[தலித்துகள் அரசியல் அதிகாரத்துக்கு வராமல் தலித் மக்கள் விடுதலை பெற முடியாது என்றார் அம்பேத்கர், ஆனால் அப்படி அதிகாரத்துக்கு வரக்கூடிய தலித், யார், எப்படிப்பட்டவர, எம்மாதிரி கொள்கையுடையவர், ஆளுமையுடையவர் என்பதையும் சேர்த்து நோக்குவதிலேயே இதற்கான விடை அடங்கியிருக்கிறது.

அதேபோல தலித் தலைமையில் தான் தலித் மக்கள் விடுதலை அடைய முடியும். எனவே சமூகப் புரட்சிக்கு தலித் மக்கள் தான் தலைமையேற்க வேண்டும் என “தலித் தலைமைக் கோட்பாடும்” எண்பதுகளில் தீவிரமாக முன் வைக்கப்பட்டது. இதையும் மேற்குறிப்பிட்டவாறே தான் நோக்க வேண்டும்.

தலித் மக்களுக்கு ‘அரசியல் அதிகாரம்’, சமூகப் புரட்சிக்கு ‘தலித் தலைமை’ என்பதை, ஒரு பொது நோக்கில் வரவேற்கலாம். என்றாலும் இதை ஒரு கோட்பாடாக ஏற்க முடியாது. காரணம், ஒருவர் பிறப்பால் தலித்தாக இருக்கிறார் என்பதனாலேயே அவர் தலித் விடுதலைக் கோட்பாட்டிற்காக உழைப்பார். ஆதிக்க சக்திகளை எதிர்த்து சமரசமின்றி போராடுபவர் என்று எதிர் பார்க்க முடியாது. நடைமுறையும் அதை மெய்ப்பிக்கவில்லை. அதேபோல ஒருவர் தலித் அல்லாதவராக இருக்கிறார் என்பதாலேயே அவர் தலித் விடுதலைக்காக உழைக்கமாட்டார், போராட மாட்டார் என்றும் சொல்ல முடியாது. நடைமுறையும் அப்படி இல்லை.

தலித் மக்களுக்கு தலித் தலைவர்களே பலர் துரோகம் இழைத்திருக்கிறார்கள். தலித் அல்லாத பலர் தலித் மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உழைத்துமிருக் கிறார்கள். எனவே தலித் விடுதலை என்பதை, தலித் மக்களுக்கு விடுதலை வழங்கும் கோட்பாட்டை, முன்னிறுத்தும், செயல் படுத்தும் தலைமை என்பதாகத்தான் கொள்ள வேண்டுமேயல்லாது, அதாவது கொள்கைத் தலைமை, தத்துவத் தலைமை என்றுதான் கொள்ள வேண்டுமேயல்லாது நபர்கள் தலைமையாக சாதியத் தலைமையாகக் கொள்ள முடியாது என்பது வெளிப்படை.

இப்படி இதில் பிறப்பு அடிப்படை சாதியத்தை முன்னிறுத்துவது மீண்டும் பார்ப்பனியத்துக்கே துணை போய் அதைப் பாதுகாப்பதாகவே முடியும். தமிழ்நாட்டில் தலித் எவரும் நேரடியாக முதல்வராக இல்லை என்ற போதிலும் தலித்துகள் சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள் என்றும், இவர்களால் தலித் மக்களுக்கு என்ன விடுதலை கிடைத்தது என்பது யோசிக்கத் தக்கது. தில்லியில் மாயாவதி நேரடியாக முதல்வராக - மாநிலத்தின் சகல அதிகாரமும் படைத்த முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சியில் தலித் மக்களுக்கு என்ன விடுதலை கிடைத்து வருகிறது என்பதும் ஆழ்ந்து நோக்கத் தக்கது. இந்த நோக்கில் இக்கட்டுரை இங்கு இடம் பெறுகிறது. - ஆசிரியர்]

“தனி நபர் வழிபாட்டை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண் டும், இல்லாவிட்டால் அவ்வழிபாடே உங்களுக்கு அழிவைக் கொண்டுவந்து சேர்க்கும். ஒரு தனிநபரைத் தெய்வ மாக்குவதன் மூலம் நீங்கள் உங்களது பாதுகாப்பிற்கும் தீர்வுக்கும் அத்தனி நபரையே நம்பி விடுவீர்கள். அதன் விளைவாக நீங்கள் சுயச்சார்பற்றிருப் பதற்கும் உங்கள் கடமைபற்றிக் கவலை யற்றிருப்பதற்கும் பழகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட கருத்துகளுக்கு இரையாகி விட்டால், வாழ்வின் மைய நீரோட்டத்தில் அசைவற்றுக் கிடக்கும் மரக்கட்டைகளை விட உங்கள் தலைவிதி மோசமாகிவிடும். உங்கள் போராட்டம் பூஜ்ஜியத்தில் போய் முடியும்”.

- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

அம்பேத்கர் ஊதிய இந்த அபாய சங்கின் சத்தம் இன்னமும் அப்பாவித் தலித் மக்களின் காதுகளை எட்ட வில்லை. அதற்கான தண்டனையைத் தான் தற்போது பாவம் தலித்துகள் அனுபவித்து வருகிறார்கள், இதில் உ.பி. மாயாவதி அரசின் தமையிலான சில அனுபவங்கள்,

மாயாவதியின் வரலாறு

உத்திரப்பிரதேசத்தில் 1956ஆம் ஆண்டு சனவரி மாதம் 15ஆம் நாள் பிறந்தவர் மாயாவதி. தாழ்த்தப்பட்ட ஜாட்வா அல்லது சாமர் பிரிவைச் சேர்ந்தவர். தந்தை பிரபுதாஸ்; தாய் ராம்ரதி. உடன் பிறந்தவர்கள் ஏழுபேர். இவர்களில் B.A., B.Ed., L.L.B, பட்டம் பெற்ற மாயாவதி தனது குடும்பநிலைப் பற்றி உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநருக்கு அளித்த பேட்டியில்,

“நான் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஒரு சிறிய வீட்டில் சகோதர சகோதரிகள் ஏழுபேருடன் வாழ்ந்து வந்தேன். தந்தை குறைந்த சம்பளம் பெற்று வந்த எழுத்தர்  தாய் படிக்காதவர். குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார்”, என்று குறிப்பிடுகிறார்,

பள்ளி ஆசிரியையாக ஏழு ஆண்டுகள் (1977 / 1984) பணியாற்றி பின் 1984-ல் தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் (பி.எஸ்.பி) கட்சியில் சேர்ந்து இவர் ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும் இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப் பிரதேச முதல்வராக 3-6-95 முதல் 18-10-95 வரை (நான்கரை மாதங்கள்) 21-3-97 முதல் 21-9-97 வரை (ஆறு மாதங்கள்) 3-5-2002 முதல் 29-8-2003 வரை (பதினைந்து மாதங்கள் இருபத் தாறு நாட்கள்) என மூன்று முறை பதவி வகித்து நான்காவது முறையாக தற்போது 13-5-2007 முதல் இன்று வரை நீடித்து வருபவர்.

இப்பணிகளினூடே மாயாவதி இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.

1. பகுஜன் சாமாஜும் அரச நீதியும், 2. எனது போராட்டம் நிறைந்த வாழ்க்கைப் பயணமும் பகுஜன் சமாஜ் கட்சி இயக்கமும் (நான்கு தொகுதிகள்) இவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகி யுள்ளன.

மாயாவதி முதல் மூன்று முறை பதவி வகித்ததற்கும் நான்காவது முறை பதவி வகித்ததற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. முதல் மூன்று முறைகளிலும் அவர் கூட்டணியின் தயவுடன் - தோட்டா இல்லாத துப்பாக்கியாக இருந்தார். இந்தமுறை அவர் தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வராகியுள்ளார், அதாவது, தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி யாகியுள்ளார். இதனால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ! செய்ய முடியும் ! என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் மக்கள் நல நோக்கில் ஏதும் செய்தாரா என்பதுதான் கேள்வி?

சிலை வெறி

இந்த உலகில் உயிரோடிருக்கும் மனிதர்களில் உங்களுக்கு மிகமிகப் பிடித்தமானவர் யார் என்று கேட்டால் அவர் தன் பெயரைத்தான் சொல்வார். ஆம். மாயாவதிக்குத் தன்னைத் தான் மிகவும் பிடிக்கும். இதனாலேயே தனது சிலைகளைத் தானே அமைத் தார். திறந்தார், வடகொரிய அதிபர் கிம் ஜோங் இல் போல். இது விகார மாய்த் தெரியாதிருக்க கூடவே அம் பேத்கர். கன்ஷிராம், புத்தர் மற்றும் யானைச் சிலைகளையும் அமைத்து பூங்காக்களையும் நிறுவினார்.

