச்சிகளை உண்மைச் சான்றிதழ்களில் (Affidavits) சாட்சிகள் எழுதிக் கொடுப்பாரெனின் பெரிதும் பயன்படும். ஓர் ஆயிரம் சாட்சிகள் தாம் ஈழத்தின் பல மாவட்டங்களில் கண்ட கொடுஞ்செயல்களையும் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் எழுத்தில் கொடுப்பாரெனின் தமிழ் இனம் பட்ட இன்னல்களை உலகிற்கு புலப்படுத் தும் பெரும் தொகையேடாகும் அச்சான்றிதழ்கள். இச் சான்றிதழ்களை (Affidavits) எவ்வாறு எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞரிடமிருந்து அறிந்து கொள்க. ஒவ்வொரு சான்றிதழும் மூன்று படிகள் கொண்ட வையாக எழுதப்பட வேண்டும். அவற்றினை எனக்கு அனுப்புக.

7. நான் தைத்திங்கள் முதலாம் நாள் (1.1.1961) சென்னைக்குப் பறந்து சென்றேன். நிரப்ப வேண்டிய பாரங்களையெல்லாம் இரத்மலானையில் தமிழில் நிரப்பினேன் எனக்கு வரும் சிங்கள ஆங்கில பாரங் களையெல்லாம் திருப்பியனுப்பி விடுகிறேன். இயன்ற மட்டும் கடிதங்களின் முகவரிகளைத் தமிழில் எழுது கின்றேன். தமிழர் அனைவரும் எல்லாம் தமிழ் இயக்கத் தில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். எல்லாத் துறைகளிலும் தமிழையே நாம் கையாளவேண்டும்.

8. சிங்கள மொழியிலும் நாம் கேட்கும் உரிமைகளைப் பற்றி எழுதிப் பரப்ப வேண்டும். சிங்கள மக்கள் தம் கருத்துக்களையும் அறப்போரின் நோக்கங்களையும் நன்கு அறிதல் வேண்டும்.

9. எத்துணைத் தமிழர் சிங்களத்தைப் படிக்கின்றார்கள் என்று வரும் மூன்று ஆண்டுகளில் சிங்கள அரசியலார் பார்த்தே சட்டங்களில் மாற்றங்களைச் செய்வார்கள். தமிழர் பலரும் சட்ட எதிர்ப்பின்றி சிங்களத்தைப் பயின்றால் தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படப் போவதுமில்லை, தமிழ் உரிமைகளை நாம் பெறப்போவதுமில்லை. இந்நிலையில் சிங்களத்தை மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவது கொடுங் கோன்மையென்பதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழும் சிங்களமும் வழங்கும் மாவட் டங்களில் மொழி உரிமை உணர்ச்சி பெரிதாக இருக் கின்றது. ஆனால் தனித்தமிழ் இயங்கும் மாவட்டங் களில் அவ்வுணர்ச்சி குறைந்து இருக்கின்றது. ஆயினும் இன்று தொடங்கி அது பெருக்கெடுக்காவிடின் நம் மொழி உரிமைகளைப் பெறுவது அரிது. அண்மையில் சமயச் சிறுபான்மையோர் தம் கல்விக் கழகங்களுக்காக நிகழ்த்திய அறப்போரில் இருந்து தமிழ் மக்கள் அரிய பாடங்களைப் படித்துக் கொள்ளக்கூடும்.

10. தமிழ்மொழி உரிமைகளைப் பெற முயலும் இயக்கம் இதுகாறும் வெற்றி பெறாததற்குக்காரணம் தமிழ் மக்களின் உணர்ச்சியின்மையென்றே கூற வேண்டும். தமிழ்பேசும் மக்கள் அனைவரும் தமிழ்மொழியுரிமை களைப் பற்றிக் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் என்று அரசியலார் இன்று அறிவாரெனில் இன்றே வெற்றி காண்போம்.  நம் இயக்கத்திற்குத் தடைகள் பல உள. அவற்றுள் சில பின்வருமாறு:-

அ. தமிழர் சிலர் அரசியலாளரின் ஒற்றராக உழைக் கின்றார்கள். நம் இயக்கங்களில் வலிமையில்லை, ஒற்றுமையில்லையென்று இவர்கள் அரசியலாருக் குக் கூறிக்கொண்டே வருகின்றனர். எனவே அரசிய லாரும் இத்தகைய பொய்யுரையைக் கேட்கவே விரும்புகின்றனர்.

ஆ. தென் இலங்கையிலுள்ள சிலர் அமைதியாகப் பொருள் ஈட்டுவதற்குத் தமிழ் இயக்கங்கள் தடையாக இருக்கின்றனவென்று தமிழ் இயக்கங்களில் ஈடுபடுவோரைத் தம் எதிரிகளென்று கருதுகின்றனர். ‘‘இந்தத் தொல்லையே வேண்டாம்; சிங்களத்தைப் பயின்று இன்னும் பணம் ஈட்டுவோம்’’ என்பதே அவர்களின் நோக்கம்.

இ. சிலர் கட்சிப்பற்றால் வேறு கட்சிகளின் முயற்சி யைப் பொருட்படுத்துவதில்லை. தமிழ் மக்கள் உரிமை பெறுவது அவர்களின் நோக்கம் அன்று. பிறகட்சிகளின் வழியாகத் தமிழ் மக்கள் யாதொரு வெற்றியும் பெறுதல் ஆகாது என்பதே அவர்களின் சிறந்த நோக்கம். தமிழ் பேசும் இனத்தின் உரிமைப் பற்றினும் கட்சிப்பற்றே இவர்களுக்குப் பெரிது.

