ஷெல் (Shell) பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதன் தலமையகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க்கம்பெனிகளில் ஒன்று. 2008ஆம் ஆண்டில் மட்டும் இதன் வருமானம் 21,475 லட்சம் அமெரிக்க டாலர் என்று இக்கம்பெனியின் கணக்கு சொல்கின்றது (சுமாராக 10,300 கோடி ரூபாய்). எண்ணெய்க்கிணறு தோண்டுவது, எண்ணெய் எடுப்பது, இயற்கை எரிவாயு தோண்டுவது, இவற்றை விற்பது, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை என இதன் தொழில் பெட்ரோலியம் சார்ந்துள்ள பரந்த தொழில். இந்தியாவில் ஷெல், எஸ்ஓ போன்ற தனியார் கம்பெனிகள் எண்ணெய்க்கம்பெனிகள் இருந்ததும் பின் எண்ணெய்க்கம்பெனிகள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் பழைய வரலாறு. நரசிம்மராவ், ம.சி, ப.சி, மான்டேக் சிங், காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி கூடிப்பேசி பொதுத்துறையாகிய மக்கள்சொத்தை மீண்டும் தனியார் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்பது புதிய வரலாறு.

(ராயல் டச்சு) ஷெல் கம்பெனி ஆப்பிரிக்கக் கண்டத்தின் நைஜீரிய நாட்டில் நைஜர் டெல்டாப்பகுதியில் 1956ஆம் ஆண்டு எண்ணெய் தோண்டி எடுத்து, 1958இல் விற்பனையைத் தொடங்கியது. அப்போதும் அதன் பின்னும் தொடர்ந்து இருந்த அரசுகளின் துணையுடன்தான் தனது கொள்ளை லாப வேட்டையை தொடர்ந்தது. ஷெல் கம்பெனி, பெட்ரோலை விற்று சம்பாத்தித்தை விடவும் (சர்வதேச முதலாளிகளின் கல்லாப்பெட்டி பொருளாதார விதிகளின் படி) நைஜா£ய மக்களின் ரத்தத்தை விற்று சம்பாதித்ததுதான் அதிகம் என்பதை வரலாறு கூறுகின்றது.

நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நைஜர் டெல்டாப்பகுதி ஓகோனி (Ogoni) எனப்படுகின்றது. இந்த மக்களும் ஓகோனி என்றே அழைக்கப்படுகின்றனர். ஓகோனி பிரதேசம் இயற்கையிலேயே மிக வளமான பூமியாகும். இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டெல்டாவில் ஆறாயிரம் ச.கி.மீ. பரப்புக்கு சதுப்புநிலக்காடு மட்டும் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு இதுதான். மேலும், நைஜீரியாவின் (எஞ்சியுள்ள) மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றும் ஓகோனியில்தான் உள்ளது. ஓகோனி மக்கள் பாரம்பரியமாகவே இந்தக்காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். காடும் காடு சார்ந்த தொழில்களுமாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. சதுப்புநிலக்காடுகள் உயிரோடு இருப்பது மிக முக்கியம்- மண்வளம், தாவரவளம், மீன் பெருக்கம், காட்டு மரங்கள், வீடு கட்டுவதற்கான மரம், விறகு, மருந்துப்பொருட்கள், இயற்கைச்சாயம், பல்வேறு வனவிலங்குகள் ( யானை, வெண்மார்புக்குரங்கு, ஆற்று நீர்யானை, முதலை போன்ற அழியும் நிலையில் உள்ள உயிர்கள் உட்பட) பல்வேறு இயற்கை வளங்களின் நீடிப்புக்கும் உயிர்ப்புக்கும் நைஜர் சதுப்புநிலக்காடுகள் தொட்டிலாக இருந்தன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, "உலகின் தலையாய பத்து ஈரநிலங்களின் வா¢சையிலும், கடல்சார் சுற்றுச்சூழல் மையங்களின் வா¢சையிலும்" நைஜர் டெல்டா இருந்தது.