1. மாயாவதியின் முதல் சிலை லக்னோவில் உள்ள ப்ரேர்ன பவனில் வைக்கப்பட்டது. அதைத் திறந்து வைத்த மாயாவதி இது தலித் ஆட்சி உத்திர பிரதேசத்தில் அமைந்ததைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்ட தாகச் சொன்னார். கூடவே “தலைவர் களின் வாழ்நாளிலேயே நினைவகங் கள் கட்ட வேண்டுமென்று நான் எப்போதும் கூறிவருகிறேன். அதனால் தான் என் தலைவர் கன்ஷிராம் அவர்கட்கு அவரது வாழ்நாளிலேயே லக்னோவில் சிலை வைத்தேன். அவரது சிலைக்குப் பக்கத் திலேயே எனது சிலையும் வைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகையால்தான் எனது சிலையை வைப்பதில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.

வெட்கமோ கூச்சமோ இன்றி இதைக் குறிப்பிட்ட மாயாவதி லக்னோ விலேயே சிறந்த சிற்பியான ஷ்ரவான பிரஜாபதி என்பவரை சிலை வடிப் பதற்கு நியமிக்க அவர் மாயாவதியின் ஏழு சிலைகளை வடித்தார்.

இதுஒருபுறம் இருக்க மாயவாதி முதல்முறை முதல்வரானபோது 1995ஆம் ஆண்டு, அம்பேத்கர் நினைவுச் சின்னம் கட்ட ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்குப் பின் அது 2003இல் முடிக்கப்பட்டது. இது அம்பேத்கர் பூங்கா என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 25 கோடி.

ஆனால் தற்போது அந்த அம்பேத்கர் பூங்கா இடித்துத் தள்ளப்பட்டு மறுசீரமைப்பு செய்யப் பட்டது. இதற்கு ஆன செலவு ரூ, 150 கோ£டி.

லக்னோ சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் கன்ஷிராம் நினைவகம் இப்போது கட்டப்பட்டு வருகிறது. இதில் கன்ஷிராம் சிலையும் மாயாவதி சிலையும் வைக்கப்படும். இதற்குச் செலவாகும் தொகை ரு, 370 கோடி.

பிஜ்னேர் சாலையில் 51 ஏக்கர் பரப்பளவில் ரமாபாய் அம்பேத்கர் பேரணித் திடல் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் மதிப்பீடு ரூ, 65 கோடி.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் நடந்த கார்கில் போரில் மாண்ட வீரர்கள் நினைவாக நினைவுப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இதில், கன்ஷி ராம் கலாச்சார மையம் ஒன்று நிறுவப் பட உள்ளது. இதில் கன்ஷிராம், மாயாவதி சிலைகள் வைக்கப்படும். இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 90 கோடி. கோமதி ஆறு சங்கமிக்கும் இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ‘டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் சமூக அறிவியல் மையம்’ கட்டப்பட்டு ஏப்ரல் 2008ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது. இங்கும் கன்ஷிராம், மாயா வதி சிலைகள் வைக்கப்பட்டள்ளன. இதற்கு ஆன செலவு ரூ. 7 கோடி.

ஆலம்பாக்கில் உள்ள பிரபலங் கள் சாலையில் 6000 சதுரடி பரப்பில் மண்டபம் கட்டப்பட்டது. தூண்கள் யாவும் யானைமுகத் தூண்கள். மண்டபத்தின் மையத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ. 90 கோடி. ஒரு யானை முகத் தூணுக்கு ஆன செலவு ரூ. 70 லட்சம் என்றால் 60 யானைகளுக்கு என்ன செலவாகியிருக்கும் என்று பார்த்துக் கொள்ளலாம்.

அது சரி. புத்தருக்கு சிலையும் மண்டபமும் ஏன்? புத்தர் கொள் கைக்கும் மாயாவதிக்கும் என்ன தொடர்பு. அவர் அரச பாரத்தைத் துறந்தார்; ஆசைகளைத் துறந்தார். மாயாவதியோ அரச பாரத்தை ஏற்றார். ஆசையை அடக்கமாட்டாமல் செய்த செயலுக்காக அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து வழக்கில் சிக்கி யுள்ளார். இருவருக்குமிடையே எந்த சம்மந்தமும் கிடையாது. பிறகேன் சிலை? மாயாவதிக்கு அம்பேத்கரை பிடிக்கும். அம்பேத்கருக்கு புத்த மதத்தை பிடிக்கும். ஆகையால் புத்தருக்கு மண்டபம்!

