வடகிழக்கு பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் பொய்க்கும்போதும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உயர் நீதிமன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரும்போதும் அல்லது தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும்போதும், நூற்றாண்டு கால பழமையான காவிரி நீர்ப்பங்கீட்டு உரிமைகள் மீது கட்டமைக்கப்படுகிற நதி நீர் பங்கீட்டு உரிமைக்கான அரசியல், தேசிய இனவாதிகளாலும், குறுங்குழுவாத அமைப்புகளாலும், பூர்ஷ்வா(முதலாளிய) பாராளுமன்ற ஜனநாயகவாதிகளாலும் பூதாகரகமாக்கப்படுவதையும், அது பெரும் உயிர் இழப்பிற்கும் பொருட்சேதத்திற்கும் தேசிய இனவெறியாட்ட வன்முறைக்கு இட்டுச் செல்வதையும் கடந்த காலம் தொட்டு இன்று வரை கண்டு வருகிறோம்.

காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!

மாநிலங்களுக்கு இடையே ஆன ஆற்றுநீர் பகிர்வு சிக்கலுக்கான தீர்வினை நாம் நமது கடந்த கால வரலாற்று சூழலை உணர்ந்தவர்களாகஅணுகவேண்டும். மேலும், வரலாறு நெடுகிலும் தேசிய இனங்களுக்கு இடையில் விதைக்கப்பட்ட “தவறான புரிதல்” மற்றும் “பகைமை உணர்வினை” களைய வேண்டியதும் அவசியமாக உள்ளது.

அண்மையில், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவும் அதைத்தொடர்ந்து, காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டதும் மீண்டுமொரு வன்முறைநிகழ்வுகளுக்கு தற்போது அடித்தளமிட்டுள்ளது. இந்தமுறை கர்நாடகத் தலைநகர் பெங்களூரை மையமாகக் கொண்டு எழுந்துள்ள வன்முறைகள், தமிழர்களின் கடைகள், வாகனங்கள், மற்றும் நேரடித் தாக்குதல்களை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. வாட்டாள் நாகராஜ் போன்ற கன்னட இன அடிப்படைவாத குழுக்கள் மற்றும் இந்துத்துவ அடிப்படைவாத குழுக்கள் முன்னெடுக்கிற பந்தை அனுமதித்தும், வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மெத்தனம் காக்கிற கன்னட மாநில அரசு இயந்திரமும் மத்திய அரசு இயந்திரமும் மறைமுகமாக இவன்முறை வெறியாட்டத்திற்கு துணை போவதை அறிய முடிகிறது.

அதேபோல வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் சீத்தராமையாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதற்கான வாய்ப்பாக திட்டமிட்டு இக்கலவரத்தை சங் பரிவார கும்பல்கள் தூண்டிவருவதாக தெரிகிறது.

நதி நீர் பங்கீட்டு உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்:

இரு நிலங்களாக, இரு வேறு அரசுகளாக பிளவுப்படுள்ள தேசங்களுக்கு இடையில் அல்லது மாநிலங்களுக்கு இடையில் சிக்கல் இல்லாமல் அதேசமயம் அறிவியல் பூர்வமாக நதி நீரை பங்கிகிட்டுக் கொள்வதற்கான சிறப்பான ஆவணங்கள் விதிமுறைகளை ஐக்கிய ஒன்றிய மையம் வகுத்துள்ளது. அதில் சிறப்பான விதிமுறைகளை கொண்டுள்ள ஹெல்சிங்கி(HILSINKI, 1992) சர்வதேச நீர்பங்கீட்டு முறைகளை இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப ஆய்வு செய்து நடைமுறை செய்தாலே போதுமானது. மாறாக, மக்கள் நல அரசு என சொல்லிக்கொள்கிற, தேசிய இனங்களை பலவந்தமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இந்திய முதலாளிய அரசிடம் இதை நாம் எதிர்ப்பார்ப்பது மடமையே!மேலும் தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல் என்பது, மையப்படுத்தப்பட்ட தனது அரசுக்கு எதிராக திரும்பாத வகையில், இதை மறைமுகமாக ஊக்குவிப்பது மைய அரசின் திரை மறை தந்திரமாக உள்ளது.

நதி நீரை இணைப்பது நதிகளை தேசியமயமாக்குவது பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகுமா?

நதி நீரை குழாயில் போகிற நீரோடு ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்வதே நதிநீர் இணைப்பு வாதத்தின் அடிப்படைக் கோளாறாக உள்ளது. ஒவ்வொரு நதிகளுக்கும் அதற்கே உரிய பிரத்தியேக நீரியல் நிலவியல் பண்புக் கூறுகளும் சூழல் அமைவும் கொண்டவையாக உள்ளன. கங்கையுடைய நீரியில் தன்மை வேறு காவிரியின் தன்மை வேறு. அதேபோல ஒவ்வொரு நதிகளும் வெவ்வேறு பண்புகள் கொண்டவை. இந்நதிகளை இணைக்கிற கால்வைகளுக்கும் நதிகளுக்கும் நிறையே வேற்றுமை உண்டு.

