(பயணத்தில் குழுவினர் சந்தித்த நிகழ்வுகளை குழுவின் தலைவர்கள் மாநாட்டு மேடையில் விளக்கினர்.)
நாகர்கோவில் அணியின் தலைவர் நங்கவள்ளி கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
அதிக எண்ணிக்கையிலான தோழர்கள் பங்கெடுத்த அணி நாகர்கோவில் அணி! குறிப்பாக சேலம் தோழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பரப்புரைப் பயணத்தில் முழுமையாக இருந்தனர். முன்னேற்பாடு குழுவினரும், பரப்புரைக் கூட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தென்மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினோம். பொதுமக்கள் பலர் அடிக்கடி இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல இடங்களில் கேட்டுக் கொண்டனர்.
இரண்டு இடங்களில் பரப்புரை தடைபட்டது. பாஜக இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்கள் வழியாக ஆட்களைத் திரட்டி ஒரு பதற்றத்தை நாகர்கோவில் பகுதியில் ஏற்படுத்தினர். திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக மாநில பொறுப்பாளர் ஒருவர் பிரச்சாரத்தை புகைப்படம் எடுத்ததோடு காணொலியாகவும் எடுத்தார். திருப்பரங்குன்றம் காவல்நிலைத்திற்கு முன்பு தான் கூட்டம் நடைபெற்றது. கலவர முயற்சிகள் தோல்வியடைந்தன.
காவல்துறை 10 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் 40-நிமிடங்களுக்கு மேல் கருத்துகளைப் பேசினோம். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் காவல்துறையிடம் சமரசம் செய்து சரிபடுத்துவார்.
கழக வெளியீடுகள் ரூ.4615 விற்பனையானது. கடைவீதி வசூல் வழியாக ரூ.22,636 கிடைத்தது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் நிழற்குடை போல் அமைத்து பரப்புரை மேற்கொண்டோம் என்றார்.
நாகர்கோவில் அணியில் பங்கேற்க மேலும் பல தோழர்கள் ஆர்வத்துடன் முன்வந்தனர். எண்ணிக்கையைக் கருதி பால்.பிரபாகரன் தவிர்த்தார்.
தோழர்.கணபதி இலக்கிய நயத்துடன் உரையாற்றினார். கோபி தோழர்கள் துண்டறிக்கை மற்றும் நிதி வசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். பயணம் மிகுந்த மனநிறைவைத் தந்தது.
போராவூரணி பயணக்குழுத் தலைவர் நிர்மல்குமார் தனது உரையில் குறிப்பிட்டதாவது….
அனைத்து தோழர்களும் பேச்சாளர்களாகவும், களப்பணியாளர்களாகவும் வலம் வந்தனர். தினமும் ஒவ்வொரு தலைப்பிலும் தோழர்கள் உரையாற்றினர்.
பரப்புரைப் பயணத்தில் திருவேங்கடம், கலைச்செல்வன், மாரிமுத்து, கவிமணி ஆகியோர் தங்குமிடம், உணவு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர். போராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒருசில தோழர்களே இருக்கின்றனர். இருந்தாலும் பெரியாருக்கு எப்படி அஞ்சா நெஞ்சன் அழகிரியோ அப்படிபட்ட தளபதிகள் தான் நமது தோழர்கள்.
அதேபோல் நாச்சியார்கோவில் தோழர்.வெங்கடேசன் இல்லத்திற்கு சென்றபோது அவரது இணையர் வைக்கம், அவரது உறவினர்கள் சந்தனம், குங்குமம் வைத்த கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால் அவர்களது நெருங்கிய உறவினர்களைப் போல் கழகத் தோழர்களை கவனித்துக் கொண்டனர். குடும்ப உறுப்பினர்கள் போல் தோழர்களை அரவணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
ஜாதி எதிர்ப்பை நாடக வடிவில் நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம். பாடகராக வந்த தோழர் வீரமணி ஜாதி சங்கத் தலைவராகவும், ஜாதி எதிர்ப்பாளர்களாக நிர்மல், திருவேங்கடம், தேன்மொழி ஆகியோரும் நடித்தனர். வடசேரி கூட்டத்தில் ஜாதி சங்கத் தலைவராக நடித்த வீரமணி, ஜாதி எதிர்ப்பாளராக நடித்த திருவேங்கடத்தை அடித்த போது, நாடகம் பார்த்துக் கொண்டிருந்த யாரென்றே தெரியாத ஒருவர் ஆவேசத்துடன் மேடை ஏறி ஜாதி சங்கத் தலைவராக நடித்த வீரமணி அவர்களை சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தார். தோழர்கள் விவரம் சொன்னபிறகு அமைதியானார். நாடகம் இந்த அளவுக்கு மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சென்றது.