ஒவ்வொரு தனி மகனுக்கும் தனி ஆற்றலுண்டு. உனக்குத் தமிழ் உணர்ச்சியில்லையெனில் நீ இவ்வியக்கங்களிற்கு இடை யூறாக இருக்கின்றாய். இன்றே ஒருவாறு உன் உரிமைகளைப் பற்றி உணர்ந்து உன்னால் இயன்றவரை ஒத்துழை. ஒவ்வொரு காலையும் ‘‘இன்று தமிழ் உரிமை வெற்றிக்கு என்ன செய்யப் போகின்றேன்’’ என்றும் ஒவ்வொரு மாலையும் ‘‘இன்று தமிழ் உரிமை வெற்றிக்கு என்ன செய்தேன்’’ என்றும் உன் நெஞ்சினைக் கேள்.

பொருட் செல்வம்

தமிழ் மக்களிடம் செல்வமில்லாததால் இவ்வியக்கங்கள் வலிமை பெறா என்று கருதுவார் உளர். அவ்வாறு நான் கருதுவதில்லை தமிழ் பல்கலைக்கழகத்திற்கென பத்து இலட்சம் நிதியன்றைத் திரட்டுகின்றோம், தமிழ்பேசும் மகன் ஒவ்வொருவனும் ஒரு ரூபாய் தந்துதவ வேண்டு மென்பதே இந்நிதியின் நோக்கம். இவ்வாறு நிதி திரட்டினால் எத்துணைத் துறைகளில் நாம் முன்னேறுதல் கூடும்! வட கிழக்கு மாகாணங்களின் பொருட்டுறை வளர்ச்சிக்கும் ரூபாய் நிதியன்றை ஆண்டின் பிற்பகுதியில் நாம் நடத்த வேண்டும்.

நாம் உறுதி கொண்டால் யாதொன்றும் நம் வளர்ச்சியைத் தடுக்கப் போவதில்லை.

தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தமிழைக் காப்பாற்றும் இயக்கம். அக்கலைக்கோயிலை யெழுப்புமாறு தமிழர் அனைவரும் திரண்டு சேர்க.

சிங்களத்தைப் பயில்வதால் தாம் எதிர்பார்க்கும் நலன் களைத் தமிழ்பேசும் மக்கள் பெறப்போவதில்லை. நம் மொழி உரிமைகளை நிலைநாட்டுவதால் தான் அந்நலன்களைப் பெறுதல் கூடும்.

நான் இருக்கும் நிலையில் அரசியற்றுறையில் இறங்கி மொழி உரிமைகளுக்காகப் போராடுவதற்கு எனக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் மொழிப் பிரச்சினை அரசியற் பிரச்சனை மட்டுமன்று. அது கல்விப் பிரச்சனை, சமயப் பிரச்சனை, சமூகப் பிரச்சனை எனவே எத்துறையில் தமிழர் ஈடுபட்டு வந்தாலும் அத்துறைக்கு ஏற்றவாறு தமிழ்மொழி உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு முன்வருதல் வேண்டும். இதுகாறும் நன்றாக மொழி உரிமைகளைப் பற்றி உரையாடி யுள்ளோம். இனிமேல் அவ்வுரிமைகளைப் பற்றிச் செயல் ஆற்றுவது நம் கடமை.

மொழியுரிமைகளின் விளக்கம்

ஈழத்திருநாட்டில் நிகழ்ந்து வரும் மொழி உரிமைகள் விவாதத்தைப் பற்றியும் தமிழ்மொழியின் உரிமைகள் பற்றியும் தமிழ் மக்கள் முற்றும் அறிந்து தம் உரிமைகளைக் காப்பாற்றும் இயக்கங்கள் அனைத்திலும் பங்குபற்றுதல் வேண்டும் என்று இறைஞ்சுகின்றேன். இவ்வியக்கங்கள் வெற்றி பெறுமாறு ஒத்துழைத்தலும் பொருளுதவி செய்தலும் வேண்டும். சிங்கள மக்களின் ‘‘தனிச் சிங்களம்’’ என்னும் இயக்கத்தை தம் அன்பாலும் அறத்தாலும் உண்மையாலும் உறுதியாலும் தமிழ் மக்கள் வெல்லக்கூடும்.

நான் அரசியலிலும் கல்வித் துறையிலும் இருமொழிகள் பன்மொழிகள் இயங்குந் தன்மையை ஒருவாறு கற்றவன். இரு மொழி நாடுகள், பன்மொழி நாடுகளுக்கு நேரில் சென்று இருமொழி அரசியல், பன்மொழி அரசியல் எவ்வாறு தொழிற் படுத்தப்படுகின்றன என்பதை நன்கு நேரில் கண்டறிந்தவன். இருபதாம் நூற்றாண்டில் மொழியுரிமைகள் பண்புடைய நாடுகள் அனைத்திலும் முற்றும் ஒப்புக்கொள்ளப்பெற்று நிலவுகின்றன. நம் ஈழவள நாட்டில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் அரசின் மொழியாகவும் (National Language) ஆட்சி மொழியாகவும் (Official Language) அமைக்காததைப் போல் பெருங் கொடுங்கோண்மை வரலாற்றிலேயே இல்லையென்று கருதுகின்றேன்.

