“நைல் நதியின் நன்கொடை எகிப்து’ என வரலாற்றில் படிக்கிறோம். இந்நைல் நதி எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, காங்கோ, ருவாண்டா, கென்யா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் துணை ஆறுகளாக உருவாகி சூடானை அடைந்து ‘நைல்’ எனப் பெயர்பெறுகிறது. நைல் பத்து நாடுகளின் பாசனத்திற்குப் பயன்படுகிறது.

பிரிட்டன் தனது கிழக்கு ஆப்பிரிக்கக் காலனி நாடுகளின் சார்பாக 1929-இல் எகிப்துடன் நைல் நதி நீர் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இவ்வொப்பந்தம் எகிப்துக்கு வரும் நீரை குறைக்கும் வகையில் மற்ற நாடுகளால் ஏற்படுத்தப்படும் எந்த திட்டத்தையும் மறுக்கும் உரிமையை எகிப்துக்கு வழங்கியது.

1959-ல் சூடானுடன் ஓர் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இதன்படி நைல் நதியில் சராசரியாக ஓர் ஆண்டில் பாயும் நீரில் 85 விழுக்காட்டை எகிப்து பெற்றது. இப்போது இவ்வொப் பந்தங்களில் மாற்றங்களை மற்ற நாடுகள் கோருகின்றன. எகிப்து வரலாறு நெடுக தான் பெற்றுவந்த நீரின் அளவை குறைத்துக் கொள்ள மறுக்கிறது.

பிரிட்டன் தனது காலனிநாடுகளின் சார்பாக ஒப்பந்தம் போட்ட போதிலும் எகிப்தின் வரலாற்று வழியான நீர் உரிமையை மதித்தது. அதேபோல் இந்தியாவில் பிரிட்டன் தமிழகம் வரலாறு நெடுக பெற்றுவந்த நீரின் அளவைக் காத்தது. இன்று பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்ற இந்தியாவுக்குள் ஓரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் வரலாறு நெடுக தமிழகம் பெற்று வந்த காவிரி நீர் முழுமையாக மறுக்கப்படுகிறது. ஒப்பந்தங்கள் கிழித்தெறியப் படுகின்றன. (செய்திக்கு ஆதாரம் : Down to Earth, August 16-31.2009)

Pin It