கான்பூர் சாலையில் பதினெட்டு ஏக்கர் பரப்பளவில் புத்தர் அமைதிப் பூங்கா ஏப்ரல் 2009இல் பணிகள் தொடங்கிவிட்டன. இங்கு புத்தரின் பளிங்குச்சிலை அமையவுள்ளது. இதற்கு செலவிடப்படும் தொகை ரூ. 15,15 கோடி.

கன்ஷிராம் சிலைகளுக்கு ஆகும் செலவு ரூ. 3.37 கோடி. மாயாவதி சிலைகளுக்கு ஆகும் செலவு ரூ 3.49 கோடி. சிலைகளைச் சுற்றி சுவர் அமைக்கவும் கூரை அமைக்கவும் பலகோடி செலவழிக்கப்படுகின்றன.

இத்தனை பூங்காக்கள், நினை வகங்கள் மற்றம் சிலைகள் ஆகிய வற்றின் நிர்வாகச் செலவுக்காக ஒதுக்கப்பட்டத் தொகை ரூ 80 கோடி. நோய்டாவில் ஸ்தூபி கட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவு ரூ. 203 கோடி. நிதிநிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 294 கோடி.

கடந்த ஜூலை மாதம் 40 சிலைகளைத் திறக்கத் திட்டமிட்டிருந்தார். அதில் ஆறு, மாயாவதி சிலைகள். திறப்பு விழா நாளுக்கு ஒன்பது நாட்கள் முன்னதாகவே 15 சிலைகளைத் திறந்து வைத்தார். காரணம், உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் என்ற நினைப்பில இப்படி அவசரம் காட்டப்பட்டது.

இவையெல்லாவற்றையும் தூக்கி யடிக்கும் ஒரு மெகா திட்டம் மாயாவதி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. கோமதி நகரில் “மாயாவதி விஹார்” - “மாயாவதி கோயில்” கட்டும் திட்டம்தான் அது,

நிதிக்கென்ன செய்தார்?

1995-ஆம் ஆண்டு, மாயாவதி முதல்முறை முதலமைச்சரான போது, கோமதி ஆற்றங்கரையில் பூங்காக்கள் அமைக்க ரூ, 25 கோடி அரசுப் பணத்தை ஒதுக்கினார். பிறகு ஒவ் வொரு முறையும் முதல்வராகும் போதெல்லாம் இத்தகையத் திட்டங் களைத் தொடர்ந்தார். இதற்காக, பிறதுறைகளிலிருந்து பணத்தை எடுத்து பண்பாட்டுத் துறை கணக்கில் ஏற்றினார். பண்பாட்டுத் துறை யிலிருந்து சிலைகள் அமைப்பதற்காக வேண்டி 2008-09 ஆம் ஆண்டில் ரூ. 1,200 கோடியும் 2009-10ஆம் நிதியாண்டில் ரூ. 600 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார்.

இதிலெல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாதபடி இவற்றிற்கு சட்டப் பேரவையில் அங்கீகாரம் பெற்றுக் கொண்டார். இது மட்டுமல்ல. இந்த நிதியாண்டில் (2009-10) மாநிலத் துணை நிதிநிலை அறிக்கையை ஆகஸ்டு 3-ஆம் நாள் சட்டப் பேரவை யில் தாக்கல் செய்தார். அதில். நினைவகங்கள் கட்டுவதற்கென ரூ. 556 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய சிலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப் பட்ட ரூ. 27 கோடியும் இதில் அடக்கம்.

லக்னோ வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ. 6.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? கன்ஷிராம் மாயாவதி சிலைகள் அமைக்கத்தான். அப்படி யானால் லக்னோ வளர்ச்சி என்பதே இவர்களது சிலைகளை வைப்பதில் தான் அடங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உத்திர பிரதேசத் தில் தற்போது நிலவும் கடும் வறட் சிக்கு பத்து பைசா கூட நிதி ஒதுக்க வில்லை, மாயாவதி!

இடத்திற்கென்ன செய்தார்?

மாயாவதியின் இந்த சிலைகள் நிறுவும் மோகத்துக்கு இடம் வேண்டி பழம்பெரும் அரங்குகளையும் கட் டிடங்களையும் இடித்தார்.

2007-இல் ஆட்சிக்கு வந்தவுடன் அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தை (ஷிtணீபீவீuனீ) இடித்துத் தரைமட்டமாக்கி அந்த இடத்தில் அம்பேத்கர் பூங்காவை அமைக்கத் தீர்மானித்தார்.

