மரிச்ஜாப்பி படுகொலைகள் நிகழ்ந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 16.5.2010 அன்று "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் வெளிவந்த "மரணத் தீவு' (Island of Death) என்ற செய்திக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.
31 ஆண்டுகளுக்கு முன்பு இதே வாரம் (மே மாதம்), சுந்தர்பானில் உள்ள மரிச்ஜாப்பி என்ற தீவில் காவல் துறை அதிகாரிகள், தண்டகாரண்யாவிலிருந்து வந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கை என்ற பெயரில் மனித வேட்டையில் இறங்கினர். இதை இடதுசாரி ஆட்சியில் நிகழ்ந்த மாபெரும் கொலை நடவடிக்கை என்று குறிப்பிடலாம். இது குறித்து பல கேள்விகள் நம் முன்னே இருக்கின்றன. திட்டவட்டமாக, இதை யார் செய்தனர்? தண்டகாரண்யாவிலிருந்து இது எப்படி தொடங்கியது? எத்தனை மனித உயிர்களைக் குடித்தது?
நிலநேர்க்கோடு 2211 வடக்கிலும், நிலநிரைக்கோடு 8857 கிழக்கிலும் உள்ள இடம்தான் மரிச்ஜாப்பி. கொல்கத்தாவில் இருந்து 75 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் மரிச்ஜாப்பி 30 ஆண்டுகளுக்கு முன்னர் – அகதிகளாக வாழ்வைத் தேடி, இருப்பிடம் தேடி, ஒரு புதிய மாற்றத்தைக் காணும் வேட்கையில் வந்த ஆயிரக்கணக்கான மக்களின் சுடுகாடாய் மாறியது. ஆட்சியாளர்களின் அரசியல் ஆட்டத்தை அறியாத அடித்தட்டு மக்கள், வாழ்வாதாரம் கிடைக்கும் என்று நம்பி இங்கு வந்து உயிரிழந்தனர். பங்களாதேஷை ஒட்டிய கிழக்கு சுந்தர்பானில் ஆக்கிரமிக்கப்படாத ஓரிடம்தான் மரிச்ஜாப்பி. இந்த இடம் எப்படி வரலாற்றிலும் அரசியல் கதைகளுக்குள்ளும் இடம் பெற்றது என்பது ஒரு நீண்ட கதை. ஆகஸ்ட் 15, இரவு 12 மணிக்கு தொடங்கியது இக்கதை.
எப்படி தொடங்கியது?
அக்கால கிழக்கு பாகிஸ்தான் இன்றைய பங்களாதேஷ் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து இந்து மதத்தை சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டனர். லட்சக்கணக்கானோர் கரையோர வங்காளத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் குடியேறினர். கப்பல்களிலும் ரயில்களிலும் பலரும் அந்தமான் மற்றும் மத்திய இந்தியாவிற்கு அனுப்பப்
பட்டனர். இதில் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் யாரெனில், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசாவிற்கு சென்றவர்கள்தான். அங்குள்ள பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் ஏற்க முடியாமல் மறுபடியும் வங்காளத்திற்கே திரும்பிவிட அவர்கள் விரும்பினர். அகதிகளின் இந்த ஆவலுக்கு, ஏக்கத்திற்கு எண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்தனர் இடதுசாரிகள். காரணம், அகதிகளால் அவர்கள் பெறக்கூடிய பலன்கள்.
