தொழில்துறையும், நிதித்துறையும் தனியார் மயமானதைத் தொடர்ந்து இப்போது அரசு நிர்வாகமே தனியார் மயமாகிறது. திட்டக் குழுவைக் கலைத்து அதற்கு பதிலாக மோடி அறிவித்துள்ள புதிய அமைப்பு இதைத்தான் குறிக்கிறது.

கடந்த 15. 08. 2014 அன்று இந்திய சுதந்திர நாளில் அறிவித்தவாறு இந்தியத் திட்டக் குழுவைக் கலைப் பதாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளில் நரேந்திர மோடி அரசு அறிவிக்கை ஒன்றை வெளி யிட்டது. திட்டக் குழுவிற்கு பதிலாக “இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம்” (National Institution for Transforming India - NITI) என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்துவதாக அந்த அறிவிப்பு கூறியது.

இந்திய அமைச்சரவையின் முடிவாக அறிவிக்கப் பட்ட இந்த அமைப்பின் முழுப் பெயர் ஆங்கிலமும் இந்தியும் கலந்து “நிதி ஆயோக்” (NITI Aayog) என்பதாகும். 01.01.2015 முதல் இந்த அமைப்பு செயலுக்கு வந்தது.

இந்த அமைப்புக்கு இந்தியப் பிரதமர் தலைவராக இருப்பார். ஒரு துணைத் தலைவர், ஒரு தலைமைச் செயல் அலுவலர் ஆகியோர் இருப்பர். இவர்களைப் பிரதமர் அமர்த்துவார். இந்திய அரசின் நிதித்துறை, தொழில்துறை உள்ளிட்ட 4 துறை அமைச்சர்கள் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள். இதுதவிர பல பகுதி நேர உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் அவர்களையும் பிரதமரே நியமிப்பார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்நிறுவனத்தில் நிர்வாக மன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.

நோயுற்றவன் தனது நோய்க்கு மருந்து கேட்டப் பொழுது, மருந்துக்கு பதிலாக நஞ்சுக் கொடுத்தால் எப்படியோ அதுபோலத் தான் நரேந்திர மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே இருந்த திட்டக்குழு மாநிலங்களைப் பிச்சைக்காரர்களாக நடத்தியது. இதை மாற்றி மாநிலங்கள் முதன்மைப் பங்காளிகளாக செயல்படும் ஓர் கூட்டாட்சி நிறுவனம் திட்டமிடுதலுக்காக நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. இதையே சாக்காக வைத்து திட்ட மிடுதலையே கைவிடும் முடிவுக்கு இந்திய அரசு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி அரசின் நிர்வாகத் தில் தனியாரை ஈடுபடுத்தும் முயற்சி யிலும் இறங்கிருக்கிறது.

திட்டமிட்டப் பொருளியல் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே காங்கிரசுக் கட்சி யின் அறிவிக்கப்பட்டக் கொள்கை யாக இருந்தது. 1938-இல் நேதாஜி சுபாசு சந்திர போசு அனைத்திந்திய காங்கிரசுக் கட்சித் தலைவராக இருந்தபோதே நேரு தலைமையில் திட்டமிடல் குழு என்பது உருவாக் கப்பட்டது. 1944 பிரித்தானிய அரசும் இதுபோன்ற ஒரு குழுவை நிறுவியது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பண்டித நேருவின் அரசு திட்டக் குழுவை அமைத்தது. திட்டக்குழு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழான அமைப்பன்று. நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமாகவும் அது உருவாக்கப்பட வில்லை. 1950 மார்ச் 15 அன்று நேரு தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் திட்டக்குழு உருவாக்கப்பட்டு 1951 முதல் செயல் படத் தொடங்கியது. ஐந்தாண்டுத் திட்டங்களையும், ஆண்டுத் திட்டங்களையும் உருவாக்கிச் செயல்படுத்துவதில் திட்டக்குழு முதன்மைப் பங்காற்றியது.

1930-களில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளிய நாடுகள் மிகப்பெரும் தொழில் மந்தத்தில் சிக்கி நிலைகுலைந் திருந்தபோது திட்டமிட்டப் பொருளியலில் செயல்பட்ட சோவியத் ஒன்றியம் அடுத்தடுத்து வளர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருந்தது.

