இன்று கணினி இல்லாமல் உலகத்தில் ஓரணுவும் அசையாது. அத்தகைய கணினியில் நம் விருப்பத்திற்கேற்ப தமிழைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகளும் பெருகி விட்டன. தேடுபொறியான Google தொடங்கி, Gmail, Yahoo, Hotmail உள்ளிட்ட மின்னஞ்சல் தளங்கள், Facebook, Twitter போன்ற சமூக வலைதளங்கள், Blogspot, Wordpress போன்ற வலைப்பூக்கள் என அனைத்திலும் செம்மொழியான தமிழ்மொழி துள்ளி விளையாடுகிறது. இதுவே போதுமானதா? “மழை பெய்துகொண்டிருக்கிறது. சூடாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று முகநூலில் நிலைத்தகவல் போடுவதோடு முடிந்துபோகுமா கணினித் தமிழின் வேலை? தினத்தந்தி, தினமணி, தினகரன் எனத் தமிழ் நாளிதழ்களின் இணையதளங்களில் செய்திப் பதிவுகளைப் பீறாய்வதோடு முடிந்துவிடுகிறதா நமது கணினித் தமிழ் குறித்தான தேடல்? இல்லை. கணினித் தமிழ் அடைய வேண்டிய இலக்கு இன்று தொலைவில்தான் இருக்கிறது.

கணினித் தமிழ் எதிர்நோக்கும் பிரச்னைகள்

கணினித் தமிழ் வளர்ச்சி என்பது வெறும் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் தடைகளைச் சந்திக்கவில்லை. தொழில்நுட்பங்கள் தாண்டி, அரசியல், பொருளாதாரம் எனப் பல காரணிகளும் கணினித் தமிழைப் பின்னுக்கு இழுக்கின்றன.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தி மொழியே இந்தியாவில் ஆட்சி மொழியாக இருக்கிறது. தமிழ் பிற தேசிய இன மொழிகள் 8-வது அட்டவணையில் உறுப்பு மொழிகளாக மட்டுமே இருக்கின்றன. எனவே, இந்தி மொழியை மின் ஆளுமை (e-governance) மூலம் அரசின் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தும் நிலையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் நடுவண் அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கென ஆட்சி மொழித் துறை என்ற பெயரில் தனியாக ஒரு துறை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தத் துறை, பிறமொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தியைக் கணினி வழியில் கற்பதற்கான மென்பொருளைத் தயாரித்தல், இந்தி பேசாத மக்கள் ஆங்கிலத்தில் தரும் தகவல்களை இந்திக்கு மொழிபெயர்க்கும் மென்பொருளைத் தயாரித்தல், கணினியில் இந்தியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை நடுவண் அரசு ஊழியர்களுக்கு அளித்தல், இந்தி மென்பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த கருத்தரங்குகள், பயிரலங்குகள், கண்காட்சிகள் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது. போகட்டும். இதனால் கணினித் தமிழுக்கு என்ன நட்டம் என்று கேட்கலாம். இருக்கிறது.

கணினியில் இந்தி பயன்பாடு பெருகுவதற்கெனப் பல்லாயிரம் கோடி ரூபாயைச் செலவழித்தும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்தியும் வரும் மத்திய அரசு, அட்டவணை 8-ல் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சிக்கு, சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. மாறாக, இந்தி-தமிழ் கணினி மொழிமாற்றத்தின் இடைமொழியாகச் சமற்கிருதத்தை நிலைநிறுத்துகிறது. அதாவது, சமற்கிருத மொழிக்கான பாணினியம் என்ற இலக்கண நூலே கணினி மொழியியலுக்கு ஏற்றது என்கிறது இந்திய அரசின் ஆட்சிமொழித் துறை. அதுமட்டுமல்லாமல், ஒருங்குறி தகுதரத்தில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கான இடவமைவு அளவை (Unicode Counterbore U+2334) குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது.

இதெல்லாம் கணினித் தமிழுக்கு இந்திய அரசு போடும் வேகத்தடை என்றால், மாநில அரசின் நிலைப்பாடு என்ன? 1956-ல் நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்தின்படி 1957 சனவரி 23-ம் நாள் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி நிலையை அடைந்தது. அதன் அடிப்படையில் அரசு அலுவல்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல்களைச் சந்திக்கிறோம்.

