telugana 600“தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி’’ என்ற புதிய அமைப்பைத் தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தொடங்கியுள்ளார்கள். இக்கட்சியை 3.3.2014 அன்று கோவையில் தொடங்கிவைத்து, அதன் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் மருத்துவர் இராமதாசு. அக்கட்சியின் கொடி தெலுங்கு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாதித் தீவிரவாதத்தை உருவாக்கித் தமிழ்மக்களை சாதியால் கூறு போட்டு - சாதிக் கூட்டணி அமைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அடுத்த கட்டமாக தெலுங்கு பேசும் மக்கள், கன்னடம் பேசும் மக்கள் முதலியவர்களைத் தமிழ்மக்களிடமிருந்து பிரிப்பதற்காக சிறுபான்மை இனத் தீவிரவாதத்தைக் கையிலெடுத்துள்ளார்.

தமக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்காகக் குறுக்கு வழியில் பயணம் செய்து, சாதி, சிறுபான்மை இனம் என்ற சிக்கல்களைக் கிளப்புகிறார் மருத்துவர்.

உழைப்பாளித் தமிழர்களாக உள்ள வன்னிய மக்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களையும் நிரந்தரப் பகைவர்களாக்கும் திட்டத்துடன் “நாடகக் காதல்’’ என்ற போலி முழக்க மொன்றைச் சொல்லி - மோதவிட்டார். இதன் விளைவாக வீடுகள் எரிந்தன தர்மபுரி மாவட்டத்தில்! கிழக்குக் கடற்கரைச் சாலையில் மனித உயிர்கள் பலியாயின.

மருத்துவர் இராமதாசு அவர்களோ அல்லது அவர் குடும்பத்தினரோ தமிழக அரசியலில் ஆதிக்கம் பெற ஆசைப்படுவதை அதற்காகக் கட்சி நடத்துவதை மட்டும் தனிப் படுத்திக் குற்றமாக நாம் கருதவில்லை. பற்பல தன்னல ஆற்றல்கள் தமிழின் பெயரால், இன்னும் பல காரணங்களின் பெயரால் தமிழகத்தில் குடும்ப அரசியல் நடத்திக் கொண்டுள்ள சூழ்நிலையில் மருத்துவர் இராமதாசும் அப்பாதையில் செல்வதை மட்டும் நாம் எதிர்ப்பதில் பொருள் இல்லை.

ஆனால் குடும்ப அரசியல் ஆதிக்கத்திற்காக இராமதாசு செயல்படுத்தும் உத்திகள் கொடூரமானவை. தமிழ்ச் சமூகத்தை நிரந்தரப்பகை முகாம் களாக ஆக்கி, தமிழ் மண்ணை சாதிகளின் சண்டைக்களமாக மாற்றக் கூடிய உத்திகள் அவை.

ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்களையும், தீண்டாமைக் கெதிரான வன்கொடுமைச் சட்டத்தையும் பூச்சாண்டியாகக் காட்டி அவர்களை எதிர்ப்பதற்காக பார்ப்பனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதிச் சங்கங்களை ஒருங்கிணைத் துள்ளார் மருத்துவர் இராமதாசு. பார்ப்பனர்களைப் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளாது என்று 1990 களில் மருத்துவர் அறிவித்தார். இப்போது பார்ப்பன சங்கத்தை இணைத்து சாதிக் கூட்டணி உருவாக்கியுள்ளார்.

அடுத்து, தெலுங்கு பேசும் மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கும் தமிழ்மொழிக்கும் எதிராகத் திருப்பிவிடும் திருப்பணியில் இறங்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக் கெதிரான மேல்சாதி உணர்வைத் தூண்டிவிடுவதன் மூலம் மற்ற சாதிகளின் மக்கள் தம்மை பொதுத்தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்று மருத்துவர் இராமதாசு கருதுகிறார். அதேபோல் தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆதிக்கம்-- தமிழ் மொழி ஆதிக்கம் இருக்கிறது. தெலுங்கு பேசும் மக்களும் தெலுங்கு மொழியும் உரிமை இழந்துள்ளனர் என்று இட்டுக் கட்டுவதன் மூலம், தெலுங்கு பேசும் மக்கள் தம்மைப் பொதுத் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் கருதுகிறார்.

