நாடகக்கலைஞர் முருகபூபதியால் சேகரிக்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தில் வெளியிடப்பட்டுள்ள பாஸ்கரதாஸின் இந்த டைரிக்குறிப்புகள் பாடலாசிரியராகவும், நாடகக்காரராகவும் பாஸ்கரதாஸ் சிறப்பாக இயங்கிய ஒரு அரை நூற்றாண்டு கால கலை மற்றும் சமூக மனவியல் குறித்த எண்ணற்ற சித்திரங்களை உள்ளடக்கிய ஆவணப்பதிவுகளாக உள் ளன. சிறுசிறு இழைகளாக எண்ணற்ற விவரணைகளுக்குள் நீண்டு செல்லும் இந்த நாட்குறிப்புகள் ஒரு முக்கியம் வாய்ந்த சுதந்திரப்போராட்டக் காலகட்டத்தில் கதை, பாடல், நாடகம் என அழகியல் தளத்தில் செயல்பட்ட பல்வேறு சமூக உணர்வுகளையும், எழுச்சிகளையும் நாம் அறியத் தருகின்றன. பாஸ்கரதாஸ் சூழலின் பன்முகத்தன்மைகளை உள்வாங்கிய படைப்பாயாக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஒட்டுமொத்த படைப்பு சக்திக்கான உந்துதலாகவும், உத்வேகமாகவும் இருந்திருக்கிறார். கலை ஒரு உந்துதலாய் வேறுபாடுகள் நிறைந்த சமூகங்களைப் பிணைக்க முடியும் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சிறப்பான சாட்சியமாக இருக்கிறது.

பாஸ்கரதாஸின் நாடகப் பரப்பிற்குள் பாடகர்கள், நடிக நடிகையர்கள் மட்டுமில்லாமல் தாசிமார்கள், குடுகுடுப்பைக்காரர்கள், ஏல வியாபாரிகள், பழ வியாபாரிகள், பொம்மை வியாபாரிகள், பேனா குடை பூட்டு ரிப்பேர்க்காரர்கள், இரவு யாசகர்கள், கழைக்கூத்தாடிகள், சந்நியாசிகள், தெருத் தோட்டிகள், சவரத் தொழிலாகள், தச்சு நெசவாகள், மீன்காரிகள் எனப் பல வகை மனிதர்களுக்குள்ளும் புதைந்துள்ள கதைகளும், பாடல்களும் கலந்து பல்வேறு வெப்பாடுகளுடன் ஒரு நெருக்கமான கூட்டியக்கம் உருக்கொள்கிறது. அவருடைய பரிவின் எல்லைகள் மனநிலை பிறழ்ந்தோர், உடல் ஊனமுற்றோர், ரோகிகள், பிச்சைக்காரர்கள் என பலவகையான விம்புநிலை மனிதர் கலிருந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் நீள்வதாக இருக்கின்றன. பாடலின் வழி அவருடைய நட்பு விரிந்துகொண்டே போய் கதையும், பாடலும் எங்கும் விரவிக் கிடப்பதை அவரால் அறிய முடிகிறது. மழை, காப்பி, வினோதப் பொருள்கள், பொம்மைகள், சித்திரங்கள் என அவரது நேசங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. தான் பெற்ற விஷயங்களையும், சந்தோஷங்களையும் தயக்கமில்லாமல் குடும்பத்துடன் மட்டுமின்றி முழு சமூகத்துடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறார். இக் குறிப்புகன் ஊடே ஒரு பரந்த சமூகத்தின் பல்வேறு மன விழைவுகளும் பதிவாகின்றன.

பாஸ்கரதாஸின் வாழ்க்கை பாடல்களால் நிரம்பியிருக்கிறது. பிரசவப்பாடல், தாலாட்டுப் பாடல், நடவுப்பாடல், நெசவுப்பாடல், கோலாட்டப்பாடல், ஒப்பாரிப்பாடல் என பல வகையான பாடல்களால் அவர் சூழப்பட்டிருக்கிறார். அவர் வாழ்கின்ற கிராமியச்சூழல் இயல்பாகவே எண்ணற்ற பாடல்களுக்கான களனாக இருக்கிறது. ஏகாலிப் பெண் பாடகர்கள், நாட்டுப் பாடகர்கள், பனையேறிகன் பனைமரப்பாடல்கள், மீனவர்களின் வலைவீச்சுப்பாடல்கள், கோலப் பொடி வியாபாரம் செய்யும் பெண்கன் பாடல்கள், பட்சி பாஷைக்காரர்கள் மற்றும் பொம்மலாட்டக் காரர்கன் ஆட்டக்கதைகள், சித்திரக்காரர்கள், சிற்பக்கலை நுட்பம் அறிந்த கல்தச்சர்கள் என சூழல் பாடகர்களாலும், கதை சொல்லிகளாலும், கைவினைக் கலைஞர்களாலும் நிரம்பியதாக இருக்கிறது. இன்னும் பேனா ரிப்பேர்காரர், விளக்கு ரிப்பேர்காரர், குடை ரிப்பேர்காரர், பூட்டு ரிப்பேர்காரர் ஆகியோர்களும் பாஸ்கர தாஸை அணுகி தங்களுக்கான பாடலை வேண்டுகின்றனர். வண்ணார்களும், பூசாரிகளும் கூட அவரை விடுவதாக இல்லை. சமூகத்தின் பலவிதமான வாழ்நிலைக்குள்ளும் பொதிந்துள்ள பாடலை வெளிக்கொணரும் முயற்சியில் பாஸ்கரதாசும் பங்கேற்கிறார். குறிசொல்லிகளின் பாடல்களும், உடுக்கடிப் பாடல்களும், பெரிய மறத்திப் பாடல்களும் நாட்டுப்புற சடங்கியல் மற்றும் மாந்திரீகத் தன்மைகன் குறியீடுகளாகத் தொடர்கின்றன.

