jallikattu

சல்லிக்கட்டு நடத்தத் தடை விதித்து மே 7, 2014-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், மனிதர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதாலும் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப் படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக சல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது

முதலில், ஒன்றை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். சல்லிக்கட்டு காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டு கோவில் மாடாக வழிபட்டு சல்லிக் கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட இனமாக இருக்கிறது சல்லிக்கட்டு காளைகள். சல்லிக்கட்டு தவிர வேறு எந்தவிதமான பயன்பாட்டுக்கும் (விவசாயம் உள்பட) பயன்படுத்துவது இல்லை.

சல்லிக்கட்டு வழக்கொழிந்து போனால் இந்தக் காளைகள் அடிமாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, காலப்போக்கில் அழிந்து போய்விடும். ஏற்கெனவே சீமைப் பசுகளை இறக்குமதி செய்த காரணத்தால் நம் நாட்டு மாடுகள் பெருவாரியாக அழிந்து வருகின்றன.

இந்த இனத்தை சல்லிக்கட்டு நடத்துபவர்கள் கண்ணும் கருத்துமாக குடும்ப உறுப்பினர் போல பாதுகாத்து வருகின்றனர். தமிழகத்தின் பல இடங்களில் இறந்து போன சல்லிக்கட்டு காளைகளுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் வழக்கம் உள்ளதே இதற்கு சான்று.

சல்லிக்கட்டு காளைகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து அதன் உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அதன் கண்களில் மிளகாய் பொடி போடுவதாகவும் ஈட்டி வைத்து குத்துவதாகவும் சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இத்தனைக்கும் இந்த விளையாட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் மற்றும் (சில ஆண்டுகளாக) அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

இதற்கென தனி ஒழுங்கு முறை சட்டத்தையே தமிழக அரசு பிறப்பித்து, நடைமுறைப் படுத்திவருகிறது.

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகளில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.

சிந்துவெளி நாகரிகத்தில் ஏறு தழுவல் நிகழ்ந்த தற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் கூறப்படுகிறது.

புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்து வெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளது. கி.மு. 2000 ஆண்டிலிருந்தே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

பண்டைக் காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் ஏறு தழுவுதுல் நடைபெற்று வந்துள்ளது.

மெக்சிகோ,ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் மாடுபிடிப் போட்டியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காளைகளைத் துன்புறுத்திச் சாகடிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அது போன்ற கொடூரங்கள் எந்தக் காலத்திலும் நிகழ்ந்து இல்லை.

ஏனெனில் சல்லிக்கட்டு காளையை தமிழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினராக தெய்வமாக மதிக்கின்றனர். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப் படுவதே சான்று.

மனிதர்களுக்கு உயிராபத்து ஏற்படுகிறது என்ற வாதத்தை எந்த விளையாட்டுக்கும் பொருத்த முடியும் இன்று “தேசபக்த’’ விளையாட்டாக

கொண்டாடப்படும் கிரிக்கெட்டில் தலைமுதல், பாதம் வரை ஏகப்பட்ட கவசங்களோடு தான் விளையாடுகிறார்கள் அதில் சிறு தவறு நேர்ந்தால் கூட உயிராபத்தில் கொண்டு விடும். நீச்சல், கார் ரேஸ்.. எதில் இல்லை உயிராபத்து? சல்லிக்கட்டை மட்டும் ஆபத்தான விளையாட்டாகத் தடை செய்வது உச்சநீதி மன்றத்தின் இன ஒதுக்கல் பார்வை ஆகும்.

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்டு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

அதிகார வர்க்கம் தமிழனின் வீரத்தை அடக்கி விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டால், அது சல்லிக்கட்டுக்காளையாக சீறிப் பாய்ந்து, திமிறி எழுந்து வரும்.

Pin It