சுதந்திரப் போராட்டக் காலத்தி லேயே காங்கிரசுக் கட்சி இந்த நிலையை ஆய்வுச் செய்து திட்ட மிட்டப் பொருளியலைக் கைக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரி யாகக் கொண்டே இந்தியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அரசுத் துறையின் கீழ் பெரும் பெரும் கட்டுமானத் திட்டங்கள் செயல்படுவதற்கு திட்டக் குழு காரணமாக அமைந்தது. நேருவிய பொருளியல் செயல்பாட்டின் ஓர் அடையாளமாக திட்டக் குழு இருந்தது.

ஆயினும் மாநிலங்களின் திட் டங்களைக்கூட முடிவு செய்யும் அதிகார குவி மையமாக திட்டக் குழு செயல்பட்டது. மாநிலங்களின் வரம்புகுட்பட்ட திட்டமிடும் உரிமைகூட இதன் மூலம் பறிக்கப் பட்டது. அதுமட்டுமின்றி இந்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் இறுதி முடி வெடுக்கும் உயர் நிலை அமைச் சரவையாகவும் மேலாதிக்கம் செய்யத் தொடங்கியது. மாநில அரசுகள் தங்கள் திட்டச் செலவு களுக்காக திட்டக் குழுவிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டன.

மாநில முதலமைச்சர்கள் உறுப்பு வகிக்கும் தேசிய வளர்ச்சி மன்றம் என்பது திட்டங்களை ஆய்வுச் செய்யும் உயர்மட்ட ஆலோசனை அமைப்பாக அறிவிக் கப்பட்டிருந்தாலும் அது ஓர் சடங்காகவே இருந்தது. அளிக்கப் படும் குறைவான நேரத்தில் எந்த உருப்படியானச் செய்தியையும் முதலமைச்சர்களால் இம்மன்றத் தில் முன்வைக்க முடியாது. முடிந்த மட்டில் தங்கள் மாநிலத்திற்கு திட்டக் குழுவிடமிருந்து நிதி பெறுவது என்ற நிலையிலேயே இம்மன்றத்தில் மாநில முதல்வர் கள் வைக்கப்பட்டார்கள்.

“எங்கள் மாநிலத்தில் திரட்டப் படும் நிதியைக் கொண்டு நாங்கள் எப்படி திட்டமிடுவது என்பது குறித்து அறிவுரைக் கேட்கும் மன்ற மாக தேசிய வளர்ச்சி மன்றம் தாழ்ந்து விட்டது” என்று 2012-இல் தமிழக முதலமைச்சர் செயலலிதா கூறினார்.

குறிப்பாக திட்டக் குழுவின் துணைத் தலைவராக மான்டெக் சிங் அலுவாலியா வந்த பிறகு, அவர் இந்தியப் பேரரசின் சுல்தானாகவே நடந்து கொண்டார். மாநில முதல்வர்கள் அலட்சியப் படுத்தப் பட்டனர்.

இந்த நிலையில் கூட்டாட்சி முறைமைக்கு ஏற்றாற்போல் மாநிலங்களும் பங்கேற்கும் வகை யில் திட்டக் குழுவை மாற்றி யமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வந்தது.

இன்னொரு புறம் 1990களில் தொடங்கி தாராளமயப் பொரு ளியல் கோலோச்சத் தொடங்கியப் பிறகு பொதுத்துறை மேலோங்கி யிருந்தக் காலத்திய திட்டமிடல் முறை நெருக்கடிகளைச் சந்தித்தது.

இதனை எவ்வாறு எதிர்கொள் வது என்பது குறித்து பல வட்டங் களிலும் விவாதங்கள் நடந்து வந்தன.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இச்சிக்கல் குறித்து ஆய்வு செய்ய நிறுவப்பட்ட இரண்டு குழுக்கள் இரண்டு நேர் எதிரான பரிந்துரைகளை முன் வைத்தன. கடந்த 2009இ-ல் திட்டக் குழு குறித்து மீளாய்வுச் செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓர் வல்லுனர் குழுவை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அமைத் தார். திட்டக்குழு உறுப்பினர்களும் அதற்கு வெளியில் இருந்த வல்லு னர்களும் பங்குபெற்ற அக்குழு 2010-இல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

திட்டமிடுதலிருந்து விலகிக் கொண்டு அரசுக்கு ஆலோசனை வழங்கும் வல்லுனர்க் குழுவாக மாற்றியமைக்கும் வகையில் “சீர்திருத்தம் மற்றும் தீர்வுக்குழு” (Reforms and Solutions Commission) அமைக்கப்பட வேண்டும் என்று இப்பரிந்துரை கூறியது.

