தமிழ்நாட்டு தற்போது 5 இலட்சம் கோடி கடன் இருப்பதாக கதை சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்கள். 2011-2020 வரை 9 ஆண்டுகள் எடப்பாடி ஆட்சியின் கடனே வாங்காது போலவும் திமுக 5 ஆண்டுகளில் கடன் வாங்கி குவிப்பது போல் பேசி வருகிறார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? 2006-2011 திமுக ஆட்சியில் ரூ.43,893 கோடி கடன்; 2011-2016 அதிமுக ஆட்சியில் ரூ.1,09,717 கோடி கடன். அதாவது முந்தைய ஆட்சியை விட 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது அதிமுக ஆட்சி தான். எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2016-2021 அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ.2,74,436 கோடி இது முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால் 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது எடப்பாடி ஆட்சி தான். 2021 ஆண்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.4,85 இலட்சம் கோடி.
தற்போது திமுக ஆட்சி (2021-2026) ஆண்டில் வாங்கப்பட்ட கடன் 4,67,457 இலட்சம் கோடி. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் 70 விழுக்காடு தான் கடன்.
ஆக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கட 150 விழுக்காடாக இருந்தது. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 70 விழுக்காடாக கடன் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மொத்த வளர்ச்சியில் கடன் எவ்வளவு என்று பார்த்தால் கடந்த அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட்டில் 26.69% விழுக்காடு. திமுக ஆட்சியில் ஜிடிபி விகிதப்படி 26.43 விழுக்காடு. ஆகவே கடன் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு மாநிலத்தின் கடன் என்பது அந்த மாநிலத்தின் பலவீனத்தை காட்டக் கூடிய குறியீடு அல்ல. கடன் என்பது பொருளாதாரத்தின் ஒரு அங்கம். குறைவான கடன் வாங்கினால் பொருளாதார புலியும் அல்ல! அதிக கடன் வாங்கினால் அவமானம் என்று கணக்கு செய்தால் அதானி, அம்பானியை விட சாமானிய மக்கள் தான் பெரும் பணக்காரர்கள்.
மெட்ரோ இரயிலுக்கு தமிழ்நாட்டின் பங்கு அதிகம்!
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி தோல்வி பயத்தில் கதறி வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் சென்னை போக்குவரத்து குறைக்க மெட்ரோ-2 கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.63,000 கோடி அனுமதி பெற்று திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்.
இதுவரை இந்தியாவில் ரூ 63,000 கோடிக்கு ஒரு திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி , கிடைத்தது இல்லை இதுவே முதல் முறை என்று இறுமாப்புடன் பேசுகிறார் எடப்பாடி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வைத்து அடிக்கல் நாட்டினர் என்று பெருமிதத்துடன் திமுக ஆட்சியில் இப்படி எதாவது பெரிய திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்தீர்களா என்று கேள்வி எழுப்புகிறார் எடப்பாடி.
உண்மை என்ன தெரியுமா? சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ பணிக்கான மதிப்பீடு 63,246 கோடி. இதற்கு எப்படி வருவாய் வருகிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தந்த ஆண்டறிக்கையின் படி பார்த்தால் ஒன்றிய அரசு தருகிற நிதி 7,424.9 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசின் பங்கு அதே 7,424.9 கோடி. மீதம் உள்ள தொகை சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதாவது ஜப்பான் இண்டர்நேசனல் காப்ரேசன் ஏஜின்சி (Jica), ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடனாக வாங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டியது தமிழ்நாடு அரசுதான்.
நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட இதர செலவுகள் ரூ.14,743 கோடி தமிழ்நாடு அரசுதான் செலவு செய்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரூ.22,173 கோடி செலவிடுவது தமிழ்நாடு அரசுதான். ஆகவே ஒன்றிய அரசை விட தமிழ்நாடு அரசுதான் 2-ம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்துக்கு செலவு செய்கிறது. இந்த உண்மைகளை மூடி மறைத்து மோடி ஆட்சிக்கு புகழ் பாடுகிறார் எடப்பாடி.
அன்புமணியின் அற்பத்தனமான உளறல்கள்!