வழிநெடுக பரப்புரைக்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. பட்டுக்கோட்டை கூட்டத்தில் நாடகத்தைக் கண்டுகளித்த ஒரு பாட்டி சொன்ன கருத்து “தம்பி நீங்க சொல்றது உண்மைதான்; வேற ஜாதியில் திருமணம் பண்ணா, அப்படி ஆகிடும், இப்படி ஆகிடும்ன்னு சொல்றாங்க நான் தேவர் ஜாதி; என்னோட பேரன் தாழ்தப்பட்ட ஜாதி பெண்ணை திருமணம் பண்ணிக்கிட்டான். இரண்டு பேரும் நல்ல வேலையில், நல்லா இருக்காங்க. குடும்பத்துடன் நல்லா இருக்கோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பரப்புரையில் பேசிய கருத்துக்களின் நியாயத்தை உணர்ந்து பலரும் வாழ்த்தினார்கள். தங்களால் இயன்றதை நன்கொடையாக வழங்கினார்கள். கடந்த ஏழு நாட்களில் கடைவீதி வசூலாக 28,300 தொகையாக கிடைத்தது. எனது நண்பர் திடீரென தொலைபேசி செய்து பரப்புரைப் பயணம் நல்லா இருக்கு. நன்கொடை தருகிறேன் என ரூ.5000 வழங்கினார். கழகத் தலைவர், பொதுச் செயலாளர் குறித்த செய்திகளைத் தொடர்ந்து கவனிக்கிறேன். உங்கள் அமைப்பு தொடர்ந்து சமரசமில்லாமல் செயல்படுவது எனக்குப் பிடிக்கும், என்னால் வர இயலவில்லை. ஆகவே சிறுபங்களிப்பை தருகிறேன் என்றார்.
பரப்புரையில் கழகத் தோழர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள் நமக்கான ஆதரவு கழக எல்லைகளைக் கடந்து இன்றும் மக்களிடம் இருக்கிறது. திமுக தோழர்கள், ஈழ விடுதலையில் ஆர்வம் உள்ள தோழர்கள் பல இடங்களில் ஆதரவு தந்தனர். உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்தனர்.
அதிராம்பட்டினத்தில் பெயர் சொல்லவிரும்பாத இருவர், பரப்புரையை கவனித்து ரூ.1000, 500 என நன்கொடை வழங்கினார்கள். முன்னாள் ’நாம் தமிழர்’ கட்சித் தோழர் ஒருவர் கழகத் தலைவரை எனக்கு பிடிக்கும்; பெரியார் தான் எனக்கு தலைவர் என்றுகூறி தோழர்களுக்குத் தேநீர் வழங்கினார்.
பேராவூரணி பயணக்குழு இவ்வளவு சிறப்பாக பணியாற்றியதற்குக் காரணம் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள்தான். அனைவரையும் தங்கள் குழந்தைகள் போல் கவனித்துக் கொள்வார். எவ்வளவு செலவு ஆனாலும் அவரே தருவார். அனுபவம் வாய்ந்த கழகத்தின் மூத்த தோழர் அய்யனார் ஆகியோரின் வழிகாட்டுதலில் கூட்டு முயற்சியில் இந்தப் பரப்புரையை நாங்கள் சிறப்பாக செய்து முடித்தோம். துவரங்குறிச்சியில் பாஜக, சங் பரிவார் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்திற்கு காவல்துறையில் அனுமதி வாங்கினாலும், ஊராட்சியில் அனுமதி வாங்க வேண்டும் என்று புதிய நிபந்தனையைக் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அதை முறியடித்து பரப்புரையை எழுச்சியுடன் நடத்தினோம்.
தோழர் சின்னப்பத் தமிழர் (தமிழ் வழிக் கல்வி இயக்கம்) பரப்புரைப் படையை வரவேற்பு பதாகையுடன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பயணக்குழுவுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். பயணத்தில் தொடர்ந்து வந்தார்.
அதிராம்பட்டினத்தில் மூன்று தோழர்கள் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பயணத்தில் மக்களிடமிருந்து அனுபவங்களை பெற்றோம். மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.
திருச்சி பரப்புரை அணியின் தலைவர் சென்னை உமாபதி பேசுகையில் குறிப்பிட்டதாவது..
இந்த பிரச்சாரப் பயணம் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கும்போது தென் மாவட்டங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். எனது கோரிக்கையை பரிசீலித்த கழகத் தலைமைக்கு நன்றி.
மக்களிடம் இந்தப் பரப்புரை நோக்கத்திற்கு பெரிய ஆதரவு இருக்காது. கடுமையான எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே சென்றோம். எங்கள் அணி சென்ற ஒரே இடத்தில் மட்டும் எதிர்ப்பு வந்தது. மற்றபடி மக்கள் ஆதரவு மிகுந்து இருந்தது.
தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகர் தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்தார். தொடக்க பொதுக்கூட்டமாக திருச்சி மாவட்டக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. பயணம் என்றால் சென்னை தோழர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். எங்கள் அணியில் இரண்டு பெண்கள் முழுமையாக பயணித்தனர். ஒருவர் பாடகர் லதா, மற்றொருவர் இரண்யா.
புத்தக விற்பனை 12,585, கடைவீதி வசூல் ரூ.35,000 வழியாக கிடைத்தது.. புத்தக விற்பனையை தோழர் எட்வின், மயிலாப்பூர் இராவணன் ஆகியோரும் கவனித்துக் கொண்டனர்.
