எல்லாரும் உறங்கிப்போன
இரண்டாம் சாமங்களின் இருண்ட பக்கங்களில்
விழித்தெழுந்து உலவத் துவங்குகின்றன
கரப்பான்கள்

காற்றின் அந்தரங்கப் பிரதேசங்களில்
தம் வாழ்வின் ரகசியங்களை
நீண்ட பெரு மீசையால்
துழாவியபடி இருக்கின்றன

அவைகளின் திக்விஜயங்களின்
எதிர்பாராத தருணங்களில்
வெளிப்பட்டு
நம்மைத் திகைக்கச் செய்கின்றன

வெகுநாட்கள் முன்பு
மடித்தடுக்கி வைக்கப்பட்ட பழந்துணிகள்
உதறப்படுகையில்
அவைகள் குதித்தோடும் மறுநாட்களில்
புதிதாகத் துணிகளிடை தோன்றிய
வெள்ளை உருண்டைகளின்
மணத்தில் மயங்கி சில காலம்
அவைகளையே சுற்றிச் சுற்றி வந்து
பிடிபடுகின்றன
பின் பரஸ்பரம் இரண்டும்
மற்றவைகளைச் சகித்துக் கொண்டு
வாழப் பழகி விடுகின்றன

எச்சில் துப்பும்
பீங்கான் பேழைகளின் உட்புறத்திலோ
வழுக்கும் தரைகளின் அடியிலிலோ
அவைகளின் விஸ்தரிக்கப்பட்ட வாசஸ்தலங்கள்
நம் கண்களுக்குக் கட்புலனாவதே இல்லை

மேலும் கரப்பான்களுக்கு
அழிவில்லை
அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுபவைகள்
வெளியூர் பயணங்களில் இருக்கும்
அம்மாக்களின் கனவுகளில்
பாத்திரங்களின் இடுக்குகள் வழியே
மீசையை மட்டும் நீட்டி ஆட்டியபடி
காலத்திற்கும் காட்சி தந்த வண்ணம் இருக்கின்றன.


சிறகுகள் மறையும் கோட்பாடுகள்

யாமம் கூடிய சிறுபொழுதுகளிலும்
முன்பனி மூடிய பெரும்பொழுதுகளிலும்
ஆடித் திரியும் பறவைகளின் மேல்
கண்வைத்துக் கொண்டேயிருக்கிறது காலம்

நூலிழை பிறழாமல் குறி தேடிச் சென்று
சிதைத்துச் சிதறடிக்கும்
வன்மம் கொண்ட தோட்டாக்கள் அதனிடம்..

இளவெயிற் கதிர்களில் மிதக்கையிலோ
இணையுடன் கூடிச் சுகிக்கையிலோ
நிழலினிற் பதுங்கிக் கிடக்கையிலோ
நித்திரைக் கனவினிற் தன்னை மறக்கையிலோ

நினைவு பிறழ்ந்து தோட்டாவைத் தான்
பாய்சிடக் கூடுமென்று மிரட்டி
பேச்சுவார்த்தைக் கழைக்கிறது
பறவைகளை அது ..

தங்க இருக்கைகளைக் காட்டி
கழற்றித் தந்துவிடு இறகுகளையெனக்
கேட்கிறது ..

எதிர்த்துப் பேசும் பறவைகள்
வாயிலேயே சுடப்படுகின்றன

மீதமுள்ள பறவைகள்
இறகுகளைக் கழற்றித் தந்து விட்டு
இருக்கைகள் தந்த காலத்திற்கு
நன்றி சொல்லிக் கொண்டே
அமர்ந்தபடி
காலத்திற்கும் மென்று கொண்டேயிருக்கின்றன
இறந்த பறவைகளின் சவங்களையும்
இணங்க மறுத்த மடத்தனங்களையும்

- ரெஜோவாசன்

Pin It