தந்தை பெரியாரின் 148- வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணி சார்பாக அக்.31, சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் குடியாத்தம், கண்ணம்மாள் வரதராஜ திருமண மண்டபத்தில் கருஞ்சட்டைகளின் குடும்ப விழா தோழர் அமுதா திலீபன் தலைமையில் நடைபெற்றது. பிரவீனா, வைரமணி, ரம்யா, தீபலட்சுமி, நந்தாதேவி, தேன்மொழி, கல்பனா, ரோகினி, ஷாலினி, லாவண்யா, சங்கீதா, துர்காதேவி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். சசிகலா வரவேற்புரையாற்றினார். மோகனப்பிரியா நிகழ்ச்சியின் நோக்கவுரையாற்றினார். வெங்கடேஸ்வரி தொடக்கவுரையாற்றினார்.
கழகக் குடும்பக் குழந்தைகளின் ஆடல், பாடல், பேச்சுத் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியில் மூழ்கினர். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், சமூகச் செயற்பாட்டாளர் லியாகத் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில மருத்துவர் அணிச் செயலாளருமான நா. எழிலன் பேசுகையில், பெரியாரால் நாம் அடைந்த பலன்களைப் பற்றியும், பெண்சுதந்திரத்தை நாம் கொள்கை அளவில் மட்டும் பேசாமல் நம்மைச் சுற்றியுள்ள பெண்களுக்குக் கருத்துரிமையும், சுயமாகச் சிந்தித்து நடைமுறைப்படுத்த நாம் இடமளிக்க வேண்டும் என்றும், கூறினார். தகவல் தொழில்நுட்பங்களை நம் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கிற்கு அல்லாமல் கல்விக்கு மட்டுமே பயன்படுத்தக் கற்றுத்தர வேண்டும் எனவும், நாம் பெரியார், அம்பேத்கர் வழிகாட்டிய சமுகநீதி, சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியார், அம்பேத்கர் குடும்ப வாழ்வும், அரசியல் வாழ்வும் என்ற தலைப்பில் பார்ப்பனச் சூழ்ச்சிகளில் இருந்து நம்மை சுயமரியாதை, அறிவியல், பகுத்தறிவு ஆகியவற்றில் தலைநிமிர வைத்த பெரியார், அம்பேத்கர் வழியில் நடந்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நம்வாழ்வில் சுயசிந்தனைகளை வளர்க்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேலூர் மாவட்ட மகளிர் அணித் தோழர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தோழர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளைக் கூறி நிறைவுரையாற்றினார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்று நம் கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கழகத் தோழர்கள் மோ.வை.யாழினி, செ.சு.ஹர்சினி (எ) கனல்விழி மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் மாஸ்டர் சிவகுமார் அவர்களுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 2024-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற விஞ்ஞான மேளா அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தனது அறிவியல் கண்டுபிடிப்புக்கு பாராட்டுச் சான்று பெற்ற கோ.வெ.தமிழ்யாழினி ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மருத்துவர் எழிலன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அறிவியல் மன்றத் தலைவர் தெருவிளக்கு கோபிநாத் தந்தையான மறைந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராசேந்திரன் மற்றும் சந்திரன் ஆகியோரின் படங்களை கழகத் தலைவர், மருத்துவர் எழிலன் ஆகியோர் முறையே திறந்து வைத்தனர். திரைப்படக் கலைஞர் சித்திரசேனன், மேடைப் பாடகர் ஜெய்கர் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா அரங்கின் முகப்பில் வேலூர் மாவட்டக் கழகத் தோழர்களின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் கழகத் தோழர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்துள்ளனர். வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலூரில் கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த படங்களுடன் கூடிய பதாகை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சென்னை மாவட்டக் கழகம் நடத்திய குடும்ப விழாவில் முன்வைக்கப்பட்ட வாழ்வியல் நெறிகள் விழாவில் முன்வைக்கப்பட்டன. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி அமைப்பாளர் அருண், வேலூர், சேலம் மாவட்டங்களைச் சார்ந்த கழக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் சுகந்தி நன்றி கூறினார்.
- பெ.மு. செய்தியாளர்