சென்னை
19.11.45

எனது அன்புள்ள ராஜநாராயணா,

உன் கடிதம் கிடைத்தது. விபரம் அறிந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சுருக்கமாக நீ எழுதியிருந்தாலும், “உன்னுடைய உடம்பை முதலில் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்; மனதைத் திடப்படுத்திக் கொள்..... ஒரு போர்வீரனைப் போல் நட” என்ற ஊக்கமூட்டும் ஆதரவான வார்த்தைகளை நீ சொல்லியிருப்பதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த சொற்கள் எனக்கு எவ்வளவு உயிரூட்டியிருக்கின்றன தெரியுமா? ஆபத்தில் செய்த உதவிதான் இது!

உனக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் எழுதிய கடிதத்தை ஏனோ தபாலில் சேர்க்கமாமல் வைத்திருந்தேன். இப்போது அதையும் சேர்த்து அனுப்பியிருக்கிறேன்.

நீ எதற்கு துரையின் விலாசத்துக்குக் கடிதத்தை எழுதினாய் என்று எனக்குப் புரியவில்லை. நான் சென்னைக்கு வந்த அன்று மழையின் காரணமாக ஒரு நாள் காசியின் அறையில் தங்கியிருந்தேன். இப்போது, பழைய விலாத்தில்தான் இருக்கிறேன். டிசம்பர் முதல் தேதியன்று வீடு மாற்றம் செய்ய உத்தேசம்.

‘ஹிந்து’ பத்திரிகையில் எச்.ஜி. வெல்ஸ் சென்ற ஒரு 10 நாட்களுக்குள்ளாக மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை நடராஜன் கல்யாணத்தன்று வந்தது. இரண்டாவது கட்டுரை நான் சென்னைக்குப் புறப்பட்ட நாளான்று வந்தது. மூன்றாவதாகிய கடைசிக் கட்டுரை இன்று வெளிவந்திருக்கிறது. மிகவும் முக்கியமான கட்டுரைகள். அவற்றின் சாரத்தை அடுத்த கடிதத்தில் எழுதியனுப்புகிறேன். நீ அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரைகள் அவை.

உன் உற்சாகமூட்டும் கடிதங்கள் அடிக்கடி வரவேண்டும். சோர்ந்துபோன என மனநிலையில் சொந்த கிருஷ்டியாக ஒரு வரி எழுதும் முன்னால் உயிர் போய்த் திரும்புகிறது. நேற்று இரவெல்லாம் உட்கார்ந்து அரும்பாடுபட்டு ஒரு கதை எழுதினேன். இன்று காலையில் எடுத்து அதை வாசித்தால் ‘சப்’ பென்று இருக்கிறது! உடனே தூர எறிந்துவிட்டேன். ஏமாற்றம் மேலும் மேலும் சோர்வடையச் செய்கிறது. இலக்கியப்பணி இப்படி உயிரையும் கொல்லுமா? வேதனைதான். காரணம் உற்சாகமில்லாததே. உடன் பதில்.

குறிப்பு : இங்கே ஒரு நாடக சபாவில் கடந்த ஆறுமாதகாலமாக முடுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்த, செந்தில்வேல் என்பர் ஹார்மோனிஸ்ட்டாக இருக்கிறார். அவர் முந்தாநாள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னை பார்க்க வந்திருந்தார். அவர், நம் சங்கீத வாத்தியாரிடம் குருமலையிடம் படித்தாராம். வாத்தியாரை பற்றி நிரம்பக் கேட்டார்.

அன்புடன்
கு. அ

************

சென்னை
17.9.45

அன்புள்ள ராஜநாராயணனுக்கு,

உன் 15.9.45 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. கவியும் கிடைத்தது; அது அச்சாகியும் விட்டது. இதற்குள் உனக்குப் பத்திரிக்கை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கம்பனுடைய சாகித்யமும் கிடைத்தது. இந்த வருஷமும் நவராத்திரி இதழ் வெளியாகும். அதற்கு எந்த சாகித்யம் சுரப்படுத்தப்பட வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்து எழுதியனுப்புகிறேன்.