1961 ஆம் ஆண்டு அரசு அவர்களை தண்டகாரண்யாவிற்கு அனுப்ப முற்பட்டபோது, இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த மக்களின் பக்கம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நின்றது. கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிபாசு, இதில் தீவிரமாக இருந்ததோடு, சுந்தர்பானில் உள்ள ஹெரோபங்காவிற்கு அகதிகள் இடம்பெயர உதவுவதாக வாக்களித்தார். ஆனால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இவரே இடம் பெயர்ந்த அனைவரையும் மத்திய இந்தியாவிற்கு செல்லும்படி வலியுறுத்தினார். அதிகாரப்பூர்வமான பதிவுகளின்படி, பிப்ரவரி 1978 வரை 25 ஆயிரத்து 849 குடும்பங்கள் தண்டகாரண்யா முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இடதுசாரிகள் ஆதரித்த "அய்க்கிய மத்திய அகதிகள் மன்ற'த் தலைவர்கள் இவர்களிடம் – "நிச்சயம் ஒரு நாள் உங்களை வங்காளத்திற்கே அழைத்து வருவோம்' என்று நம்பிக்கை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
வங்காளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு 1978, சனவரி மாதம் மார்க்சிஸ்ட் பார்வர்டு ப்ளாக்கை சேர்ந்த சாட்டர்ஜியும், அனைத்து இந்திய பார்வர்டு ப்ளாக்கை சேர்ந்த அசோக் கோஷûம் அய்க்கிய மத்திய அகதி முகாம்களைப் பார்வையிட்டனர். "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி'யின் சதீஷ் மோண்டல் போன்ற தலைவர்களுடன், இவர்கள் பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்றனர். இடம் பெயர்ந்த மக்களை சுந்தர்பானில் குடியேற்றும்படி சதீஷ் மோண்டல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
1978 இல் மரிச்ஜாப்பியில் குடியேறி, வெளியேற்றப்பட்டு, கைது செய்யப்பட்டு, மறு ஆண்டு தண்டகாரண்யாவிற்கு அனுப்பப்பட்ட நிர்மல் தாலியின் தகவல்களின்படி, “இடதுசாரி தலைவர்கள், அந்த அப்பாவி மக்களை நோக்கி, "உங்களை வங்காளத்திலுள்ள 5 கோடி மக்களும் தங்களது 10 கோடி கரங்களை நீட்டி வரவேற்கக் காத்திருக்கின்றனர்'' என்று பொதுக் கூட்டத்தில் உறுதி அளித்தனர். ஆனால், சாட்டர்ஜியும், அசோக் கோஷûம் "அப்படி நாங்கள் அவர்களை அழைக்கவில்லை' என்று மறுத்துவிட்டனர். சதீஷ் மோண்டல் அதே மேடையில், “இந்தியா யாருடைய அப்பன் வீட்டுச் சொத்துமில்லை. எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம். நாங்கள் சுந்தர்பானில் குடியேற விரும்புகிறோம். ஆதலால் நாங்கள் வங்காளத்திற்கு போய் வங்காளத்திலேயே சாகிறோம்'' என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
துஷார் பட்டாச்சார்யா என்ற பத்திரிகையாளரின் ஆவணப்படத்திற்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், ஆர்.எஸ்.பி. தலைவருமான தேபாப்ராடா பந்தோபாத்யா, “சில இடதுசாரிகள் தண்டகாரண்யாவிலிருந்த அகதிகளை சந்தித்துப் பேசியது உண்மைதான். அவர்களை சந்தித்து உங்களை வங்காளத்திற்கு அழைத்து வருவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார். தண்டகாரண்யாவிலிருந்த முகாம்களிலிருந்து ஏறக்குறைய ஒரு லட்சத்து 60 ஆயிரம் அகதிகள் தங்களின் சொற்ப உடைமைகளை விட்டு சுந்தர்பானிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் குடி பெயர்ந்ததாக தெரிவிக்கிறது அதிகாரப்பூர்வ கணக்கு.
இதை செய்தது யார்?
1978 சனவரி 16 – 19 வரை, வெறும் மூன்றே நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சுந்தர்பானுக்கு குறிப்பாக மரிச்ஜாப்பிக்கு வந்தார்களெனில், அது வெறும் இரு தலைவர்களின் மேடைப் பேச்சின் விளைவாக மட்டுமே இருக்க முடியுமா? பல ஆண்டு கால தீவிர திட்டமிடல், ஒருங்கிணைந்த முயற்சி இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்குமா? பல குழுக்கள், பலவிதமான அரசியல் ஆதாயங்களுக்காகவும் மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காகவும், இந்த அகதிகளை சுந்தர்பானிற்கு (குறிப்பாக மரிச்ஜாப்பிக்கு) கொண்டு வர முயன்றனர்.