நைஜர் பகுதியின் ஓகோனி மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றி, (மேற்கு ஆப்பிரிக்காவின்) மோசமான ஏழைநாடுகளின் மக்களின் வாழ்க்கையும் இந்த டெல்டாவை நம்பியே இருந்தது. நைஜர் டெல்டாவிலிருந்து இனப்பெருக்கத்துக்கான இடப்பெயர்ச்சி செய்யும் மீன்கள் இம்மக்களுக்கு வாழ்க்கை தருகின்றன. சுருக்கமாக, டெல்டாவின் 2.7 கோடி மக்களில் 75 விழுக்காடு மக்களின் விவசாயம், மீன்பிடித்தொழில், அவை சார்ந்த துணைத்தொழில்களை, வாழ்க்கையை இந்த டெல்டாதான் தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி நைஜர் டெல்டாதான் என்பதை ஷெல் போன்ற சர்வதேச முதலாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வரை ஓகோனி மக்களின் வாழ்க்கை ஒருகாலத்தில் பிரச்னை இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி என்ற பெருமையோடு இப்போதும் நைஜீரியா ஜொலிக்கின்றது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (OPEC) ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாகவும் நைஜீரியா இருந்தது. எனவே நைஜீரியாவின் அரசியல்-பொருளாதாரக் கூறுகளைத் தீர்மானித்ததில் பெட்ரோல் கண்டுபிடிப்பு முக்கிய சக்தியாக விளங்கியதில் வியப்பில்லை. நாட்டின் அந்நியச்செலாவணியில் 90 விழுக்காடும், அரசு வருமானத்தில் 80 விழுக்காடும் பெட்ரோலிய ஏற்றுமதியால் கிடைத்தது. எனவே, நைஜீரியாவின் ஒவ்வொரு குடும்பமும் அடுக்கு மாளிகையில் வசிக்கின்றது, தெருக்களில் சொகுசு கார்களை நிறுத்த இடம் கிடைக்காது, கடைவீதிகள், ஓட்டல்கள் என எப்போதும் மக்கள் காசை 'பெட்ரோலாக' செலவு செய்வார்கள், ஒரே பொழுதுபோக்குகள், கச்சோ¢, குடி, கூத்தியா, கும்மாளம்தான்...என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கணும்...உலகின் மிக மோசமான ஏழைநாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. கடல்கடந்து வந்து நைஜீரியாவின் பெட்ரோலியவளத்தை சுரண்டி சாப்பிடும் ஷெல் போன்ற எண்ணெய்க் கம்பெனி முதலாளிகள்தான் டாலர்களில் படுத்துப் புரண்டுகொண்டு மேற்படி குடி, கும்மாள, கூத்தியா கேளிக்கைகளில் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக்கொள்ளையில் முதல் இடம் ஷெல்லுக்கு. ஷெல்தான் நைஜீரிய எண்ணெயில் பாதியை உறிஞ்சி விற்கின்றது. மோபில், செவ்ரான், எல்•ப், ஆகிப், டெக்சாசோ...என மேலும் பல கம்பெனிகள் உண்டு.

ஷெல் கம்பெனி கடந்த 2008ஆம் வருடத்தில், ஒரு நொடிக்கு 700 பவுண்டு (சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) சம்பாதித்ததாக அதன் கணக்கே சொல்கின்றது. அதே நேரத்தில் எழுபது விழுக்காடு நைஜீரிய மக்களின் ஒருநாள் வருமானம் வெறும் நூறு ரூபாய்க்கு சமானம்! இதையே நாம் இப்படியும் சொல்லலாம்: நைஜீரிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி விற்றால் ஒரு நொடிக்கு 700 பவுண்டு சம்பாதிக்கலாம். 1997 கணக்குப்படி மட்டும் ஒருநாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் நைஜீரியாவின் மடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விற்று சம்பாதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய மக்களுக்கு செய்த 'நன்மைகள்' வருமாறு: எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணா¢ப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, எனவே மக்களின் வாழ்க்கை சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப்பெருக்கம், கூடவே அநாதைக்குழந்தைகள் அதிகா¢ப்பு, அரசுநிர்வாக சீரழிவு, லஞ்சலாவண்யம்...என நீள்கின்றது.

எண்ணெய்க் கம்பெனிகளின் இந்த சூறையாடல் ஏதோ ஒருநாள் திடீர் என தொடங்கியது அல்ல; உலகப்போக்கிரியான அமெரிக்கா, அதன் ஏவல் நாயான இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என கடல்கடந்த கொள்ளையர்களின் ஏவல் நாயாக தொடர்ந்து இருந்த நைஜீரிய அரசுகள், வெறும் பொம்மை அரசுகளாக மட்டுமே இருந்ததும், அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாட்டை - "கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி" - அப்படியே பின்பற்றியதும்தான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான "ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப்புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசுபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் போலிசையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு" போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினார்கள்.

ஷெல் உள்ளிட்ட அந்நிய எண்ணெய்க் கம்பெனிகளின் புண்ணியத்தில் நைஜர் டெல்டாவின் மக்களும் இயற்கை வளங்களும் நாசமாகிக்கொண்டு வந்ததை பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த பல பத்தாண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார்கள். பல புத்தகங்களாகவும் அறிக்கைகளாகவும் இணையதளங்களில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, அவற்றில் ஒரு சில மட்டும் கீழே:

1) எண்ணெய் தோண்டி எடுக்கும்போது நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை எரிவாயுவை அப்படியே 24 மணிநேரமும் எரிப்பது. இதனால் 24 மணி நேரமும் அப்பகுதி தாங்கமுடியாத வெப்பத்துடன் தகித்தால் மனிதர்கள் எவ்வாறு வாழ்வது? கூடவே இந்த வாயு, சூறாவளி போன்ற பெரும்சத்தத்துடன் கெட்டநாற்றத்தையும் வெளிவிடுகின்றது. இப்போதுள்ள தொழினுட்பத்தின்படி இந்த வாயுவை வெளியேற்றாமல் வேறு வகையில் பயன்படுத்தலாம்; சேமித்து வேறு பல தொழில்களுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்; இல்லையேல் மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும், இந்த முறையை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஆகும் செலவை விடவும் இப்படி எரிப்பதால் அரசுக்கு தரப்படும் அபராதத்தொகை குறைவு என்பதால் கம்பெனிகள் எரிக்கின்றன. விவேக் ஒரு படத்தில் சொல்வதுபோல் "ஏண்டா, அட்வான்சா அபராதம் கட்டிட்டு ரேப் பண்றீங்களாடா?". 2008 டிசம்பர் வரை இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எர்¢க்கும் இடங்கள் இருந்ததாக தகவல் உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. 24 மணிநேரமும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றால் தட்பவெப்பநிலை நாசமாகி விட்டது. குறைந்த பட்சம் மனிதன் அனுபவிக்கின்ற இயற்கையான இருள் சூழ்ந்த இரவு என்ற உரிமையைக்கூட நைஜா£ய மக்கள் இழந்துவிட்டார்கள்.