குறிப்பாக, தமிழக முதல்வர்களின் வசமிருக்கும் துறைகளின் அலுவல் மொழியாக ஆங்கிலமே நீடிக்கிறது. தமிழக அரசின் பெரும்பாலான இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தொய்வின்றி இயங்குகின்றன. தமிழ் எழுத்துகள் எழுத்து வடிவங்களில்(Letters-ஆக) கொடுக்கப்படாமல் படிமங்களாக (image-ஆக) மட்டுமே அவற்றில் பதியப்பட்டுள்ளன தகவல்கள் image-ஆக பதியப்படும்போது Google போன்ற தேடுபொறியில் தேடினால் தகவல்கள் கிடைக்காது. கடந்த ஆட்சியின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களில் இடம்பெற்றிருந்த ஒருங்குறி தகுதரம், www.tnpsc.gov.in போன்ற ஒரு சில இணையதளங்கள் தவிர, தமிழக அரசின் அனைத்துத் துறை இணையதளங்களிலும் செயல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், தமிழக அரசின் தரமாக டேஸ் (TACE – Tamil All Character Encoding) எனப்படும் ‘அனைத்து எழுத்துருக் குறியீட்டுத் தரம்’ என்ற ஒன்றை உருவாக்கி அதன் பயன்பாட்டுக்காக அரசு ஆணையும் பிறப்பித்தது. இப்படிப்பட்ட ஆணை இருக்கிறது என்பதும் டேஸ் என்பது என்ன என்பதும் தலைமைச் செயலகத்தில் இருப்போருக்கோ அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கோ, பிற நிறுவனங்களுக்கோ, ஊடகங்களுக்கோகூட தெரியாத நிலைதான் நீடிக்கிறது.

 ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்’ வழக்காடு மொழியாகத் தமிழ் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் போன்றவை மூலம் வழங்கப்படும் உயர்கல்விப் பாடங்களுக்குத் தமிழில் கலைச்சொற்களுடன் கூடிய புத்தகங்கள் இல்லை. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை அரசே ஆங்கிலப் பள்ளிகளைத் திறக்கும் நிலைக்கு இறங்கியிருக்கிறது. இத்தனை நடைமுறை சிக்கல்களைத் தாண்டித்தான் கணினித்தமிழ் என்பது சிந்து நடை பயில வேண்டியிருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் Vision 2023-ல் திறமையான மின்-ஆளுமை மூலம் அரசு நிர்வாகம் மேம்படுத்தப்படும் (2. Key Outcomes of the Vision / 2.1 Vision Themes / Theme: 10) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டாருக்கும் பிரச்னைகள் உண்டு

ஒருங்குறி (unicade) என்பது கணினித் தமிழிழ் “சூப்பர் ஸ்டாரக வலம் வந்து” கொண்டிருக்கிறது. அதனால் அதற்கும் சில சிக்கல்கள் உண்டு. அடோப் (Adobe) நிறுவனத்தின் போட்டோஷாப், இன்டிசைன் மற்றும் கோரல்ட்ரா போன்ற வடிவமைப்பு மென்பொருள்களில் ஒருங்குறியைப் பயன்படுத்தமுடியாத நிலை பல்லாண்டுகளாக இருந்தது. ஏனெனில் தமிழ் ஒருங்குறிக்கான ஒத்திசைவு (Compatibility) வழங்கப்பட வில்லை. எனவே, இவற்றுள் தமிழைப் பயன்படுத்த வேண்டுமானால் அஸ்கி குறியேற்றத் திற்கு மாற்றித்தான் பயன்படுத்தவேண்டிய நிலை இருந்தது. இத்தகைய நிலை நீடித்ததற்கு அடோப் போன்ற நிறுவனங்கள் கூறிய காரணம், தமிழுக்காக நாங்கள் உருவாக்குவதற்குச் செலவு செய்யவேண்டும்; தமிழகத்தில் எங்களுக்கு வணிகம் இல்லை; தமிழ் வணிகமொழியாக இல்லை என்பதுதான். தற்போது Creative Suit 6 எனப்படும் CS6 பதிப்பில் தமிழ் ஒருங்குறிக்கான ஒத்திசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் அச்சுத் துறையில் செயல்பட்டுவரும் பலர் 2001-ல் வெளிவந்த பேஜ்மேக்கர் எனப்படும் தற்போதைய இன்டிசைன் மென்பொருளின் பழைய பதிப்பையே பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய நிலையில் அடோப் CS6ல் தமிழ் யுனிகோடின் வசதி பெரிய அளவில் பயன்படாது என்பது வருத்தமான நிலைதான்.

மேற்குறித்த சிக்கல்கலைத் தீர்ப்பதற்காகவும் ஒருங்குறிக்காக மென்பொருள் உருவாக்கிச் செயல்படுத்தும்போது வேகம் குறைவாக இருப்பதாலும் புதியவகை குறியேற்றம் (Encoding) உருவாக்கப்பட்டது. இத்தகைய நிகழ்விற்கு மற்றொரு காரணமும் உண்டு. பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம், உத்தமம் மற்றும் பிற அமைப்புகள் யுனிகோடில் தமிழுக்குக் கூடுதல் இடம் கொடுக்கவேண்டும் என்று பலமுறை கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்குறி சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) கடிதம் அனுப்பினார்கள் மேலும், இந்தக் கருத்தை முன்வைப்பதற்குத் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி, ஒருங்குறி சேர்த்தியத்தில் தமிழக அரசு உறுப்பினரானது. இதற்கான பணிகளை தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செய்தது. எனினும் இவற்றால் என்ன பலன் கிட்டியது என்பது தெரியவில்லை.