மாயாவதியின் லக்னோ வீட்டுக் கருகில் உள்ளது உத்திரபிரதேச மாநிலக் கரும்பு ஆணையர் அலு வலகம். மாயாவதியின் அரசியல் ஆசான் கன்ஷிராமின் சிலை வைப்பதற் காக அதை இடித்துத் தரைமட்ட மாக்கினார்.

2009-செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏரளாமான காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்திக்கொண்டு, புகழ்மிக்க லக்னோ மாவட்டச் சிறைச் சாலையை இரவோடு இரவாக இடித்துத் தகர்த்தார். நேரு உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் இந்த சிறைச் சாலையில் கைதிகளாக இருந்திருக் கின்றர்.

2003-ல் கட்டிமுடிக்கப் பட்ட அம்பேத்கர் பூங்கா இடிக்கப்பட்டு. ரூ. 150 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப் பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இவையனைத்திலும் ஆயிரக் கணக்கான மரங்கள் ஆங்காங்கே வெட்டி வீழ்த்தப்பட்டன. கோமதி ஆறு சங்க மிக்கும் இடத்தில் இயற்கை அழிக்கப் பட்டு சூழ்நிலை பாதிக்கப் பட்டது.

ஊழல்கள் :

ஊழல் 1 : மாயாவதி இரண் டாவது முறையாக முதல்வரான போது, திட்டச் செலவில் ரூ. 175 கோடியில் தாஜ் ஹெரிடேஜ் கொரி டோர் அமைக்கப்பட்டது. சுற்றுப் புறச் சூழ்நிலையிலாளர்கள் இத் திட்டத்தை எதிர்த்ததுடன் இதில் ஊழல் நடந் திருப்பதாக புகார் எழுப்பினர். முதல்வர் மாயாவதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நசீமுதீன் ஆகிய இருவரும் குற்றச் சாட்டுக்கு ஆளா யினர். சி.பி.ஐ. இதில் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்து மேல் நடவடிக்கைக்காக கவர்னரின் அனு மதியைக் கேட்டது. கவர்னர் 2007 ஜூன் 3ஆம் நாள் அன்று அனுமதி மறுத்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து சி.பி.ஐ. வழக்கிலிருந்து அவர் களை விடுவித்தது. (5/6/2007)

இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு மனுச் செய்யப்பட்டது. இதை ஏற்று கடந்த நவம்பர் 2009இல் இறுதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் 2 : யானை பகுசன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் என்பதால் யானைச் சிலைகளை அரசு செலவில் வைத்தது குற்றம் என தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் ‘‘யானைச் சிலைகளை வைத்தது ஏன் தேர்தல் விதிமுறையை மீறியதாகாது’’ என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிக்கை அனுப்பி யிருக்கிறது.

ஊழல் 3: ‘முதல்வரின் ஆடம் பரமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள சிலைகள் வைக்கப்படுவதன் மூலம் பொது மக்களின் பணம் 2000 கோடிக்குமேல் விரயமாக்கப்பட்டுள் ளது’ எனக் குற்றஞ்சுமத்தி ரவிகாந்த், சுகுமார் ஆகிய இருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உ.பி. அரசிடமிருந்து தகவல் பெற்று உச்சநீதி மன்றத்தில் பொது நலவழக்கு தொடுத் தனர். உச்சநீதி மன்றம் இதை அனு மதித்து மாயாவதி அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. ‘‘இப்படிப்பட்ட செலவுகளுக்கு அவசியம் என்ன?’’ என்று நான்கு வார காலத்தில் பதிலளிக்குமாறு கேட் டுள்ளது. மேலும் சிறப்பு அமர்வு நீதிமன்றம் ‘‘மாநில அரசின் இந்த மலைக்க வைக்கும் திட்டத்திற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமிருக் கிறதா என இந்த அமர்வு பரிசீலிக்கும்’’ என்று கூறியதோடல்லாமல் ‘‘அமைச் சரவையும் சட்டப் பேரவையும் அரசமைப்புச் சட்டத்திற்குக் கீழ்ப் பட்டவையாகும்’’ என்றும் கூறி யுள்ளது.