உலகச் சட்டவழக்கு

பண்டைக் காலத்தில் தம் மொழிகளை மக்கள் அனைவரும் பேணி வந்தனராயினும் தமிழ் மக்கள் தம் மொழியை தனி முறையில் பேணினர். தமிழர் தம் நாட்டைத் தமிழ் நாடென்றும் ஏனைய நாடுகளை ‘‘மொழி பெயர் தேயம்’’ என்றும் குறிப்பிட்டு வந்தனர். இடைக்காலத்தில் ஐரோப்பாவின் கொடுங்கோலர் கட்டாயமாகத் தம் மொழிகளை  அரசியல் மொழிகளாகத் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் அமைத்தனர். ஆயினும் அத்தகைய நாடுகள் விடாமுயற்சியுடன் தம் மொழி யுரிமைகளுக்காகப் போராடி வெற்றி பெற்றுக் கொண்டே வந்திருக்கின்றன. எட்டாவது ஹென்றி உவேல்ஸ் நாட்டையும் அயர்லாந்து நாட்டையும் கைப்பற்றிய பொழுது உவேல்ஸ் மொழியையும் ஐரிஸ் மொழியையும் மக்கள் பேசுவது சட்டத்துக்கு முரணென விதித்தான். நானூறு ஆண்டுகளாக உவேல்ஸ் மக்களும் அயர்லாந்து மக்களும் மொழியுரிமை களுக்காகப் போராடி இந்நூற்றாண்டில் ஒருவாறு வெற்றி கண்டு வருகின்றனர்.

மக்களுடைய அறிவும் உரிமைகளின் உணர்ச்சியும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒரு காலத்தில் அடிமைகளை நாட்டில் சட்டத்தால் ஆமோதித்தனர். ஆனால் இன்று அடிமைத் தன்மையைச் சட்டத்தால் விலக்குகின்றனர். ஒரு காலத்தில் சாதி வேற்றுமைகளை நம் நாட்டில் பாராட்டி வந்தோம். இன்று ஜயந்தியுடன் சாதி வேற்றுமைகளைச் சட்டத்தால் ஒழித்தல் வேண்டுமென்று திட்டம் வகுக்கின்றனர் ஆட்சியாளர். எனவே 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய மொழியுரிமை களுக்கும் 20 ஆம் நூற்றாண்டில் விளங்கும் மொழியுரிமை களுக்கும் மிக மிக வேறுபாடுண்டு. இன்று ஒரு இனத்தாரின் மொழிக்குச் சம உரிமை கொடுப்பதே முறையாகும். மக்கள் சமகுடிகளாயின் ஒரு நாட்டில் சமத்துவம் விளங்குமாயின் சிறுபான்மையோர் பேசும் மொழிக்கும் பெரும்பான்மையோர் பேசும் மொழிக்கு சம உரிமை சட்டத்தால் அளிக்கப்படுதல் வேண்டும். இன்றேல் சிறுபான்மையோரைக் குறைந்த குடி உரிமை உடையோராகவும் கருதுவதற்கு இடமுண்டு. இச்செயலை எதிர்ப்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடனென்க.

பின்லாந்தைப் பின்பற்றலாம்

நம் சிங்கள நண்பர்கள் தாம் ஏனைய நாடுகளின் மொழியுரிமை வழக்கைத் தாம் தழுவப் போவதில்லை யென்று கூறுகின்றனர். மற்றெல்லாத் துறைகளிலும் ஏனைய நாடுகளைப் பின்பற்றும் இவர்கள் மொழியுரிமைகளைப் பற்றி மட்டும் தழுவ விரும்பாததற்குக் காரணம் ஏனைய நாடுகளின் மொழி வழக்கிற்கு இவர்களின் கொள்கை நேர்முரணாயிருப்பதேயாம். பின்லாந்து நாட்டில் இரு ஆட்சி மொழிகள். ஒன்பது விகிதத் தினர் சுவிடிஷ் மொழி பேசுகின்றனர். தொண்ணூறு விகிதத் தினர் பின்னிஷ் மொழி பேசுகின்றனர். சுவீடிஷ் மொழி சிறுபான்மையோர் மொழியாயினும் அம்மொழிக்குப் பின்னிஷ் மொழியுடன் சம உரிமை உண்டு. பின்னிஷ் மொழியை பின்னிஷ் மாகாணங்களில் மட்டுமே கையாளுகின்றனர். ஆயினும் இரு மொழிகளும் அரசு மொழிகளாகவும், ஆட்சி மொழிகளாகவும் சம உரிமைகளுடன் விளங்குகின்றன.

1949ஆம் ஆண்டு பின்லாந்து தேசத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் 14ஆம் உட்குறிப்பில் பின்னிஷ் மொழியும். சுவீடிஷ் மொழியும் நாட்டின் மொழிகளென்றும் இவ்விரு மொழிகளையும் அரசு காப்பாற்ற வேண்டுமென்றும், இவ்விரு மொழிகளையும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் கையாளு தல் கூடுமென்றும்குறிக்கப்பட்டுள்ளது. இங்ஙனமே சுவிட்சர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சைப்றஸ் முதலிய முப்பது இருமொழிப் பன்மொழி நாடுகளில் சிறுபான்மையோருடைய மொழிகளுக் குப் பெரும்பான்மையோருடைய மொழிகளுடன் சம உரிமைகள் கொடுத்திருக்கின்றனர்.

