ஜாதி கடந்த காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்கிறது! ஜாதிகளுக்கிடையே உள்ள பிரிவுகளை மறுக்கிறது. ஜாதி சமூக அடுக்குகளை எதிர்க்கிறது என்பது காதல் குறித்த பார்வையாக இருக்கிறது. அது உண்மைதான்; ஆனால் காதலை மட்டும் சமூகம் உணர்வு சார்ந்த பார்வையாக மட்டும் பார்க்காமல் அரசியலாகவும் பார்க்க வேண்டும். சமூகத்தில் காதல், ஜாதி எதிர்ப்புக்கான அரசியல் முன்னெடுப்புக்கும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கருவியாகவும் செயல்படுகிறது. காதலில் சமூக மாற்ற ஜாதி ஒழிப்பை நோக்கிய அரசியல் இருக்கிறது என்பதே அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்தாகும்.
ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு பட்டப் படிப்பு மாணவரான ரோகித் வெமுலா அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மிகச் சிறந்த கவித்துனமான அறிவியல் மாணவர். மதவாத ஜாதி வெறி சக்திகளால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் 2016 ஜனவரி 17 அன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அவரது இறுதிக் கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாக மதிக்கப்படுகிறது.
தனது ஆழமான மனவேதனையை வெளிப்படுத்திய வெமுலாவின் இந்தக் குறிப்பு, ஜாதி எதிர்ப்பு விவாதங்களில் காதல் ஒரு சமூகக் கட்டமைப்பாகவும் அரசியல் கருவியாகவும் எவ்வளவு புறக்கணிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சமூக அமைப்பின் ஒரு கருவியாகக் கருதப்படும் காதல், படிநிலைகளும் முறையான ஒதுக்கி வைத்தலும் நிறைந்த சமூகத்தில் உருவாகும் தனிமை உணர்வை எதிர்கொள்ள முடியுமா?
அம்பேத்கர், பெரியார் போன்ற தீவிர சிந்தனையாளர்கள், சமூக மாற்றத்தையும் சமத்துவத்தையும் அடைவதற்கான அரசியல் பாதையாக காதலை ஒரு நெறிமுறைப் பொறுப்பாக ஏற்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர்.
1949 நவம்பரில் அரசியலமைப்புச் சபையில் ஆற்றிய தனது புகழ்பெற்ற இறுதி உரையில், அரசியல் சமத்துவத்துடன் ஆழமான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவின் முரண்பாட்டை அம்பேத்கர் முன்கூட்டியே சுட்டிக்காட்டினார். உண்மையான சமூக சமத்துவம் இல்லாத நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஜாதி எதிர்ப்பு இயக்கம் நடத்துபவர்கள் பெரும்பாலும் பட்டியலின ஜாதிகளை (SC) ஒரே மாதிரியான சமூகமாகக் கருதி, அதற்குள் உள்ள பல்வேறு குழுக்களின் படிநிலைகளைப் புறக்கணிக்கிறார்கள்.
2024 ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. பட்டியலின ஜாதிகளுக்குள் துணைப்பிரிவை (Subclassification) தீர்ப்பு அங்கீகரித்தது. இது அம்பேத்கரின் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் என்ற பார்வையை முன்னெடுக்கும் ஒரு கருத்தாகும். ஆனால், அந்த விவாதம் சமூக மாற்றத்தைக் கருதாமல் அரசியல் ஆதாயங்களை நோக்கி நகர்ந்தது தான் வேதனை. பட்டியல் பிரிவில் வகைப்படுத்தப்பட்ட உட்ஜாதி குழுக்களுக்கும் இட ஓதுக்கீடு வழங்கியது சட்டப்படி சரியே என்று தீர்ப்பு கூறியது.
