ஒரு மொழி இன்னொரு மொழிபேசும் மக்கள் மீது திணிக்கப்படுவது, ஓர் அயல்இன ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கையாகும்.

இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதைத் தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண் உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.

இந்த இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டிருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.

1950 சனவரி 26-இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1965 சனவரி 26-லிருந்து இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழியாக இருக்கும் என்றும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி நிலையிலிருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை உறுதி செய்வது போல் 1963-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் “அலுவல் மொழிச் சட்டம்” (Official Language Act - 1963) இயற்றப்பட்டது.

இச்சட்டத்தை எதிர்த்துத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் 1965 மொழிப்போர் வெடித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் 27.1.1965 அன்று சுட்டுக் கொல்லப்பட்டான். அதன்பிறகு புயல் வேகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. இராணுவம் வரவழைக்கப்பட்டது. முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்களைத் தமிழகக் காவல்துறையும் இந்திய இராணுவமும் சுட்டுக் கொன்றன. இந்தித் திணிப்பை எதிர்க்க 1964-இல் தீக்குளித்துத் தழல் ஈகியானார் கீழப்பழூர் சின்னச்சாமி. 1965-இல் கோடம்பாக்கம் சிவலிங்கம் தொடங்கிப் பலர் தீக்குளித்தனர். பலர் நஞ்சுண்டு மடிந்தனர்.

பின்னர் அன்றையத் தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாத்திரி வானொலியில் “இந்தித் திணிக்கப்பட மாட்டாது; போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகு, போராட்டம் மெல்ல மெல்ல ஓய்ந்தது. அக்காலத்தில் கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.

இப்பின்னணியில் 1967-இல் அன்றையத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி, 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன்படி 1965 சனவரி 26 முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்பதனை மாற்றி, அடுத்து குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் ஒன்றிய அரசின் இணை ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற விதி சேர்க்கப்பட்டது.

இன்றுவரை அந்த நிலை தொடர்கிறது. சட்ட ஏற்பாடுகள் இவ்வாறிருந்த போதிலும், காங்கிரசு ஆட்சியும், பா.ச.க. ஆட்சியும் இடுக்கில் கடுக்கண் கழற்றுவது போல் இந்தித் திணிப்பை இந்திய அரசு அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் தீவிரப்படுத்துவது வாடிக்கை. அதிலும், “இந்து - இந்தி - பாரதம்” என்று கொள்கை வைத்துள்ள தீவிரவாத அரசியல் கட்சியான பா.ச.க. இந்தித் திணிப்பில் ஈடுபடுவது வியப்பளிக்கவில்லை. அதனை எதிர் கொள்ளத் தமிழகம் அணியமாக வேண்டும்.

பா.ச.க.வின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், “தமிழகத்தில் இந்தி வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும்” என்று பேசித் தமிழர்களை மிரட்டியுள்ளார்.

“தமிழகத்தில் மொழிப் பிரச்சினையிலும் நிலைமை மாறி வருகிறது. இது 1967 இல்லை. இப்போது தி.மு.க. ஆட்சியிலும் இல்லை.

... நீர்த்துப் போன மொழிப் பிரிச்சினையை மீண்டும் கையிலெடுத்தால் இந்தி வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும்”.

(சென்னை மடிப்பாக்கம் கூட்டத்தில் இல.கணேசன் பேச்சு, மாலை மலர், 27.06.2014)

நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும் என்பது போல், பா.ச.க.வுக்கு இடம் கொடுத்தால், தமிழ் மொழியும், தமிழர் அடையாளங்களும் அழிக்கப்படும் என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும்.

புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதி அறிவிப்புகள், படிவங்கள் போன்றவற்றை இதுவரை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அச்சிட்டுத் தந்துள்ளார்கள். இப்போது, பா.ச.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தியில் மட்டுமே அச்சிட்ட படிவங்கள் தருகிறார்களாம். மாணவர்கள் எதிர்த்துக் கேட்டதற்கு, ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இங்கு பார்வையிட வந்தது; அவர்கள் இந்தியில் மட்டும் கொடுங்கள் என்றார்கள். அதனால் இந்தியில் மட்டும் தருகிறோம்’ என்றாராம் பல்கலைக்கழகப் பதிவாளர்.

அப்படி என்றால், 1967 திருத்தத்துடன் இன்றும் செயல்பாட்டில் உள்ள 1963 அலுவல்மொழிச் சட்டம் வெறும் துண்டுக்காகிதம் தானா?

சட்டத்தின் ஆட்சி நடப்பதாகச் சொல்வார்கள்; தமிழர்களைப் பொறுத்தவரை கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு அணை, பாலாறு, இந்திச்சிக்கல் போன்றவற்றில் சட்டம் செயல்படுவதில்லை. புதிய விதிகளை உருவாக்கிட போர்க்களம் மட்டுமே தமிழர்களுக்கு விட்டு வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நடந்த இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழக அரசியல் கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பியது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.

உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழைக் குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழகப் பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ் மொழியை முழுமையான கல்வி மொழி - அலுவல் மொழி ஆக்குவதாக இல்லை.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் - தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும், இந்திய ஒன்றிய அலுவல் மொழியாகத் தமிழும் இணைக்கப்பட வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும்; தமிழகத் தலைவர்களை ஏற்கச் செய்ய வேண்டும்.

Pin It