(தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் க. செந்திறல் உடன் பிறப்பு செல்வி இலட்சுமிக்கும்- செல்வன் விசாகன் என்கிற மாரியப்பனுக்கும் திருவள்ளுவராண்டு 2043 ஆவணித் திங்கள் 10-ஆம் நாள் 26.8.2012 ஞாயிற்றுக்கிழமை த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திருமணம் நடந்தது. அப்போது அவர் ஆற்றிய உரையைத் தழுவிய எழுத்து வடிவம்.)

 காதல் திருமணம் செய்து கொள்வோரைப் பாராட்ட ஒரு குறுந்தொகைப் பாடலைச் சொல்வார்கள். என் தாய் யாரோ, உன் தாய் யாரோ; என் தந்தை யாரோ, உன் தந்தை யாரோ; நீயும் நானும் இதற்கு முன் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் இருவரும் சந்தித்துக் கொண்டபின் காதல் வயப்பட்டு இனைந்து விட்டோம். நிறமில்லாத மழைநீர் செம்மண் நிலத்தில் பெய்தால் மறு படி பிரிக்க முடியாதபடி மழைநீர் சிவப்பு நீராகி ஓடுவது போல் நம்மிருவர் நெஞ்சங்களும் ஒன்று கலந்து அன்பு நீர் ஓடுகிறது என்று காதலன் கூறுவது போல் அமைந்துள்ளது. அப்பாடல்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் நானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல்
அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே

இப்பாடல், காதல் திருமணம் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதில்லை. குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் கணவன் மனைவி ஆவோர்க்கும் கூட இக் குறுந்தொகைப் பாடல் பொருந்துவதுண்டு.

நம்முடைய தோழர் செந்திறல் உடன் பிறப்பாகிய செல்வி இலட்சுமிக்கும் செல்வன் விசாகன் என்கிற மாரியப்பனுக்கும் இங்கு நடைபெறுகின்ற திருமணமும் குறுந்தொகைப் பாடல் போன்றதே. தஞ்சை நகரத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கும் ஈரோடு அந்தியூர் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் இடையே ஏற்கெனவே எந்த உறவுமில்லை. சாதி உறவு கூட கிடையாது.வெவ்வேறு சாதியில் பிறந்தவர்கள்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்தாம் இவ்விரு குடும்பங்களையும் இணைத்துள்ளார்கள். மணமக்களையும் இணைத்துள்ளார்கள். “யாயும் ஞாயும் யாரா கியரோ” என்ற அப்பாடல் இத்திருமணத்திற்கும் பொருந்தும் ஆனால் இது காதல் திருமணம் அல்ல, ஏற்பாட்டுத் திருமணம்.

சங்க காலத்தில், திருமணத்திற்கு முன் காதல் உருவாகும். அக்காதலை முதலில்தன் செவிலித் தாயிடமோ அல்லது தாயிடமோ தான் பெண் சொல்வாள். சங்க இலக்கியம் பெண் என்று சொல்வதில்லை தலைவி என்று சொல்லும். காதலனை அல்லது கனவனைத் தலைவனென்றும், காதலியை அல்லது மனைவியைத் தலைவி என்றும் சம நிலையில்தான் ஆணையும் பெண்ணையும் சங்க இலக்கியம் கூறுகிறது. ஒருவகைச் சமத்துவம் ஆண்- பெண்ணிடையே அப்போது நிலவியது.

மகள் விரும்பும் காதலனுடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியை செவிலித் தாயோ அல்லது தாயோதான் அக்காலத்தில் எடுத்துள்ளார்கள். தாய் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தாள் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சில வேளைகளில் தலைவி விரும்பும் காதலனுக்குத் தலைவியைத் திருமனம் செய்து கொடுக்கப் பெற்றோர்கள் மறுத்துள்ளார்கள். அவ்வாறான சூழ் நிலைகளில் காதலி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வெளியூர்க்குப் போய் விடுவாள். அதை “ உடன் போக்கு” என்று நம் தமிழர்கள் அக்காலத்தில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இக்காலத்தில் “ஓடிப் போய் விட்டாள்” என்று கொச்சைப் படுத்துகிறார்கள்.

அக்காலத்தில் உடன் போக்கு போன மகளைத் தேடித் தாய்தான் போயிருக்கிறாள். அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வந்து திருமனம் செய்து வைத்திருக்கிறாள். இது பற்றிக் கூறும் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. சந்தனம், மலையில் விளைந் தாலும் மலைக்கு சந்தனத்தால் என்ன பயன்? முத்து கடலில் விளைந்தாலும் முத்தினால் கடலுக்கு என்ன பயன் இவையெல்லாம் தான் பிறந்த இடத்துக்குப் பயன்படாமல் வெளியார்க்குத்தான் பயன்படுகின்றன. அது போல் என் மகள் பிறருக்கு உரியவள்தானே! எனவே அவள் விரும்பும் தலைவனையே திருமணம் செய்து கொள்ளட்டும் என்று அத்தாய் கூறி, அவர்களை அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கிறாள்.

