“அடிமைப்பட்ட தமிழா, ஆண்டைக்கு அடங்கிப்போடா! ஆர்ப்பாட்டம் உனக்கொரு கேடா? சிங்களன் என் பங்காளி; அவன் சேனைக்குப் பயிற்சிகள் தருவெதன் உரிமை; கூடாது என்று சொல்ல நீ இங்கே கொற்றமா நடத்துகிறாய்? கொத்தடிமைப் பயலே!” என்கிறனர் இந்திய ஆட்சியாளர்கள்.

இந்திய ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராசு, பாசாங்கு எதுவுமின்றி, பத்துக் கோடித் தமிழர்களின் முகங்களில் காறி உமிழ்வது போல் சொற்களால் உமிழ்ந்து விட்டார். “இலங்கைப் படையினர்க்குத் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பயிற்சிகள் தருவது தொடரும். அது எமது நட்பு நாடு.” வேறு வேலையாகச் சென்றபோது, செய்தியாளர்கள் வினவியதற்கு கூறிய விடையன்று இது. தில்லிப்பட்டணத்தில் 27.8.2012 அன்று செய்தியாளர்களைக் கூட்டி சொன்ன செய்தி இது.

தமிழினத் தலைவரென்று ஒரு தன்னலத் தலைவரைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் தமிழர்களே, புரட்சித் தலைவி என்று ஒரு போலி அம்மாவுக்குப் போற்றிபாடும் தமிழர்களே, நாற்காலி நாயகர்களைப் போர்காலத் தளபதிகளாகப் புனைந்துரைக்கும் தமிழர்களே,

உங்கள் தலைவர்களால் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மீனவத் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அந்தந்தத் தமிழர்களைக் கொன்ற சிங்களவர்களுக்குத் தமிழ் மண்ணில் மீண்டும் கொலைப் பயிற்சி! இதைக் கூட பெரும் மக்கள் திரளை வைத்துள்ள உங்கள் தலைவர்களால் தடுக்க முடியவில்லை, ஏன்?

பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் உங்கள் தலைவர்களின் நாடகத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது நீங்களே நாடகமாடுகிறீர்களா?

இந்த வினாக்களுக்கு, வேறு யாருக்கும் நீங்கள் விடை சொல்ல வேண்டாம். உங்கள் மனச் சான்றுக்கு விடை சொல்லுங்கள்.

இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சிங்களவர்கள் நண்பர்கள் என்றால், தமிழர்கள் யார்? தமிழர்கள் பகைவர்கள் என்பதைத் தானே பல்லம் ராசுவின் அறிவிப்பு சொல்லாமல் சொல்கிறது. ஒரு சில மாதங்களில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களவர்கள் இந்தியாவின் நண்பர்கள். சற்றொப்ப அறுநூறு தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களைக் கொன்று தீர்த்த- இன்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்ற சிங்களவர்கள் இந்தியாவின் நண்பர்கள்.

சிங்களர்கள் மட்டுமா, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள்? இந்திய ஏகாதிபத்தியத்தின் பங்களிப்போடுதானே இந்த இனப்படுகொலை நடந்தது. அதே போல் இந்தியாவின் தூண்டுதலோடும், துணையோடும் தானே மீனவத் தமிழர்களை சுண்டைக்காய் சிங்களம் கொன்று வருகிறது.

ஏ, விழித்துக் கொள்ளாத தமிழினமே, வீழ்ந்து கிடக்கும் தமிழினமே, இன்னுமா உனக்கு உண்மை புரியவில்லை. அடிமை கொள்ளப்பட்ட பகைவன் என்று இந்தியா உன்னைக் கருதுகிறது. அது, சிங்களனைப் பங்காளியாய்க் கருதுகிறது. “நண்பன்” என்ற பன்னாட்டு அரசியல் சொல்லாடலில் “பங்காளி” என்ற அந்தரங்க உறவை மறைத்துக் கொள்கிறது.
ஏ, ஏமாளித் தமிழினமே,

கல்வி பல கற்றேன் என்கிறாய்; கலைகள் பல ஆய்ந்தேன் என்கிறாய்; கணிப்பொறியில் வல்லோம் என்கிறாய்; விண்வெளி ஆய்வில் எங்கள் வெற்றியைப் பார் என்கிறாய்; பன்னாட்டு வரலாறும் அரசியலும் பால பாடம் என்கிறாய்; இந்தியாவின் சூழ்ச்சி மட்டும் உனக்குப் புரியாதா? அல்லது புரியாதது போல் நடிக்கிறாயா?

ஏ, ஏமாளித் தமிழினமே,

இன்னும் நீ எதை இழக்க வேண்டும்? காவிரியை இழந்தாய்; கச்சத் தீவை இழந்தாய் முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி , சிறுவாணி எல்லாம் பறிபோகும் அவலம்!

உன் இனத்தைக் கொன்றவன், மீண்டும் உன் இனத்தைக் கொல்ல உன் மண்ணில் அவனுக்குப் போர் பயிற்சி! உன் மானம் பறி போகவில்லையா? உன் உயிருக்கும் அவனால் ஆபத்து வர வாய்ப்புண்டு என்பதை நீ உணரவில்லையா?

இந்தியா உன் தாய் நாடல்ல, அது உன் பகைநாடு என்ற உண்மை இப்பொழுது கூட உனக்கு உறைக்க வில்லையா?

இமயத்தில் முக்கொடியும் பொறித்த சங்கத் தமிழனின் தலைமுறை தானே நீ! ஈழத்தில் புலிக் கொடியுடன் ஆண்ட பிரபாகரன் பிறந்த இனம் தானே நீ! தொல்காப்பியனும் திருவள்ளுவனும் தோன்றிய இனம் தானே நீ!

உன்னையே நீ எண்ணிப்பார்! உன் முன்னைப் பெருமைகளை எண்ணிப் பார்! உன் இன்றைய இழிவுகளை எண்ணிப் பார்! தொடர்ந்து வரும் இழப்புகளை எண்ணிப்பார்!

இதோ பாவலரேறு பெருஞ்சித்திரனார் உனக்குக் கட்டளை இட்டுப் பாடியப் பாடல்:
விடுதலை வேண்டும் அது முதல்வேலை
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!

Pin It