2) அமிலமழைப்பொழிவால் குடிநீர் கெட்டுவிட்டது; விவசாயம் நாசமாகி விட்டது. துத்தநாகத்தால் ஆன வீட்டுக்கூரைகள் 7 முதல் 10 வருடங்கள் உழைக்கும், ஆனால் இப்போது அமிலமழையால் இரண்டுவருடங்களில் நாசமாகிவிடுகின்றன.

3) எண்ணெய்க்குழாய்க்கசிவுதான் நைஜர் டெல்டாவின் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணம். மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்னால், தெருக்கள் நடுவே, வயல்களின் நடுவே என்று திரும்பிய திசை தோறும் எண்ணெய்க்குழாய்களே என்றால் மனிதன் எப்படி வாழ்வது? பல குழாய்கள் நாற்பது வருடங்களுக்கும் மேற்பட்டவை. இதனால் எண்ணெய்க்கசிவு மிக சாதாரணமான ஒன்று... உதாரணமாக 1998 ஜூன் மாதம் ஊட்டிகுவே1 பகுதியில் ஷெல்லின் 16 அங்குலக்குழாயில் இருந்து மாதக்கணக்கில் கசிந்த கச்சாஎண்ணெய் மட்டும் எட்டு லட்சம் பேரல்கள். அதே 1998 அக்டோபரில் ஜெஸ்சி கிராமத்தின் ஊடாக ஓடும் குழாய் வெடித்ததில் எழுநூறு பேருக்கும் அதிகமானோர், பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், செத்து மடிந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இதுபோல் நைஜர் டெல்டா எங்கும் கசிந்து ஓடி நாசம் செய்ததாக தகவல் கூறுகின்றது.

நீண்டகால பாதிப்புக்கள்:

1) மக்கள் உடல்நலம் பாதிப்பு: சுவாசக்கோளாறு, இருமலில் ரத்தம், தோல்வியாது, கட்டிகள், வயிற்றுப்பிரச்னை, புற்றுநோய்கள், சத்தற்ற உணவு...

2) உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு; ஆப்பிரிக்கக்கண்டத்தின் மிகப்பெரியது; இயற்கை வளங்களும், ஏராளமான வன, நீர்வாழ் உயிரினங்களும் நிரம்பி வழிந்த பூமி என்ற பெருமைக்கு உரிய நைஜர் டெல்டா. எண்ணெய்க்கம்பெனிகளின் கட்டுமானம், குழாய் பதிப்பு, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கான குழி தோண்டுவது என காசு மட்டுமே குறியாக சர்வதேச முதலாளிகள் செய்த அனைத்து விதமான நாசவேலைகளால் கிடைத்தற்கு அரிய இயற்கைவளங்களை இழந்து நாசமானது நைஜர் டெல்டா.

சமூக, பொருளாதார பாதிப்புக்கள்:

எண்ணெய்க் கம்பெனிகளின் தொழில்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அப்பகுதியின் இயற்கை வளங்களை நம்பியும் சார்ந்தும்தான் அப்பகுதி மக்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். எண்ணெய்க் கம்பெனிகளின் நுழைவுக்குப்பின்...

1) நில இழப்பும் அடிப்படை ஆதாரவள இழப்பும்:

தமது கூட்டாளிகளான சர்வதேச எண்ணெய் முதலாளிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை நைஜீரிய அரசே இயற்றியது: "மக்கள் நலன் கருதி" எந்த ஒரு நிலத்தையும், கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கைப்பற்றி எண்ணெய் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம். அப்பட்டமான அரசு பயங்கரவாதம்! இதனால் வாழ்வின் அடிப்படை ஆதாரமான நிலத்தை டெல்டா மக்கள் இழந்தார்கள். எண்ணெய்க்கழிவு, கசிவால் நீர்நிலைகள் நாசமானதால் மீன்கள் அழிப்பு, எனவே உணவுத்தட்டுப்பாடு; காடுகள் அழிப்பால் வீடு கட்டத்தேவையான மரம், விறகு ஆகியனவற்றிலும் இடி விழுந்தது.

2) பாரம்பரிய வாழ்க்கை அழிப்பும் வாங்கும் சக்தி இழப்பும்:

பாரம்பரியமாக காடு, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு, முக்கியமாக உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த மக்கள், எண்ணெய்க்கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் காடுகளை இழந்ததால் 'வேலை' தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். மாத வருவாய், கடைக்குச்சென்று உணவு வாங்குதல் போன்ற வார்த்தைகளையே கேட்டறியாத டெல்டா மக்கள், நிலமும் காடும் பறிபோன பின் தமது நிலத்தில் அமைந்த எண்ணெய்க்கம்பெனிகளில் கூலி வேலைக்கு சென்றார்கள்! கிடைக்கின்ற கூலியால் வாழ்க்கை நடத்த முடியாது. மாத ஊதியம் பெறும் எண்ணெய்க்கம்பெனி ஊழியர்களின் வருமானத்தோடும் தரத்தோடும் ஒப்பிடும்போது பாரம்பரிய ஓகோனி மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது.