ஊழல் 4: மேலே சொல்லப் பட்ட சிலைகள் வைப்பதை நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணை யிட்டது. ஆனால், மாயாவதி அதைப் பற்றிக் கவலைப்படாமல் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். (இந்த சந்தர்ப்பத்தில்தான் ஒன்பது நாட்கள் முன்னதாக சிலை திறப்பு செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.) ஊடகங் கள் இந்த உண்மையை அம்பலப் படுத்தின. இதை அறிந்த சம்மந்தப் பட்ட நீதிபதிகள் பி.என். அகர்வால், அஃப்டாப் அலாம் இருவரும் பொறுமையிழந்தனர். ‘இன்னும் 6 மணி நேரத்தில் கட்டுமானப் பணி களை நிறுத்த வேண்டும். நெருப் போடு விளையாடுகிறது மாநில அரசு’ என்று எச்சரித்தனர். பிறகுதான் கட்டுமான வேலைகள் நிறுத்தப் பட்டன. உ.பி. மாநில அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதி மன்றத்தில் மாயாவதி சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஊழல் 5 : அலகாபாத் உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. ஒரு ஊழல் விவகாரத்தைத் துப்பறிய, அதில் உ.பி. அரசின் நான்கு அதிகாரிகள் ஊழல் செய்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. தகவல் மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 1. முன்னாள் தகவல் இயக்குநர் மகேஷ் குப்தா, 2. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபாத்குமார் சின்ஹா, 3. கூடுதல் இயக்குநர் ராம்கோபால் வர்மா, 4. அகிலேஷ் சந்த் சுக்லா ஆகியோர் மீது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. விசாரணையைத் தொடங்க உ.பி. அரசிடம் அனுமதி கேட்டது. மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. மாயாவதி இன்னும் அனு மதி தரவில்லை. பல நினைவூட்டல் கள் அனுப்பியும் பலனில்லை. மாறாக மகேஷ் குப்தாவை உள்துறைச் செயலாளராக்கினார் மாயாவதி. இப்படி அவர் ஊழல் புரிந்தவர்களைக் காப்பாற்றுவதன் ரகசியம் என்ன?

ஊழல் 6: மாயாவதி மீது அளவுக் கதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்று உள்ளது. அந்த சொத்துக்கள் யாவும் மாயாவதியின் பிறந்த நாளில் குவிந்த அன்பளிப்புகள் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

தலித்துகள் நிலை : இந்தியா வின் பல்வேறு மாநிலங்களை ஒப்பு நோக்க, உ.பி. பல துறையிலும் பின்தங்கியிருப்பது ஒரு புறமிருக்க தலித்துகளின் சமூக நிலையும் தாழ் வாகவே உள்ளது. ‘தேசியக் குற்றப் பிரிவு பீரோ’ தரும் புள்ளி விவரப்படி, உ.பி.யில் தலித் பெண்கள் கற்பழிக்கப் பட்ட வழக்குகள் 2006இல் 240; 2007ஆம் ஆண்டில் 312. இவை பதியப்பட்டவை. பதியப்படாத வழக்குகள் இதைவிட அதிகம், சுமார் 60%.

மாயாவதி இரண்டாம் முறை முதல்வரானபோது, அதாவது 1997இல் உ.பி.இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம், ‘இச்சட்டத்தைப் பலரும் தவறாகப் பயன்படுத்து கிறார்கள். அதற்காகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறேன்’ என்றார். உண் மையில் இவர் தடை விதித்ததன் நோக்கம் உயர்சாதி மக்களை சமாதானப் படுத்துவதற்காகவும், சாந்தப்படுத்து வதற்காகவும்தான். மாயாவதி விதித்த தடை 2003ஆம் ஆண்டுதான் திரும்பப் பெறப்பட்டது. எல்லாம் ஏட்டளவில்தான். அச் சட்டம் உண்மை யில் உளமாற அமல்படுத் தப்படவில்லை.

இப்படி யெல்லாம் வழக்குப் பதிவுகளைத் தடுத்தும் கூட வழக்கு எண்ணிக்கை இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகம். உ.பி. மாநிலப் பதிவின்படி வழக்கு எண்ணிக்கை 52,827 ஆகும். பூட்டாசிங்கைத் தலைவராகக் கொண்ட தேசியக் கவுன்சில் அறிக்கை யில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலித் மற்றும் பழங்குடி மக் களுக்காக உ.பி. அரசாங்கம் அமைத்த 17 உறுப்பினர்கள் கொண்ட குழு செயலற்றுக் கிடக்கிறது என்று உ.பி. முன்னாள் காவல் துறை ஐ.ஜி.யான எஸ்.ஆர். தாரபூரி குறிப்பிடுகிறார்.

