பெரியார் அறிவுலகத்தில் நடந்த புத்தக மோசடி ‘பாவங்களை’த் தீர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு யோசனையை ‘அருள்வாக்காக’ வழங்கியிருக்கிறார். ‘காஞ்சிப் பெரியவாள்’ நூல்களை பெரியார் அறிவுலகத்தில் அடுக்கி வைத்தால் இந்தப் பாவங்கள் பறந்தே போகும் என்பதுதான் இந்த ஆலோசனை. ‘பெரியவா’ புத்தகங்களை இப்படி அடுக்கி வைத்தால்,
“தீண்டாமை பாவம்,
ஸ்திரீ பாவம்,
ஸ்நான பாவம்,
ஆகார பாவம்,
சமுத்திர பாவம்”
உள்ளிட்ட அனைத்து ‘பாவங்களும்’ நூலகத்தை தொற்றிக் கொள்ளும் என்பதால் அது வேண்டாம்; ‘மைலார்ட்’.
அந்த நூல்கள் உங்கள் சட்ட அலமாரியில் அப்படியே இருப்பதே ஷேமஹரமானது.
ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்படுமா?
தமிழ்நாடு முழுதும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் டிசம்பர்-10ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், கெடு வைத்துள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளாக சென்னையில் கோயில்களே அதிகமாக உள்ளன. போக்குவரத்து நெருக்கடிகளுக்கும் விபத்துக்களுக்கும் காரணங்களாக இந்த கோயில்கள் உள்ளன.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நடைபாதைக் கோயில்களை அகற்றும் உத்தரவைப் பிறப்பித்து அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை கேட்டது, ஆனால் எந்த மாநில அரசுகளும் அறிக்கை தரவில்லை. ஆக்கிரமிப்புக் கோயிலிலும் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகள் என்றால் நடைபாதை கோயில்களுக்கு பொருந்தாதா? ஆக்கிரமிப்புக் கோயில்களை அரசு நிர்வாகம் அகற்ற முன் வருமா?
- விடுதலை இராசேந்திரன்