சைப்பிறஸ் தீவில் உள்ள ஒன்பது இலட்சம் மக்கள் பேசும் இருமொழிகளுக்கும் சமஉரிமை உண்டு. இச்சிறு தீவில் இரு மொழிகள் அரசியல் மொழிகளாயின் இலங்கையில் இரு மொழிகள் இயங்குவது பொருந்தாதா?

நமக்கே உரிமை

சென்ற ஆறு ஏழு நாட்களாகப் பெரும்பான்மையோருடைய மொழியை மட்டும் அரசியல் மொழியாக்க வேண்டும் என்னும் பிரச்சினையைப் பெரும்பான்மையோரில் சிலர் வற்புறுத்தி வருகின்றனர். இது நீதிக்கும், சட்டத்துக்கும், மக்கள் உரிமைக் கோட்பாடுகளுக்கும் முரண்படும் கொள்கையாகும். மக்கள் அடிப்படை உரிமைகளாகிய மத உரிமை, மொழி உரிமை, பண்பாட்டுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை முதலிய துறை களில் சிறுபான்மையோரைத் தாக்கும் விதத்தில் பெரும் பான்மையோருக்குச் சட்டம் வகுக்க உரிமை இல்லை. சிங்கள மக்கள் தமக்கு அரசியல் மொழியாகச் சிங்களமொழியை அமைக்க முழு உரிமையுண்டு. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் மொழி யாது என்பதைப் பற்றி முடிவு செய்யத் தமிழ் மக்களுக்கே உரிமை உண்டு. குடியாட்சி என்பது பெரும் பான்மையோரின் ஆட்சிதான். ஆனால் அது பல்வேறு வகுப்பினரையும் சேர்த்த பெரும்பான்மையோர் ஆட்சியாதல் வேண்டும். மேலும் தனிச் சிங்கள மக்களின் ஆட்சியன்று. தனிச் சிங்கள மக்களின் நலன்களுக்காகச் சிறுபான்மையோரின் அடிப்படை உரிமைகளை வேள்வி செய்யும் ஆட்சியுமன்று.

சம உரிமை என்றால் என்ன?

உலகில் விளங்கும் மொழியுரிமைகளின்படி இரு மொழி களுக்கும் அரசு மொழி நிலையும் ஆட்சிமொழி நிலையும் அளித்துச் சிங்கள மொழி சிங்கள மக்களுக்கு ஆட்சி மொழி யெனவும், தமிழ்மொழி தமிழ் மக்களுக்கு ஆட்சி மொழி யனெவும் நிறுவுவதே நீதியின் வழியாகும். சம உரிமையெனில் சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டுமென்பதும், தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டுமென்பதும் அல்ல கருத்து. தமிழ் மாவட்டங்களில் தமிழ் மக்களுக்குத் தமிழும், சிங்கள மக்களுக்குச் சிங்களமும் ஆட்சி மொழிகளாவதையே நாம் வேண்டுகின்றோம். இதுவே குடியாட்சி நீதியாகும். இதுவே புத்த தருமமாகும். இதுவே இந்த ஜயந்தி வருடத்தில் நம் புத்த நண்பர்கள் தழுவ வேண்டிய தருமமாகும். இதுவே தமிழ் அறமாகும். இதுவே கிறிஸ்தவ நீதியுமாகும்.

முறையாது?

ஒரு நாட்டில் ஒரு மொழி இரண்டு சத விகிதம் பேசப்பட் டாலும் கூட, அது ஒருநாட்டின் ஒரு பகுதியில் மட்டும்  வழங்கப் பெற்றாலும் கூட, அதனை அரச மொழியாகவும் தேசிய மொழியாகவும் நிறுவிச் சம உரிமை கொடுப்பதே பண்புடைய மக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. இவ்வழக்கத்துக்கு முரணாக நம் சிங்கள மக்கள் நடக்கத் துணிவது ஏன்? தமிழ் மக்களின் உணர்ச்சியையும் உரிமையையும் சிறிதேனும் பொருட்படுத்தாது திட்டம் வகுப்பது எங்ஙனம்? இறுதியாகத் தமிழ் மக்கள் ஈழ வளநாட்டில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு குடையின் கீழ் சம உரிமையுடன் வாழவேண்டுமாயின், இரு மொழிகளுக்கும் அரசு நிலையும், ஆட்சி நிலையும் நம் நாடு கொடுத்தல் வேண்டும். தமிழ் மாணவர் ஆரம்பப் பாடசாலை யிற் தொடக்கம் பல்கலைக்கழகம் ஈறாகத் தமிழ் மொழியில் கற்க வாய்ப்பு அளித்தல் வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மொழியில் அரசுடன் தம் நடவடிக்கைகளை நடத்த வாய்ப் பளித்தல் வேண்டும். மேலும் தமிழ்மொழிக்கும், பண்பாட்டிற்கும் அரசினர் ஆதரவு அளித்தல் வேண்டும். இவ்வாறு செய்வ தாலே தமிழருக்கும் சம உரிமை இந்நாட்டில் உண்டு என்பதை அரசியலார் நிலை நிறுத்த முடியும்.

தனிச் சிங்களத்தை எப்படி எதிர்ப்பது?