சுவாமியவர்களைப் பற்றிய விபரம் அறிந்தேன். அவர்களுக்கு என் வணக்கம் இசைத்தட்டுப் பதிவு விஷயமாக நீ துரைக்குக் கடிதம் எழுதலாம். அவரால் இது விஷயத்துக்கு என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி இப்போது என்னால் எப்படிக் கூறமுடியும்? முயற்சிக்கவும். அதோடு ஸ்ரீ சுவாமியவர்களை ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையவர்கள் சிபாரிசில் காரியத்துக்கு முயற்சிக்கும்படி ஏன் சொல்லக்கூடாது? காரியம் வெற்றியாகலாமே!

நீ புத்தகங்களை அனுப்பிவைப்பது பற்றி மகிழ்ச்சி உனக்கு வெகுசீக்கிரத்தில் ஸ்ரீ டி.கே.சி குறிப்புகளோடு வெளியிடப்பட்டுள்ள தமிழிசைப் பாட்டுக்களையும், “மகாகவி பாரதியா”ரையும் அனுப்பி வைக்கிறேன்.

இனிமேல், நீ கடிதங்கள் எழுதும் போது முன்போல மன ஆறுதலுக்கேற்றவாறு எழுதியனுப்பு. என்னுடைய ‘நச்சுப் பிச்சுகளிலும், மண்டையை உடைக்கும் தொல்லைகளிலும் கடிதங்களாவது இன்பானுபவமாக இருக்கட்டும்.

நலம்.
அன்புடன்
கு. அ

*******

சென்னை
25.9.45

நண்பன் ராஜநாராயணணுக்கு,

உனக்கு இன்று காலையில்தான் ஒரு கார்டு எழுதியிருந்தேன். இன்று மாலையில் உன்னுடைய கவர் கிடைத்தது. ஆகவே, உனக்கு இன்றே மற்றொரு கடிதம் எழுத நேரிட்டது. உன் கடிதத்தில் கண்ட விபரங்கள் யாவும் எனக்கும்கூட ஆச்சரியம் அளிக்கவில்லைதான்! எல்லாம் தெரிந்த சமாச்சாரங்கள்தானே? இருக்கட்டும். இந்த ‘லடாய்’களையெல்லாம் நீயோ அண்ணாச்சியோ யாருக்கும் தெரியப்படுத்தவேண்டாம். எங்கள் வீட்டாரிடமோ நடராஜன் போன்றவர்களிடமோ இதைப்பற்றி ஒன்றுமே சொல்லியிருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்; இனியும் சொல்லவேண்டாம். எல்லோருக்கும் சொல்லுவதற்கு இது என்ன கல்யாண சமாச்சாரமா?

இந்தச் சாதாரண காரியத்திற்காக அண்ணாச்சி, உன்னை ‘மெனக்கிட்டு’ கோவில்பட்டிக்கு வரவழைத்து வம்பு.

துன்பங்களைச் சகிக்க மனதில் பலமிருந்தாலும் உடல் பொறுக்கமாட்டேன் என்கிறது. இப்போது உடல் மிகவும் பலவீனமாக இருப்பதால் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொல்லுகிறார். டாக்டர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என் உடல்நிலை எனக்குத் தெரியாதா? ஒன்று போய் ஒன்றாக பல நோய்கள் வந்து தொல்லைப்படுத்துகின்றன. மொத்தத்தில் உடலே ‘ரிப்பே’ராகிவிட்டது. அதனால் நான் ஊருக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். சில நாட்கள் அங்கிருந்துவிட்டு வரவேண்டும். அநேகமாக ஒரு வாரத்துக்குள்ளாகவோ அடுத்தோ நான் வந்தாலும் வரலாம்.

உடல் எக்கேடு கெட்டலும் வேலைக்குப் பஞ்சமில்லை! தினம்தோறும் வேண்டுமானாலும் செய்யலாம்; செய்துகொண்டுதானே இருக்கிறேன்! இதோ, இரவு 9லி மணிக்குப் பிறகு ஒரு கட்டுப் பேப்பரைப்படித்துவிட்டு எழுதப் போகிறேன். ஊருக்கு வராமல் இங்கு லீவு எடுத்துக்கொண்டு சும்மா இருந்தாலும் லீவு எடுத்ததன் பலன் கிடைக்காது.