மருத்துவர் இராமதாசு செயல்படுத்தும் இந்தப் புதிய உத்தி தமிழ் பேசும் சாதிகளுக்கும் தெலுங்கு பேசும் சாதிகளுக்கும் இடையே முரண்பாட்டைத் தீவிரப்படுத்தவே உதவும். இந்த முரண்பாடு தீவிரப்படும் போது, இராமதாசைத் தமிழ் பேசும் சாதிகளும் தெலுங்கு பேசும் சாதிகளும் கைவிடும் நிலையே உருவாகும். அவர் எதிர் பார்க்கும் பலன் அவருக்குக் கிடைக்காது.

தெலுங்கு பேசும் மக்கள் அயலரா?

வரலாற்றின் போக்கில் முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் குடியேறித் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, தமிழ் மொழியைத் தங்களின் கல்வி மொழியாக, அலுவல் மொழியாக ஏற்று, தமிழர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டு, சமஉரிமையோடு வாழ்ந்து கொண்டுள்ளார்கள் தெலுங்கு பேசும் மக்கள். (1956 -க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளியாரை இந்த வரிசையில் நாம் ஏற்கவில்லை)

அரசியல், பொருளியல் துறைகளில் தெலுங்கு பேசும் மக்கள் எந்த வகை ஒதுக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாகவில்லை. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு அரசியல், பொருளியல் துறைகளில் என்னென்ன பாதிப்புண்டோ அப்பா திப்புகள் தெலுங்கு பேசும் மக்களுக்கும் இருக்கின்றன.

தெலுங்கு பேசும் மக்கள் என்பதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை.

தமிழக அரசியலில் அமைச்சர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, கட்சிகளின் தலைவர்களாக, தெலுங்கு பேசுவோர் பலர் செல்வாக்கோடு இருக்கிறார்கள்.

இவர்களின் தலைமையைத் தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தொழில், வணிகத்துறையில் முதலாளிகளாக - பெரு வணிகர்களாகத் தெலுங்கு பேசுவோர் பலர் உள்ளனர். அதே போல் நிலவுடைமையாளர்களாகவும் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களாகவும் இருக்கிறார்கள்.

“தெலுங்கு மக்களுக்கு சமூகப் பொருளாதார, அரசியல் அங்கீகாரத்தை இந்தக் கட்சி (தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி) பெற்றுக் கொடுக்கும் என்று அதன் தொடக்க விழாவில் மருத்துவர் இராமதாசு பேசியிருக்கிறார். (தினதந்தி 4.3.2014) அவர்களுக்கு இதுவரை இல்லாத எந்த அங்கீகாரத்தை இந்தக் கட்சி பெற்றுத் தரப்போகிறது?

”தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். தெலுங்கு அகடாமியைத் தொடங்க வேண்டும்’’ என்று அந்தப் புதிய கட்சி தீர்மானம் போட்டுள்ளது.

வீட்டில் தெலுங்கு பேசி, வெளியில் தமிழைத் தாய் மொழி போல் காலங்காலமாகக் கற்றுவரும் மக்கள் அவர்கள்.

அவர்களில் ஏராளமாகத் தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ்க் கவிஞர்கள், தமிழ்ச் சிறுகதை தமிழ்ப் புதினம் போன்றவற்றை உருவாக்கும் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் ஆற்றலையும் வளர்த்து, தமிழையும் வளர்த்து வருகிறார்கள். அவர்களில் ஏராள மானோர் தமிழ்ப் பற்றாளர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் தெலுங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக வர வேண்டிய தேவை என்ன?

எல்லையோரங்களைத் தவிர்த்த உள்நாட்டுப் பகுதியில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. தெலுங்கில் பேசுவார்கள் அவ்வளவே! எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாகத் தமிழ் நாட்டில் செயல் படுத்த வேண்டிய தேவை என்ன?

தெலுங்கு பேசும் மக்கள் வேறு இனம்; தமிழ் பேசும் மக்கள் வேறு இனம்; தமிழ் அவர்களுக்கு அயல் மொழி என்ற கருத்துகளை தமிழ் நாடு தெலுங்கு மக்கள் கட்சி முன்வைத்தால் அதற்கு எதிர்வினை தமிழ்பேசும் மக்களிடம் எழும்.