தனிச் சிங்களச் சட்டத்தின் அரசியல் கருத்துக்களை அரசியலில் ஈடுபடுவோர் மக்களுக்கு விளக்கிக் கூறுவார்கள். ஆனால் தனிச்சிங்களச் சட்டத்தின் கல்விக் கருத்துக்களைப் பற்றிக் கூறவேண்டியது என்னைப் போன்ற ஆசிரியர்களின் கடமையாகும். நான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. ஆயினும் தனிச் சிங்களம் என்னும் திட்டம் கல்வியோடும், குடியுரிமையோடும் பண்பாட்டுடனும் தொடர்பு கொண் டுள்ளதால் அதனை நன்கு ஆராயவேண்டியது ஈழத்திருநாட்டின் எதிர்கால நலத்தை விரும்புவோரின் கடமையாகும். இந்நகல் தமிழ்க் கல்வியையும், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழர் தழுவும் திருமறைகளையும் அழிக்கவல்லது என்பதில் சிறி தேனும் ஐயமில்லை. 1967ஆம் ஆண்டுக்குப் பின் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே வடமாகாணத்திலும், கீழ்மாகாணத் திலும் இருப்பன தவிர இடை நிலைப்பாடசாலைகளும், உயர்நிலைப் பாடசாலைகளும் பல்கலைக்கழக கல்வியும் இருக்கமாட்டாவென்பதே இந்நகலின் திட்டமாகும்.

1.நம் எதிர்ப்பை எவ்வாறு நிகழ்த்த வேண்டுமென்பதை ஆராய்வோம். முதன் முதலில் இந்நகலை வல்லமையிலும் நம்பிக்கையுடையவராதலால் நாட்டின் நலத்துக்காகவும், தமிழ்மொழியின் வெற்றிக்காகவும் இறைவனை வேண்டி வருதல் வேண்டும். இவர்கள் ஒவ்வொரு நாளும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்தல் வேண்டும். தத்தம் திருமறைகளின் நூல்களைச் சிறிதேனும் தினமும் படித்தல் வேண்டும். தியானத்தாலும் வழிபாட்டாலும் இவர்கள் உள்ளத் தூய்மையடைந்து புதிய தூய ஆற்றலுடன் இவ்வியக்கத்தில் ஈடுபடுவார்கள்.

2.சிங்கள மக்கள்பால் சிந்தையாலும், செயலாலும் அன்பும் அறமும் காட்டி அவர்களுடன் ஒழுக வேண்டும். அவர்களுக்குச் சிறிதேனும் சிந்தையாலோ செயலாலோ தீமை செய்தலாகாது. அவர்கள் இயற்கையில் நற்குணமும் நற்பண்பும் படைத்த வர்கள். அவர்களுட் பலர் சிறுபான்மையோரைப் பாதிக்கும் இதுபோன்ற நகல்களை விரும்புவதில்லை. ஏனையோர் பெரும்பான்மையோரின் ஆட்சியென்றால் தனிச்சிங்கள ஆட்சியாதல் வேண்டுமென்று நம்புகின்றனர். அவர்கள் அறியாது செய்வதை நாம் பொறுத்தல் வேண்டும். அதுவே தமிழ் அறம்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தலோ சால்பு (987)

3. ஒவ்வொரு சிற்றூரிலும் பேரூரிலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், மற்றுமுள்ளோரும் கூடி நம் உரிமைகளைப் பற்றியும், இத்திட்டத்தின் கல்விக் கருத்துக்களைப் பற்றியும் உரைகள் நிகழ்த்த வேண்டும்.

இத்திட்டத்தை எதிர்ப்பதாகத் தம் பிரதிநிதிக்கும், பிரதமருக் கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் கூட்டங்களின் தீர்மானங் களை அனுப்புதல் வேண்டும். இக்கூட்டங்கள் வடமாகாணம் கீழ்மாகாணங்களில் மட்டுமல்லாது ஏனைய மாகாணங்களிலும் பெரும்பான்மையோருடைய சீற்றத்தைத் தூண்டிவிடாது நடைபெறுதல் வேண்டும். தனிச்சிங்களம் எனும் நகல் நம்மைப்பாதிக்கும் இத்துணைக் குறிப்புகளை உள்ளடக்கி வந்ததற்கு காரணம் தமிழ் மக்கள் இது பற்றி எதிர்ப்புக் கூறாததேயாகும். குடியாட்சியில் பிரதிநிதிகள் மக்களின் கருத்துக்களை இத்தகைய கூட்டங்களால் தான் அறிகின்றனர். மக்கள் அனுப்பும் தந்திகளிலிருந்தும், செய்திகளிலிருந்துமே பிரதமர் அவர்களது எதிர்ப்பை நன்கு அறிய வருவார். எதிர்ப்பு இல்லையென்றால் மக்களுக்கு இத்திட்டத்தில் உடன்பாடு உண்டென்று கருத இடமுண்டு.