இடப் பெயர்ச்சி
மரிச்ஜாப்பியை நோக்கிய இடப் பெயர்ச்சி, 1978 இல் முதன்முதலாகத் தொடங்கவில்லை. அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்÷த அதுவொரு தொடர் முயற்சியாக இருந்திருக்கிறது. 1975 ஆம் ஆண்டு "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' கட்சியின் தலைவர்கள், சதீஷ் மோண்டலின் தலைமையில் மரிச்ஜாப்பி சென்று பார்வையிட்டுள்ளனர். பங்களாதேஷை ஒட்டி அமைந்திருப்பதால் மரிச்ஜாப்பி, அகதிகள் குடியேற சரியான இடமாக இருக்கும் என முடிவு செய்தனர். அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு இதைத் தடுத்து, கண்டித்து, சில அகதி தலைவர்களை கைதும் செய்துள்ளது.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள்
குமிர்மாரியை சேர்ந்த களிப்படா கயேன், “காவலர்கள் எங்களுக்கு ஒரு நாளைக்கு 80 – 100 ரூபாய் வரை கூலி தந்தனர். நாங்கள் அவர்களோடு சென்று அகதிகளின் குடியிருப்புகளை சிதைத்து, அவர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு படகில் ஏறச் செய்தோம். ஆனால், நாங்கள் மரிச்ஜாப்பிக்குள் நுழையும் போதே அங்குள்ள ஆண்கள் காவலர்களால் வெளியேற்றப்பட்டு விட்டனர். அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் கதறி அழுது கொண்டிருந்தனர். அவர்களை வெளியேற்ற மனம் இல்லாமல் நான் மீண்டும் குமிர்மாரிக்கு திரும்பிவிட்டேன். காவல் துறையிடம் பணம் ஏதும் பெற விரும்பவில்லை'' என்று அங்கு நடந்த கொடுமையை கூறுகிறார்.
துஷார் பட்டாச்சார்யாவின் ஆவணப்படத்தில், குமிர்மாரியை சேர்ந்த தீனபந்து மோண்டல், “காவலர்கள் அங்கு வந்த அகதிகளை வெளியேற்றவில்லை. நாங்களே அவர்களிடம் பணம் பெற்று அவர்களை வெளியேற்றினோம்'' என்கிறார். ரபி மோண்டல் என்பவர், “நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மரிச்ஜாப்பிக்கும் எங்கள் இடத்திற்கும் இருந்த படகு சவாரியை நிறுத்தி விட்டோம். அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி, “யார் நிறுத்தினார்கள்'' என்று விசாரித்து, எங்களுக்கு அன்பளிப்பாக 500 ரூபாய் கொடுத்தார்'' என்று விவரிக்கிறார்.
உயிரிழப்பு
மரிச்ஜாப்பியில் நடந்த கட்டாயக் குடியேற்றம் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளினால் பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வெறும் இரண்டு பேர்தான் உயிர் இழந்ததாகக் காவல் துறை கூறியது. ஆனால் ஓர் ஆய்வு இந்த துப்பாக்கி சூட்டினாலும், பசியாலும், வறுமையாலும், இடப் பெயர்ச்சியாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் என குறிப்பிடுகிறது. ஆனால், இன்று வரை எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டன என்று தெரியவில்லை. இன்று அதை கண்டுபிடிப்பதென்பது முடியாத செயலேயாகும்.
