திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ``மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு'' ஆகஸ்ட் -12,2026 அன்று காரைக்குடியில் சுயமரியாதை சுடரொளி கானாடுகாத்தான் வை.சு சண்முகம் அரங்கில், (பாண்டியன் தியேட்டர் அருகில்) மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் இருந்து பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த கழகத் தோழர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.serlf respect marriage in karaikudi

(மாநாட்டில் நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணம்)

பேரணியில் உற்சாகமாக தோழர்கள் கலந்து கொண்டு கொள்கை முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டுத் திடலை நோக்கி அணிவகுத்து வந்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.

பேரணி செல்லும் பாதையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநாட்டு அமைப்பாளர் காரைக்குடி இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்தனர். தோழர்கள் பெரியார் வாழ்க! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்.

மாநாட்டுத் திடலில் அருகாமையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர்.

மாநாடு மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. லதா,சத்யா, மேட்டூர் கோவிந்தராஜ், சித்திர சேனன், திராவிட மகிழன் இணைந்து பாடல்களைப் பாடினர். உமாபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேட்டூர் தோழர்கள் சீனிவாசன், அண்ணாதுரை, குமரன், காளியப்பன் மற்றும் கார்மேகம் தாளக் கருவிகளை இசைத்தனர். மாநாடு தொடங்கிய சில மணித்துளிகளில் பெரு மழையால் தடைபட்டாலும் மழை நின்ற பிறகு அதே உற்சாகத்துடன் தொடர்ந்து மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்டத் தலைவர் நா.முத்துக்குமார், காரைக்குடி மாநகர அமைப்பாளர் அ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்டத் தலைவர் பெரியார் முத்து வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு தோழர்களின் கையொலிகளுக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன்,பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் ’தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் கழகத்தின் ஜாதி ஒழிப்பு இயக்கத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும் ஜாதியத்தின் இயங்கியல் குறித்தும் அம்பேத்கர் அவர்களின் "ஜாதியை ஒழிக்கும் வழி" என்ற நூலின் கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையை வலியுறுத்தியும் பேசினார். (அவரது உரை பின்னர் வெளிவரும்).

பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற கலைக்குழுவினர், பயணத்தில் பங்கேற்ற தோழர்கள், பரப்புரைப் பயணத்திற்கு உழைத்த தோழர்கள் அனைவருக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பயனாடையும், குழுத் தலைவர்களுக்கு நினைவுக் கேடயமும் வழங்கி சிறப்பித்தார்.

பரப்புரைப் பயணத்துக்காக வெளியிடப்பட்ட நூல்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். உலகத் தமிழர் பேரவை துணைத் தலைவர் சா.இராமன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாவெல் , பெரியார் பேரவைத் தலைவர் நாகேஸ்வரன், விசிக மாவட்டச் செயலாளர் உஞ்சனை சரவணன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் அரசெழிலன், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஐந்திணை மக்கள் கட்சி இணை பொதுச் செயலாளர் கருணாநிதி, திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் நீ. இளங்கோ, சிபிஅய் மாநகரச் செயலாளர் சிவாஜி காந்தி, முடியரசனார் அவைக்களம் பாரி முடியரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், தங்க குமரவேல் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

நாமக்கல், ஈரோடு, கோபி, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், மயிலாடுதுறை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கடலூர் பெங்களூர், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிலிருந்து சில துளிகள்...

  • மாநாட்டுத் திடலில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன.
  • மாநாட்டில் பார்வையாளர்களிடம் துண்டு ஏந்தி திரட்டப்பட்ட ரூ.7420 நிதி, மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.5,000, மதுரை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.15,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு வழங்கப்பட்டது.
  • நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பாக தோழர்கள் ரூ.10,000 மாநாட்டுக்கு நன்கொடையாக வழங்கினர்.
  • மாநாட்டு முன்னேற்பாட்டுக் குழுவினரான அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் தோழர்கள் பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோர் கழக ஆதரவாளர்களை சந்தித்து நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
  • பரப்புரைப் பயணத்துக்கும், மாநாட்டுக்கும், மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பாக, ரூ. 5,000-அய் தோழர் மனோகர் நன்கொடையாக வழங்கினார்.
  • இந்த பரப்புரைப் பயணத் திட்டத்துக்கும், துண்டறிக்கை தயாரிப்பு, சீருடை தயாரிப்புக்கும் நிதி திரட்டி மாநாட்டு பணிகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயல்பட்டவர் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்.
  • வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம இளங்கோவன் கோபி மாவட்டக் கழகம் சார்பில் மாநாட்டுக்கு ரூ.30,000 மற்றும் மாநாட்டு மேடைச் செலவுகளுக்கு ரூ.20,000 என்று மொத்தம் ரூ.50,000 நிதி வழங்கினார்.
  • ஆக-11, அன்று காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமன் கழகத் தலைவர் மற்றும் மாநாட்டுக்கு பணியாற்றிய கழகத் தோழர்கள் 25 பேருக்கு இரவு அசைவ உணவை தனது பண்ணை இல்லத்தில் வழங்கினார்.
  • கழகத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டிலும் சென்னிமலை வெங்கடேஷ்-லலிதா இணையர்களின் மகள் கீர்த்தனா அவர்களுக்கும் கழகத் தோழர் திருப்பூர் முத்துலெட்சுமி-ஆண்டவர் இணையர்களின் மகன் சக்தி, ஆகியோருக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தோழர் முத்துலெட்சுமி தன்னுடைய 2 மகன், 3 மகள் ஆகியோருக்கு ஜாதிமறுப்புத் திருமணங்களை செய்து வைத்தவர். திருச்சியில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டிலும் இதே போல் தனது குடும்பத்தின் ஜாதிமறுப்புத் திருமணங்களை எளிமையாக நடத்தி வழிகாட்டி வருகிறார்.
  • பயணக்குழுவினர் மாநாட்டு நோக்கத்தை அச்சிட்ட கருப்பு டி-சட்டைகளை அணிந்து வந்தனர். அவர்கள் படைவீரர்களாக காட்சி அளித்தனர்.
  • கழகத் தோழர்கள் பெரியார் முத்து, இளங்கோவன், ரமேஷ், முத்துக்குமார், சரவணன், பாலச்சந்தர், வினோத் ராஜா, திருநாவுக்கரசு, தவச்செல்வம், பெரியார் நம்பி, குமரேசன், மணிமாறன் (தமிழக மக்கள் முண்ணனி), ஆகியோர் தோரணம் கட்டுதல், கடைவீதி வசூல் உள்ளிட்ட மாநாட்டுப் பணிகளுக்கு இரவு பகல் பாராது உழைத்து மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
  • சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அருண், மயிலை குமார், எழிலரசன், இளவரசன், பிரபாகரன், பிரசாந்த் மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்பே சென்று கடும் உழைப்பை வழங்கி மேடை வடிவமைப்புப் பணிகளை செய்து முடித்தனர். மாநாட்டு ’லோகோ’வுடன் இவர்கள் அமைத்திருந்த அழகிய செல்ஃபி பீடத்தில் ஏராளமான தோழர்கள் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

செய்தி - பரிமளராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.