நீதியும், உண்மையும் தமிழ் மக்கள் சார்பில் இருக்கும்போது நாம் உறுதியாக உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். இத்திட்டத்தின் உட்கருத்துகள் பல. இதை அமுலுக்குக் கொண்டு வருவாரேயாயின் தமிழ் பத்திரிகைகளுக்கும் வானொலி நிகழ்ச்சிகளுக்கும், தமிழ் கலைகளுக்கும் தமிழர் தழுவும் சமயங்களுக்கும் எழுத்தாண்மைக்கும் இடமிரா தென்பது திண்ணம். இதுகாறும் இராத மொழிக்கொடுங் கோன்மையும் பண்பாட்டுக்கொடுங்கோன்மையும் இத்திட்டத் தின் பயனாவன. நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர், ஒல்லாந்தர், பறங்கியர், தம் கருத்திலும் கொள்ளாத நோக்கங் களையும், கொடுமைகளையும் இத்திட்டம் கருதுகின்றது. அயர்லாந்து தேசத்திலும், வேல்ஸ் நாட்டிலும் 16ஆம் நூற்றாண்டில் 8வது ஹென்றி ஐரிஸ் மொழியையும், வேல்ஸ் மொழியையும் அழிக்க நிறைவேற்றிய சட்டங்கள் போல் 20ஆம் நூற்றாண்டில் இத்திட்டம் உருப்பெற்றிருக்கிறது. மக்களின் உரிமைப் போராட்டமும் சுதந்திர தாகமும் சமத்துவ மனப்பான்மையும் இந்நான்கு நூற்றாண்டுகளில் எத்துணை வளர்ந்துள்ளது என்பதை இத்திட்டம் அறிந்திலதுபோல் தோன்றுகின்றது.

சட்டம் நிறைவேறினாலும் போராட்டம் ஓயக்கூடாது

தனிச்சிங்கள மசோதா சட்டமாவது திண்ணமாயினும் அச்சட்டத்தைப் பொருட்படுத்தாது தமிழ்மொழியின் உரிமை களனைத்தும் மீண்டும் பெறுமாறு அயராது உழைத்தலே தமிழ் மக்களின் கடமை.

இதுகாறும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குப் பல்வேறு இன்னல்கள் நிகழ்ந்திருப்பது அவர் களுக்கு ஒற்றுமையையும் புத்துணர்ச்சியையும் அளித்திருக்கின்றது.

தமிழ் மக்கள் எவராயிருப்பினும், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர் முழுமுதற் கடவுள் ஒருவரை வழிபட்டுவரும் வகுப்பினர். எனவே அத்தோன்றாத் துணையின் திருவருளை நம் அறப்போர் வெற்றிபெறுமாறு நாள்தோறும் வேண்டி வருதல் வேண்டும். இறைவனின் துணையிருந்தால் நாம் அடைய முடியாத வெற்றி ஒன்றேனுமில்லை. தியானத்தாலும் வழிபாட் டாலும் இவ்வறப்போரில் தூய்மையடைந்து உழைப்போம்.

இச்சட்டத்தை தமிழ் மக்கள் சத்தியாக்கிரக முறையில் எதிர்க்க முழு உரிமையுண்டு. சத்தியாக்கிரகத் துறையில் இதனை எதிர்க்கும் வழிவகைகளை நம் அரசியற் தலைவர்கள் விரைவில் கூறுவர். அவர்களினுடைய திட்டங்களை நம் மக்கள் அனுசரித்தல் வேண்டும். ‘‘தனிச் சிங்களம் சட்டமாகி விட்டது. இனிச் செய்வது யாதொன்றுமில்லை’’ எனும் மனப்பான்மை கோழையின் மனப்பான்மையாகும். பல்லாயிரம் ஆண்டு களாகத் தம்மீது படையெடுத்த மாற்றாரைப் புறங்கண்ட தமிழன்னை நம்மிடம் வீரத்தையும் ஆற்றலையுமே எதிர்பார்க் கின்றாள்.

மொழியுரிமைகளுக்காகப் போராடிய மக்களின் வரலாற்றை ஆராயும்போது அவர்களினுடைய வரலாறு நம்முடைய எதிர்கால வாழ்க்கையில் அஞ்சாது உழைப்பதற்குப் பெரும் தூண்டுதலாக இருக்கின்றது. ‘உவேல்ஸ்’ மக்களின் மொழியைச் சிதைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் எட்டாவது ஹென்றி யும் அவனைத் தொடர்ந்து வந்த மன்னர்களும் படை யெடுத்தனர். 400 ஆண்டுகளாக ‘உவெல்ஸ்’ மக்கள் பலர் தம்முடைய பண்டைய மொழியை மறைவாகப் பேணி வந்தனர். இன்று அவர்களினுடைய மொழி சில உரிமைகளைப் பெற்று விளங்குகின்றது. இன்னுஞ் சில ஆண்டுகளில் உரிமைகளனைத்தையும் பெற்று விளங்குமென்பது திண்ணம். இவ்வாறே பெல்ஜிய நாட்டில் ‘விளமிஷ’ மொழி பேசுவோர் 100 ஆண்டுகளாகப் போராடி இறுதியில் முழு உரிமைகளையும் பெற்று இன்று இன்பமாக வாழ்கின்றனர். பின்லாந்தில் 700 ஆண்டுகள் போராடிய பின் இன்று பின்னிஷ் மொழி அரசியல் மொழியாகத் திகழ்கின்றது. எனவே மொழியுரிமைகளுக்காகப் போராடிய மக்களின் வரலாற்றை இன்னும் பெருகக் கூறலாம்.

தமிழ்மொழி ஈழத்தின் மொழி. பல நூற்றாண்டுகளாக ஈழத்தில் தனியாட்சி புரிந்தமொழி தமிழ். தனியரசின் மக்கள் தமிழ் மக்கள். எனவே தமிழ்மொழியும் சிங்களமொழியைப் போற் சம உரிமை பெறுதல் வேண்டும்.