வேறு விசேஷம் ஒன்றுமில்லை. சங்கடங்களைக்கொண்டு வருத்தப்படக்கூடாது.

உடனே பதில் எழுது.

துரையிடமிருந்து வந்த கடிதத்துக்கு அண்ணாச்சி ஏதாவது பதில் எழுதினாராமா? எழுதாமலிருப்பதே நலம்.

அன்புடன்
கு. அ

**********

சென்னை
28.11.45, இரவு 10.40

அன்புமிக்க ராஜநாராயணணுக்கு,

உனக்கு என்னுடைய முந்திய கடிதங்களெல்லாம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு நீ பதிலே போடவில்லை. நீ மட்டுமல்லாமல் அண்ணாச்சி, நடராஜன் முதலியவர்களும் மௌனம் சாதிக்கிறார்கள். ஏன்?

சென்னையில் மழை நின்று சென்ற பத்து தினங்களாக பனிபெய்து மக்களை ஆட்டி அலைக்கிறது. சாயங்காலம் 4லீ மணிக்கே குளிர் ‘வெட வெட’ என்று ஆட்டும் கொடுமைக்கு என்ன செய்வது? இப்போது யார் எதைப்பற்றிப் பேசினாலும் ‘தொணதொண’ என்றே இருக்கிறது. காரணம், பெரும்பாலானவர்களுக்குக் குளிரினால் ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. எனக்கும் சென்ற இரண்டு தினங்களாக ஜலதோஷம்தான். காது ‘கிண்’ என்று இருக்கிறது. மூக்கு, தொண்டை முதலியவற்றில் எறும்பு ஊறுவதைப்போல அரிப்பு!

எதைப் போர்த்தினாலும் குளிர்வந்து நம்மைப் போர்த்த தவறுவதில்லை. மேல்நாட்டில்போல, நம் வீட்டிலும் கணப்பு வைத்துக்கொண்டால் சௌகரியமாக இருக்கும். கணப்பு இல்லாதுபோனாலும் என் ரூமில் ஒரு அடுப்பு கூட இல்லையே! விளக்கத்தைத் தொட்டால் சுகமாக இருக்குமே என்று தோன்றுகிறது. சுகமாக இருந்தாலும் இருக்கும். இந்தத் ‘தீயைத் தொடுவதில் நந்தலாலனைத் தீண்டும்’ இன்பம் கூடத் தோன்றவும் செய்யலாம்! சரி.

நான் உன்னிடம் நேரிலும் முன் கடிதத்திலும் தெரிவித்தபடி, இந்த டிசம்பர் முதல் தேதியன்று நான் மாம்பலத்துக்குப் போகவில்லை. காரணம், மாம்பலம் அறையில் தற்காலிகமாக சில அசௌகரியங்கள் இருக்கின்றன. அதனால், என்னை ஜனவரி மாதம் முதல் தேதி வரச் சொல்லுகிறார்கள். ஆகவே, நானும் இன்னும் கோடம்பாக்கத்திலேயே ஒரு மாதகாலம் ‘இருப்பது’ என்று முடிவு கட்டிவிட்டேன். இன்று மாலையில் கூட ஸ்ரீ காசிவிஸ்வநாதனைப் பார்த்தேன். அவர், சமீபத்தில் ‘சக்தி’ பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்திருக்கிறார். என்னுடைய கதை கட்டுரைகளையோ, புத்தகங்களையோ இன்னும் சில நாட்களில் ‘சக்தி’ க்குக் கொடுக்க வேண்டுமென்றால் இந்த நண்பரின் உதவி நிச்சயமாக இருக்கும். ரகுநாதனுக்கு ‘தினமணி’யில் சமீபத்தில்தான் வேலை உறுதியானது. சௌக்கியமாக இருக்கிறார்.