இந்தத் தீர்ப்பு, அன்பு, சுயமரியாதை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பு வலியுறுத்திய சமூகநீதியின் சரியான பார்வையைக் கொண்டது என்பதே சமூகவியலாளர்களின் கருத்து. தீர்ப்பில் டி.வை. சந்திரசூட் பட்டியலின ஜாதிகளுக்குள்ளும் ஆழமான பிரிவினைகள் இருந்தாலும் உள்ஜாதி வன்முறைகள் நிகழ்வதைச் சுட்டிக்காட்டினார். பொருளாதாரம் அல்ல, ஜாதி அடிப்படையிலான புறக்கணிப்புதான் பிற்படுத்தப்பட்ட நிலையை நிர்ணயிக்கிறது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
ஆனால் பீம் ஆர்மி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தலித் அரசியல் அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்தன. மறுபுறம், அருந்ததியர், மாதிகா, வால்மீகி, பாங்கி சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உட்பிரிவு குழுக்களுக்குத் தனி ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தின. இந்த விவாதம் உரிமை கோரலுக்கும் புறக்கணிப்புக்கும் இடையிலான மோதலாக மாறியது.
தலித் பிரிவுகளுக்கு இடையிலான இந்த மோதலை தவிர்ப்பதற்கு காதலை ஒரு அரசியல் அறமாக மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு வலியுறுத்துகிறது. கண்ணியம், பரிவு மற்றும் நீதிக்கான உறுதியான அர்ப்பணிப்பாக அரசியல் காதல் (Political Love) விளங்குகிறது. இடஒதுக்கீடு வெறும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அல்ல; கண்ணியத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
தலித் பிரிவினர்களுக்கிடையே பாகுபாடுகளை; மோதல்களை தவிர்த்து ஜாதி எதிர்ப்புக்கான சமத்துவ அரசியல் முன்னெடுப்பதற்கு `காதல் அரசியலாக' முக்கிய பங்காற்றுகிறது. தூய்மை; பாகுபாடு கருத்தியல்களை ஜாதி கலந்த காதல் தகர்க்கிறது. ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு இடையிலான உயர்வு-தாழ்வுகளை நீக்குகிறது. உண்மையான உள்ளிழுக்கும் (Inclusive) சமூகநீதி இதுவே இட ஒதுக்கீட்டின் நோக்கமே இதன் மூலம் மீட்டெடுக்கப்படுகிறது. சமத்துவத்தை உருவாக்க வந்ததுதான் இட ஒதுக்கீடு என்றால் உட்ஜாதி பிரிவுகளாகி தனி இடஒதுக்கீடு வழங்குவது தானே நியாயம்.
உண்மையில் புதிரைவண்ணார், ஆதிஆந்திரர், பங்கி, அருந்ததியர் உள்ளிட்ட சிறுசிறு ஜாதிக்குழுவினரின் பிரச்சினைகள் கவனம் பெறுவதே இல்லை. இவர்களை அரவணைப்பதைவிட மோதல்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.
தமிழ்நாட்டின் சூழல்
தமிழ்நாட்டில், 2024 ஜூன் மாதத்தில் தலித் பிரிவுக்குள்ளே உயர்ஜாதி பெருமை பேசும் பிரிவைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்தால் எம். அழகேந்திரன் கொலை செய்யப்பட்டார். ஜாதி எதிர்ப்பு இயக்கம் எத்தகைய முரண்பாடுகளோடு இருக்கிறது என்ற உண்மை அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. 2016-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை, நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். ஜாதி இந்துக்களால் 98 வகையான பாகுபாடுகளும், பட்டியலினச் ஜாதிகளுக்குள்ளேயே 99 வகையான பாகுபாடுகளும் இருப்பதை அந்த ஆய்வு கண்டறிந்தது. ஜாதி இந்துக்களில் 98.4% பேர் ஜாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கிறார்கள்; பட்டியலினச் ஜாதிகளில் 99.1% பேர் தங்கள் உட்ஜாதிகளுக்கிடையிலான திருமணங்களையே எதிர்க்கிறார்கள்.
“உண்மையான மாற்றம், ஜாதியில் உள்ள முரண்பாட்டு வன்முறையை எதிர்கொண்டு, கரிசனம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை உருவாக்குவதிலிருந்தே தொடங்குகிறது.” என்ற ரோகித் எழுதிய வரிகளையே மீண்டும் நினைவுபடுத்த வேண்டும்.
('பிரண்ட் லைன்’ ஆங்கில இதழில் ரவிச்சந்திரன் மற்றும் சாதிக் பி.கே எழுதிய கட்டுரையில் இருந்து)