தமிழ் மக்களின் கடமை

இச்சட்டத்தின் பயனாக ஈழத் தமிழ் மக்களனைவரும் இன்று தொடங்கித் தமிழ் இலக்கியங்களையும் தமிழர் வரலாற்றையும் புத்துணர்ச்சியோடு கற்று வருவார் என்பது திண்ணம். பண்டைக் காலத்தில் இல்லாத தமிழன்பு எதிர்காலத்தில் நம்முள்ளங்களில் பெருக்கெடுக்கும் என்பது ஒரு தலை. தமிழ் மாணவர் தாழ்வு மனப்பான்மை யாதொன்றும் வளர்க்காது தமிழ்மொழியின் பெருமையையும் தாம் காட்ட வேண்டிய வீரத்தையும் வளர்க்கு மாறு நாம் கல்வித்துறையில் ஈடுபடவேண்டும். அரசியல் வாதிகள் அரசியற்றுறையிற் சம உரிமைகளைப் பெற முயலுங்கால்  கல்வித்துறையிலும் பண்பாட்டுத்துறையிலும் சமூகத்துறையிலும் தொண்டாற்றி வருபவர்கள் புது இயக்கங் களை உண்டாக்கித் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்துக்காகத் திட்டங்கள் வகுத்தல் வேண்டும்.

சிங்கள அரசியலார் தமிழர் பண்பாட்டை வளர்ப்பாரென்று எதிர்பார்ப்பது வீணாகும். அவர்கள் தேசியப் பண்பாடென்று கூறுவது சிங்களப் பண்பாடேயாகும். தேசிய இயக்கமென்பது சிங்கள இயக்கமேயாகும். தேசிய மொழி என்பது சிங்கள மொழியேயாகும். அவர்கள் ஏதோ நம்மை இலங்கைக்கு வந்துவிட்ட அகதிகளென்றே கருதுகின்றனர். தமிழ் மக்களே தமிழ்த்துறைகளனைத்தையும் காப்பாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ் மக்களின் முயற்சியை வருங்காலத்தின் வரலாறு புகழ்ந்து கூறும்.

அரசியற்துறை யழிந்த ஏனைய துறைகளில் உழைப்பதற் காகத் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் என்ற பெயருடன் ஒரு இயக்கம் உருவாகி வருவது நமக்குப் பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவ்வியக்கம் தமிழ்பேசும் மக்களின் கல்வித் துறை பண்பாட்டுத்துறை, பொருளியற்றுறை ஆகிய இம் முத்துறைகளிலும் ஆராய்ச்சியும் அலுவலும் ஆற்ற முன்வந் துள்ளது. தமிழ் அரசியல் இயக்கங்களை ஆதரிப்பதுபோல் இவ்வியக்கத்தையும் நம் மக்கள் ஆதரிப்பார்களாக.

தமிழ் மொழியின் உரிமைப்போர் இன்றுதான் ஆரம்பித் துள்ளது. இப்போரில் வெற்றி காணுமட்டும் தமிழ் மக்கள் அனைவரும் அணிவகுத்து ஆடவரும், பெண்டிரும், மாணவரும், முதியோரும் நாள்தோறும் இப்போரில் பங்குபற்றி ஒத்துழைப்பது கடமை.

ஒற்றுமை வேண்டும்

சென்ற சில தினங்களாக வடமாகாணம் கீழ்மாகாணங்களில் சொற்பொழிவுகள் ஆற்றியபொழுது நம் ஈழத்தமிழ் நாட்டின் பொருளியல் சமூக முன்னேற்றங்களைப் பற்றி அறிஞருடன் கலந்து உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. மேலும் வவுனியா தொடங்கி யானையிறவு ஈறாக இடையேயுள்ள நிலப்பரப்பின் எதிர்கால முன்னேற்றத்தையும் உணர்ந்தேன்.

கோயிலுஞ் சுனையும் உள்ள கடல் சூழ்ந்த திருமலையின் குடாவையும் பாறையையும் அதனைச் சுற்றியிருக்கும் நீர்ப் பரப்பு நிலப்பரப்பின் அழகையும் கண்டு வியந்தேன். கீழ் மாகாணத்தில் கடலுடன் கலக்குமுன் மாவலி கங்கையின் இரு மருங்கும் தன் சேயைப்போல் நீரூட்டும்பச்சைக்கழனிகளைக் கண்டு மகிழ்ந்தேன். மட்டக்களப்பின் தென்பாகத்தில் காரை தீவு, அக்கரைப்பற்று முதலிய இடங்களில் முஸ்லீம் மக்கள் பொன்னிறக் கதிர்களை வெட்டிக் குவிப்பதைக்கண்டு களித்தேன்.

சென்றவிடமெல்லாம் தமிழ்பேசும் மக்களனைவரிடமும் புது உணர்ச்சியும் புது ஆர்வமும் தோன்றியது. தனிச்சிங்களம் சட்டமானதும் தமிழ் மக்களுக்கு முன்பு இராத உணர்ச்சியும் ஒற்றுமையும் தோன்றிற்று. தமிழ்பேசும் இனம் என்னும் புத்துணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டேன்.

எதிர்காலத்தில் தமிழ்மொழி செல்வாக்குடன் வளர்வதற் காகத் தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக வாழும் மாவட்டங்களை நாம் இன்றே பல துறைகளிலும் சீர்திருத்திக்கொள்ளுதல் வேண்டும்.