இங்கு இப்பொழுது நடைபெறும் திருமணம் உடன் போக்கு போனவர்களை அழைத்து வந்து நடத்தும் திருமணம் அல்ல. ஆனால் இத்திருமணத்தை ஏற்படு செய்தவர்கள் இரண்டு தாய்மார்கள். இங்கே அதைத் தோழர் குழ.பால்ராசு குறிப்பிட்டார். தஞ்சை ம. லெட்சுமியும் பவானி ஒருச் சேரி தாயம்மாவும் தான் அத்தாய்மார்கள். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியையும் மகளிர் ஆயத்தையும் சேர்ந்த அத்தாய்மார்கள் இத் திருமண உறவுக்கான இணைப்புப் பாலமாக இருந்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழ்நாடு விடுதலையை மட்டும் குறிப்பிடுகின்ற வெறும் அரசியல் சொற்கோவை அல்ல. அது தமிழர் வாழ்வியல் நெறிபற்றியும் கூறுகின்ற ஒரு சித்தாந்தம். ஒரு கருத்தியல்! அது தமிழர் உறவு முறைக்கான கருத்தியல். மனிதனை மனிதம் அடிமைப் படுத்தாத, மனிதனை மனிதன் சுரண்டாத சமத்துவ சமூக இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசியம்.

இந்த இலட்சியம் இருப்பதால்தான் த.தே.பொ.க.வினர் கட்சி உறவு மட்டும் கொள்ளாமல் குடும்ப உறவும் கொண்டு வாழ்கிறோம். குடும்பத்தினரிடையே, உறவும் பற்றும் பாசமும் கொண்டு வாழ்கிறோம். தமிழ்த் தேசக் குடியரசில் புதிய தமிழனும் புதிய தமிழச்சியும் உலகிற்கே எடுத்துக்காட்டான உரவு வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை, வாழவேண்டும் என்ற இலட்சிய சமூகத்தை நாம் கனவு காண்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டான குடும்பங்களாக இப்பொழுதே நம் குடும்பங்கள் வாழ வேண்டும்.

அப்படிப்பட்ட உறவு மனப்பான்மையால் அக்கறையால் ஏற்படுத்தப்பட்ட இணைப்பே இத்திருமணம்.

மணமக்கள் திருமண உறுதி மொழி ஏற்றபோது, திராவிடர் கழகத்தினர் கூறிவரும் உறுதி மொழியை சற்று மாற்றியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். தந்தை பெரியார் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? அந்தக் காலத்தில்இருந்த பெண்ணடிமைத் தனத்தின் கொடுமையைக் கண்டு சினந்து அவ்வாறு கூறினார். அக்காலத்தில் ஒரு பழமொழி உண்டு இப்பொழுதுள்ள இளம் பெண்களுக்கு பழமொழி தெரியாமல் கூட இருக்கலாம். “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்பதே அப்பழமொழி. தாலிகட்டிய கணவனுக்குப் பெண் வாழ்நாள் அடிமை. அவன் என்ன கொடுமை செய்தாலும் அவள் ஏற்றுக் கொண்டு அவனோடு தான் வாழ்ந்தாக வேண்டும்.

இந்த வாழ்நாள் அடிமைத் தனத்தை மாற்றுவதற்காகத் தான் பெரியார் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்தான். ஒப்பந்தம் மீறப்பட்டு ஒரு தரப்பு மிகவும் பாதிக்கப்பாட்டால் அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம். என்ற பொருளில் வாழ்க்கை ஒப்பந்தம் (Contract) என்றார். இது நல்ல சனநாயகக் கருத்துதான். இந்த முறிவு உரிமை இன்று சட்டத்தில் இருக்கிறது. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறிவு உரிமை ஆபத்துக் காலத்தில் வெளியேறும் பாதையாக (Emergency gate) இருக்க வேண்டுமே தவிர, அடிக்கடி பயன்படுத்தும் வாயிலாக இருக்கக் கூடாது.

எப்போதும் திறந்துள்ள வாயிலக இல்லாமல், எப்போதாவது ஆபத்துக் காலத்தில் மட்டும் திறந்து கொள்ளக் கூடியதாகவும் மற்ற காலங்களில் மூடப்பட்டு இருப்பதாகவும் உள்ள வாயிலாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் கருத்தியல் கொண்டுதான், தமிழ்த் தேசியத் திருமண உறுதி மொழியாக இங்கே ஏற்கப்பட்ட உறுதி மொழியை உருவாக்கினோம்.

“இன்று கணவன் மனைவியாகப் பொறுப்பேற்கும் நாம் இருவரும் சம உரிமை படைத்தவர்கள் என்பதை உறுதி செய்கிறேன்.

“ ஆழ்ந்த அன்பும், இணக்கம் காணும் பண்பும், உயர்ந்த நோக்கங்களும் நம் இல்லற வாழ்வின் வழிகட்டும் நெறிகளாக அமையும் என்பதற்கு எனது முழு ஒத்துழைப்பு உண்டு என்று உறுதியளிக்கிறேன்.”