ஆனால், காவல் துறையும் அரசும், அந்த துப்பாக்கி சூட்டில் வெறும் இரண்டு பேர் தான் உயிரிழந்தனர் என்றும், அதுவும் அவர்கள் குமிர்மாரியை சேர்ந்த பழங்குடிப் பெண்கள் என்றும் பதிவு செய்தன. இதை படிக்கும் எவருக்கும் சந்தேகம் வரும். ஆயுதமேந்திய தொண்டூழியர்களையும், அகதிகளையும் நோக்கி சுடும்பொழுது ஒருவர் கூடவா உயிரிழந்திருக்க மாட்டாரென கேள்வி எழுகிறது. குமிர்மாரியை சேர்ந்தவர்களின் வாக்குமூலத்தின்படி, உள்ளூர்வாசிகளில் மேனி முண்டா என்பவர் காவல் துறையினரால் தவறாக சுட்டுக் கொல்லப்பட்டார். “மேனி முண்டா கொல்லப்பட்ட அன்று, இந்த இடமே காவலர்களால் நிரம்பி வழிந்தது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் சுற்றி வளைத்தனர். கிராமவாசியான பாபுராம் பிஸ்வாஸின் வீட்டில் நாங்கள் மாட்டிக் கொண்டோம். அங்கிருந்து நாங்கள் கண்ட காட்சி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவல் துறை சடலங்களின் கால்களைப் பிடித்திழுத்துச் சென்று படகில் தள்ளியது. சடலங்களை மொத்தமாக ரபி மோண்டல் என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றில் கொட்டியது. எவ்வளவு உடல்கள் அதில் கிடந்தன என நாங்கள் சென்று பார்க்கவில்லை'' என்கிறார் களிப்படா காயேன்.
துப்பாக்கிச் சூட்டில் வெறும் இரண்டு பேர்தான் உயிரிழந்திருக்க முடியும் என்பது சாத்தியமே இல்லாத விஷயம். ஏனென்றால், அகதிகளை கண்டதும் சுட்டுக் கொல்ல வந்தவர்களைப் போல காவல் துறை கண்மண் தெரியாமல் சுட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் யாரையும் குறி பார்த்து சுடவில்லை. அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மக்களை நோக்கி கண்டபடி சுட்டதாலேயே மேனி முண்டா பலியாக நேர்ந்தது.
துஷார் பட்டாச்சார்யாவின் ஆவணப்படத்தில் ரபி மோண்டல், “அந்த சண்டையில் 30 – 40 பேர் வரை கொல்லப்பட்டனர். சடலங்களை என் வீட்டிற்குப் பின்னால் இருக்கும் குளத்தருகே தான் புதைத்தார்கள்'' என்று கூறியுள்ளார். குமிர்மாரி பஞ்சாயத்து உறுப்பினரான பாசுதேப் மோண்டலும் இதற்கு சாட்சி. “25 முதல் 30 பேர் வரை இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்'' என்று துஷார் பாட்டாச்சாரியாவின் ஆவணப்படத்தில் இவரும் கூறுகிறார்.
மேனி முண்டாவின் இளைய சகோதரரான நிட்டாய் முண்டாவும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார் : “அகதிகளை அவர்கள் தலை முடியைப் பிடித்து இழுத்து வந்தனர். ஆண் பெண் வேறுபாடின்றி எல்லோரையும் இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து வெட்டினர். இது எங்கள் வீட்டிற்கு முன்னால்தான் நடந்தது. அவர்கள் அடிபட்டவர்களையும் இறந்தவர்களையும் இழுத்துக் கொண்டு காளிந்திக்கு சென்று படகில் ஏற்றி ஆற்றில் எறிந்து விட்டனர். எனது கணக்கின்படி, 150 பேராவது இதில் இறந்திருப்பர். என் சகோதரியின் உடலைக்கூட அவர்கள் தர மறுத்து எடுத்துச் சென்று விட்டனர். நான் இறந்த உடல்களைப் பார்க்கவில்லை. ஆனால், இந்த காட்சிகளையெல்லாம் என் வீட்டுக்குள் இருந்தபடி வாசலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இதற்கு காவல் துறை கண்காணிப்பாளர் அமியா குமார் சமந்தா, அந்த நேரத்தில் “நான் அங்குதான் சந்தேஷ்கள்ளி காவல் நிலையத்தின் முன் இருந்து எல்லா நடவடிக்கைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தேன்'' என்றும், “அப்போது நான் சுடும் உத்தரவோ, கண்ணீர் புகை குண்டுகளை வீசவோ அவசியம் இல்லாமல் இருந்தது. ஏனென்றால், அங்கு சண்டை நடக்கவில்லை'' என்று தெரிவிக்கிறார்.