3) பெண்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கைச்சுமைகள்:

முன்பே கூறியபடி, இயற்கையோடு இசைந்த பாரம்பரியத் தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்திய டெல்டா மக்களில் பெண்களின் பங்கு முக்கியமானது. விவசாயம், மீன்பிடித்தல், விறகு சேகா¢த்தல், காய், கனி, கிழங்கு உள்ளிட்ட உணவு சேகா¢த்தல் ஆகிய வேலைகள் மூலம் குடும்பப்பொருளாதாரத்தின் முக்கிய பங்கை பெண்கள் நிறைவு செய்தனர்; இதன் மூலம் இயற்கையாகவே டெல்டாப்பகுதியின் காடு, நீர்நிலைகளின் பராமா¢ப்பு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெண்களே செய்தார்கள். ஆனால் காடு, நிலம் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்புக்கும் சீர்கேட்டுக்கும் உள்ளானதால் பெண்களின் தொழில் கேள்விக்குறியானது; இதனால் குழந்தைகளின் கல்வியும் பராமா¢ப்பும் கூடவே கேள்விக்குறியானது.ஸ்

4) பாலியல் தொழிலும் அநாதைக் குழந்தைகளும்:

தமது வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணெய்க்கம்பெனித் தொழிலாளர்களே என்பதைச் சொல்ல அவசியம் இல்லை. ஆக எண்ணெய்க்கம்பெனிகளால் ஓகோனிப்பெண்களின் சுயமா¢யாதையையும் பறி போனது. முறை தவறிப் பிறந்த குழந்தைகள் ஏராளமாக அநாதைகளாக தெருவில் விடப்பட்டனர்.

இதன்றி குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. டெல்டாப்பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விடவும் கடுமையான உழைப்பாளிகள். எனவே முன்பு குழந்தை இறப்பு என்பது அநேகமாக அங்கே இருந்தது இல்லை. ஆனால் நீர்நிலைகள் மாசு அடைந்ததால் இந்நீரைக் குடிக்கின்ற கருவுற்ற பெண்களுக்கு நோயுள்ள, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பதும், இறந்தே பிறப்பதும் சாதாரமானது.

மொத்தத்தில் ஓகோனி பாரம்பரிய மக்களின் மண்ணும் வாழ்க்கையும் பறி போனது; சமூகச்சீரழிவு தலைவிரித்து ஆடியது.

நைஜீரிய மக்களின் எதிர்ப்பும் இயக்கங்களும்:

சர்வதேச எண்ணெய்க்கம்பெனிகள், குறிப்பாக ஷெல், தமது வாழ்வை முற்றிலும் நாசமாக்கிவிட்டதை உணர்ந்த ஓகோனி மக்கள் தமக்கான உரிமைப்போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1990ஆம் ஆண்டு மோசோப் இயக்கத்தைத் தொடங்கினார்கள் (Movement for the Survival of the Ogoni People - ஓகோனி மக்கள் உயிர்வாழும் உரிமைக்கான இயக்கம்). 1993ஆம் ஆண்டில் ஓகோனி மக்களில் பாதிப்பேருடைய ஆதரவு இந்த இயக்கத்துக்கு கிடைத்தது. இந்த இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர் கென் சாரோ-விவா (Kennule Beeson Saro-Wiwa). 1941 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தவர். எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பல நூல்களின் ஆசிரியர், குறிப்பாக நைஜீரிய மக்களின் வரலாறு குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் ஓகோனி மக்களின் வாழ்க்கை நாசமானது குறித்தும் நிறையவே நூல்கள் எழுதினார்.

1993 ஜனவா¢யில் மூன்று லட்சம் ஓகோனி மக்களைத் திரட்டிய சாரோ-விவா, "எண்ணெய்க்கம்பெனிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; கடந்த காலத்தில் செய்த நாசங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்; (நைஜர் டெல்டாவில் சம்பாதித்த) வருமானத்தில் ஓகோனி மக்களுக்கான பங்கைத் தர வேண்டும்; மத்தியில் (உள்ள அரசுக்கு மாற்றாக) அரசியல் சுயாட்சி வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் வன்முறையற்ற ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.

