பெரும்பான்மை இந்துக்களுக்கு அசைவ உணவு பழக்கம் இருந்தாலும் இந்துத்துவ பார்ப்பனியம் சைவ உணவையே புனிதப்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அசைவ உணவைத் தீட்டாகக் கருதுகிறார்கள். சிறுபான்மை பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையே இந்து மக்களின் கலாச்சாரமாக ஆட்சியாளர்கள் திணிக்கிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுகிற உழைக்கும் இந்துக்களை ‘இந்து தர்ம எதிரிகள்’ என்கிறார்கள். அண்மையில் புதுடெல்லியில் உலக தலைவர்கள் கூடிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து சைவ உணவையே சர்வதேசத் தலைவர்களுக்கு பரிமாறினார். பல தலைவர்கள் விருப்பமின்றி இந்த உணவை சாப்பிடும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சீன அதிபர் இறுதிநாள் நிகழ்வு விருந்தைப் புறக்கணித்து விட்டார். இப்போது மக்கள் பயன்படுத்தும் நுகர் பொருள்களிலும் சைவம், அசைவம் என்ற பாகுபாடுகளை ஒன்றிய ஆட்சி திணித்திருக்கிறது.
சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களில் சைவம், அசைவம் குறியீடு பதிக்கும் வகையில், 'பேக்கேஜிங்' விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. உணவுப் பொருட்களின் பாக்கெட்களில் சைவம் என்றால் பச்சை நிறமும், அசைவம் என்றால் சிவப்பு நிறமும் குறியீடாக அச்சடிக்கப்பட்டிருக்கும். தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களிலும் இந்த விதியைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011ல் திருத்தம் செய்யப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் போன்ற பொருட்கள் முழு சைவம் என்றால் அதில் பச்சை நிற புள்ளியைக் குறியீடாகவும், விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டால், அசைவம் என்பதைக் குறிக்க அதில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளியைக் குறியீடாகவும் அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அழகு சாதனப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தங்களுக்கு உகந்த பொருட்களை எளிதாகக் கண்டறிந்து வாங்க முடியும். இந்த நிற குறியீட்டை பொருள் பேக் செய்யப்பட்டிருக்கும் அட்டையின் மேல்புறத்தில் நுகர்வோர் கண்ணில் தெரியும்படி அச்சிட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்