திருச்சியில் பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் அவர்கள் இரண்டுநாள் தங்குவதற்கான எற்பாடுகளைச் செய்து கொடுத்தார். மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் பாடல்களைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
``எனக்கு 85 வயதாகிறது, தற்போதைய சூழலில் யார் பெரியார் கொள்கையைக் கொண்டு செல்வார்களோ என்ற கவலை இருந்தது. இந்தச் சிறுவன் திராவிட மகிழன் பாடல்களைக் கேட்ட போது அந்தக் கவலை நீங்கியது” என்று கண் கலங்கினார்.
பெரம்பலூரில் விஜயேந்திரன் (தி.க மாவட்டச் செயலாளர்) இல்லத்தில் தான் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். அவர் சிறப்பாக கவனித்துக் கொண்டார். குறிப்பாக இந்தத் தலைப்பில் பயணம் மேற்கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் தனது ஒலிப்பெருக்கியை பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளார். திராவிடர் கழகத் தோழர்கள் போகிற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பை வழங்கினர்.
கடைவீதி பிரச்சாரம் செய்த போது துண்டறிக்கை வாங்கிய ஒரு நபர் ஜாதி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். உங்களுக்கு நன்கொடை கிடையாது என்று நேரடியாக மறுத்தார். இத்தகைய எதிர்மறை அனுபவங்களும் உண்டு. இன்னோரு இடத்தில் கடைக்காரர் நன்கொடை தருகிறார். ஆனால் கூட இருக்கிற நபர் கொடுக்கக் கூடாது என்று மிரட்டுகிறார். அங்கே தோழர்களுக்கு இடையில் வாக்குவாதம் உருவானது. ஜாதிய மனநிலையில் இருப்பதை உணர முடிந்தது. பரப்புரைக்கு ஆதரவாக பல நிகழ்வுகள் நடந்தன.
மன்னார்குடியில் பரப்புரையைக் கவனித்த அதிமுக பிரமுகர் பரப்புரை முடிந்ததும் தோழர்களைப் பாராட்டி தேநீர் செலவுகளுக்கு ரூ.500 வழங்கினார். மீண்டும் தோழர்களை அழைத்து உணவுக்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார். தோழர்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்துள்ளனர் என்றனர். மீண்டும் ரூ.500 கொடுத்து உணவுச் செலவுகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
பெரம்பலூரில் ஒரு வயதான அம்மா ரூ.100 நன்கொடை வழங்கினார். அவர் ‘என் பையன் இந்த பெரியார் கட்சியில் தான் இருந்தான், அவன் உடல் நலமின்மையால் இறந்துவிட்டான். அவன் உயிரோடு இருந்திருந்தால் உங்க கூட்டத்துக்கு வந்திருப்பான். அவன் நினைவாக உங்களுக்கு கொடுக்கிறேன்” என்றார். இப்படியும் பல இடங்களில் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜாதி எங்கே இறுக்கமாக இருக்கிறதோ அங்கே நாம் பரப்புரைகளை நடத்த வேண்டும். எனவே பெரியாரியக்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்கு ஆண்டுதோறும் ஒரு பிரச்சாரத்தைத் தென் மாவட்டத்தில் நடத்த வேண்டும்.
தோழர்கள் சத்யா-லதா அவர்களின் முன்னெடுப்பில் இந்தப் பயணத்துக்காக சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மூன்று பரப்புரைப் பாடல்களை உருவாக்கினோம். அவர்களுக்கு நன்றி. தோழர் யேசுகுமார் கொடிகாத்த குமரன் போல் கொடியுடனே இருப்பார். தோழர் சூர்யா பரப்புரை வாகனத்தை 600 கி.மீ கடந்து ஓட்டி வந்தார். தோழர் சுகுமார் ஒலிபெருக்கி அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். தோழர்கள் கோபி, அருண் கடைவீதி வசூல் பணிகளை மேற்கொண்டனர். தோழர் வேலு குழுவை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ளச் செய்தார். புதுக்கோட்டை பழனிவேல் ஆசிரியர் மூன்று நாட்களாக எங்களுடன் இருந்தார். பரப்புரைப் பயணம் புதிய உற்சாகத்தைத் தந்தது.
பயணத்துக்குத் தோழமை அமைப்புகளின் பேராதரவு
நாகர்கோவில் அணி:
4வது நாள்: திருநெல்வேலி, தென்காசியில் 09.08.2026 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சேரன்மகாதேவி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு வீரவநல்லூர் பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலும், மாலை 5.30 மணிக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது.
கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் சு.அன்பரசன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி வரவேற்புரை ஆற்றினார்.