ஷெல்லும் நைஜீரிய அரசாங்கமும் கைகோர்த்து இந்த இயக்கத்தை நசுக்கவும் சாரோவை எப்படியாவது சிறையில் தள்ளவும் சதி செய்தனர். ஷெல் கம்பெனியின் வீட்டு வேலையாட்கள் போல் ராணுவமும் போலீசும் கேவலமாக நடந்து கொண்டன. ராணுவத்துக்கு பணமும் வாகன வசதிகளும் ஆயுதங்களும் துப்பாக்கி ரவைகளும் கூட ஷெல் கம்பெனி வாங்கிக்கொடுத்ததாக மிகப்பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன, சாட்சிகளோடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஷெல்லின் எச்சிலிலையைப் பொறுக்கித்தின்ற அரசு ஷெல்லுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டது. மோசோப் இயக்கம் தொடர்ந்து வலுப்பெறவே, இந்த கிரிமினல் கூட்டணி, மோசோப்புக்கு எதிரான பொய்ப்பிரசாரத்திலும் இறங்கியது. சாரோவும் மோசோப்பும் ஆட்கடத்திகள், விமானக்கடத்திகள், வன்முறையாளர்கள் என்று பிரச்சாரம் செய்தது. எதுவும் எடுபடாததால் சாரோ உள்ளிட்ட 'ஒன்பது ஓகோனியர்களை' (Ogoni Nine) (கென் சாரோ-விவா, இளைஞர் தலைவர் ஜான் பூனன், டாக்டர் பாரினெம் கியோபெல், சாட்டர்டே டூபீ, நோர்டு எவோ, டேனியல் போக்கூ, பால் லீவரா, •பெலிக்ஸ் நுவேட், பாரிபோர் பேரா) படுகொலை செய்ய ஷெல்+அரசு கூட்டணி சதித்திட்டம் தீட்டியது.

1993இன் தொடக்கத்தில், ஓகோனி வழியாக, அதாவது மக்கள் குடியிருப்பு, வயல்கள் வழியாக, ஒரு எண்ணெய்க்குழாயைக் கொண்டு செல்லும் வேலையை நைஜீரிய ராணுவத்தின் துணையோடு ஷெல் செய்தது. காராலூலு கோக்பாரா என்ற பெண்மணியின் வயலில் விளைந்திருந்த தானியங்களை புல்டோசர் கொண்டு அழித்தபோது அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தார். உடனடியாக ராணுவம் சுட்டதில் அவரது ஒரு கை பலத்த சேதமானது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

1994இல் சாரோவின் சகோதரான ஓவன்ஸ் விவா மீது பொய்க்குற்றம் சுமத்தி பல முறை அவரை சிறையில் தள்ளி, அடித்து உதைத்தனர். மைக்கேல் வைசர் மீது அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டதாக 'குற்றம்'சாட்டி சிறையில் தள்ளினர்; அவரது மகளை வன்புணர்வு செய்தனர். பல பொய்க்குற்றங்களை ஒத்துக் கொள்ளுமாறு அவரை சித்ரவதை செய்தனர். அவரது மகன் அவருக்கு உணவு கொண்டுவந்தபோது அவரையும் அடித்து உதைத்தனர்.

1994இல் கென் சாரோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் அதே கூட்டத்தில் நான்கு ஓகோனிய தலைவர்களை ஷெல்+ராணுவக்கூட்டணி கொன்றது. வேடிக்கையாக, இவர்கள் சாவுக்கு சாரோதான் காரணம் என ராணுவ கவர்னர் அறிவித்து, சாரோவையும் பிறரையும் சிறையில் தள்ளினார். இதையே சாக்காக வைதுக்கொண்டு ஓகோனியில் 60 நகரங்களில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி மோசோப் உடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தி பல நூறு பேரை சித்ரவதை செய்தது.

மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்தது. இந்த மூன்று பேரும் எச்சக்கலை நாய்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமது தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூட ஒன்பது பேருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, அத்தனை அவசரம் ஷெல்+ராணுவக்கூட்டணிக்கு. வழக்கு விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஷெல் பின்னால் இருந்து இயக்கியது. சாரோவையும் மோசோப்பையும் ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று அரசு தனது எஜமானன் ஆன ஷெல்லுக்கு உறுதி அளித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு முன்பாகவே, ஷெல் தனது தலைமை அலுவலகத்துக்கு இவ்வாறு உறுதி அளித்திருந்தது: "சாரோ தண்டிக்கப்படுவார், உயிருடன் திரும்பமாட்டார்". சாட்சிகளிடமே கூட நேரடியாக ஷெல் இப்படி சவால் விடுத்திருந்ததாக சாட்சிகள் கூறினார்கள். உச்சகட்டமாக, அன்றைய நைஜீரிய ராணுவ சர்வாதிகாரி சானி அபாகாவை ஷெல் அதிகாரிகள் நேரே சந்தித்து விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என கட்டளை இட்டிருந்தார்கள். வெளிநாட்டு வழக்கறிஞர் வாதாடுவதற்கான விசேச சட்டத்தின் கீழ் ஷெல்லின் வழக்கறிஞரே கடல்கடந்து வந்து ஷெல்லுக்காக வாதாடினார் (எல்லாமே ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை என்பதை சொல்ல வேண்டியதில்லை). ஷெல்லின் நைஜீரிய மானேஜிங் டைரக்டர் பிரியன் ஆண்டர்சன், சாரோவின் சகோதரர் ஓவன்ஸ் விவாவிடம், "ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை உங்கள் சகோதரர் நிறுத்தினால் அவரை விடுதலை செய்ய எங்களால் முடியும்" என்று பேரம் பேசினார். விசாரணையில் சாரோவுக்கு எதிராக சாட்சியம் சொன்ன இரண்டு பேர், "ஷெல் வழக்கறிஞர் முன்னால் தங்களுக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும், ஷெல் கம்பெனியில் வேலை தரப்படும் என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டதாகவும், இதனால் சாரோவுக்கு எதிராக தாங்கள் சாட்சியம் அளித்ததாகவும்" பின்னர் ஒப்புக்கொண்டனர்.