மாயாவதி ஆட்சியிலிருக்கும் இந்தச் சமயத்தில் கூட தலித் மக்கள் மீது கொடுமை கள் நிகழ்ந்த வண்ணமிருக் கின்றன. செரவ்ரா கிராமத்தில் ஒரு தலித் குடும் பத்தை ஊரையே காலி செய்யு மாறு ரவுடிகள் நிர்ப்பந்தித்தனர். பாக்பத் கிராமத்தில் அரசாங்கக் குடிநீர்க் குழாயில் தலித்துகள் தண்ணீர் பிடித்திட மேல் சாதியினர் தடை விதித்துள்ளனர். கோட்கா கிராமத்தில் தலித்துகளுக்கு முடி வெட்டக் கூடாது என நாவிதர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். தலித் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது கூட இந்த நிலை கேட்பாரின்றி நீடிக்கிறது.

இவை மட்டுமல்ல, உ.பி.யில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அதிகம் மலிந்துள்ளன. தற்சமயம் ஐம்பது மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. வளர்ச்சி 2% தான். (அகில இந்தியா வளர்ச்சி 7.9%,) உ.பி. மாநிலம் இவ்வளவு பரிதாபமான பின்தங்கிய நிலையிலிருக்கும் போது முதல்வர் என்ன செய்யவேண்டும்? மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்விக் கூடங்கள் நிறைய திறக்கவேண்டும். ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படவேண்டும். மேலும் மேலும் தலித் வன் கொடுமைகள் நடப்பதைக் குறைக்க வேண்டும். வறுமையை ஒழிக்க முயலவேண்டும். தலித் நிலத்தில் மேல்சாதிக்காரர் ஆக்ரமிப்பைத் தடுக்க வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வேகத்தை முடுக்கி விடவேண்டும். செய்தாரா மாயாவதி? இல்லையே!

இன்றைய மாயாவதி

அரசியலுக்கு வருவதற்கு முன்னே மாயாவதியின் கனவு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாக வரு வதாகவே இருந்தது. ஆனால் அவர் ஆசிரியை ஆனார் என்றாலும் கன்ஷிராம் வேறுவிதமாகக் கருத்து சொன்னார்: ‘மாவட்ட மாஜிஸ்ட் ரேட்டுகளில் ஒருவராக மாயாவதி வருவதைக் காட்டிலும் மாஜிஸ்ட் ரேட்டுகளின் தலைவிதியைக் கட்டுப் படுத்தும் ராணியாக மாயாவதி வருவார்’ என்றார்.

2007இல் அவ்வாறே அவர் முதல்வரானார். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இதற்காக அவர் உயர்சாதியை குறிப்பாகப் பார்ப்பனர் களைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே இவர், ‘உயர்சாதி மக்களைக் கண்டால் அவர்களைச் செருப்பை எடுத்து நான்கு அடி அடியுங்கள்’ என்று சொல்லி தலித் மக்களை உசுப்பேற்றி யவர், இப்போது ‘உயர்சாதியினரே வாருங்கள்! யானை மீது சவாரி செய்யுங்கள்!’ என்று அழைத்தார். யானை ப.ச. கட்சியின் தேர்தல் சின்னம். இதனால் உயர் சாதியினரே அதிக பலன் பெற்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் நின்ற வர்கள் பார்ப்பனர்கள் தாம் - 20 இடங்கள், தலித்துகள் நின்றதோ 17 இடங்களில்தான். வென்றவர்களில் பார்ப்பனர்கள்தாம் அதிகம் - ஐந்து பேர்கள். தலித்துகள் மூன்று பேர்கள் தான். மாஃபியா பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டார் மாயாவதி. இம்மாதிரி காரணங்களால் உயர் சாதியினர் தங்களை ஆளும் வர்க்க அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டனர்; அச்சம் நீங்கி விட் டனர். விளைவு என்ன தெரியுமா? “மாயாவதி முதல் வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் முசாபர் நகரில் ஏழு தலித்துகள் கொல்லப் பட்டனர். அதே மாவட்டத்தில் மூன்று தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்” என சிந்தனை யாளர்களைக் கொண்ட ‘அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்’ ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “தலித்துகளுக்கு அரசாங் கத்தால் பட்டா வழங்க முடியவில்லை. மேற்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களான பாக்பட், முஜாபர் நகர், மீரட் ஆகியவற்றிலுள்ள பல கிராமங்களில் தலித்துகளுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலங்களில் அவர்கள் பிரவேசிக்க முடியவில்லை. காரணம், உயர் சாதியினர் மிரட்டுகின்றனர்” என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அம்பேத்கர் விரும்பியபடி தலித் கையில் அரசதிகாரம் வந்தால் தலித் துகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று எல்லோரும் நம்பியிருந்தனர். அது பொய்த்துவிட்டது.

