தமிழகத்தில் பூந்தமல்லி தடுப்பு முகாமில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் செந்தூரன் , ‘பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ள உறவுகள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 06ஆம் நாள் அன்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பது அறிந்ததே.

ஆகஸ்டு 06ஆம் நாள் முதற்கொண்டு ஆகஸ்டு 20ஆம் நாள் வரையான 16 நாட்கள் தொடர்ந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின்போது செந்தூரனால் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகள் எதற்கும் தமிழக அரசு செவிசாய்க்காத நிலையில், 20ஆம் நாள் முதல், நீரும் அருந்தாது தனது பட்டினிப்போராட்டத்தை தீவிரப்படுத்தினார் செந்தூரன். 10 நாட்களாக நீரும் அருந்தாது பட்டினிப்போராட்டத்தை அவர் தொடர்ந்த நிலையில், ஆகஸ்டு 31ஆம் நாள் அன்று இரவு 8 மணியளவில் மயங்கிய நிலையில் இருந்த செந்தூரனை – அவரது அறப்போராட்டத்தை.. இழிவுபடுத்தி, ‘தற்கொலைக்கு முயன்றார்’ என்ற கூசாமல் குற்றம் சுமத்தி ‘புழல்’ சிறைச்சாலையில் அடைத்தது தமிழகக் காவல்துறை.

புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட செந்தூரனுக்கு, சிறைவாசிகள் அனைவரும் திரண்டு வந்து தமது முழு ஆதரவையும் உறுதியையும் வழங்கினர். சிறைவாசிகள் உணர்ச்சிவசப்பட்டு, கொந்தளிப்பு நிலையில் காணப்பட்டதால் சிறைக்குள்ளேயே வன்முறை வெடிக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் உண்ணாநிலைப் போராட்டம், வன்முறைப் போராட்டமாக மாறிவிடக்கூடாது, இதன் நிமித்தம் உயிரிழப்புகள் ஏதேனும் வந்துவிடக்கூடாது என்ற வகையில் செந்தூரனது பட்டினிப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

‘புழல்’ சிறைச்சாலையில் ‘தற்கொலைக்கு முயன்றார்’ என்ற குற்றச்சாட்டி அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தூரனைப் பார்க்க வழக்கறிஞர்கள் தவிர்ந்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் நாள் இரவு 9:00 மணிக்கு புழல் சிறையில் இருந்த செந்தூரன் ‘பிணையில்’ விடுவிக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவரை மீண்டும் பூந்தமல்லி தடுப்பு வதைமுகாமில் கொண்டுவந்து அடைத்தது காவல்துறை. பூந்தமல்லி தடுப்பு வதை முகாமுக்குக் கொண்டுவந்து தள்ளப்பட்ட நாளான செப்டம்பர் 17ஆம் நாளிலிருந்து மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்தார் செந்தூரன் அவரை மீண்டும் கைது செய்து 26.09.2012 அன்று புழல் சிறையில் அடைத்த்து காவல்துறை.

Pin It