விசாரணையின்போது கென் சாரோ-விவா உறுதிபடக் கூறினார்: "இறுதித்தீர்ப்பு நாள் வந்தே தீரும்; ஓகோனி மக்களுக்கு எதிராக ஷெல் செய்த கொலைபாதகங்களுக்கு ஷெல் பதில் சொல்லும் நாள் வந்தே தீரும்; ஷெல் தண்டிக்கப்படும்." இறுதியில் 1995 நவம்பர் 10 அன்று 'ஓகோனியர் ஒன்பது' பேரும் தூக்கில் போடப்பட்டனர். பணம் பாதாளம் மட்டும் பாயும், கார்ப்பொரேட் பணம் தூக்குமேடை வரையும் பாயும். சாரோவின் உடலை அமிலம் ஊற்றி எரித்த ராணுவம், எஞ்சிய உடலை அடையாளம் தெரியாத இடத்தில் வீசி எறிந்தது.

இதற்கு சா¢யாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷெல் நானூறு கோடி டாலர் மதிப்பிலான திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை நைஜீரியாவில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை நைஜீரிய அரசுடன் செய்து கொண்டது.

சிறையில் இருந்தபோது சாரோ விவா இப்படி கூறியிருந்தார்: "எந்தவிதமான சலசலப்பும் இன்றி 'அமைதியாக' தமது எழுத்துப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நேற்கத்திய எழுத்தாளர்களைப் பார்த்து நான் ஆச்சா¢யப்படுகின்றேன். ஒரு எழுத்தாளன் சும்மா ஒரு கதைசொல்லியாக மட்டுமே இருந்துவிட முடியாது; சமூகத்தின் பலஹீனங்கள், கேடுகள், துயரங்களை அப்படியே எக்ஸ்-ரே எடுத்துக்காட்டுவதோடும் ஒரு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுவதில்லை. ஒரு எழுத்தாளன், ஆணோ பெண்ணோ, இன்றைய சமூகத்தை மட்டுமல்ல, நாளைய சமூகத்தையும் சீர்படுத்தும் பணியில் களத்தில் நின்று போராடுபவனாக இருக வேண்டும்".

சாரோ உள்ளிட்ட ஒன்பது ஓகோனியர்களைக் கொன்றதுடன் தனக்கு எதிரான குரல்களை அடக்கிவிட்டதாக ஷெல் நினைத்தது, ஆனால் வரலாறு கார்ப்பொரேட்டுக்களால் மட்டுமே எழுதப்படுவதில்லையே! அடிப்படை உரிமைகளுக்கான மையம் (Centre for Constitutional Rights - CCR), புவிக்கான சர்வதேச உரிமைகள் கழகம் (Earth Rights International-ERI) போன்ற அமைப்புக்களும் மனித உரிமைகளுக்கான பிற அமைப்புக்கள், ஆர்வலர்களும், 1996 தொடங்கி ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் நடத்தி பிரச்சாரம் செய்துவந்தார்கள். கொல்லப்பட்ட சாரோவின் இரண்டு மகன்களும் இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து ஷெல்லின் சதிகள், ஓகோனி மக்களின் வாழ்க்கை பறிப்பு என அனைத்தையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்கள். கடந்த மே மாதம் PEN என்ற சர்வதேச எழுத்தாளர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், சாரோவின் மகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்: "ஷெல் கம்பெனியின் கைரேகைகள் (தந்தையின்) விசாரணை எங்கிலும் படிந்திருந்தன; வழக்கு விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லஞ்சலாவண்யம் உட்பட, ஷெல் கம்பெனி செய்தது என்பது உறுதி."

பதினான்கு ஆண்டுகள் நீண்ட போராட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பிறகு, அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் கம்பெனிக்கு எதிரான, கென் சாரோ உள்ளிட்ட கொல்லப்பட்ட ஒன்பது பேர், மற்றும் பாதிக்கப்பட்ட ஓகோனி மக்கள் அனைவர் சார்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்கு, 2009 மே 26 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை எப்படியாகிலும் நிறுத்திவிட வேண்டும் என ஷெல் வழக்கம் போல தலைகீ£ழாக நின்றது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக, இணையதளங்களின் தகவல்படி, ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம் டாலர் (சுமார் எழுபத்தொரு கோடி ரூபாய்) இழப்பீட்டுதொகை அளிப்பதாக ஷெல் ஒத்துக்கொண்டுள்ளது. ஷெல்+நைஜீரிய ராணுவக் கூட்டணியின் கொலைபாதக தாக்குதல்களால் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்த ஓகோனிய மக்களுக்கு இழப்பீடாக மட்டுமின்றி, சர்வதேச கம்பெனியான ஷெல், நைஜீரியாவின் இயற்கைவளங்களை அழித்து சுடுகாடாக ஆக்கி, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேட்டை விளைவித்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் இந்த அபராதத்தொகையை ஷெல் செலுத்துகின்றது என்பது முக்கியமானதாகும்.