ஆனால், துப்பாக்கி சூடு மட்டும் மரிச்ஜாப்பியில் நடந்த பலிகளுக்கு காரணம் இல்லை. பல மக்கள் பசியினாலும், நோயினாலும் வாடி இறந்தனர். 144 சட்டம் பிறப்பித்து பொருளாதாரத் தடை உத்தரவிற்கு முன்னரே பல மக்கள் இங்கு வயிற்றுப் போக்கு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். “பல மக்கள் தடை உத்தரவிற்கு பிறகு அங்குள்ள மரங்களை வெட்டியும், விற்றும், பிச்சையெடுத்து சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர்'' என்று சொல்கிறார் நிர்மல் தாலி.
முன்னாள் தொண்டூழியரான ஜடப் ஹல்டரும் இதையே சொல்கிறார். “தடை உத்தரவிற்கு முன்னரே பல பேர் இறந்தனர்'' கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியை சேர்ந்த மனோரஞ்சன் மோண்டல், மாதபி பகதூர் மற்றும் கோசபாவை சேர்ந்த காஞ்சன் தபாலி, “மக்கள் தடை உத்தரவிற்கு முன்னரே ஈக்களை போல் சுருண்டு மடிந்தனர்'' என்று தெரிவிக்கின்றனர்.
“நாங்கள் மரிச்ஜாப்பியில் நிலம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கு குடி பெயரச் சென்றோம். ஆனால், அங்கு சென்ற பிறகு காவலர்களின் துப்பாக்கி சூட்டிற்கு முன்னரே திரும்பி விட்டோம். ஏனென்றால், அந்த இடத்தில் சின்ன குடிசைகளைப் போட்டு வைத்திருந்தனர். மரங்களுக்கடியில், வீடுகளுக்குள், கால்வாய்களில் என எங்கு பார்த்தாலும் வயது வேறுபாடின்றி மனித உடல்கள் அழுகியும் அழுகாமலும், புதைக்காமலும் இருந்தன. அந்த உடல்களுக்கு இறுதிச் சடங்கைக்கூட செய்ய முடியாமல் விட்டு விட்டிருந்தனர்'' என்கிறார் மாதபி.
நிலஞ்சனா சாட்டர்ஜி என்பவரின் வெளி வராத பி.எச்டி. ஆய்வின்படி, 3,000 அகதிகள் மரிச்ஜாப்பியிலிருந்து தப்பி ஓடி மேற்கு வங்கத்திற்கு வந்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூலை 1970, தண்டகாரண்யா மேம்பாடு ஆணையத்தின் பிரதிநிதி 15 ஆயிரம் குடும்பங்கள் தண்டகாரண்யாவிலிருந்து வெளியேறினர். ஆனால் 5,000 குடும்பங்கள் (கிட்டத்தட்ட 20,000 பேர்) திரும்ப வரவில்லை என்று அறிவித்துள்ளார்.
