சீன நாட்டின் இன்னர் மங்கோலியா மாகா ணத்தின் ஹோஹாட் (Hohhot) பகுதியில், கடந்த 1996-ஆம் ஆண்டு ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அப்போது, ஹூக் ஜுலிட்டு (Hugjiltu) என்ற 18 அகவை இளைஞன், அக்கொலையை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

ஒரு பெண்ணை கற்பழித்துக் கொல்வது என்பது மன்னிக்க முடியாது குற்றம். எனவே, அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், அப்பொழுது தான் அது மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதனிடையே சாட்சி விசாரணைகள் நடைபெற்றன. காவல்துறை விசாரணையில், ஹூக்ஜு லிட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

1996 சூன் மாதம், அப்பெண் கொலை செய்யப்பட்ட 61 நாட்கள் கழிந்த நிலையிலேயே, ஹூக் ஜுலிட்டு அவசர கதியில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

பலர், “நீதி வென்றது” என்றனர். ஹூக் ஜுலிட்டு குடும்பத்தினர், அவன் அப்பாவி, அவன் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை எனக் கதறினர். அக்கதறல் ஒலி யார் காதிலும் விழவில்லை.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு, ஹூக் ஜுலிட் டுக்கு ‘நீதி’ வழங்கப்பட்ட அதே நீதிமன்றத்தில், இன்னொ ருவர் அக்கொலையைத் தான்தான் செய்த தாக சரணடைந்தார். எனவே, அவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹூக் ஜுலிட்டு நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. அதைக் கேட்க ஹூக் ஜுலிட்டு உயிரோடு இல்லை.

அத்தீர்ப்பை நீதிமன்றத்தின் துணைத் தலைவர், ஹூக் ஜுலிட்டு குடும்பத்தினரிடம் வழங்கி, நீதிமன்றத் தின் சார்பில் மன்னிப்புக் கேட்டார், அத்தீர்ப்புக் காகிதங்களைப் பெற்ற ஹூக் ஜுலிட்டுவின் தாயார், அதைப் பெற்றுக் கொண்டு ஹூக் ஜுலிட்டுவின் கல்லறைக்கு மரண தண்டனை எதிர்ப்பாளர்களுடன் பேரணியாகச் சென்று எரித்து, தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி அழுதார்.

கைகளில் நீதிமன்றத் தீர்ப்பை ஏந்திக் கண்ணீருடன் அத்தாய் கதறிய செய்தி, சீன சமூக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக விவாதிக்கப்பட்டது.

இது போல, கடந்த 2010 ஆம் ஆண்டு 43 அகவையான லீ யன் என்ற பெண், தனது கணவரை, துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், அக்கொலையின் கொடூரத் தன்மையைக் கணக்கில் கொண்டு, 2011 ஆம் ஆண்டு அவருக்கு சீனாவின் சியங் மக்கள் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

அதன்பின், கொல்லப்பட்ட அக்கணவன் தன்னை கடந்த ஒரு ஆண்டாக தினந்தோறும் சிகரெட்டால் சுட்டுக் கொடுமைப்படுத்தியதையும், அந்த கோபத்திலேயே தாம் அவ்வாறு செய்ததாகவும் அப்பெண் கூறினார். அதற்கான ஆதரங்களும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டன.

இதனைப் பரிசீலித்த சீன நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு சூன் 23 அன்று, அப்பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து முக்கியமானத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த ஆகத்து மாதம் நடைபெற்ற இன்னொரு வழக்கில், பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரை உணவில் நஞ்சு வைத்துக் கொலை செய்ததாக 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நியன் பின் என்பவருக்கு புஜியன் மாகாண நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இந்நிலையில், 8 ஆண்டுகள் மேல்முறையீடுகளுக் குப் பிறகு, அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஆகத்து மாதம் விடுதலை செய்யப்பட்டார். தனது 8 ஆண்டுகால வாழ்வை மீட்க அவர் 15 மில்லியன் யுவான் நட்ட ஈடு கேட்டு, 26. 12. 2014 அன்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்குகளுக்குப் பிறகு, சீன அரசே முன்வந்து மரண தண்டனைகள் வழங்கப்படுவதைக் குறைத்துக் கொள்கிறோம் என அக்டோபர் மாதம் அறிவித்தது.

இந்நிலையில், ஹூக் ஜுலிட்டு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அநீதி, மரண தண்டனை குறித்து சீனாவில் பெரும் விவாதத்தை மீண்டும் தோற்றுவித்துள்ளது.

உலகிலேயே அதிகளவில் மரண தண்டனை விதிக்கப் படும் நாடு சீனா தான். கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும், சற்றொப்ப 2,400 பேர் சீனாவில் மரண தண்டனையால் கொலை செய்யப் பட்டுள்ளனர் என்ற தகவல், இதில் எத்தனை ஹூக் ஜுலிட்டுகள் இருந்திருப் பர் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, சீன அரசு மட்டுமல்ல, சட்டத்தின் பெயரால் அப்பாவிகள் கொல்லப் படுவதைத் தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்! மாண்டொழிக மரண தண்டனை!

Pin It