பாஸ்கரதாஸ் முஸ்லீம் வாலிபர்கன் தாஹீரா இசை, ராஜஸ்தான் நாடோடிகன் சாரங்கி இசை, கம்மளத்து தெலுங்குப் பாடல்கள், ஓதுவார் பாடல்கள், கதாகாலட்சேபம், சங்கீதக் கச்சேரி என கலாசாரத்தின் எல்லா அசைவுகளையும் கவனிப்பவராக இருக்கிறார். நாடகங்களுக்கு பாடல்கள் எழுதுவது, வசனங்கள் எழுதுவது, ஒத்திகைகள் பார்ப்பது, நடிப்பு முறைகளை ஆராய்வது, நடிகர்கன் உடலையும் மனத்தையும் தயார் செய்து பயிற்சி கொடுப்பது என இரவு பகல் பாராது அவருக்கு வேலைகள் காத்திருக்கின்றன. அது தொடர்பாக பல ஊர்களுக்கும் பயணங்கள் மேற்கொள்வதும், படைப்பாகளையும், கலைஞர்களையும் சந்திப்பதும் அவருக்கு அன்றாட அலுவல்களாகின்றன. எல்லா இடங்கலும் காபி பலகாரங்கள் நட்புக்கும், உபசரிப்புக்குமான பாலங்களாகின்றன. அரியக்குடி ராமானுஜம், வீணை சண்முகவடிவு, எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள், டி.கே. பட்டம்மாள், டி.என். ராஜரெத்தினம் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன், டி.கே.எஸ். சகோதரர்கள் நவாப் ராஜமாணிக்கம் போன்ற எண்ணற்ற கலைஞர்கன் அபிமானதுக்குரியவராக பாஸ்கரதாஸ் இருக்கிறார். அவருடைய தேசபிமானம் மற்றும் நாடகப் பாடல்களை வேண்டிய பல கலைஞர்கள் அவரை நாடியபடி இருக்கிறார்கள்.

கமலவேணி, லோகநாயகி, பப்பூன் சண்முகம் விஸ்வநாததாஸ், ராஜாயிபாய், எம்.எஸ். விஜயாள், எம்.எஸ். ராஜம், பி.எஸ். சிவபாக்கியம் என ஒரு பெரும் நடிகக் கூட்டம் அவருடைய நாடகப் பரப்புக்குள் இயங்குகிறது. கோவலன், வள்த்திருமணம், சாரங்கதாரா, குலேபகாவலி, அல்லி, லலிதாங்கி, ராஜாம்பாள், நந்தனார்சரிதம், நல்லதங்காள், மிருசீடிகா, சகுந்தலை, சித்ராங்கி, சாவித்திரி, உஷா பரிணயம், ஞான சௌந்தரி, கிருஷ்ணலீலா, பவளக்கொடி ஆகிய அன்றைய காலகட்ட நாடகங்கள் பலவற்றுக்கும் பாடல் மற்றும் நடிப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. ஜட்கா ஓட்டிகள், வாழைப்பழக்காரர்கள், கொத்தனார்கள் ஆகியோரையும் அவர்கள் விரும்பியதன் பேரில் நடிகர்களாக சேர்த்து பயிற்சி கொடுத்திருக்கிறார். நடிகர்கன் தேக அமைப்பு, சுவாசப் பயிற்சி, வசீகரக்குரல், ஜீரண சக்தி, சரித்திர ஞானம், படிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். பழைய இலக்கியங்கள் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார். புராணக்கதைகளுக்கும், கோவில் சிற்பங்களுக்கும் விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். நடிப்புக் கலையுடன் தேச நலனுக்கான உணர்வுகளையும், உத்வேகங்களையும் தொடர்ந்து ஊட்டியிருக்கிறார்.