பால்.பிரபாகரன்(கழகப் பரப்புரைச் செயலாளர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), அழகேசன் (விசிக மாவட்டச் பொருளாளர் திருநெல்வேலி), செல்வசுந்தரசேகர் (பெரியார் உணர்வாளர் சேரன்மகாதேவி), சிவராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டப் பொருளாளர் திருநெல்வேலி), கருணாநிதி (பெரியார் உணர்வாளர் வீரவநல்லூர்), ச.பெரியார் பித்தன் (புஇமு), மு.தமிழ்ச்செல்வன் (பெரியார் உணர்வாளர்), ஜோயல் மில்டன் (ஆலங்குளம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் திமுக), பொன். அறிவழகன் (தென்காசி மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திமுக). மு. ராமசாமி (முன்னாள் பேரூர் செயலாளர் தென்காசி) ஆகியோர் பரப்புரையின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக ஓவியர் தமிழன் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
பயணக் குழுத் தோழர்களுக்கு காலை உணவு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி, இரவு உணவு தென்காசி மாவட்டம் பேராசிரியர் திருநீலகண்டன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
5வது நாள்: 10.08.2026 அன்று திங்கள் காலை 10.00 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் , மதியம் 12. 00 மணிக்கு புளியங்குடி பகுதியிலும், மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற (தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு, மற்றும் புளியங்குடி) கூட்டத்திற்கு தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தென்காசி பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகத் தலைவர் காமாட்சி பாண்டியன் தலைமை வகித்தார் மேலூர் பகுதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், நம்பியூர் ரமேஷ், ஆத்தூர் கணபதி, மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, கே. ஆர். தோப்பூர் கண்ணன் ஆகியோர் பரப்புரையின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
புளியங்குடி நிகழ்வால் தி.மு.க.வை சேர்ந்த வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் முள்ளி குளம் சந்திரன் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிறைவாக மதுரை மாவட்டக் கழகத் தோழர் மதுரை.முருகேசன் நன்றி கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
பயண குழு தோழர்களுக்கு காலை உணவு தென்காசி பாலசுப்ரமணியம் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவு மதுரை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
6வது நாள்: 11.08.2026 செவ்வாய் காலை 9.00 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலும், 11.00 மணிக்கு அவனியாபுரம் பகுதியிலும், மாலை 4.00 மணிக்கு டி. எம். எஸ் சிலை அருகிலும், கே. புதூர் பகுதியிலும் சிறப்பாக நடைபெற்றது.
காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) தலைமை வகித்தார். கழக தோழர் முருகேசன் முன்னிலை வகித்தார். சத்தியமூர்த்தி (மதுரை மாவட்ட மேலூர் பகுதி பொறுப்பாளர்) வரவேற்புரையாற்றினார்.
தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் சீனிவாசன் (மேட்டூர் குமரன் நகர் பகுதி செயலாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), காளியப்பன் ஆகியோரின் இசையுடன் கூட்டம் தொடங்கியது.
காமாட்சி பாண்டி (மதுரை மாவட்டத் தலைவர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), கே. ஆர். தோப்பூர் கண்ணன், கழகத் தோழர் வாசுகி, தளபதி (மதுரை மாவட்டக் கழக காப்பாளர்), கவிஞர் ஜீவா (தி. மு. க தலைமைக் கழகப் பேச்சாளர்), ராமலிங்கம் (மக்கள் அதிகார கழகம்- மாநில பொறுப்பாளர்), மெய்யப்பன் (தமிழ் தேச குடியரசு இயக்கம்) , பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்) ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் பண்பாட்டு கழகத் தலைவர்), கழக பரப்புரைப் பயணம் குறித்து வாழ்த்துரையாற்றினார். நிறைவாக வேங்கை மாறன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
காலை உணவு மோகன் தாஸ் (கரூர் மாவட்டக் கழகத் தோழர்) ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு மஞ்சுளா ஸ்டாலின் (சி.பி.எம்) ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவு தளபதி (மதுரை மாவட்டக் கழக காப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார்
7வது நாள்: 12.08.2026 முதல் கூட்டம் காலை 10.00 மணிக்கு மேலூர் பகுதியில் நடைபெற்றது. சத்தியமூர்த்தி (மதுரை மாவட்ட மேலூர் பகுதி பொறுப்பாளர்) தலைமை வகித்தார். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தார். வேங்கை மாறன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் காமாட்சி பாண்டி (மதுரை மாவட்டத் தலைவர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), ரமேஷ் (நம்பியூர் ஒன்றியச் செயலாளர்) கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர்.
மெய்யர் (சி. பி.அய்.எம். எல் மதுரை மாவட்டச் செயலாளர்), நிலவழகன் (மக்கள் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்), பிரகாஷ் (மக்கள் அதிகார கழகம்), முத்துமாணிக்கம் (வி.சி.க) ஆகியோர் கழகப் பரப்புரைப் பயணம் குறித்து கருத்துரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.தோழர் வாசுகி நன்றியுரையாற்றினார்.
காலை உணவு அழகர் பிரபாகரன் (கழக ஊடகப் பொறுப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார். மேலூர் பகுதியைச் சார்ந்த பாலு (தி.மு.க) கழகத் தோழர்களுக்கு பருத்தி பால் வழங்கினார்.
கடைவீதி வசூல் துண்டறிக்கை பிரச்சாரம் வழியாக ரூ.11,499 கொளத்தூர் கணேசன், ராஜா தலைமையில் ராமச்சந்திரன், கோபிசெட்டிபாளையம் தோழர்கள் துரைசாமி, நடராஜன், மயில்சாமி, வனவாசி நகரத் தலைவர் செந்தில் ஆகியோர் நிதி திரட்டினர்.