பாமக தலைவர் அன்புமணி திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மதுவால் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று வாட்ஸ்அப் வதந்தியை பேசியுள்ளார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளள 2023 ஆண்டு சாலை விபத்துக்கான விவரத்தில் மது போதையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை பதிவுகளில் தமிழ்நாடு 7வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 320 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உ.பியில் 3808-ஆகவும், ம.பி-1209 ஆகவும், ஒடிசா-649 ஆகவும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.
மதுபோதை வாகன விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 74 பேர் இறந்ததாகவும் 14வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. ஆனால் உ.பியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1822. ஒடிசாவில் 254 மற்றும் ம.பியில் 219 பேர் மதுபோதையின் காரணமாக வாகன விபத்தில் இறந்துள்ளனர். உண்மையை மறைத்து பொய் பரப்புரையை செய்து வருகிறார் அன்புமணி.
அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டா?
தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்; காவல்துறை இயக்குனர் ; உளவுத்துறை இயக்குனர் போன்ற உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அவரிடம் அதிகாரிகள் இடமாற்றலை வலியுறுத்தினார் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கண்மூடித்தனமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அதிகாரிகளின் இடமாட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை துவங்கி இருக்கிறது. உண்மையிலேயே உயர் அதிகாரிகளை இப்படி பந்தாடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இதுகுறித்து நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி `இந்து' ஆங்கில நாளேட்டில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். (ஏப்ரல்-3,2026) அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறோம்.
சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவு வழங்கியிருந்தாலும் அந்த அதிகாரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறது.
குறிப்பாக மொகிந்தர்சிங் தேர்தல் ஆணையர் வழக்கு மிகவும் முக்கியமானது (1978).
சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை மனம் போன போக்கில் செயல்படுத்த முடியாது.
நாடாளுமன்றமும் சட்டமன்றமும் நிறைவேற்றியுள்ள சட்டங்கள் அமுலில் உள்ள போது தேர்தல் ஆணையம் அந்த சட்டங்களோடு இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, அதை மீறும் முயற்சிகளில் இறங்க கூடாது.
அய்.ஏ.எஸ் மற்றும் அய்.பி.எஸ் அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியல் சட்டத்தில் 7ஆவது பிரிவு இதை உறுதி செய்கிறது.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான அதிகாரிகளையும் ஊழியர்களையும் தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் இருந்துதான் கேட்டுப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் 324 வது உட்பிரிவு 6 கூறுகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு தனியாக நிர்வாக் கட்டமைப்பு எதுவும் இல்லை.
1950 மற்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரங்களை விரிவாக விளக்குகிறது. அதில் எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகளை மாற்றும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவே இல்லை.
இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் எந்த குறுக்கீடுகளை செய்தார்கள் என்பதற்கான காரணங்களை கூறாமலே இடமாற்ற அதிகாரத்தை கையில் எடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
இந்த இடமாற்றங்களை தேர்தல் ஆணையம் அண்மைக் காலமாகவே கையில் எடுத்திருக்கிறது.இதனால் அதிகாரிகள் மன பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மொகிந்தர்கில்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் ``இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் பேரரசுகளும் இல்லை; பேர் அரசர்களும் இல்லை. தேர்தல் ஆணையம் தனக்கு வழங்கப்பட்ட சட்ட உரிமையை ஆயுதம் ஆக்கக்கூடாது வரம்பற்ற அதிகாரத்திற்கு நமது அரசியல் அமைப்பில் இடமில்லை'' என்று தேர்தல் ஆணையத்தின் தலையில் குட்டு வைத்திருக்கிறது.
அதிகாரிகளை மாற்றுவதாலேயே ஆட்சி மாற்றம் வந்துவிடாது. எடப்பாடிகளும் அமித்க்ஷாக்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இப்படி குத்தாட்டம் போடலாம். தேர்தல் முடிவுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சி இதே அதிகாரிகளை அந்தந்த பதவிகளில் நியமிக்கப்படுவதை தமிழ்நாடு பார்க்கப் போகிறது.
- விடுதலை இராசேந்திரன்