தனது முடிவுக்குக் காரணமாக சில செய்திகளை இவ்வல்லுனர் குழு முன்வைத்தது. அவற்றின் சாரம் வருமாறு :

1950-களில் இருந்தது போல் ஒரே கட்சி இந்திய ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்ய வில்லை. வெவ்வேறு சமூகக் கண் ணோட்டம் உள்ள கட்சிகளும், அவற்றின் கூட்டணிகளும் மாநிலங் களில் ஆட்சி செய்கின்றன. நடுவண் அரசிலும்கூட இக் கட்சி களில் பல பங்கு வகிக்கின்றன. முன்பிருந்தது போல பொதுத் துறையானது இந்தியப் பொருளி யலில் முன் செல்லும்; நிலையில் இல்லை. தனியார்மயம் அதிகரித் திருக்கிறது. உலகமயப் பொருளிய லில் பங்குபெற்றப் பிறகு உலக நாடுகளில் நிகழும் நிச்சயமற்ற தன்மை இந்தியப் பொருளிய லையும் பாதிக்கிறது.

இக்காரணங்கள் ஆய்வுக்கு உரியவைதான்.

இதே காரணங்களை ஏற்றுக் கொண்ட அரசின் இன்னொரு குழு வேறு ஒரு முடிவை அறிவித்தது. இந்திய சேம வங்கியின் முன்னாள் தலைவர் சி. ரெங்கராஜன் தலைமை யிலானக் குழு இதே சிக்கல்களை திட்டக்குழு குறித்த தனது ஆய்வில் முன்வைத்தது. “திட்டச் செலவு, திட்டமல்லாதச் செலவு ஆகிய வற்றிற்கிடையே உள்ள தெளிவான வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. நிச்சயமற்ற தன்மைகள் மேலோங்கி வருகின்றன. இந்த நிலையில் திட்டமிடுதலையே கைவிடுவது சரியான தீர்வாகாது. மாறாக, திட்டக் குழுவானது திட்டச் செலவு, திட்டம் அல்லாதச் செலவு ஆகிய இரண்டு தளத்திலும் செயல்பட வேண்டிய தேவை யிருக்கிறது” என்று கூறியது.

இந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகளையும் ஆய்வு செய்த போது திட்டமிடுதல் என்ற ஒன்றையே கைவிட்டுவிட்டு அனைத்து பொருளியல் நடவடிக் கைகளையும் சந்தையின் போக்கிற்கு விட்டுவிடுவது என்ற முடிவிற்கே அன்றையப் பிரதமர் மன்மோகன் சிங் வந்தார்.

இன்றையப் பிரதமர் மோடி அதே முடிவை இன்னும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் திட்டக் குழு இருந்த இடத்தில் தனது சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஆலோச னைக் குழுவை உருவாக் கிக் கொண்டிருக்கிறார். அதுதான் இந்த ‘நிதி ஆயோக்’ .

இதுகுறித்த அரசின் அறிவிக் கையை பார்த்தாலே இது புரியும்.

மாநிலங்களும், சமப் பங்காளி யாக பங்கேற்று திட்டங்களை உருவாக்கும் அமைப்பாக திட்டக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அது நிகழ வில்லை.

மாநிலங்களும் பங்கேற்கும் கூட்டுறவு கூட்டாட்சி முறைமை நிலை நிறுத்தப்படும் என்ற மோடியின் கடந்த சுதந்திர நாள் உரைக்கும் தற்போதைய அறிவிப் புக்கும் தொடர்பேது மில்லை. ஏற்கெனவே இருந்த தேசிய வளர்ச்சி மன்றம் சட்ட வகையி லாவது திட்டங்களை இறுதிசெய் யும் மன்றமாக அதிகாரம் பெற்றிருந் தது. ஆனால் இப்போதைய புதிய அமைப்பில் மாநில முதலமைச் சர்கள் கருத்துக் கூறும் நிலையில் மட்டுமே வைக்கப் பட்டுள்ளார்கள்.