என்று இங்கு இல்லற ஏற்பு உறுதி மொழி கூறினார்கள். வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி என்பதை விட “ இல்லற ஏற்பு உறுதி மொழி” என்பது இன்னும் சிறப்பாக உள்ளது.

இல்வாழ்க்கையை வெறும் ஒப்பந்தமாக மட்டும் கருதிவிடக் கூடாது. ஒப்பந்தம்(Contract) என்பதில் “தற்காலிகத் தன்மை” தெரிகிறது. மேலும் அதில் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அறம் பற்றிய பகுதியும் இல்லை. வாழ்நாள் இனையர்களாகவே திருமண நாளில் மணமக்கள் இணைகிறார்கள். வாழ்நாள் முழுவதும் இனைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கான மிகச் சிறந்த ஏற்பாடே கணவன், மனைவி என்ற ஏற்பாடு. இவ்வுறவில் சகிக்க முடியாத பாதிப்புகள் ஒருவர்க்கு ஏற்பட்டால், பிரிந்து விடும் உரிமை இருக்க வேண்டும். அது இப்பொழுது சட்டத்தில் இருக்கிறது. அது நடைமுறையும் ஆகிக் கொண்டுள்ளது. ஆனால் மிக அதிக எண்ணிக்கையில் முறிவுகள் ஏற்படுகின்றன. இதனால் மன அமைதியற்ற வாழ்க்கை அவர்களுக்கு ஏற்படுகிறது.

கனவன்-மனைவி வாழ்க்கையில் நெருடல்கள், முரண்பாடுகள் ஏற்பட்டால், இணக்கம் காண முயலவேண்டும். முறித்துக் கொள்ள முனையக் கூடாது. வேறு வழியே இல்லையென்றால்தான் அந்த வழியை நாட வேண்டும்.

இணக்கம் காணுதல் என்றால் என்ன?

மாறுபட்ட கருத்துகளை, முரண்பட்ட கருத்துகளை இருவர்யும் முழுமையாக வலியுறுத்திக் கொண்டே இருக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருவர்க்கும் பொதுவானதாகப் பொருத்தப்படுத்திக் கொள்வதே இணக்கம் காணுதல் என்பதாகும். இதற்கு மன வளர்ச்சி வேண்டும். மனப்பக்குவம் வேண்டும். ஆறாவது அறிவு மனம் என்றார் தொல்காப்பியர் மன வளர்ச்சியே மனித வளர்ச்சியின் சிகரம். அறிவு வளர்ச்சிப் போட்டி போடத்தூண்டும். மன வளர்ச்சி இணக்கம் காணத்தூண்டும். அறிவும் வளரவேண்டும் அதற்கு ஈடாக மனமும் வளர வேண்டும்.

மணமக்களிடையே ஆழ்ந்த அன்பு வேர்விட்டால், இணக்கம் காண்பது எளிது. குடும்ப வாழ்க்கை என்பது உயர்ந்த நோக்கங்கள் கொண்டதாக அமைய வேண்டும். கணவனும் மனைவியும் நடத்தும் குடும்ப வாழ்க்கையை “இல்லறம்” என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். மனைவியும், கணவனும் நட்த்தும் குடும்ப வாழ்க்கையை ஆங்கிலத்தில் பேமிலி (Family) என்று சொல்கிறார்கள். “இல்லறம்” என்ற சொற்கோவைக்கு நிகரான சொற்கோவை ஆங்கிலத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை. வேறு எந்த மொழியிலாவது “இல்லறம்” என சொற்கோவைக்கு நிகரான சொற்கோவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மனைவி-கணவன் நடத்தும் குடும்ப வாழ்க்கை தங்களைப் பாதுகாத்துக் கொண்டு மக்களுக்கு அறம் செய்வதற்காகவே என்றார்கள் நம் முன்னோர்கள் அதனால் அதை இல்லறம் என்றார்கள். அறம் செய்ய இருவழிகள் இருக்கின்றன. ஒன்று இல் வாழ்வைத் துறந்து மக்கள் நன்மைக்காகப் பாடுபடுவதல்ல. இன்னொன்று இல் வாழ்வை ஏற்று மக்கள் நன்மைக்காக செயல் புரிதல். இது இல்லறம்; அது துறவறம்.

அறம் செய்தல் அனைவர்க்கும் பொது. சக மனிதர்களின் நல்வாழ்விற்கும் மேன்மைக்கும் பாடுபடுவதும், உறுதுணையாய் இருப்பதுமே அறம்!

குடும்ப வாழ்க்கையில் இந்த அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளை யிடுகிறது தமிழர் மரபு. அதனால் இல்வாழ்க்கை இல்லறம் ஆனது.

 “அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று!”
என்றார் வள்ளுவப் பெருந்தகை!

இத்திருமண விழாவை இல்லற ஏற்புவிழா என்று சொல்வதே மிகவும் பொருத்தமானது. மணமக்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கும் தமிழ்த்தேசத்திற்கும் பணியாற்றி நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Pin It