நதிநீர் இணைப்பென்னும் மோசடிவாதம் போன்றொதொரு மற்றொரு மோசடி வாதம்தான் நதிகளை தேசியமயமாக்குவது. அனைத்து அதிகாரங்களையும் குவிமயப்படுத்தி வைத்துள்ள மைய அரசுக்கு நதிகளை தேசியமயப்படுதுவது என்பது தேனாக இனிக்கிற வாதமாக உள்ளது. நதிகளையும், நதிக்கரைகளையும் பன்னாட்டு குளிர்பான, குடிநீர் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை மாநில அரசுகளைத் தாண்டி வேகமாக நடைமுறைப்படுத்த மைய அரசுக்கு இது பெரு வாய்ப்பாக அமையப்பெறும். தீர்க்கவே இயலாத சிக்கலாக இப்பிரச்சனை மாறுவதற்கும் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவுமே இவ்வாதம் இட்டுச் செல்கிறது.

மைய அரசின் முதலாளிய வர்கசார் தாராளவாத கொள்கை அரசியல்:

ஆற்றுநீர் பகிர்வு தகராறு மட்டும்தான் உழவர்களின் கையறு நிலைக்கு காரணியா என்ற கேள்வியை நாமிங்கு எழுப்பியாக வேண்டும்.

வேளாண்மையில் பொதுத்துறை முதலீட்டின் சரிவு, வேளாண் பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம், அது விளை பொருட்களின் விலையில் ஏற்படுத்தும்வீழ்ச்சி , அதிகரித்த நீர்பாசன செலவு, காவிரி ஆற்றுப் படுகையில், நிலத்தடி நீரை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் என கர்நாடக தமிழக உழவர்களின் கழுத்தை சுற்றிய சுறுக்குக் கயிறுகளாக உழவர்களின் வாழ்க்கை நிலைமை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறது. மத்திய அரசின்தவறான தாராளவாத கொள்கையே இதற்கெல்லாம் மூல காரணி என்ற உண்மையை உழவர்கள் புரிந்துகொள்ளமுடியாத அளவில் நமது பாராளுமன்ற ஜனநாயகவாதிகளும் வட்டாள் நாகராஜ் போன்ற இனவாத அடிப்படைவாதிகளும், உழவர்களை தந்திரமாக பிரித்து அவர்களை மைய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக அணிசேர்ந்து போராடவிடாமல் நதிநீர் பங்கீட்டின்பால் தங்களின் இனவாத அரசியல் நோக்கத்தின் பொருட்டு சிக்கலைதிசை திருப்பிகின்றனர்.

நீர்மேலாண்மை புறக்கணிப்பு :

அண்டை மாநிலங்களில் இருந்து நீரை பெறமுடியாததால் தான், வேளாண்மை பாதிப்படைகிறது என நமது குறுங்குகுழுவாத அமைப்புகள், பிராந்திய முதலாளிய கட்சிகள் மேற்கொள்கிற தவறான பிரச்சாரத்தை நாமிங்கு கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். ஆற்று மணல் கொள்ளை , ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வைகளின் பராமரிப்பற்ற நிலைகளால் 60 விழுக்காடு நீர் வீணாவதை நமது முதலாளியக் கட்சிகளும் அரசுகளும் கண்டு கொள்ள மறுப்பதேன்?

நீர்ப்பாசன முற்றுரிமை :

மாநிலங்களுக்கிடையே ஆன நீர்ப்பங்கிட்டில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் பாராளுமன்ற ஜனநாயகவாதிகள், குறுங்குழுவாத அமைப்புகள் ஏன் மாநிலத்திற்குள் நிலவும் சமத்துவமற்ற நீர்ப்பங்கீட்டுகளைவேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கின்றன? இந்தியா எங்கிலும்நீர்ப் பங்கீடானது ஆதிக்க நலன் சார்ந்த சமூகத்திற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படுவது குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன?

காவிரிப் பிரச்சனையானது, ஆறுகளின் உரிமை மீது கட்டி எழுப்பப்பட்ட தேசிய இனங்களுக்கிடையேயான பிரச்சனையாக அடையாளப்படுத்துவதைத் தாண்டிமைய மாநில அரசின் தவறான விவசாய விரோத கொள்கைகள் மற்றும் ஆற்று நீரை கொள்ளையடிக்கிற பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களை நோக்கி நகரவேண்டும். மேலும் ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கலனாது இனங்களுக்கிடையேயான தேசிய பிரச்சனை மட்டும் அல்ல மாறாக அதுமாநிலங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும் நீர்ப்பகிர்வில் சமத்துவமின்மை, நீர்ப் பாசனப் பிடிப்பின் அடிப்படை பரமாரிப்பில் புறக்கணிப்பு, பெருந் தொழில்நிறுவனங்களுக்கு திருப்பிவிடுகிற நீர் வள அளவு, பாசனத்திற்கு பயன்படுகிற நீரின் அளவு போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்கையில், இச்சிக்கல் வர்க்கங்களுக்கு இடையேயான பிரச்சினையாக, இரு மாநில விவசாயிகளுக்கும் பொதுவான அழிவை உருவாக்குகிற சிக்கலாகவும் உள்ளது. தேசிய இன முரண்பாடுகளை மேலதிகமாக கூர்மைப்படுத்துகிற குறுங்குழுவாத அமைப்புகள், மாநில, மைய அரசுக்கு எதிராக நீட்டவேண்டிய கத்தியை ஒருவருக்கெதிராக ஒருவர் திருப்பி வைத்துள்ளதை களைந்து ஆளும்வர்க்கத்திற்கு எதிராகவும் அதற்கு துணைபோகிற அடிப்படைவாத கும்பல்களை நோக்கியும் ஒருமுகமாக திருப்ப வேண்டும்.

- தண்ணீருக்கான பொதுமேடை

Pin It