அரசு இனிமேல் மக்களுக்கு திட்டங்களை “வழங்குபவராக” (Provider) இருக்க முடியாது. “செயல் ஊக்குநராக” (Enabler)ஆக மட்டுமே இருக்க முடியும் என்று அமைச்சரவை அறிவிக்கைக் கூறுகிறது.

உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறையில் இனி அரசு “செயல்படுபவராக” (Player) இருக்க முடியாது. மாறாக, கொள்கை வகுப்பாளராக மட்டுமே இருக்க முடியும் என்று கூறுகிறது. அதாவது அரசுத் துறை என்ற ஒன்றே இனி இருக்காது என்ப தையே இந்த அறிவிப்பு கூறுகிறது.

“அரசு நிர்வாகத்தை நடத்து வதும் அதற்கான உத்தி வகுப்பதும் முற்றிலுமாக பிரிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சரவை அறிவிக்கைக் கூறுகிறது. இதுவரை இருந்தது போல் திட்டமிடுதலில் செயல்பட்டு வந்த திட்டக் குழு இனிமேல் கொள்கை வகுக்கும் அமைப்பாக மட்டுமே இருக்கலாம். திட்டமிடும் நிர்வாக நடவடிக் கையில் அது ஈடுபடக் கூடாது என்பதே இதன் பொருள்.

இந்த புதிய அமைப்பு அரசுக்கு ஆலோசனை வழங்கும் “அறிவாளர் மன்றமாக” (Think Tank) செயல்பட வேண்டும் என்று இவ்வறிவிக்கை கூறுவதிலிருந்தே இது விளங்கும்.

“உலக வளத்தில் இந்தியாவின் தேவைகள் உயர்ந்துள்ளன. அவற்றை பெறும் வகையிலும் இந் நிறுவனம் செயல்பட வேண்டும்” என்று இவ்வறிவிக்கை கூறுகிறது. இந்திய பெரு முதலாளிகள் உலகமய முதலாளிகளாக பெருத்து விட்டனர். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் புகுந்து சூறையாடும் முதலாளிகளாக இவர்கள் வளர்ந்து விட்டனர். இதற்கு ஏற்றாற்போல் இந்திய அரசை செயல்பட வைப்பதற்கு உரிய ஆலோசனை வழங்கும் நிறுவனமாக இப்புதிய நிறுவனம் அமையப் போகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இவ்வமைப்பின் பகுதி நேர உறுப்பி னர்களாக இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாரதிய சனதா கட்சிக்கு தேர்தலில் பணி யாற்றிய வெளிநாடு வாழ் பார்ப்பன அறிவாளர்கள் இவ்வாறு இணைத் துக் கொள்ளப்பட உள்ளார்கள்.

இந்திய அளவிலும், பன் னாட்டு அளவிலும் புகழ்பெற்ற வல்லுனர் அமைப்புகளுடன் இந்த நிதி ஆயோக் இணைந்துச் செயல் படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளைச் சேர்ந்த உலகமய பொருளியல் ஆலோச கர்கள் இந்திய அரசுக்கு ஆலோ சனை வழங்கும் இடத்தில் அதிகார வழியில் அமர்த்தப்படப் போகி றார்கள் என்பதையே இதன்மூலம் இந்திய அரசு அறிவிக்கிறது.

எந்த வெளிநாட்டு மாதிரியை யும் பின்பற்றாமல் இந்தியத் தேசத் தின் செயல்திட்டத்தை “பாரதிய” அணுகு முறையோடு நிதி ஆயோக் முன்வைக்கும் என்று கூறப் பட்டுள்ளது. இந்த “பாரதிய” செயல் திட்டத்தில் கிராமப்புற உள் ளாட்சி அமைப்புகள் நேரடியாக ஈடுபடுத்தப்படும் என்று இந்த அறிவிக்கை கூறுகிறது. மாநில அரசைக் கடந்து, தனது நேரடி அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றாக உள்ளாட்சி அமைப்புகளை கவ்விக் கொள்ளும் இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டம் இது.

இந்த புதிய அமைப்பில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந் தோரும் பகுதி நேர உறுப்பினர் களாக இணைத் துக்கொள் ளப்பட உள்ளார்கள். இதன் மூலம் அரசு கட்டமைப்புக் குள்ளேயே தனியார் முதலாளிகளின் பேராளர்கள் இடம் பெற வகை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே ஜார்ஜ் புஷ்- மன் மோகன் சிங் உடன்பாட்டின் மூலம் வால் மார்ட், மான்சான்டோ, பெப்சி, யூனியன் லிவர் போன்ற நிறு வனங்கள் அரசாங்கத்தின் பல்வேறு குழுக்களிலும் உயர் ஆய்வு மையங் களிலும் இடம் பெற்று விட்டார்கள்.