1996இல் இந்த வழக்கைத்தொடுத்த அடிப்படை மனித உரிமைகளுக்கான மையத்தின் வழக்கறிஞர் ஜெனீ க்¡£ன், "தாங்கள் நினைத்தபடியெல்லாம் நாடுகடந்து கொள்ளையடிக்கலாம், கண்ணை மூடிக்கொண்டு சுற்றுச்சூழலை நாசமாக்கலாம், அடிப்படை மனித உரிமைகளை மீறலாம், எவனும் கேட்கமாட்டான் என்ற சர்வதேச பகாசூரக் கம்பெனிகளின் அலட்சிய நடத்தைகளுக்கும் அநியாயங்களுக்கும் இந்த வழக்கும் இழப்பீடும் ஒரு பாடமாக, ஒரு அடியாக அமைந்ததால் இந்த வழக்கு உண்மையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கின்றார். ஷெல் போன்ற எல்லைகடந்த கொள்ளை முதலாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடுத்து வெற்றி பெறவும் முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். அது மந்திரத்தால் நடக்காது, சாமானிய ஓகோனி மக்களும் அறிவுஜீவிகளும் ஒன்றிணைந்து மனம் தளராமல் முன்னெடுத்துச் சென்ற போராட்டம்தான் இறுதி வெற்றியைத் தந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இழப்பீட்டுத்தொகையில் 50 லட்சம் டாலர் தொகையில் கிஷி (kissi) (முன்னேற்றம்) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நைஜர் டெல்டாவில் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இன்றைய தேதியில் ஓகோனியில் தனது எண்ணெய் ஆலைப் பணிகளை ஷெல் நிறுத்தி வைத்துள்ளது; ஆனால் தென்கிழக்கு நைஜீரியாவில் தனது எண்ணெய் எடுக்கும் வேலைகளை பரந்த அளவில் செய்துகொண்டுதான் இருக்கின்றது.

ஷெல் என்ற சர்வதேச பகல்கொள்ளையனுக்கு எதிரான ஓகோனி மக்களின் போராட்டம் சுபமாக முடிந்தது என்ற ¡£தியில் 'இது ஒரு நல்ல கதை' என்று நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர முடியாது.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற சர்வதேசப் பெருநோய்களின் பிறப்பிடமாக அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி போன்ற ஏகாதிபத்திய சாக்கடைகள் உள்ளன. உண்மையில், பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் எங்கெல்லாம் தமது காலனிககளை ஏற்படுத்தி இருந்தனவோ அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஓகோவென நிகழ்ந்து 'அந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆள்கின்றார்கள்! சூப்பர் ஜனநாயகம் பா¡£ர்!' என்பதெல்லாம் கடைந்தெடுத்த டூப் என்பதை வரலாறு தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய, சர்வதேச முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருப்பதை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகள் மட்டும் அல்ல, நரசிம்மராவ் தொடங்கி மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, கடப்பாரை அத்வானிஜி, சா•ப்ட்மேன் வாஜபேயிஜி, காங்கிரஸ், பாரதீய ஜனதா, இவர்களது தொங்குசதைகளும் உள்ளூர் ஏஜெண்டுகளும் ஆன உதிரிக்கட்சிகள் எல்லோரும் சர்வதேச முதலாளிகளின் ஏவலாளிகளே. இவர்களின் கைவிரல் அசைவுக்கு காத்திருந்து சேவகம் செய்யவே போலீஸ், ராணுவம், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புக்கள்.

ஹோண்டா முதலாளி விட்டெறிந்த காசைப் பொறுக்கிக் கொண்டு, ஹோண்டா தொழிலாளிகள் மீது கற்பனை செய்ய இயலாத காட்டேறித்தாக்குதலை நடத்திய ஹா¢யானா மாநில அரசையும் அதன் போலீசையும் எப்படி அழைப்பது? சென்னைப்புறநகா¢ல் பெரும் பரப்பளவில் அமைந்துள்ள ஹ¥ண்டாய் தொழிற்சாலையில் நிரந்தரத்தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும் பகுதி கான்ட்ராக்ட் தொழிலாளர்களே. இவர்கள் இந்தியாவின் புனிதமான சட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சங்கம் தொடங்குவது கூட நிர்வாகத்துக்கு கசக்கின்றது; அவர்களை டிஸ்மிஸ் செய்கின்றது. போலீசை ஏவி அடிக்கின்றது, சிறையில் அடைக்கின்றது.

தமிழ் மக்களின் தானைத்தளபதி, உண்மையில் கொரிய நாட்டு முதலாளியின் படைகளுக்கு லோக்கல் தளபதியாக இருக்கின்றார் என்பது தொடர்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றது. இவையன்றி, பெப்சி, கோககோலா போன்ற ஏகாதிபத்திய பானங்களில் விசமருந்துகள் இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட மைய அரசு இந்தியாவில் அவற்றை அனுமதித்திருக்கின்றது எனில், மைய அரசு யாருடைய ஏவலாளாக இருக்கின்றது?