புத்தக விற்பனைப் பணியைத் தோழர்கள் தங்கதுரை, தேவராஜ், கோகுல் ஆகியோர் மேற்கொண்டனர். ரூ.2,160 கழக வெளியீடுகள் விற்பனையானது. அனைத்து கூட்டங்களிலும் தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன், சீனிவாசன் (மேட்டூர் குமரன் பகுதிச் செயலாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), காளியப்பன் ஆகியோரின் இசையுடன் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணன் (பயண ஒருங்கிணைப்பாளர்), அண்ணாதுரை (சேலம் மாவட்ட அமைப்பாளர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), தேவராஜ் (மாநகர அமைப்பாளர்), கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழகம்), கே. ஆர். தோப்பூர் கண்ணன், கொளத்தூர் செந்தமிழ் கலையமுதன், தங்கதுரை (இளைஞர் அணி அமைப்பாளர்), புளியங்குடி முள்ளிகுளம் சந்திரன், வாசு (தேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்), கீழப்பாவூர் உமா, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் சேர்மதுரை, கோகுல், காளிப்பன், மதுரை மாவட்டக் கழகத் தோழர்கள் வேங்கை மாறன், மதுரை முருகேசன், சமூக ஆர்வலர் சூர்யா திருநெல்வேலி, பெரியாரிய உணர்வாளர்கள்: மு.தமிழ்ச் செல்வன், க.மாறன்), கருணாநிதி மற்றும் த.வ.முகிலன் வீரவநல்லூர், பெரியார் குமார், ஆலங்குளம், செல்வமணி நெட்டூர் ஆகியோர் பங்கேற்றனர்.
பேராவூரணி அணி:
4வது நாள்: நீடாமங்கலம், கும்பகோணம், நாச்சியார் கோவில் ஆகிய இடங்களில் 09.08.2026 அன்று பரப்புரை நடைபெற்றது.
தோழர்கள் சோலை மாரியப்பன், வெங்கடேஷ் ஆகியோர் தலைமை உரையாற்றினர். ஜாதியில் திருமணம் தலைப்பில் திருப்பூர் முத்து, சென்னிமலை செல்வராஜ், வாழ்வில் மூடநம்பிக்கை தலைப்பில் கோபி.வேலுச்சாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் முகில்ராசு, ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக அய்யனார், பரிமளராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கும்பகோணம் பகுதி திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தோழர் வழக்கறிஞர் ரமேஷ் பயணத்தை வாழ்த்தியும் பெரியாரின் கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நாச்சியார் கோவில் பகுதி திராவிட இயக்க ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாச்சியார் கோவில் அருகிலுள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர் மின்சாரம் வழங்கி உதவினார்.
காலை உணவு பெரியாரிய உணர்வாளர் கல்யாணசுந்தரம் அவர் இல்லத்தில் வழங்கி சிறப்பித்தார். மதியம் மற்றும் இரவு உணவை கும்பகோணம் தோழர்கள் வெங்கடேஷ், ரஷ்யா, வைக்கம் மற்றும் குடும்ப உறவினர் தங்கள் இல்லத்தில் அசைவ உணவு வழங்கி மகிழ்ந்தனர். தங்குவதற்கு அவருடைய இல்லத்திலேயே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
5வது நாள்: உரத்தநாடு பேருந்து நிலையம், மதுக்கூர் பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தோழர்கள் சிவசுப்பிரமணியம், பாரி ஆகியோர் தலைமையில் பரப்புரை நடைபெற்றது.
ஜாதியில் திருமணம் தலைப்பில் நிர்மல் குமார், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் அய்யனார், முகில்ராசு, சூலூர் பன்னீர்செல்வம் வாழ்வில் மூடநம்பிக்கை குணா, கலைச்செல்வன், சூலூர்.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக துரைசாமி, அய்யனார் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் கவிஞர். கவிமுருகன் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கியும் வாழ்த்தியும் உரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர் சுடர்வேந்தன் பயணக்குழு தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். காந்தி அரிசி கடை உரிமையாளர் மின்சாரம் வழங்கி உதவினார்.
ஈரோடு பாபு புத்தக விற்பனை செய்தார். பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மாணவிகள் துண்டறிக்கைகளை பெற்றும் ஆதரவு தெரிவித்தும் கூட்டத்தை முழுமையாக கவனித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கவி முருகன் தேநீர் வழங்கினார். காலை உணவு பாரி ஏற்பாடு செய்தார். பயணக்குழு தோழர்களுக்கு திமுக கிளை கழகச் செயலாளர் ராஜா இரவு உணவை வழங்கி தோழர்களை வாழ்த்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வணிகர்கள், பொதுமக்கள் பயணக் குழுவுக்குப் பாராட்டு!