இப்போது நிதி ஆயோக் அமைப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தனியார் நிறுவனப் போராளர்கள், பன்னாட்டு வல்லு னர் நிறுவனப் போராளர்கள் என்ற வகையில் பெருமளவில் தனி முதலா ளிகளின் ஆட்கள் இடம்பெற வகை செய்யப்பட்டு விட்டது.

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற உடனே முதலாளிய சங்கத்தினர் அளித்த ஆலோசனை அறிக்கையில் மக்க ளுக்கு வழங்கும் பல்வேறு மானியங் களை “வளர்ச்சிக்கு வகை செய்யாத மானியங்கள்” என்று கூறி அவற்றை கைவிடவேண்டும் என வலியுறுத்தி யிருந்தனர். இப்போது நிதி ஆயாகில் அவர்கள் உறுப்பி னர் களாக இடம்பெறும் போது அதிகார வழியில் இதனை வலியு றுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரப் பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழக அரசு வேளாண்மைக்கு அளித்துவரும் மானியத்தை நிறுத்துமாறு திட்டக் குழு வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை தேசிய வளர்ச்சிமுறை கூடும் போதும் தமிழகத்திற்கு இந்த அழுத்தம் தரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இப்போது தனியார் முதலாளி களின் ஆட்கள் கூடுதலாக இடம் பெறும் நிறுவனமாக இது மாறி விட்டப் பிறகு இந்த அழுத்தம் இன்னும் கூடுதலாகும்.

சமையல் எரிவளிக்கு அளிக்கப் படும் மானியத்தைக் குறைப்பதற்கு இதுவே தகுந்த நேரம் என்று இவ்வகை வல்லுனர்கள் இப்போதே கூறி வருகிறார்கள். இவர்கள் நிதி ஆயோகில் இடம் பெற்று விட்டால் இவ்வகை கொள்கைகள் இன்னும் தீவிரமாக செயலுக்கு வரும்.

சந்தைப் போட்டியே அனைத் தையும் தீர்மானித்துக் கொள்ளட் டும் என்ற வகையில் பொருளியல் நடவடிக்கைகளிலிருந்து அரசை விலக்கிக் கொள்ளும் தொடர் கொள்கையின் இன்னொரு பாய்ச்சலே நிதி ஆயோக் ஆகும்.

மாநில வேறுபாடுகள் ஏதும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவை ஒற்றைச் சந்தையாக மாற்றுவது, அரசின் தலையீடு என்ற ஒன்றே இல்லாமல் ஆக்குவது என்ற நோக்கங்கள் இதன்மூலம் செய லுக்கு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பெயருக் குள்ள கூட்டாட்சி முறைமையும் சிதைக்கப்பட இருக்கிறது.

திட்டக் குழுவை கலைத்து விட்டு நிதி ஆயோக் நிறுவப் படுவதின் மூலம் இந்திய அரசின் இந்தச் சதித்திட்டம் நிறைவேறு கிறது.

ஏற்கெனவே உள்ள திட்டக் குழுவின் தலைவராக பிரதமர் இருந்தாலும் அவர் திட்டக் குழுவின் அன்றாட செயல்பாட் டில் தலையிடுவதில்லை. துணைத் தலைவரே நடைமுறையில் அதன் உயர்மட்ட அதிகாரம் உள்ளவராக செயல்பட்டார். அதற் கேற்றாற் போல் திட்டக் குழுவின் துணைத் தலைவருக்கு கேபினட் அமைச் சரின் தகுநிலை வழங்கப்பட்டி ருந்தது.

ஆனால் தற்போதைய நிதி ஆயோக்கில் இறுதி அதிகாரம் பிரதமருக்கே இந்த வழியில் நரேந்திர மோடி அனைத்து அதி காரங்களின் நடுப் புள்ளியாக தன்னை உருவாக்கிக் கொள்கிறார்.

தேசிய இன மாநிலங்களோ, மக்களோ இந்தியாவில் இனியும் நீடிப்பதில் பொருளில்லை.

Pin It