மாறாக, மாயாவதியின் சொத்துக் கள்தான் பெருகியுள்ளன. அவரது பிறந்த நாளில் தனது உடம்பு பூராவும் வைர நகைகளைச் சுமந்துகொண்டு கேக் வெட்டுகிறார். ஊடகங்களுக் கும் அவ்வாறே காட்சி தருகிறார். அதாவது கன்ஷிராம் சொன்னார் அல்லவா மகாராணி ஆவார், என்று அந்த மகாராணி கோலத்தில் தோற்றமளிக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டும் அரசியல்வாதி யார் தெரியுமா? மாயாவதிதான். 2007 - 2008 நிதியாண்டிற்கு அவர் கட்டிய வரி ரூ. 26.26 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதிக வரி கட்டு வோரின் மொத்தப் பட்டியலில் இவர் இந்திய அளவில் 18ஆவது நபர். ஒரு ஏழை எழுத்தரின் மகளுக்கு எப்படி கோடி கோடியாக சொத்து வந்தது என்று கேட்டால் அரசு அதிகாரிகள் சொல்லும் பதில் இதுதான் : ‘‘எல்லாம் அவரது பிறந்த நாளுக்கு வந்த பரிசுகள்...’’ அப்படியானால் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது ஏன்? முதல்வர் பதவி பறிபோனது ஏன்?’’

கடந்த சட்டப்பேரவைத் தேர் தலில் ‘உ.பி.யை நாட்டிலேயே முன் மாதிரியாக ஆக்கிக் காட்டுவேன்’ என வாக்குறுதி தந்தார் மாயாவதி. ஆனால் நிகழ்ந்தது என்ன? இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் மிக மிகக் குறைவான மாநிலம் உ.பி.தான். எங்கெங்கு காணினும் சிலைகள், பூங்காக்கள், நினைவகங்கள். இதில் தான் முன் மாதிரியாக இருக்கிறது உ.பி.

மாயாவதியின் வரலாற்றை எழுதிய அஜாய் போஸ் ‘....தலித்துகளுக்கு இந்த நினைவகங்கள் புனித யாத்திரைக்கான இடங்களாகும்’ என்கிறார். தனிநபர் வழிபாடா தலித்துகளின் இன்றைய உடனடித் தேவை. “மக்கள் நலனுக்கு மிகவும் அவசியமானது நிர்வாகத் தூய்மை. மக்களுக்கு உணவளிப்பதும் உடை யளிப்பதும் கடினமாக இருக்கலாம். ஆனால் ஒரு தூய்மையான அரசைத் தருவதில் என்ன கஷ்டம் உள்ளது” என்கிறார் அம்பேட்கர். ஊழலற்ற ஆட்சியையாவது தர முடிந்ததா மாயாவதியால். அவரே ஊழல் குற்றச் சாட்டில் மாட்டி முதல்வர் பதவியை இழந்தவர்தானே. அவரது அமைச் சரவை அமைச்சர்களில் 60% பேர்கள் கிரிமினர் குற்றவாளிகள்.

கல்வியை, சாலைப் போக்கு வரத்தை, சுகாதாரத்தை, பொருளா தாரத்தை, சட்டம் ஒழுங்கை மேம் படுத்தாமல், தலித்துகள் நிலையை உயர்த்தாமல் - ஏறிய ஏணியாம் தலித்துகளை எட்டி உதைத்துவிட்டு பார்ப்பனப் பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டிக் கொண்டால் - தனிப் பெரும்பான்மையைத் தக்கபடி பயன் படுத்தாமல் மூக்கணாங்கயிறு அறுத்த முரட்டுக்காளையைப் போல் பொறுப் பற்று நடந்தால் மாயாவதி எனும் தேரின் அச்சாணி முறிந்து விடும்; முச்சாணும் ஓடாது! யானைக்கும் அடி சறுக்கும். இந்த மாயாவதியின் மதம் பிடித்த யானை மக்கியறும் நிலையில் தன்னலவாதக் கயிற்றின்மேல் நடக்க விரும்புகிறது!

- முருகு.இராசாங்கம்

Pin It