6ம் நாள்: பட்டுக்கோட்டை அம்பேத்கர் சிலை அருகிலும், கைகாட்டி பேருந்து நிலையத்திலும், வடகாடு பேருந்து நிறுத்தத்திலும் ஆக-11 அன்று முறையே பாரி, கலைச்செல்வன், சின்னப்பத்தமிழர் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி, பெரியாரின் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலைக்கு நல்லதம்பி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
எழுகதிர்(தமிழ் வழிக் கல்வி இயக்கம்) வரவேற்புரை ஆற்றினார். ஜாதியில் திருமணம் என்ற தலைப்பில் வீரமணி-நிர்மல்குமார் இருவரும் கேள்வி பதில் பாணியில் உரைநிகழ்த்தினர், வாழ்வில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சூலூர் பன்னீர்செல்வம், கலைச்செல்வன், மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பில் முகில்ராசு, தேன்மொழி, ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக துரைசாமி, அய்யனார், சின்னப்பத்தமிழர் (தமிழ்மொழிக் கல்வி இயக்கம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட்டில் தோழர்கள் கிருஷ்ணன், நல்லதம்பி, ஜெயச்சந்திரன் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர். கூட்டம் முடிவடைந்து செல்லும் வழியில் பட்டுக்கோட்டை பெரியார் சிலைக்கு மலேசியா பெரியசாமி மாலை அணிவிக்க பரப்புரைப் பயணத் தோழர்கள் கொள்கை முழக்கங்கள் எழுப்பினர்.
பெரியார் உணர்வாளர் அண்ணாதுரை காலை உணவு வழங்கினார். மதிய உணவு ஏற்பாடு எஸ்.டி.பி.அய் ரஜாக், கரம்பக்காடு காமராஜ் இல்லத்தில் வழங்கினார். பேராவூரணி அணித் தோழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இரவு உணவை கரு. காளிமுத்து வழங்கினார். வடகாடு பகுதியில் சின்னப்பத் தமிழர் தலைமயில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினர் பதாகையுடன் பயணக்குழுத் தோழர்களை வரவேற்றனர்.
7-ஆம் நாள்: கொத்தமங்கலம் பேருந்து நிறுத்தம், அறந்தாங்கி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது.
காலை பேராவூரணி ரயில்வே கேட் போடப்பட்டதால் அங்கு வாகனங்களில் காத்துக்கொண்டிருந்த மக்களிடம் துண்டறிக்கைகளை தோழர்கள் நல்லதம்பி, கிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.
சின்னப்பத் தமிழர், திருவேங்கடம் (தலைமைக்குழு உறுப்பினர்), எழுகதிர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செங்கோடன், திமுக இளைஞரணி பொறுப்பாளர் சேதுபதி, தனித்தமிழ் இயக்கம் சிவானந்தம், மஜக மாவட்டச் செயலாளர் முபாரக் அலி ஆகியோர் பரப்புரைப் பயணத்தை வாழ்த்தியும், பயணத்தின் நோக்கத்தை விளக்கியும் உரையாற்றினர்.
ஜாதியில் திருமணம் தலைப்பில் கலைச்செல்வன், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் தேன்மொழி ஆகியோர் உரையாற்றினர். காலை உணவை கொத்தமங்கலத்தில் தோழர்கள் அருணகிரி (எம்.எல்), எழுகதிர், ரத்தினம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
அறந்தாங்கிக்கு செல்லும் வழியில் சின்னப்பத் தமிழர் அவர்களின் தம்பி இல்லத்தில் அனைவருக்கும் எலுமிச்சை பழச்சாறு பலாப்பழங்கள் கொடுத்தனர். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரமேஷ் கண்ணன் ஆதரவு தெரிவித்து பயணக்குழுத் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.
மோகன கிருஷ்ணன் புத்தக விற்பனைப் பணியைச் செய்தார்.
அனைத்து கூட்டங்களிலும் வீரமணி-கிருஷ்ணன் ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்கள். தோழர்கள் நிர்மல்குமார் -வீரமணி- திருவேங்கடம், தேன்மொழி ஆகியோர் நாடகம் வழியாக ஜாதி எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டனர். நாடகத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
அனைத்து கூட்டங்களிலும் தோழர்கள் திருப்பூர் குணா, மடத்துக்குளம் சிவானந்தம், முகில்ராசு சூலூர்.பன்னீர்செல்வம், நல்லதம்பி பாபு, பேராவூரணி ஜெயச்சந்திரன், விவேகா ஆகியோர் ஒலிபெருக்கி அமைக்கும் பணியையும் துண்டறிக்கை விநியோகம், கடைவீதி வசூல் பணிகளைச் செய்தனர்.
திருச்சி அணி:
4வது நாள்: அரியலூர் மாவட்டம் செந்துறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி நான்காம் நாள் பரப்புரைப் பயணத்தை ஆக-9 அன்று தொடங்கினர்.
அரியலூர் குன்னத்தில், பெரம்பலூர் நாலு ரோட்டில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது.
கழக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சித் தலைவர் செல்வமணியன், பொன். தங்கராசு (புஇமு), மு.விஜயேந்திரன் (தி.க மாவட்டச் செயலாளர்), சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, ஆகியோர் கருத்துரையாற்றினர். பயணக்குழுத் தோழர்களுக்கான தங்கும் வசதிகளையும், உணவு ஏற்பாடுகளையும் தி.க மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் செய்து கொடுத்தார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரைப் பயணத்தின் போது பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் வந்து அமர்ந்து கருத்துகளைக் கேட்டு, கழக வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். அவ்வழியே சென்ற இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர், பரப்புரைப் பயணத்தை கவனித்து, தோழர்களுக்கு குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்தார். சுதாகர் பங்கேற்று ஆதரவளித்தார்.