குறிஞ்சிப் பூவாக வந்த மென்தமிழ் சொல்லாளர்

ஒருங்குறி அடிப்படையிலான 20 தமிழ் எழுத்துருக்கள் தமிழ் 99, தமிழ்த் தட்டச்சு, புதிய தட்டச்சு, ரோமன், பாமினி என 11 வகை விசைப் பலகைகள் எந்தவகை தமிழ் எழுத்துருவையும் வடிவமைப்பு மாறாமல் எந்தவகை எழுத்துருவுக்கும் மாற்றி தரும் எழுத்துரு மாற்றி டேஸ் குறியேற்ற மாற்றி, தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி மயங்கொலிச் சொல் அகராதி தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி சொற்பிழை திருத்தி சந்திப்பிழை திருத்தி பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் சுட்டி அகரவரிசைப்படுத்தி… சொல்லடைவு… எண்-எழுத்து மாற்றி போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான் மென்தமிழ் மென்மம் (Menthamizh Software). Microsoft நிறுவனத்தின் Word போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். இதற்கு முன்னதாக, இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

NDS LingSoft Solutions என்ற மொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்திவரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரான முனைவர் . தெய்வசுந்தரம் மற்றும் அவரது மாணவர்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான உழைப்பின் பயனாக இந்த மென்தமிழ் சொல்லாளர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொழித் தொழில்நுட்ப ஆராய்ச்சியை விரிவுபடுத்தவும், அதற்கான பொருளாதார உதவி பெறவும், கடந்த 1999-ம் ஆண்டு முதல் இருவேறு கழக அரசுகளையும் அணுகிய திரு. தெய்வசுந்தரம் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்கிடையில் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு மென்தமிழ் சொல்லாளரை முன்னெடுக்கும் விதமாகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் அண்மையில் ஒரு விழா நடத்தி இதனை வெளியிட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் செயலாளர் முனைவர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், .ஆ.. கலந்துகொண்டார். எனினும், இந்த மென்தமிழ் சொல்லாளரைக் கொள்முதல் செய்து அரசு அலுவலகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் பயன்படுத்தத் தமிழக அரசுத் துறைகள் ஏனோ தயங்குகின்றன. அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகளில் இந்த மென்தமிழ் சொல்லாளரை நிறுவிக் கொடுத்தால், ஒரு தலைமுறையே கணினித் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கும். அதன் மூலமாகக் கணினித் தமிழுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட ஏதுவாகும். அந்த வாய்ப்பை நழுவ விடுகிறது தமிழக அரசு.

கணினித் தமிழ் வளர என்ன செய்யலாம்?

கணினித்தமிழ் வளர்ச்சிக்கெனத் தமிழக அரசு ஓர் ஆணையத்தை அமைக்க வேண்டும். C-DAC (Centre for Development of Advanced Computing) போன்று ஒரு மொழித் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்பட்டு, தமிழ் மென்பொருட்களை உருவாக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மொழித் தொழில்நுட்பப் படிப்புகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கிடைக்கும் கணினிகள், செல்பேசிகள் போன்றவற்றில் தமிழைப் புழங்கும் வகையிலான நடவடிக் கைகளை அரசு எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் தயாரிக்கப்பட்டுச் சென்னையில் விற்பனை செய்யப்படும் NOKIA செல்பேசிகளின் விசைப்பலகையில் இந்தி மொழி இடம் பெற்றிருக்கிறது. இதனை மாற்றி தமிழ் விசைப்பலகையுடன் தமிழைப் புழங்கும் வகையிலான தயாரிப்புகளுக்கு அரசு விற்பனை வரிச்சலுகை அளிக்கலாம். மேலும், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் கணினிகளில் கட்டாயம் தமிழ்த் தட்டச்சு விசைகள் அடங்கிய விசைப்பலகையையே விற்பனை செய்யவேண்டும் என்று கட்டாய ஆணை வழங்கலாம்.

வரும் 2012 டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் ‘கணினித் தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடைபெற உள்ளது. அதேபோல, 2012 டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் உத்தமம் என அறியப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து சிதம்பரத்தில் 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை நடத்தவிருக்கின்றன. இந்த இரண்டிலும் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படுத்த முன் வரவேண்டும்.

 (கட்டுரைக்கு உதவியவர்கள்: www.bbc.co.uk/tamil/india/, http://ta.wikipedia.org/wiki/, http://infitt.org/, www.suratha.com/, www.nhm.in/, http://1paarvai.com, http://rajbhasha.nic.in/, www.thehindu.com/, http://www.indianexpress.com/, http://www.deccanchronicle.com/, www.iitd.ac.in/, www.jnu.ac.in/, http://timesofindia.indiatimes.com/, www.tnpsc.gov.in, http://unicode-search.net/, தமிழ் கம்ப்யூட்டர் இதழ், மா. ஆண்டோ பீட்டர், அன்டன் பிரகாஷ், தமிழ் வளர்ச்சியில் கணினித் தமிழ் - பேரா. .தெய்வசுந்தரம், பேராசிரியர் இல. சுந்தரம்)

Pin It