ECINET தளத்தையும் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தையும் மத்தியமயமாக்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். டெல்லி அய்.அய்.டி மற்றும் கொல்கத்தா அய்.அய்.எம் ஆகிய கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவரும், தரவு அறிவியலாளருமான சௌரவ் ராஜ்புத் தயாரித்துள்ள அறிக்கையின்படி, ‘ECINET’ தளத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்களை உருவாக்குதல், நிர்வகித்தல், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கெனத் தனிப்பகுதி உள்ளது. அதில், அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அனுப்பும் தகவல்கள் பதிவாகாமல் தடுக்கும் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே இயக்கும் உரிமை கொண்ட ஈ.சி.அய்.நெட் இணையத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முறைகேடு அம்பலமானது. அதைத் தொடர்ந்து அதன் இணையத்திலேயே நடந்த தில்லுமுல்லுகளும் அம்பலமாகியுள்ளன. ஒவ்வொரு மாநில ஒருங்கிணைப்பு அலுவலரின் பதிவிலும், அவரைச் செயலிழக்கச் செய்வதற்கான பொத்தான் உள்ளது. அந்தப் பொத்தானை அழுத்தும்போது தோன்றும் அறிவிப்பில், “இந்த மாநில ஒருங்கிணைப்பு அலுவலரைச் செயலிழக்கச் செய்தால், அங்கிருந்து அனுப்பும் வாக்காளர் பெயர் பதிவாகாது. செப்.28 முதல் இந்த மோசடியைக் கண்டறிய முடிந்ததாக சவுரவ் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் பதிவுப் பொறுப்பு அலுவலர்கள் (Electoral Registration Officers — EROs) மற்றும் உதவித் தேர்தல் பதிவுப் பொறுப்பு அலுவலர்கள் (Assistant EROs — AEROs), வாக்காளர்களின் கணக்கெடுப்புப் படிவங்களை மறுபரிசீலனை செய்வதையும், அறிவிப்பு மற்றும் விசாரணை தொடர்பான தகவல் பலகையைப் பார்ப்பதையும் தடுக்கும் வசதியும் ECINET தளத்தில் இருப்பதாகத் தணிக்கை அறிக்கை கூறுகிறது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் நடைமுறைகளில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளையும் மத்தியமயமாக்குவதற்காக ECINET தளத்தை உருவாக்கியுள்ளார் என்பது இப்போது நன்கு நிறுவப்பட்ட உண்மையாகிவிட்டது.” காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X) இல் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியதாவது: “தேர்தல் வாக்காளர் பட்டியல் தொடர்பாகச் சட்டப்பூர்வ அதிகாரம் தேர்தல் பதிவுப் பொறுப்பு அலுவலர்களுக்கே (ERO) உள்ளது என்பதைச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆனால், நாடு முழுவதும் ECINET அமைப்பும் தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, அவற்றுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளன.” என்று பதிவு செய்துள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.