5வது நாள்: பெரம்பலூர் அம்மாபாளையம், முசிறி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் ஆக-10 அன்று பரப்புரை நடைபெற்றது. பொன். தங்கராசு (புஇமு), சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பரப்புரையைக் கவனித்த சவுந்தர்ராஜன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கழக வெளியீடுகள் அனைத்தையும் வாங்கிச் சென்றார்.
5வது நாள் நிறைவுக் கூட்டம் மாலை 6 மணிக்கு, திருச்சி மணப்பாறையில், கழக ஒன்றியச் செயலாளர் வி. தனபால் தலைமையில், பொதுக் கூட்டமாக நடைபெற்றது. விராலிமலை ஒன்றியச் செயலாளர் குமரேசன் வரவேற்புரையாற்றினார்.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் துரை. காசிநாதன், பாவலர் மு. பசுலுதீன் உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர், ஆசிரியர். சிவகாமி பேசுகையில், மூடநம்பிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள், அதே மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாகவே இருப்பது குறித்தும், தமிழ்நாட்டு பெண்கள் மூடநம்பிக்கைகளை விடுத்து பெரியார் வழிக்கு திரும்ப வேண்டிய தேவை குறித்தும் உரையாற்றினார்.
ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, "வரலாற்றை அறிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு கொள்கைத் தலைவர்கள் எதற்கு" என்று வினவினார். பிற்படுத்தப்பட்டோரின் பதவிகளைப் பறிக்கும் பார்ப்பனர்களை எதிர்க்காமல், ஒடுக்கப்பட்டோரை எதிர்ப்பது புத்திசாலித்தனமா?" என்று கருத்துரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "தமிழ்நாட்டு பிரிவினையை முன்வைத்த மலையாள நாட்டினர் குறித்தும், ஆகம விதிகள் தற்கால பார்ப்பனருக்கே பொருத்தமற்றதாக இருப்பது குறித்தும் நிறைவுரையாற்றினார். நடுப்பட்டி பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.உணவு ஏற்பாடுகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் இராவணன் கவனித்துக் கொண்டார். அய்ந்தாம்நாள் தோழர்களின் துண்டறிக்கை பிரச்சாரத்துக்கு வணிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
6வது நாள்: மணப்பாறை காமராஜர் அரசு மருத்துவமனை அருகில், விராலிமலை செக்போஸ்ட், புதுக்கோட்டை இலுப்பூர் ஆகிய இடங்களில் ஆக-11 அன்று பரப்புரை நடைபெற்றது.
தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் துரை. காசிநாதன், பாவலர் மு. பசுலுதீன், பாடகர் சத்யா ஆகியோர் பிரச்சார பயணத்தின் நோக்கத்தை விளக்கிக் கருத்துரையாற்றினர். அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பெரியார் பிஞ்சு திராவிட மகிழனின் துண்டறிக்கை பிரச்சாரம் மக்களை பேரார்வம் கொள்ளச் செய்தது. பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கழக வெளியீடுகளை வாங்கிச் சென்றனர்.
7வது நாள்: ஆக-12 அன்று புதுக்கோட்டை திருமயம் பகுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிவகங்கை கானாடுகாத்தானில் துண்டறிக்கை பரப்புரையை தோழர்கள் மேற்கொண்டனர்.
கழக வெளியீடுகள் ரூ.7953க்கு விற்பனையாகின. ரூ.11,590 கடைவீதி வசூல் வழியாக கிடைத்தது.அனைத்துக் கூட்டங்களிலும் தோழர்கள் லதா, சத்யா, திராவிட மகிழன், உமாபதி, கார்மேகம் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாடப்பட்ட பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது.
ம.கி. எட்வின் பிரபாகரன், இராவணன், ஆ.வ. வேலு, சுகுமார், ஏசுகுமார், கடலூர் சிவா, இரண்யா, சு.கோபிநாத், த.நா.சூர்யா, மயிலை அருண், வீரா, அசோக், சுரேந்தர், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெகிழ்ச்சியான நிகழ்வுகள்
அம்மாபாளையம் பகுதியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தின் போது இரண்டு சிறுவர்கள் மெக்கானிக் கடையில் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அந்தக் கடையின் உரிமையாளர் வெளியேறி கடைக்கு பின்னால் போனார்.
நாங்கள் அந்தச் சிறுவர்களிடம் துண்டறிக்கைய கொடுத்தோம். அந்த சிறுவன் பார்த்த உடனே எங்ககிட்ட கைய காட்டி இருக்க சொல்லி உரிமையாளர் பின்னாடி போய் சிறிது நேரத்தில் ரூ.10 நன்கொடை வழங்கினார். உரிமையாளரிடம் தொந்தரவு செய்து நன்கொடை வழங்கினார்கள் சிறுவர்கள். நன்கொடை தந்த சிறுவனின் பெயர் ஜெயப்பிரகாஷ். தோழர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டான்.