25 வருடங்களுக்கு முன்பு போபாலில் நடந்த மீதைல் ஐசோ சயனைட் என்ற விசவாயுக்கசிவு விபத்தால் (?) ஆயிரக்கணக்கான மக்கள் செத்து விழுந்தனர். குற்றவாளியானஅமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைட் கம்பெனி மீது பெரிய வழக்கெல்லாம் போட முடியவில்லை. நைஜீரிய மக்களுக்கு இருக்கின்ற மான உணர்ச்சி, சூடு, சொரணை, கோபம் மிகப்பெரிய இந்திய அரசுக்கு இல்லை.

கடந்த ஐந்து வருடங்களாக "இடதுசாரிகள் ஆதரவிலான ஒரு அரசு" என்பதை சகித்துக்கொள்ள முடியாமல், தொண்டையிலேயே இருந்த கசப்பு மருந்து போல, ஆனால் துப்பவும் முடியாமல் எரிச்சலுடன் காலத்தை தள்ளியது காங்கிரஸ். நினைத்தபடியெல்லாம் பொதுத்துறையை விற்பது, அமெரிக்கா இருக்கும் திசையைப் பார்த்து தூங்கும்போதும் கும்பிட்டபடியே இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இடதுசாரிகள் 'சொட்டை, சொள்ளை' என்று 'குறை' சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, அத்வானி, வாஜபேயி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கும்பலுக்கும், இவர்களுக்குள் உறவுப்பாலமாக விளங்கும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அவர்களது எஜமானன் ஆன அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி ஆகிய சர்வதேச கொள்ளையர்களுக்கும் இது மிகப்பெரும் எரிச்சலாகவே இருந்தது. இடதுசாரிகளை ஒழித்துக்கட்டவும், குறைந்த பட்சம் அவர்களது செல்வாக்கையாவது குறைக்கவும், லஞ்சலாவண்யத்தில் சிக்காதவர்கள் என்ற நல்ல பெயரைக் களங்கப்படுத்தவும் என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கும்பல் கூட்டுச் சேர்ந்து செய்து வருகின்றது. கேரளாவில் ஊழல் புகார், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள்+மம்தா பானர்ஜி+காங்கிரஸ்+பா.ஜ.க. கூட்டணி போன்றவை எல்லாம் தற்செயலாக திடீர் என நடப்பவை அல்ல என்று உறுதியாகக் கூற முடியும்.

இப்போது தனிப்பலத்துடன் ஆட்சியில் ஏறியுள்ள காங்கிரஸ், தனது எஜமானுக்கு விசுவாசமாக இட்ட கட்டளைகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஜூலை மாதம் வரும் பட்ஜெட் இதை உறுதிப்படுத்தும். எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் வீதியில் வைத்து ஏலம் விடப்படும்; ஷெல் போன்ற கம்பெனிகளை நிறையப் பார்க்க முடியும்; அடிப்படை ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் மேலும் நசுக்கப்படும். ஹோண்டா, ஹ¥ண்டாய் போல் பல சம்பவங்கள் நிகழலாம்; பல்வேறு கென் சாரோக்களை நாம் இங்கே பலிகொடுக்க நேரலாம். ஷெல் போன்ற கம்பெனிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்; நமக்கோ நைஜீரிய டெல்டா ஓகோனி மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன.

"நைரோபி மட்டுமா இப்படி சீரழிந்து போயிருக்கின்றது? காலனி ஆதிக்கத்தில் இருந்து சமீபத்தில் விடுபட்டிருக்கின்ற எல்லா நாடுகளிலும் உள்ள நகரங்களிலும் இதுதான் நிலைமை. இந்நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை அமெரிக்க நிபுணர்களிடமிருந்து கற்றுகொள்ள முனைகின்றன. இந்த ஒரே காரணத்தால்தான் இந்த நாடுகளால் வறுமையை ஒழித்துக்கட்ட முடிவதில்லை..."

"...திருட்டும் கொள்ளையும் இல்லை என்றால் இன்று அமெரிக்கா எங்கே இருக்கப்போகின்றது? இங்கிலாந்தின் நிலை என்னவாக இருக்கும்? •ப்ரான்ஸ்? ஜெர்மனி? ஜப்பான்? திருட்டும் கொள்ளையும்தான் மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்கியவை..."

"...எங்கள் சொந்த அனுபவத்தின் பயனாகத்தான் இதையெல்லாம் நான் உங்களிடம் சொல்கின்றேன். அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இதைத்தான் செய்தோம். தங்களுடைய செல்வத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ள சிவப்பிந்தியர்கள் முயன்றபோது, அவர்களை நாங்கள் நெருப்பினாலும் துப்பாக்கிகளாலும் ஒழித்துக் கட்டினோம்... ஆப்பிரிக்காவின் பக்கம் திரும்பி பல லட்சம் அடிமைகளை இங்கிருந்து திருடிக்கொண்டு போனோம், உங்கள் மக்களின் ரத்தம்தான் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்றைய உயர்நிலையை அடையக்காரணம்..."

"...நிதி நிறுவனங்களின் கோமான்கள்தான் இன்றைய உலகின் அதிகாரத்தின் குரல்களாக இருக்கின்றார்கள். பணம்தான் உலகை ஆள்கின்றது!"

கூகி வா தியாங்கோ (கென்யா) எழுதிய 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross) (1979) என்னும் நாவலில் சில பாத்திரங்களின் உரையாடல்.

Pin It