மெல்லிய தூறல் விழுந்த நாளின் இரவில்

செல்பேசியில் கவிதைகளோடு படபடத்துக் கொண்டிருந்தாய்

மிதந்தேன் வெடித்த எருக்கம் பூவாக

அழைப்பு அடுத்தடுத்து தொடர

மழைபட்ட தகரமாக தடதடத்து

பேசியவைகளைத் திரும்பத் திரும்ப பேசி

கட்டமைத்தோம் நமக்கான மணல்வீட்டை

உரையாடலற்ற பொழுதினில் எழுத ஆரம்பித்தோம் எஸ்.எம்.எஸ்களில்

நீ இட்டுச் சென்ற கோலத்தினுள் அமர்ந்தேன்

மார்கழி மாதப் பரங்கிப் பூவாகவெனும்

காதல் வசனமில்லாவிடினும்

செல்லம் தங்கமெனும் சிணுங்கலுண்டு

அறிந்தே இருவரும் அனுப்பிக் கொண்டிருக்கும் அபத்தங்கள்

தொடர்ந்து கொண்டிருக்கட்டும்

நேர்படக் காணும் வரை.

Pin It