1. நம் மாகாணங்களில் காடாகக் கிடக்குமிடங்களை நாடாக்குவது நம்முடைய கடமை. தென்மாகாணங்களில் செல்வமுள்ள தமிழர் வடமாகாணம் கீழ் மாகாணங்களில் நிலம் வேண்டி நெல், கரும்பு முதலிய பயிர்களை விழைத்து உழவுத் தொழிலும் தோட்டத்தொழிலும் சிறக்கச் செய்வதால் ஈழத் தமிழ்நாட்டில் பொருளியற் துறைகளில் நாம் முன்னேறுவதற்கு வழிவகைகளைக் காண்பர். தென் மாகாணங்களில் தங்க விருப்பமில்லாத தமிழர் ஒன்று சேர்ந்து வடமாகாணம் கீழ் மாகாணங்களில் புதுநகர்களை அமைத்து ஈழத்தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குத் துணை புரியக்கூடும். வடமாகாணம் கீழ் மாகாணங்களில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் குடியேறுவது நம் எதிர்கால நலன்களுக்கு இன்றியமையாதது.

மலேயா போன்ற பிறநாடுகளில் இருந்து இலங்கைக்குத் திரும்பும் தமிழர் நம் மாகாணங்களில் வாழ்ந்து தாம் ஈட்டிய பொருளை இங்கு நன்முறையில் செலவு செய்வது நமக்கும் பெருந்துணையாகும். தென் மாகாணங்களில் வாழும் தமிழர் அனைவர்க்கும் வடமாகாணம் கீழ் மாகாணங்களில் நிலமும் பொருளும் முதலும் இருப்பது நன்று. யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் தீவுகளிலும் மக்கள் தொகை பெரிதாக இருப்பதால் அங்குள்ளவர்களுள் பலர் வவுனியா திருகோணமலை, முல்லைத் தீவு, முருங்கன், மாங்குளம், கிளிநொச்சி முதலிய இடங்களுக்குச்சென்று குடியேறுவது நலமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு அகல்வதற்கு அஞ்சுவது தமிழினத்துக்குப் பெருமையன்று. கல்லோயா, கந்தளாய் முதலிய திட்டங் களுக்குத் தமிழரை அழைத்தபோது அங்கு செல்லப் பலர் விரும்பவில்லை.

2. நாம் பண்டைக்காலத்தில் சாதிச் சமய வேற்றுமைகளை எத்துணை பாராட்டி வந்திருந்தாலும் இன்று நாம் அத்தகைய வேற்றுமைகளை ஒழித்து தமிழ் மொழி நம்மை இணைத்து நிலவும் ஒற்றுமையை வளர்த்தல் வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டில் மக்களின் உரிமைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களனைவரும் சமநிலையுடையவர்களும் உடன் பிறந்தாரும் என்று நம் வாழ்க்கையிலும் கூட்டுறவு அமைப்பி லும் நாம் காட்டி வருதல் நம் கடமையாகும். மக்களை கிணற்றி லிருந்தும் பொது மன்றத்திலிருந்தும் கல்விக் கழக்கத்திலிருந்தும் அகற்றி வைப்பது தமிழ்ப்பண்பாடுமன்று, தமிழர் மரபுமன்று, தமிழருள் பெரும்பான்மையோராய் இருப்போர் தமிழருள் சிறுபான்மையோராக இருப்பவருக்குச் சிறப்பான முறையில் நட்பும் அன்பும் ஆதரவும் காட்டுதல் வேண்டும்.

3. இலங்கையின் தலைநகரிலிருந்து அகன்றிருப்பதாலும் பல இனத்தாருடன் தொடர்பு ஒரு சிறிது குறைந்து இருப்பதாலும் நம் மாகாணங்களில் பரந்து விரிந்த மனப்பான்மை குன்றியிருத்தல் கூடும். எனவே சைவ, வைஷ்ணவ, முஸ்லிம், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மை யும், கொழும்புத்தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டக் களப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத முறை களாகும். நம் இனத்திற்கு ஒற்றுமையும் உறுதியும் இருப்பதற் காக நம் எழுத்தறிஞர்களும் மேடைக்கலைஞரும் ஒத்துழைத் தல் வேண்டும். நமக்கு புத்தம் புதிய பாடல்கள் வேண்டும். சின்னங்கள் வேண்டும், சிலைகள் வேண்டும். நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும், பல்கலைக்கழகம் வேண்டும்.

குறிப்பு :

இந்த சிறு பிரசுரம் தமிழ் உரிமைப் பாதுகாப்புக் கழகத்திற்காக கண்டி பேராதெனிய வீதி 105ஆம் இல்லத்தில் வசிக்கும் ஆர்.யே.சிங்கம் அவர்களால் கண்டி காசில் வீதி 8ஆம்-நிர் இல்லம் நந்தன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. முதற் பதிப்பு 1956இல் வெளியிடப்பட்டது (5000 படிகள்) இரண்டாம் புதுப்பதிப்பு 1961இல் வெளியிடப்பட்டது (2000 படிகள்). மூன்றாம் புதுப்பதிப்பு 1961இல் வெளியிடப்பட்டது (3000 படிகள்). மேற்குறிப்பிட்ட பிரசுரம் மூன்றாம் புதுப் பதிப்பின் பிரதி. இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டவை எவையென்பது தெரியவில்லை. முதற்பதிப்பு கிடைக்க வில்லை. ஆதலால் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. - தெ.ம.

Pin It