தி, “கிராமபோன் கம்பெனி லிமிடெட், தபால்பெட்டி நீர் 705, கதீட்ரல் போஸ்டு, சென்னை” என்ற விலாசத்துக்கு, பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக, நிபந்தனைப் பாரங்களையும் மனுபாரத்தையும் அனுப்பச்சொல்லி எழுது. கூட முக்காலணா ஸ்டாம்பும் வைத்தனுப்பு. பாரங்கள் உன் கைக்குக் கிடைத்ததும் மனு பாரத்தைப் பூர்த்தி பண்ணு. ஆங்கிலத்திலும் தமிழிலும் பூர்த்தி பண்ணவேண்டும். உன் விலாசத்தைத் தெளிவாக அதில் உரிய இடத்தில் எழுதி இத்தனை பாட்டு அனுப்புகிறேன் என்று உரிய இடத்தில் (ஒன்று அல்லது இரண்டு என்று) எழுது. யாராவது ஒரு இங்கிலீஷ் தெரிந்தவரை வைத்துப்பூர்த்தி பண்ணு.

அப்புறம் உன்னுடைய “பண்ணினேன் பூசைகள்” என்ற பாட்டை தெளிவாக ஸ்வரக் குறிப்புகளோடு ஒரு தனிக் காகிதத்தில் எழுது. அதில் உன் பேர், விலாசம் ஒன்றும் இருக்கக்கூடாது. மனு பாரத்தில் உள்ள நம்பரை மட்டும், பாட்டு எழுதப்படும் காகிதத்தில் குறிப்பிடவேண்டும். மனு பாரத்தில் நம்பர் குத்தப்பட்டுதான் இருக்கும். இந்தக் காரியங்களை சரிவரச் செய்து, மேற்படி விலாசத்துக்கே மனு பாரத்தையும், பாட்டையும் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிவிடு. உன் பாட்டுக்கு முதல்பரிசு கிடைத்தால் ரூ 125 கிடைக்கும். 2ம் பரிசு 75 மூன்றாம் பரிசு 50 பரிசு ஒரு பக்கம் இருக்க, கிராமபோன் பிளேட்டிலாவது உன்பாட்டு ஒலி செய்யலாம் அல்லவா? உன் சொந்த சாகித்யத்தைத் தவிர்த்து வேறு யாருடைய சாகித்யத்தையும் உன் கைப்பட எழுதி அனுப்பக்கூடாது. ஸ்வரப்படுத்தியவர் ஊர் பேரும் குறிப்பிடக்கூடாது. நண்பர் சண்முகசுந்தரத்ரத்துக்கும், விபரங்களடங்கிய கடிதம் ஒன்று உடனே எழுதி, ‘கங்கை சடை தவழ’ என்ற பாட்டைப் போட்டிக்கு அனுப்பச்சொல்லு. ஆனால், நீ பாட்டை ஸ்வரக் குறிப்புகளோடு அனுப்பினாலும் அவர்தான் தம் கைப்பட அதை நகல் எடுத்து அனுப்ப வேண்டும். பாட்டு டிசம்பர் மாத முடிவுக்குள் போட்டி நடத்துபவர் கையில் கிடைத்துவிடவேண்டும். அதனால் ஏதொன்றுக்கு டிசம்பர் 15ம் தேதிக்குள்ளேயே எல்லாக் காரியத்தையும் முடித்துவிடு.

இந்தக் கடிதம் கண்டவுடனே, என்னுடைய ‘வருவதற்கு என்ன’, ‘போய் வருவேன்’ என்ற சாகித்யங்களை ஸ்வரக்குறிப்புகளோடு எழுதி என் வீட்டு விலாசத்துக்கு அனுப்பவும். தாமதம் கூடாது. 7.12.45க்குள் எனக்குக் கிடைக்கவேண்டும்.

இந்த பிரசண்ட விகடனில் என்னால் எழுதப்பட்ட தலையங்கமும், காலச்சக்கரமும் வருகின்றன. ஸ்வாமி கச்சேரி பற்றி நீ எழுதியிருப்பதும் வருகிறது. ‘படர்ந்தொரிப்ரந்து’ பாட்டை இன்னும் ஸ்வரப்படுத்தவில்லையா?

நீ ஏதாவது ஏன் எழுதக்கூடாது? உன்னுடைய ‘நான்’ என்ற பாட்டை பிரசண்ட விகடனுக்கு அனுப்பு. நீ இப்போது என்ன புத்தகம் படிக்கிறாய்? நான் ஹென்றிக் இப்ஸன் எழுதிய நாடகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.. பதில் எழுது. எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லு.

அன்புடன்
கு. அ

Pin It