இதற்குப் பிறகு நிலஞ்சனாவின் ஆய்வை முன்வைத்து இன்னொரு ஆய்வாளர் சில கணக்குகளை வைத்து (அதாவது 20,000 பேர்களில் 3,000 பேர் தப்பிச் சென்றுவிட்டனர் என்றால்) மற்ற 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என மதிப்பிட்டிருக்கிறார். பல மக்கள் மரிச்ஜாப்பி காவலர்களிடமும், தொண்டூழியர்களிடமும் இருந்து தப்பித்து சுந்தர்பானில் குடிபெயர்ந்துள்ளனர். இதில் ஜார்க்கலி, மொள்ளக்கலி மற்றும் கோசபா பகுதிகள் அடங்கும். ஆனால், எத்தனை பேர் இப்படி தங்கியுள்ளனர் என்று கணக்கெடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மரிச்ஜாப்பியிலிருந்து அகதிகளாய் தண்டகாரண்யா செல்லும் வழியில் பல பேர் அதிகாரிகளை ஏமாற்றி தெற்கு வங்காளத்திற்குள் நுழைந்துள்ளனர். இப்படி தப்பித்தவர்தான் ஜடப் ஹல்டர். இவரைப் போன்று பல பேர் கொல்கத்தா, டும் டும், பட்டிபுகுர், பரசட் போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர். இன்று இவர்கள் போல் எத்தனை பேர் இடம் பெயர்ந்தனர் என்று கண்டுபிடிப்பது கடினமானது மட்டும் இல்லை; இயலாத ஒரு விஷயமாகும்.
மரிச்ஜாப்பியின் பொருளாதாரம்
பிப்ரவரி – மார்ச் 1978, மொத்தம் 30 ஆயிரம் மக்கள் வீடின்றி வாழ்வாதார மின்றி மரிச்ஜாப்பியில் நுழைந்தனர். அவர்கள் குடிசைகளை கட்டிக் கொண்டனர். அதற்குப் பிறகு 3 முதல் 4 மாதத்திற்குள்ளாக பல தொழிற்சாலைகளை உருவாக்கினர். பீடிதொழிற்சாலை , அடுமனை, தச்சு வேலை தொழிற்கூடம், பின்னலாடை தொழிற்சாலை ஆகியவற்றை கட்டியுள்ளனர். இது ஒரு சாதனை என்றே சொல்லலாம். இப்படியொரு சாதனை மரிச்ஜாப்பியில் அகதிகள் வருவதற்கு முன்போ, பின்போ சுந்தர்பானில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. இதற்கு முதல் எப்படி வந்தது? முக்கியமான வரவு அவர்களுக்கு வெட்டு மர தொழிலிலிருந்துதான் கிடைத்தது. சின்ன மரங்களை மட்டும் அல்ல; காடுகளில் பெரிய மரங்களை வெட்டி விற்றுப் பணம் சம்பாதித்தனர். பல தீவுகளில் இருந்து வந்து இவர்களிடம் வியாபாரம் செய்துள்ளனர் என்று அப்போது மரிச்ஜாப்பியில் குடியிருந்த ஒருவர் தெரிவிக்கிறார்.
இப்படி இருந்ததினால், மரிச்ஜாப்பியில் உள்ள மக்கள் செல்வந்தர்களாக இருந்தனர் என்று கூற முடியாது. நிலத்தில் உப்பு அதிகமாக இருந்ததால் அங்கு உணவுப் பொருட்களை வளர்க்கவோ, பெருக்கவோ அவர்களால் முடியவில்லை. “எங்களை இன்னும் இரண்டு ஆண்டுகள் அங்கு இருக்க அனுமதித்திருந்தால், நாங்கள் நெல் விளைவித்திருப்போம்'' என்கிறார் மாதபி பகதூர். “அங்கு எங்களால் எதையும் வளர்க்க முடியவில்லை. அதனால் பொருளாதாரத் தடை உத்தரவிற்கு பிறகு மக்கள் "ஜோடு பலாங்' என்ற புல்லை உண்டார்கள்.'' என்று கூறுகிறார் நிர்மல் தாலி. “அங்கு எந்த விவசாயமும் இல்லை ஏனென்றால், அங்கு உப்பு அதிகமாக இருந்தது'' என்கிறார் மனோரஞ்சன் மோண்டல். “நாங்கள் பல தொண்டு நிறுவனங்களை உணவிற்காக தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களும் வெளியூர்களில் உள்ளவர்களும் எங்களுக்கு உதவி செய்தனர்'' என்று கூறுகிறார் நிர்மல் தாலி.
– தமிழில் : கிறிஸ்டி லீமா