தமிழ் நாடெங்கும் பயணம் செய்து அந்தக் காலகட்டத்தில் பட்டி தொட்டியெங்கும் பரவியிருந்த நாடக அபிமானத்துக்கு பாஸ்கரதாஸ் ஒரு பெரும் இணைப்பாகவும், உத்வேகமாகவும் இருந்தார். மதுரைதான் அவர் பெரிதும் இயங்கிய இடமாக இருந்தாலும் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோவை, சென்னை என பல இடங்கலும் நாடக செயல்பாடுகளை விஸ்தரித்தவர். தமிழில் கிராமபோன் இசைத்தட்டுகள் பிரபலமானது அவர் பாடல்கள் மூலம் தான். சென்னையில் பல மாதங்கள் தங்கியிருந்து கிராமபோன் கம்பெனிக்காக நிறையப் பாடல்களை பதிவு செய்து கொடுத்தவர். பல கலைஞர்களுடைய பாடல்கள் கிராமபோனில் பதிவு பெற உழைத்தவர். இதனால் இவருடைய பாடல்களை ரயில் யாசகர்கள் முதல் தெரு பிச்சைக்காரர்கள் வரை பாடும் நிலை உருவானது. இவரால் தமிழ் நாடகங்கள் இலங்கையிலும் கவனம் பெற்றன. மதுரையில் முதல்நாள் நடத்திய நாடகம் மறுநாளுக்கும் மறுநாள் யாழ்ப்பாணத்திலும் அதற்கு அடுத்த நாள் கொழும்புவிலும் நடத்தும் அளவுக்கு பரஸ்பர உறவுகள் இருந்தன.

பாஸ்கரதாஸின் நாடகப்பயணம் எண்ணற்ற மனித நெகிழ்வுகள் கொண்டதாக இருக்கிறது. யார் வறிய நிலையில் தென்பட்டாலும் கையில் இருப்பதைக் கொடுக்கிறார். காபி பலகாரங்கள் கொடுத்து உபசரிக்கிறார். கலையுணர்வின் கூறுகள் யாரிடம் வெப்பட்டாலும் பாராட்டும், பணமும், உணவும், துணியும் அக்கத் தவறுவதில்லை. பசித்த ஆட்டுக்குட்டிக்கு முலைப்பாலை வழங்கும் பெண்ணை வணங்கி கௌரவிக்கிறார். அடையாறு சாலையின் மதில்கல் சித்திரம் வரைந்து கொண்டிருந்த புத்தி சுவாதீனமற்ற பெண்ணுக்கு தன்னுடைய கோட்டை இனாமாகக் கொடுக்கிறார். அடிபட்ட ஆண் மயிலுக்கு மருந்து போடுகிறார். மழையில் நனையும் ஆட்டுக் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் சிறுவனுக்கு தன்னுடைய துண்டைக் கொடுக்கிறார். அவருடைய குழந்தைகள் நனைந்த மாடுகளை துவட்டிவிடச் சொல்லி அடம் பிடிக்கின்றன.

பசுவின் விஷக்கடி மரணம் வீட்டிலுள்ள அனைவரையும் அழுது புரளச் செய்கிறது. இரவு சாலையோரம் யாசகப் பாடல்களை கேட்கும்போது துக்க சுமை கூடுவதாக எழுதுகிறார். தெருவில் அலையும் பொம்மை வியாபாரியின் குரல், கழைக் கூத்துக்காரனின் சலங்கைப் பாடல், தறி நெய்யும் கிழவி நெய்தபடி பாடும் நெசவுச் சிந்துபாடல், மாட்டுவண்டிப் பாடல் என எங்கும் பாடல்கள் வழி ஒரு வதைபடும் உலகை தரிசிக்கிறார். தெருவில் நெடுநேரம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காக்கைகளும், கூட்டமாக நனைந்துவரும் கழுதைகளும் அவரிடம் கனத்த உணர்வை உண்டாக்குகின்றன. ஆனால் அவருடைய நட்பின் வட்டம் பரந்ததாக இருக்கிறது. பாடல்கள் வழி ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் ஆழ்ந்த பிணைப்பு கொண்டவையாக இருக்கின்றன. துக்க சுமையுடன் கடிதங்களும், சந்திப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குறிப்புகள் எதிர்பாராது முடிவடைகின்றன.

தன்னுடைய அறுபதாவது வயதில் (1952) பாஸ்கரதாஸ் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரை எழுதப்பட்ட இக்குறிப்புகள் கிட்டத்தட்ட 58 வருடங்களுக்குப் பிறகு புத்தக வடிவம் பெறுகின்றன. ஒரு காலகட்ட உணர்வுகன் ஆவணமாகத் திகழும் இதனைத் தொகுத்த முருகபூபதியும், பிரசுரித்த பாரதி புத்தகாலயமும் தமிழ் சமூகத்தின் நன்றிக்கு உரியவர்களாகிறார்கள்.

- வெளி ரங்கராஜன் 

Pin It