தமிழகம், தமிழர்களின் தாயகம்; தெலுங்கு பேசுவோர் வெளியிலிருந்து வந்த அயலார்; தமிழ் மொழி தமிழக மண்ணின் மொழி; தெலுங்கு அயல் மொழி; அதற்கு இங்கு அரியணை தரமுடியாது என்பார்கள். இந்த வாத எதிர் வாதங்கள் தேவையற்றைவை. எப் பொழுதும் போல் தமிழ் பேசும் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் “நாம் அனைவரும் தமிழ் மக்கள்” என்ற உணர்வில் ஒற்றுமையாக வாழ வேண்டும்; இயங்க வேண்டும்.

தமிழக எல்லையோரங்களில் தெலுங்கு உள்ளிட்ட அண்டைத் தேசிய இனமொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதும் அண்டைத் தேசிய இனங்களின் தாயக எல்லையோரங்களில் தமிழ் கற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதும் தேவை. அது வேறு.

ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆட்சி மொழியாக்கிடக் கோருவது தவறு.

இரண்டாவது ஆட்சி மொழியாக்கும் கோரிக்கை தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் செயல்; தமிழ் மொழியை அதன் சொந்த மண்ணிலேயே இரண்டாந்தர நிலைக்குப் பின்னுக்குத் தள்ளும் முயற்சி.

மருத்துவர் இராமதாசு இப் பொழுது தூண்டிவிட்டுள்ள தெலுங்குத் தீவிரவாதம், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு தெலுங்கானா உருவாகக் காரணமாய் அமைந்து விடும் ஆபத்துள்ளது.

தமிழ் - தெலுங்கு என்று வேறுபாடு பார்க்காமல் “தமிழ் மக்கள்” என்ற உளவியல் உருவாக்கத்துடன் வாழும் தெலுங்கு பேசும் மக்கள், மருத்துவர் இராமதாசின் தன்னல அரசியலுக்குப் பலியாக வேண்டாம். தெலுங்கு பேசும் மக்களைத் திரட்டித் தாங்கள் தலைவர்கள் ஆகலாம், பதவிகள் பெறலாம் என்று தெலுங்கு பேசும் தன்னலவாதிகள் சிலர் விரிக்கும் வலையிலும் தெலுங்கு பேசும் மக்கள் விழ வேண்டாம்.

தமிழ் பேசும் மக்கள் - தெலுங்கு பேசும் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது; பகை மொழியாக இந்தி மொழி இருக்கிறது. அவற்றின் ஆதிக்கத்தை வீழ்த்தித் தமிழ்மக்கள் அனைவரும் சமத்துவத்துடன் இறையாண்மை பெற்று வாழும் அரசுரிமைக்குப் போராடுவதே இன்றையத் தேவை.

மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு..

பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிச் செயல்பட்ட 1990 களில் “சமூக நீதிக் காவலர்’’ “தமிழினக் காவலர்” என்ற சிறந்த பட்டங்கள் உங்களுக்குச் சூட்டப் பட்டன. அவற்றை ஒவ்வொன்றாகக் கிழித்து எறிந்து விட்டு “சாதியக் காவலர், தெலுங்குக் காவலர்’’ என்று புதுப்புதுப் பட்டங்களை நீங்களே சூட்டிக் கொள்கிறீர்கள். உங்களின் இந்தப் போக்கு, தமிழ் நாட்டில் உங்களுக்கிருந்த பொது அங்கீகாரத்தை, - செல்வாக்கைச் சிதைத்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியும் தனது பழைய வலிமையை இழந்து விட்டது.

குடும்ப அரசியல் ஆதாயங்களுக்காக குறுக்கு வழிகளைத் தேடாதீர்கள். அவை தமிழ் மக்களைப்பகை முகாம்களாகப் பிரித்து விடுகின்றன. அந்தக் குறுக்கு வழிகள் நீங்கள் விரும்பும் பலன் களையும் உங்களுக்குத்தராது. பாட்டாளி மக்களுக்கும் பயன்பட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் பயன்படும் அரசியல் வழி காட்டியாய்ச் செயல்படுங்கள்.

Pin It