இலுப்பூர் பகுதியில் நிகழ்வு முடிந்து வண்டி கிளம்ப தயாராகும் போது அங்கே வந்த பள்ளிச் சிறுவர் இருவர் துண்டறிக்கையைப் படித்துவிட்டு ஏதாவது புத்தகம் கிடைக்குமா? என்று கேட்டு ஆவலோடு வாங்கிச் சென்றனர்.
உழைப்புக்குக் கிடைத்த வெற்றி
(மாநாட்டுப் பொறுப்பாளர்கள் காரைக்குடி இளங்கோ, பெரியார்முத்து விடுத்துள்ள அறிக்கை)
திராவிடர் விடுதலைக் கழகத்தின் “வாழ்வியல் மாற்றத்திற்கான பரப்புரைப் பயணத்தின்” நிறைவு மாநாடு, 12.08.2026 அன்று காரைக்குடியில் எழுச்சியுடனும், சிறப்புடனும், வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
தோழர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள தென் மாவட்டத்தில் இத்தகைய சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என்பதை காரைக்குடி மாநாடு நிரூபித்துள்ளது. இது ஒரு மாநாட்டின் வெற்றி மட்டுமல்ல; சிவகங்கை மாவட்டத்தில் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய தொடக்கம்.
காரைக்குடியில் மாநாடு நடத்தப்படும் என்று தலைமைக்குழு அறிவித்தபோது, “இவ்வளவு பெரிய மாநாட்டை நம்மால் நடத்த முடியுமா?” என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் தலைவர், தலைமைக்குழு மற்றும் முன்னணித் தோழர்களின் வழிகாட்டுதலும், மாவட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பும், தமிழகம் முழுவதிலுமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், நன்கொடையாளர்களின் ஆதரவும் அந்தத் தயக்கத்தை நம்பிக்கையாக மாற்றின. நம்பிக்கை செயலாக மாறியது; செயல்பாடு வரலாற்று வெற்றியாக மாறியது.
மாநாட்டிற்கான நன்கொடை திரட்டும் பணிக்காக காரைக்குடியிலேயே தங்கி, இரவு பகல் பாராமல் உழைத்த அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.
மாநாட்டு மேடை மற்றும் அரங்கின் வடிவமைப்பை நேர்த்தியாகவும், அழகியலுடன் உருவாக்கித் தந்த சென்னைத் தோழர்கள் அருண், குமார், எழிலரசன், பிரபாகரன், இளவரசன் மற்றும் அன்னூர் விஷ்ணு, படங்கள் எடுத்த கபிலன் ஸ்டுடியோ விஜி உள்ளிட்டோருக்கு நன்றி.
காரைக்குடியில் தொடர்ந்து களப்பணியாற்றிய தோழர்கள் பெரியார் முத்து, இளங்கோவன், ரமேஷ் உள்ளிட்ட தோழர்களுக்கும், மாநாட்டுப் பணிகளில் முன்னின்று செயலாற்றிய சரவணன், பாலச்சந்திரன், ஆறுமுகம், மணிமாறன், முத்துக்குமார், தாமரை, பொள்ளாச்சி தோழர்கள் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல இரவுகளைக் கடந்து, தூக்கத்தையும் ஓய்வையும் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட பணிகளையும் ஒதுக்கி, இயக்கப் பணிக்காகத் தோழர்கள் உழைத்தனர். அந்த உழைப்பு சுமையாக அல்ல; சமூக மாற்றத்திற்கான மகிழ்ச்சியான பணியாகவே இருந்தது. காவல்துறை அனுமதி கடைசி நேரம் வரை சிக்கலாக இருந்த நிலையிலும், பேரணி தொடங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கிடைத்த நிலையிலும், தோழர்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான பேரணியை காரைக்குடியின் வரலாற்றுப் பேரணியாக மாற்றியது.
காரைக்குடியில் புதிய வரலாறு படைத்துள்ள மாநாடும் பேரணியும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சனநாயக அமைப்புகள் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது மிகையல்ல. இயற்கையின் இடையூறுகளையும் கடந்து மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆனால் இது நமது பயணத்தின் முடிவல்ல.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். அவற்றை செயலாக்குவதற்கான களப்பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம். இந்த மாநாடு தோழர்களுக்குள் உருவாக்கியுள்ள புதிய உற்சாகத்தை அமைப்பின் வளர்ச்சியாக மாற்றுவோம். தயக்கத்தோடு தொடங்கிய பயணம், தன்னம்பிக்கையோடு நிறைவடைந்துள்ளது. “முடியுமா?” என்று கேள்வி எழுந்த இடத்தில், “முடியும்” என்று நிரூபித்திருக்கிறோம்.
இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொரு தோழருக்கும், நன்கொடையாளர்களுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும், மாநாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிவகங்கை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றி நிறைவு அல்ல - புதிய களப்பணிக்கான தொடக்கம்! தொடர்ந்து களத்தில் நிற்போம்; தீர்மானங்களைச் செயலாக்குவோம்; அமைப்பை வலுப்படுத்துவோம்; சமூக மாற்றத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்.